தலையங்கம் : பெண்ணுரிமை – கடக்க வேண்டிய தூரம் அதிகம்!

ஆகஸ்ட் 1-15,2021

மனித குலத்தின் சரிபகுதியான பெண்கள் _ இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கூட _- அறிவியல் வளர்ந்து விண்ணை முட்டி, விண்வெளியில் மனிதர்கள் “சுற்றுலா’’ செல்லும் இவ்வளவு ‘வளர்ந்த காலத்திலும், தங்களது நியாயமான மனித உரிமையை இழந்தவர்களாகவே காணப்படுவது மனித குலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகும்!’

1929இல் செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை இயக்க மாகாண மாநாட்டில் _  பெண்களுக்குப் படிப்பு, உத்தியோகம், சொத்துரிமை போன்றவை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட சட்ட திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தீர்மானம் இயற்றினார்; அவரைப் பகடி செய்யும் வகையில், ‘எவ்வளவு பெண்ணுரிமை’ என்று சில விஷமிகள் வினவினர்.

அவர்களுக்கு மண்டையிலடித்தது போல அதே மொழியில் பதிலளித்தார் தந்தை பெரியார். “நான் ஒன்றும் அதிகமான உரிமைகளைக் கொடுங்கள் என்று அவர்களுக்காகக் கேட்கவில்லை. ஆண்களுக்கு என்னனென்ன உரிமைகள் எவ்வளவு உண்டோ  அதே உரிமைகள் அதே அளவு பெண்களுக்கும் கொடுத்தால் போதும்’’ என்றார்!

எவ்வளவு ஆழமான அர்த்தமுள்ள பதில் பாய்ந்தது பார்த்தீர்களா?

இன்னமும் போராடித்தானே வருகிறார்கள்! படிப்பும், உத்தியோகங்களும், சொத்துரிமையும் சட்டபடி பெற்றிருந்தாலும் நடைமுறையில் அவர்கள் படும் அல்லல்கள் கொஞ்ச நஞ்சமா என்ன?

நம் நாட்டில் படித்த பெண் சம்பாதிக்கிறார் என்பது உண்மைதான்!  சம்பாத்தியத்தின் முழு உரிமை அவருக்கு உண்டா? (சில விதிவிலக்குகளைத் தள்ளுங்கள்)

உத்தியோகம் பார்த்தாலும், வீட்டில் “நளபாகத்தோடு அறுசுவை அமுதுபடைக்கும்’’ “பத்தினியின்’’ பங்கு- பெண்ணுக்கு; ஆணுக்கு உண்ணுவதும் குறை கண்டுபிடிப்பதும் தவிர, பெரிதாக வேலை என்ன உண்டு?

இவற்றைக் கூடுதல் சுமைகளாக படித்த பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் அனுபவித்துத் தீர வேண்டியவர்களாகவே உள்ளார்கள்!

இவற்றால் ஒரு நல்ல வேலைக்காரி, நல்ல சமையல்காரி, வழக்கமான இதர தாம்பத்திய உறவுக்கான கடமைகள் _ – இவற்றைத் தாண்டி மன உளைச்சல் ஏற்படும் வகையில், குழந்தைப் பேறு பிரச்சினை!

நம் நாட்டில் உள்ள ‘காட்டுமிராண்டித் தனமான’ முதிர்ச்சியற்ற ஒரு முதற்கேள்வி, எவராவது வாழ்விணையர் இருவரைப் பார்த்தவுடன், ‘உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்? ஆணா? பெண்ணா?’ என்று ஏதோ புள்ளி விவரம் சேகரிக்கும் அரசு அதிகாரிபோல் அடுக்கடுக்கான கேள்விகள்!

இவை ஒருவருடைய அந்தரங்கத்தில் அத்துமீறி நுழையும் அநாகரிகம் என்பதே பலருக்குப் புரிவதில்லை.

‘கணவன்’ பாத்திரமானவர்களுக்குக்கூட மனைவியின் உடல் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் எஜமானத்தனம், குழந்தை பெற்றுத்தான் வாழவேண்டும் என்று உலகியல் திருப்திக்கான ஆணையிடும் அதீதமான அதிகாரம் _ இவை மற்ற மனித உரிமை பறிப்பு அல்லவா? (இது குறித்து திராவிடர் கழக மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன).

மதமும், சமூகத்தின் சனாதனச் சிந்தனைகளும் இதற்கு லைசென்ஸ் கொடுப்பதோடு, மோட்சத்தை அடைய புத்திரப் பேறுதான் ‘விசா’ என்பது போன்று கற்பித்து பெண்ணினத்தை வறுத்தெடுக்கின்ற கொடுமை பரவலாக உள்ளது.

குழந்தை வேண்டுமா _ வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை முழுக்க  முழுக்க பெண்களுக்கு மட்டுமே உண்டு.  ஏனெனில், பத்து மாதம் தூக்கிச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்துப் பெற்றுக் கொடுக்கும் அவருடைய முடிவாக இருப்பதுதானே நியாயம்?

ஏதோ மமதை படைத்த ஆணினம் இதனை சிந்திக்க மறுக்கிறது _ இந்த விண்ணியல் வளர்ச்சி யுகத்திலும் கூட.

“பெண்ணின் உடல் சார்ந்த உரிமை என்பதில் ‘புனிதம், தாய்மை, பெண்மை’ போன்ற கட்டுகளைத் திணித்து -_ அடிமைத்தனத்திற்கு அலங்காரப் பூச்சூட்டல் என்ற ஆண் ஆதிக்கச் சுவரை இடித்துத் தள்ளி சுதந்திரம் _- முழு சுதந்திரம் அவர்களுக்கு அவர்கள் உடலின் மீதும் _ உள்ளத்தின் மீதும் இருக்கும்படி செய்தலே பேதமற்ற புதுஉலகு காணுவதாகும்!

குழந்தைகளுக்கான ‘வாடகைத்தாய்’ உள்பட கருத்தியல் _ நடைமுறைரீதியாக வந்தபிறகும் கூட, இன்னமும் ‘மலடி’ என்பதும், அவமானப் படுத்துவதும் நியாயந்தானா?

எனவே, ஜாதி ஒழிப்பில் நாம் எவ்வளவு தூரம் கடுமையான பயணம் _ இலக்கு நோக்கிச் செல்ல வேண்டுமோ, அதற்கு மேலேயே செல்ல வேண்டிய தூரம், பெண்ணுரிமைப் போரில் உண்டு. காரணம், இது ஆண்களின் சுயநலம், சுகபோகம் என்ற ஒருவழிப் பாதையின் பயணமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதால்தான்!

பெரியாரியமே இதற்கு ஒரே தீர்வு! பெண்களே உங்கள் உரிமைகளுக்கு நீங்களே போராடுங்கள் என்பதே ஒரே வழி!

– கி.வீரமணி,

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *