பெண் விடுதலை : 90 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் குரலும் – ஊடகங்களின் இன்றைய விழிப்பும்!

ஆகஸ்ட் 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

‘தமிழ் இந்து’ ஏடு வாரந்தோறும் ‘பெண்’ எனும் தலைப்பில் மகளிர் பற்றி எழுதி வருகிறது. அந்த வகையில் கடந்த 18.7.2021 அன்று வெளிவந்த ஏட்டில் ‘குழந்தைப் பேறு பெண்களின் உரிமையில்லையா?’ என்ற தலைப்பில் விவாதமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“ஆம். வெளியே சென்று சம்பாதிக்கிறபோது பெண் வீட்டு வேலைகளைச் செய்வதில் என்ன தவறு என்பது நியாயமான வாதமாகத் தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகள் பெண்களின் விருப்பத் தேர்வா? என்பது குறித்து யாருமே பேசுவதில்லை. வீட்டுக்குள்ளேயே புதைந்து விடுகிற பெண்களின் உழைப்பு எந்தக் கணக்கிலும் வருவதே இல்லை.’’

கற்பிதச் சங்கிலிகள்

“அடிப்படை உரிமைகளை விட்டுவிடுவோம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ திருமண உறவிலோ ஆணுக்குக் கிடைக்கிற எல்லா உரிமைகளையும் பெண் அனுபவிப்பதில்லை. குறிப்பாகப் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் பெண்ணின் உரிமையும் சம்மதமும் இரண்டாம் பட்சமாகக்கூட அணுகப்படுவதில்லை. கணவன் என்பதே தனக்குக் கிடைத்திருக்கிற அனுமதியாகப் பலர் நினைத்துக்கொள்கிறார்கள். நாம்தான் பெண்மைக்கும் ஆண்மைக்கும் மாபெரும் கற்பித அகராதிகளை உருவாக்கி வைத்திருக்கிறோமே! அதன்படி அடக்குபவன் ஆண்; அடங்கிப்போக வேண்டியவள் பெண். இதில் கொஞ்சம் பிசகினாலும் பெண் தூற்றப்படுவாள்.’’

“பெண்மை என்கிற கற்பிதத்துக்குள் பொருந்திவிட வேண்டும் என்பதற்காகவே தன் ஆசை, லட்சியம், கனவு எனப் பலவற்றையும் தொலைத்து தியாகிப் பட்டம் பெறத் துடிக்கும் பெண்கள் நம்மிடையே ஏராளம். உண்மையில் அது பெருமையல்ல; காலம் காலமாக அவர்களுக்கு நாம் பூட்டியிருக்கும் விலங்கு என்பதைக்கூட உணராத வகையில்தான் பெண்களை வைத்திருக்கிறோம்.’’

“பாலினம் தொடங்கி, வர்க்கம், ஜாதி என எல்லா நிலைகளிலும் பாகுபாடு நிலவும்போதுதான் அதிகாரப் பிரிவினை இருக்கும். அதிகாரத்தைச் செயல்படுத்துகிற எல்லா அமைப்புகளும் இந்தப் பாகுபாட்டைப் போற்றி வளர்க்கத்தான் செய்யும். இந்த அதிகாரச் சூட்சுமத்தை விளங்கிக்கொள்ளாமல் நாமும் சமூகக் கற்பிதங்களுக்குப் பெண்களின் வாழ்க்கையைப் பலியாக்குகிறோம்.’’

எல்லா நிலைகளிலும் பெண்கள் மீது நாம் செலுத்துகிற ஆதிக்கத்தைவிட இழிவானது வேறில்லை. யாரோ சிலர் தங்களது வசதிக்காக ஏற்படுத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் நாம் இப்போது பின்பற்றிக் கொண்டு, பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளவோ அதை மறுக்கவோ பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் உரிமை உண்டு. அதுபோலத்தான் குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் வேண்டாம் என்று மறுப்பதும். குழந்தை பெறுவதுதான் தாய்மையின் பூரணம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. தாய்மை என்பதே கற்பிதம்தான்.

அதைக் கட்டிக்காக்கும் வரைக்கும்தான் பல ஆண்களுக்கு இங்கே வாழ்க்கையே. அதனால்தான் எதற்கெடுத்தாலும் பெண்மை, புனிதம், தாய்மை, தியாகம் போன்றவற்றைச் சொல்லியே பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பெண்கள் விழித்துக் கொண்டால்தான் இங்கே பிழைத்திருக்க முடியும். அதேபோல் ஆணாதிக்கம் என்பதை வாழ்க்கையின் அங்கமாக நினைத்துச் செயல்படுத்துகிற ஆண்களின் அறியாமையைக் களைய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.’’ இவ்வாறு ‘தமிழ் இந்து’ கட்டுரை கூறுகிறது.

– brindha.s@hindutamil.co.in

3.8.2021 நாளிட்ட அவள் விகடன் (ஆனந்த விகடன்) இதழில் வெளிவந்தவை இதோ:

THE WORST INDIAN KITCHEN

முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை!

“சமையலறை, பெண்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்கிற விவாதம் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தடுத்துக்கிட்டுத்தான் இருக்குன்னு பதிவு போட்டுட்டு சமைக்கத்தான் போறேன், காலையில எழுந்திருச்சு சமைக்கிறேன். அப்புறம் வேலைக்குப் போறேன். மறுபடியும் வீட்டுக்கு வந்து சமைக்கிறேன். என்ன முன்னேற்றம் வாழுது?… இப்படித் தங்களுடைய கோபத்தையெல்லாம் பதில் பதிவுகளாக இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள் பலரும்.

ஆணுக்கு வெளி வேலை, பெண்ணுக்கு வீட்டுவேலை என்று பங்கிட்டுக்கொண்டதில், சமையல் வேலை மொத்தமாய் பெண்ணின் பொறுப்புக்கு மாறியிருக்கலாம். பெண்கள் வெளி வேலைகளுக்குச் சென்ற பிறகும், சமையல் கட்டு உங்களுடைய ஏரியாதான் என்று சக மனுஷியின் உழைப்பையும் ஆரோக்கியத்தையும் ஆதிக்க மனப் பான்மையோடு பெரும்பாலான ஆண்கள் சுரண்டிக் கொண்டிருப்பதுதான் பிரச்சனையே. சமையலை பணமும் புகழும் சம்பாதிக்கும் களமாக ஆண்கள் பலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரும்கூட, வீட்டு சமையலறை என் ஏரியா கிடையாது என்று தெளிவாக இருக்கிறார்கள். தீர்வென்ன… சில ஆளுமைகளிடம் கேட்டோம்.

அம்மியில் அரைத்த சட்னிதான் ருசி… – இவர்களின் உளவியல்தான் என்ன?

“அம்மியில் அரைக்கிற சட்னிதான் ருசி; ஆட்டுரலில் மாவாட்டினால்தான் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் போன்ற மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்பவர்களுக்கு பெண்கள் எந்நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். மனிதர்களின் வேலைப் பளுவைக் குறைப்பதுதான் விஞ்ஞானத்தின் வேலையே. இதனால் சேமிப்பாகும் மனித சக்தியை வீடு முதல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிவரை பயன்படுத்தலாம் என்ற அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லாத இவர்களைப் புறந்தள்ளிவிட்டுச் செல்வதுதான் வளர்ந்து கொண்டிருக்கிற சமூகத்துக்கு நல்லது என்கிறார் உளவியலாளர் த.சந்தோஷ்.

கம்யூனிட்டி கிச்சன் ஓகேதான்!

வெளிநாடுகளைப்போல அடுப்படியிலிருந்து பெண்களை மீட்கும் கம்யூனிட்டி கிச்சன் நம் சமூகத்துக்கும் சரிப்பட்டு வரும் என்கிற சமையற்கலை நிபுணர் ரேவதி சண்முகம், “எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு, என் ஃபிளாட்ல இருக்கிற பதினைஞ்சு குடும்பங்களுக்கு சமைச்சுத் தரப் போறேன். அளவுகள் சொல்லுங்கம்மான்னு கேட்டாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன். இதுதான் நம்ம ஊருக்கான கம்யூனிட்டி கிச்சன். சமையலை பிசினஸா பெண்கள் கையில எடுக்குறப்போ இதெல்லாம் தொழிலான்னு தடுப்பாங்க. பின்வாங்கிடாதீங்க’’ என்று யோசனையும் தருகிறார்.

வளர்ந்த இந்த அறிவியல் உலகத்தில், முற்போக்குச் சிந்தனைகள் அகல சிறகு விரித்து ஆர்ப்பரிக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆதிக்கவாதிகள் _ அவர்கள் மெத்தப் படித்திருந்தாலும், பெரும் பதவிகளில் அலங்கரித்தாலும் அவர்களின் மனப்பான்மை எவ்வளவு கீழ்நிலையில் சஞ்சரிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பிரம்மகுமாரிகள் மாநாட்டில் (8.11.1996) என்ன பேசினார்?

“Women should go back to their homes and not think of competing with men on everything. Since the lady is more capable of building the home what is necessary that there must be switch over from office to home”

“பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆதலால்அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு, அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டி போடும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும்’’ என்று ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியே பொதுவெளியில் பேசுவது சரியானதுதானா?

அந்த நேரத்தில்கூட, அவர் காஞ்சி மடத்துக்கு வருகிறார் என்று அறிந்த நிலையில் திராவிடர் கழக மகளிர் அணியினர் கருப்புச் கொடியுடன் திரண்டனர்; செய்தி அறிந்த நிலையில் அவர் பயணத்தை ரத்து செய்தார் என்பது ஒரு முக்கிய செய்தியாகும்.

இதே கருத்தைத் தானே ஆர்.எஸ்.எஸின் தேசியத் தலைவர் மோகன் பாகவத்தும் கூறினார்? (2014 நவம்பர் 14இல் இந்தூரில் பேச்சு)

பெண்களுக்குத் திருமணம், உபநயனம், கணவனுக்குக் கடமையாற்றுவது, குருகுலவாசம்,  இல்லறம் காத்தலே வேள்வி என்று தளுக்காக அறிவுரைகளை, ஆணைகளை _ கடவுள், மதம், பக்தி, சாத்திரங்களில் குழைத்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக ஊட்டி ஊட்டி அதுவே அவர்களின் மரபணுவில் கலந்த குணாம்சமாக மாற்றிவிட்டார்கள் என்பதுதானே உண்மை?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பானவர்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா? (1997 ‘தினமணி’ தீபாவளி மலர்)

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு ஒரு சுலோகத்தை வெளியிட்டது (21.12.1990)

“Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will be a woman pure”

“எப்பொழுது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல்நீர் சுவை நீராக நிரப்பப்படுகிறதோ, அப்பொழுதுதான் ஒரு பெண்ணும் தூய்மையானவளாக இருப்பாள்.’’

பெண் உரிமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் ஆனந்த விகடன் கூட பெண்களை சிந்தனை ரீதியாக அடிமைப்படுத்தும் இந்த வகையறாக்களை வரிசைப்படுத்த முடியாவிட்டாலும் எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்றை எடுத்துக் கூற எந்த இடத்தில் வலி இருக்கிறது என்று தெரியவில்லை.

இன்னதென்று இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு மனுதர்மம் _ பெண்களை கீழ்மைப்படுத்திய மனுதர்மம் பற்றி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கூறிவிட்டார் என்று சொல்லி ‘துக்ளக்’க்கும், ‘தினமணி’யும் ‘தினமலரும்’ வரிந்து கட்டிக் கொண்டு வஸ்தாதுகளாகக் குதித்தபோது, பெண்ணுரிமை தேவை பற்றி இப்பொழுது எழுதும் ‘ஆனந்த விகடன்’ அப்பொழுது அந்தப் பிரச்சினையில் தன் பேனாவுக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்.

கேள்வி: ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இறங்கும்போது உங்கள் மனம் மட்டும் அவர்கள் மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?

பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (‘துக்ளக்’ 14.9.2005)

பெண்கள் விபசார தோஷமுள்ளவர்கள் என்று கூறுவதைவிட மனுதர்மம் (மனு_அத்தியாயம் 9, சுலோகம் 19) வேறு என்ன சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

இவ்வளவு பிற்போக்குக் குரல்கள், ஒருபுறம் பெண்களின் குமுறல்கள், வலிகள் பெண்கள் சமூகத்தில் இருப்பதாக இன்றைக்கு சில ஏடுகள் எழுதிட முன்வந்தது கூட ஒரு மாற்றம்தான். வரவேற்க வேண்டியதுதான். ஆனால், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் இதைப்பற்றி எல்லாம் ஒரு தலைவர் சிந்தித்தாரே _ பாடுபட்டாரே, அதைப் பற்றி எல்லாம் சிந்தித்ததுண்டா? எழுதியதுண்டா? இதோ பெரியார் பேசுகிறார்: கேட்கலாம்.

“பெண்கள் சமுதாயத்தில் சரிபகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார் களென்பேன். நாமும் அவர்களை சிறு குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்தும் பேத உணர்ச்சியற்று ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மையாக்கி, பயனற்ற ஜீவனாக மாத்திரம் அல்லாமல் அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பிண்டமாக ஆக்கிக் கொண்டு அவர்களது வாழ்வில் அவர்களை, அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாகச் செய்துகொண்டு அவர்களைக் காப்பாற்றவும் திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தித் திருப்தியும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதன் ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பயன் என்ன என்று பாருங்கள்! எங்குக் கெட்டபெயர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாக அமைவது! அது எதற்கு? ஆணின் பெருமைக்கும் ஒரு கருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்.

-ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு காவற்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை! ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப் புளகிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பது அல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்;  பயன்படுத்தப்படுகிறார்கள்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்! மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது “ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன் இருக்கிறதா?’’ என்று பாருங்கள்!

இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்கு ஆகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? துணியாலும் நகையாலும் தானே? பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுக்குண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாத படியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடி மந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பத்துப்போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறிக் காரம் (எரிச்சல்) மருந்துபோட்டுப் போக்கடிக்கவேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து அதட்டி அறுத்துத் தீரவேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால், கோபிக்காமல் ஆத்திரப் படாமல் சிந்தியுங்கள்.

நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப் போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள், நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள்; அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள் _- பெருமையடைகிறார்கள்; பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

பெண் பெருமை, வருணணை ஆகியவைகளில், பெண்கள் அங்கம் அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்து வரிகூட இருக்காது. பெண்ணின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம். இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? “பெண்களை அனுபவிக்கிறவன், வேலை வாங்கிப் பயனடைகிறவன் காப்பாற்ற மாட்டானா?” என்பதுதான். அதற்கு ஏற்ற நகை அணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, கட்டினவனாவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தன்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம், அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தேயாகும். இது பரிதாப மாகவேயிருக்கிறது.

நல்ல கற்புடைய பெண்களுக்கு உதாரணம், ‘மற்றொருவர் உள்ளம் புகாள்’ என்பதாகும். நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர் களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி, அவர்கள் கவனத்தை தம்மீது திருப்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நமது பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப் பயன் முதலியவைகளைச் செலவழிக்கிறோம். இது ஏன், எதற்காக என்று சிந்திக்காததால், அதைத்தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை; நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர். சண்முகம், சர். குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எங்கே எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதியாக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷாப்புக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஆகியவற்றிற்கு விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள், உருவங்கள் போல அல்லாமல் நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்துக்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன். இவர்களே இப்படி இருந்தால், மற்ற பாமர மக்கள், தங்கள் பெட்டியினுள்ளே வெல்வெட் மெத்தை போட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்.

ஒரு பீகம் அமீருதீன் அம்மையார் முஸ்லிம் கோஷா இனம். இவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்! நம் பெண்கள் மாத்திரம், நகைகள் மாட்டும் ஸ்டாண்டா என்று கேட்கிறேன். இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை, தமக்கையர் பிறந்தார்கள். இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும்? இதைப் பயன்படுத்தாதது, நாட்டுக்குச் சமுதாயத்திற்கு நட்டமா? இல்லையா? என்று கேட்கிறேன்.

பெண்கள் படிப்பு

பெண்கள் படிப்பு என்பது சுத்த முட்டாள்தனமான முயற்சியாகவே பெரிதும் இருக்கிறது.

பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச் செலவு, நாட்டு வரிப் பணத்தின் வீண் என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள். இதைக் கீழ்வரும் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது, ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய் _- தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் கற்றுக் கொடுத்து இவற்றில் வெற்றியாய்த் தேறவைத்தனர் என்று வைத்துக் கொள்ளுங்கள் (பலர் இன்னும் செய்கிறார்கள்), அதை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு, அதாவது திருமணம் ஆன பின்பு அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது என்று கேட்கிறேன். புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால், “இது என்ன குடித்தன வீடா?” என்று மாமியார் கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.

ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஓர் அட்வர்டைஸ்மெண்டாக (விளம்பரமாக)ப் பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் தண்டம்தானே என்கிறேன். அதுபோல் ஒரு பெண்ணைத் தாய், தகப்பன் பி.ஏ., படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும் குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில் எந்த அறிஞர்களும் சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல் எவராலும் இனப் பெருக்கத்திற்கே ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.

பிள்ளை வளர்ப்பு

நான் ஒரு சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை. இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படியான ஒரு குழந்தையை விட்டுவிட்டு, இப்படியாகப் படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு வந்து, நடுவிலிருந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையூறும் தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும், சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமூகத்தில், படித்த பெண்கள், படித்தவர்கள் வீட்டுப் பெண்கள் என்கிறவர்களிடையில் இருக்கத் தக்கதா என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலையுயர்ந்த துணிகள் அணிந்த குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும், ஆபாசம்! இவை ஏன்?

நகைக்கும், துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டுக் குறைந்த வட்டியாவது வாங்கிக் குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால் அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத்  தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க்கிறான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகிறான்? ஆகையால், குழந்தையை ஆண்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் ஆண்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப்போல உயர் வேலைகள் பார்க்க வேண்டும். சர். ராமசாமி முதலியார் தங்கை சர். ஏ. லட்சுமணசாமி முதலியார் போல் ஆகவேண்டும். சர். சண்முகம் தங்கை ஆர்.கே. வெங்கடாசலம் செட்டியார் போல் ஆகவேண்டும். குமாராஜா தங்கை ராமனாதன் செட்டியார்போல், சிதம்பரம் செட்டியார் போல் ஆகவேண்டும். பொம்மைகளாக, நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக ஆகக்கூடாது என்கிறேன்.

ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்யவும் முடியும்; உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம், அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு, சுயமரியாதையற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.

(வாழ்க்கைத் துணைநலம், தந்தை பெரியார்)

1929 பிப்ரவரி 17, 18 நாள்களில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுக்கு அழைப்பு விடுவிக்கும்போது பெரியார் என்ன எழுதினார்?

தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தம்மைக் கருதிக் கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும். (‘குடிஅரசு’ 13.1.1929)

1935ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சுயமரியாதை இயக்கப் பொருளாளர் வை.சு.சண்முகம் அவர்களின் மகள் மணமகனுக்குத் தாலி கட்டினார்.

உடைகளில் ஆண் _ பெண் வித்தியாசம் கூடாது.

பெண்கள் ஆண்களைப் போலவே கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஜனங்கள் ஒவ்வொருவரும் தனி வீடு கட்டிக் கொள்வதும், வீட்டுக்கு வீடு சமையலறை இருப்பதும் அனாவசியமான காரியமாகும். பொது சமையற்கூடங்கள் ஏற்படுத்தலாம்.

(நூல்: ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்துகொண்டே வருகிறது. (‘குடிஅரசு’ 16.6.1935)

1928இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவனிக்கத் தக்கவை (93 ஆண்டுகளுக்கு முன்)

1.            மக்கள் பிறவியிலும் ஆண், பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசங்கள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.

2.            குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

3.            புருஷன் மரணம் அடைந்துவிட்டால் அவன் சொத்து முழுமையும் பெண்களுக்கு சர்வ சுதந்திரமாக அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

4.            பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன்  இறந்துபோனால் அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவன் மனைவிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

5.            எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆண் _ பெண் என்கிற வித்தியாசம் இல்லாமலும், உயர்வு -_ தாழ்வு என்கின்ற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்தீர்மானங்களும் சில மாநில, ஒன்றிய அரசுகளின் சட்டங்களாக ஆகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.

கர்ப்பத் தடை பற்றி மற்றவர்கள் கூறுவதற்கும் தந்தை பெரியார் கருதுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

“மற்றவர்கள் பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்க வேண்டும்’’ என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகிறார்கள். பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று கூறுகிறோம். (‘குடிஅரசு’ 6.4.1930) என்று இன்றைக்கு 91 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் கூறியிருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.   ¨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *