முகப்புக் கட்டுரை : தேவையில்லா தேசத் துரோகச் சட்டம்

ஆகஸ்ட் 1-15,2021

தேச விரோத குற்றச்சாட்டைச் சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகும் அவசியமாகிறதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, விடுதலை உணர்வை ஒடுக்கவும் காந்தி, பாலகங்காதர் திலகர் போன்றோருக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட காலனிய கால சட்டப்பிரிவு இன்னும் தேவையா என்று இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரிடம் (அட்டர்னி ஜெனரல்) கேள்வி எழுப்பியது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை, இதே விவகாரத்துடன் தொடர்புடைய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்குடன் சேர்த்து ஒரே விவகாரமாக விசாரணைக்குப் பட்டியலிட நீதிமன்றப் பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், “இந்த விவகாரம் தங்களுடைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே அம்சத்தைக் கொண்டுள்ளது. சட்டப் பிரிவைப் பயன்படுத்துவதில் சில வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் 124ஏ பிரிவு அரசியலமைப்புக்கு எதிராகவும் அது அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றியும் நாங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்“ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அரசின் அட்டர்னி ஜெனரலிடம் தலைமை நீதிபதி ரமணா கேள்விகளை எழுப்பினார்.

“தேச விரோத சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை அறியலாம். இந்தச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் விதத்தை, ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்“ என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்தப் பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். “தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் போது அதற்கு நிருவாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.கே.வேணுகோபால், “இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அதன் நோக்கம் சட்டபூர்வமாக அமல்படுத்தப் படுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கலாம்“ என்று கூறினார்.

இருப்பினும், ஒரு தரப்பால் எதிர் தரப்பு குரலைக் கேட்க முடியாமல் போனால் பிறகு எதிர் தரப்புக்கு எதிராக இந்தச் சட்டப்பிரிவு பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாக ஒரு குற்றச்சாட்டில் சேர்க்கப்படலாம். தனி நபர்களைப் பொருத்தவரை இது மிகவும் தீவிர பிரச்சனை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் மனுதாரர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல். இந்த நாட்டுக்காக தமது மொத்த வாழ்வையும் அவர் அர்ப்பணித்துள்ளார். எனவே, இதை உள்நோக்கம் கொண்ட மனுவாகக் கருதிவிட முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதைத் தொடர்ந்து எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா மனுவுடன் வொம்பாட்கெரே மனுவையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட அறிவுறுத்திய நீதிபதி, அதன் பிறகு மனுதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

124ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான வாதம்

பட மூலாதாரம், 1962ஆம் ஆண்டில் கேதார்நாத் சிங்குக்கும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு உறுதிப்படுத்தப்பட்டது. அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் வொம்பாட்கெரே.

ஒன்றிய அரசமைப்பின் 19(1) விதியில் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையின்படி ஒருவர் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாமல், அதை அரசுக்கு எதிரான செயல்பாடு போல குற்றம்சாட்டி கிரிமினல் குற்றமாக்க முற்படுவது, குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கிய அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் வொம்பாட்கெரே கூறியிருந்தார்.

எனவே, அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21 ஆகியவற்றைப் பின்பற்றும் வகையில், அவற்றுக்கு எதிரான சட்டப்பிரிவு அவசியத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும் தேவை எழுகிறது என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு, கேதார்நாத் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டது என்பதற்காக அதே அளவுகோலை வைத்து அந்தச் சட்டப்பிரிவை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அதுவே அந்தச் சட்டப்பிரிவை ஏன் மறுஆய்வு செய்யக்கூடாது என்ற கேள்வியின் அவசியத்தை நீதிமன்றத்துக்கு உணர்த்துவதாகவும் வொம்பாட்கெரே மனுவில் கூறியுள்ளார்.

இதே 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த கிஷோர் சந்திரா வாங்கெம்சா, சத்தீஸ்கரைச் சேர்ந்த கன்னையா லால் ஷுக்லா ஆகிய இரு செய்தியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு யு.யு.லலித், இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசஃப் ஆகிய நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாகக் கருதப்படும்.

இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இதில், “அவநம்பிக்கை” என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.

இந்தியாவில் விடுதலை முழக்கத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேசத் துரோகச் சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்தச் சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.

தேசத் துரோகச் சட்டம் தேவையா?

பலராலும் வெறுக்கப்படும் இந்த காலனியச் சட்டம் சுதந்திர இந்தியாவில், அதுவும் சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்தும் எப்படித் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது? இதற்கான விடை நாடாளுமன்றம், அதைப் போலவே நீதித் துறை இரண்டின் கூட்டுப் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அரசமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களின் போது, பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் நியாயமான கட்டுப்பாடு என்ற பெயரில் தேசத் துரோகச் சட்டத்தை அறிமுகப்படுத்த சிலர் முயன்றனர். ஆயினும், மற்ற பல உறுப்பினர்களால், அதுவும் சுதந்திரப் போராட்டத்தின்போது அந்தச் சட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களால், எதிர்ப்புக்குள்ளாகியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்தச் சட்டமானது தனது நாடாளுமன்றத்தால் விரைவில் தூக்கியெறியப்படும் என்று சில ஆண்டுகள் கழித்து நேரு கூறினார். எனினும், அது நடக்கவே இல்லை. ஆனால், 1962-இல் தேசத் துரோகச் சட்டத்தை நீக்குவது குறித்த ஒரு வழக்கு இந்தத் தவறைச் சரிசெய்வதற்கான பொன்னான வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அமைந்தது.

அந்தச் சமயத்தில், தேசத் துரோகச் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என்று ஏற்கெனவே இரண்டு உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன. ஆயினும், உச்ச நீதிமன்றம் தனக்கான மாபெரும் வாய்ப்பைத் தவறவிட்டது, மேலும் – எதிர்மறைவாய்ப்பாக – உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைத் தள்ளுபடியும் செய்து, தேசத் துரோகச் சட்டம் அரசமைப்புப்படி செல்லும் என்று நிறுவியது.

அண்மையில் ஒரு உரையொன்றில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோகச் சட்டத்தின் பிரதானமான பிரச்சனைகள் பலவற்றைப் பற்றிப் பேசினார்; நவீன ஜனநாயகத்தில் அந்தச் சட்டத்தின் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார். பிரிட்டிஷ் காலகட்டத்தில் பயன்படுத்தப் பட்டது போலவே தேசத் துரோகச் சட்டம் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் இந்த 2019 காலகட்டத்தில் நீதிபதி தீபக் குப்தாவின் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவையே. பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் தருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, அரசாங்கமும் மற்ற அதிகார மய்யங்களும் கடுமையாகவும் துடிப்புடனும் சில சமயம் பண்பற்ற விதத்திலும் கேள்விக் குள்ளாக்கப்படவும் சவாலுக்குள்ளாக்கப்படவும் செய்யலாம். மேலும், அரசைத்தான் என்றில்லை; தேசம், தேசியவாதம் போன்றவற்றைக் குறித்து நாம் கொண்டிருக்கும் கருத்துகளும் எல்லா சமயங்களிலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அதுதான் பன்மை ஜனநாயகத்தின் சாரம். அது உரையாடலை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பலவந்தத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதைப் போன்ற ஜனநாயகத்துக்கு தேசத் துரோகச் சட்டம் ஒரு தடையாக இருப்பதால், அதை நீக்கியாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *