அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு(264)

மார்ச் 16-31,2021

பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்

கி.வீரமணி

இந்தியத் தலைநகர் புதுடில்லி, ரஃபி மார்க், மாவ்லங்கர் அரங்கில் தந்தை பெரியாரின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை 19.9.1995 அன்று திராவிடர் கழகம், சமூகநீதி மய்யம், டில்லி தமிழ்ச்சங்கம், தலித் சேனா, சமதா கட்சி அமைப்புகள் இணைந்து நடத்தியது. நிகழ்வில் கலந்துகொள்ள வரும் சிறப்பு விருந்தினரை பெரியார் சமூகக் காப்பு அணியினர் அணிவகுத்து வரவேற்றனர். விழாவிற்கு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், நாடாளுமன்ற சமதா கட்சித் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி., எழுத்தாளர் டாக்டர் பிரிஜ்லால் வர்மா, லக்னோ நகர முன்னாள் மேயர் தாவுஜி குப்தா, முன்னாள் மத்திய கல்வியமைச்சர் டி.பி.யாதவ், உ.பி. மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிகேவல் பிரசாத், டாக்டர் அண்ணல், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் சிங், சையத் சகாபுதீன் எம்.பி., என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூகநீதித் தலைவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் இன்றைய தேவைகளையும், தொடர்ந்து செய்ய வேண்டிய சமூகநீதிப் பணிகளையும் குறித்து விரிவாகப் பேசினார்கள்.

அந்த விழாவில் எனது உரையில், “ஈரோட்டுப் பெரியார் என்னும்  மருந்தே இன்றைக்கு   சர்வதேச பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு. லக்னோவில் ‘பெரியார் மேளா’ கொண்டாடியமைக்காக கன்ஷிராம் அவர்களுக்கும், முதல்வர் மாயாவதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுடில்லியிலும் தந்தை பெரியார் சிலையை நிறுவ அனைத்துத் தலைவர்களும் முன் முயற்சி எடுக்க வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் ‘All roads lead to Rome’’ என்பது போல இன்று எல்லாச் சாலைகளும் பெரியாரை நோக்கியே செல்லத் துவங்கி விட்டன. ‘All roads lead to Periyar’. உலகெங்கும் இப்போது பெரியார் பவனிவந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. “Periyar E.V.Ramasamy messiah of the backward classes, invades north India” என்னும் பெயரில் வந்திருக்கிறது. பெரியாரின் நுழைவு என்பது போர் முறை நுழைவல்ல; அமைதியான முறையில் உங்களுக்குள் நுழைகிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்ற உயிர்தான் விலை என்றால் சாவையும் சந்திக்கத் துணிவோம்! எந்தத் தியாகத்தையும் செய்து அய்யா கொள்கையை நிலைநாட்டுவோம், நன்றி’’ என உணர்ச்சி மேலிட பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

நிகழ்வில், நிறைவுரை ஆற்றிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தமது உரையில், “தந்தை பெரியாரின் தத்துவம் என்பது மனிதனின் சுயமரியாதையை உணர்த்துவது. ஜாதி முறையை ஒழிக்கவும், மூடநம்பிக்கைகளை அகற்றவுமே பெரியார் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்துப் போராடினார். டில்லியில் மட்டுமல்ல; மாபெரும் தலைவரான பெரியாருக்கு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். கட்சிகள் நம்மைப் பிரிக்கும் கட்சிகளை சமூகநீதிக்காக ஒருங்கிணைக்கும் ஆற்றல் நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கே உண்டு. ஒரு தலைமைக் கொறடா  (Chief Whip) போல் இருந்து ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என கழகப் பணிகளைப் பாராட்டிப் பேசினேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. சமதா கட்சி முன்னணிப் பிரமுகர் அசோக் யாதவ் நன்றி கூறினார். விழாவினையொட்டி தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவின் மாட்சிமைக்குரிய செய்தி இந்தியாவில் பரவி விடக் கூடாது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கிளப்பி விடப்பட்ட செய்தி “பிள்ளையார் பால் குடித்தார்’’ என்ற புரட்டுச் செய்தி என்பது நினைவு கூரத்தக்கது.

மறுமலர்ச்சி தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட இயக்கத்தின் மூத்த தோழர்களில் ஒருவரும் சீரிய கொள்கை வீரருமான திரு.அ.செல்வராசன் அவர்கள் 2.10.1995 அன்று மறைந்தார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் துயரமும் அடைந்தேன்.

அவரது பொதுவாழ்வு திராவிடர் கழகத்திலிருந்து துவங்கிய ஒன்றாகும்! ‘மிசா’ கைதியாக சென்னை சிறையில் பல்வேறு சோதனைகளை அனுபவித்தவர்களில் அவரும் ஒருவர். சிறையில் இருந்தபோதும் சரி, வெளியிலும் மிகுந்த மரியாதையுடனும், வாஞ்சையுடனும் பழகும் பண்பாளர் அவர். துடிப்புள்ள ஓர் இளைஞரைப் போலவே எப்போதும் காட்சியளித்தவர்.

அவரது மறைவு _ ம.தி.மு.க.வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல; திராவிட இயக்கத்துக்கும், இனிமையான சுபாவ பொதுவாழ்வுக்கும்கூட பேரிழப்பாகும். திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது துயரத்திலும் பங்கு கொள்கிறது என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

தமிழரசுக் கழகத் தலைவர் மதிப்புக்குரிய பெரியவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது 90ஆம் வயதில் 3.10.1995 அன்று காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துயரமும், துன்பமும் அடைகிறோம்.

அவருக்கும், நமது இயக்கத்துக்கும் கருத்து வேறுபாடுகள் மலைபோல என்றபோதிலும், பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதும், பேசும்போதும் அதைப் பொருட்படுத்தாது பண்புடன் நடந்துகொள்ளும் பான்மையர்.

அச்சுக்கோக்கும் ஓர் தொழிலாளராகத் துவங்கிய அவரது வாழ்வு, அரசின் மேலவைத் தலைவர் பதவிவரை வகிக்க அவருக்கு தமிழும், தமிழ்த் தொண்டும், அவர் எதிர்த்த திராவிடர் இயக்கமும் பெரிதும் உதவின!

தமிழ் எழுத்தும், பேச்சும் அவரால் பெரிதும் பொலிவு பெற்றன!

அம்மூத்த தமிழகத் தலைவரின் மறைவால் தமிழ் உலகம் ஒரு வெற்றிடத்தைப் பெற்று கலங்கி நிற்கிறது என மன வருத்தத்தோடு இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

“முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான மானமிகு அய்யா ஆர்.பி.சாரங்கன் அவர்கள் 10.10.1995 அன்று இயற்கை எய்தினார் என்பதைக் கேட்டு சொல்லமுடியாத துன்பத்திற்கும், துயரத்திற்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளது நமது இயக்கம்! நாமும், நமது கழகப் பொறுப்பாளர்களும்கூட இந்தத் துன்பத்தால் மிகவும் துடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்!

வாழ்நாளின் இறுதிவரை அவர் ஒரு கட்டுப்பாடுமிக்க சுயமரியாதை வீரர்! தஞ்சை மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக் காத்த தீரர்! அந்த வட்டாரத்திலும், மாவட்டத்திலும் அனைத்துக் கட்சியினராலும் கட்சிக்கு அப்பாற்பட்ட சான்றோர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட கொள்கை மாவீரர்!

முதிய வயதில்கூட அவர் இளைஞர்களோடு இளைஞராய் உழைத்தவர். இரண்டு தலைமுறையைத் தட்டிக் கொடுத்து ஈர்த்துப் பணி புரியவைக்கும் அவரது பாங்கு மறக்க இயலாத ஒன்று!

மன்னையில் அவர் ஒரு சிறப்பான கழகப் படிப்பகம், நூலகத்தை அமைத்து இனிவரும் சந்ததிக்கு அளித்துச் சென்றுள்ளார்.

சுமார் ஓராண்டு காலமாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், அந்நிலையிலும் கழக வளர்ச்சிபற்றி கவலையுடன் கேட்பார். அறிவுரை கூறி அடுத்தவர்களை பணியாற்றச் செய்வார்.

இன்று அவர் சுயமரியாதைச் சுடரொளியாகி, இயக்க வரலாற்றில் நிரந்தரமாகிவிட்டார்! முதிய வயதிலும் போராட்டக் களங்கண்டவர் ஆவார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பம் கொள்கைக் குடும்பம்.    அவருக்கு இயக்கம் வீர வணக்கம் செலுத்துகிறது’’ என மிகவும் வருந்திய மனநிலையில் செய்தி வெளியிட்டோம்.

திருச்சி வெல்லமண்டியில் தந்தை பெரியார் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், உ.பி. மாநில முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கன்சிராம் ஆகியோருக்குப் பாராட்டு விழாவும் 10.10.1995 அன்று மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. முன்னதாக விமானம் மூலம் வருகை தந்த உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அவர்களையும், கன்சிராம் அவர்களையும் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களோடு விமான நிலையும் சென்று வரவேற்றோம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் அவர்கள் மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்து, பெருங்கூட்டமும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.

மற்றொரு நிகழ்வாக சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்னகர் எம்.பி.இராமசாமி _குஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பாலகிருட்டினன், பெரியார் மாவட்டம் அத்தானியைச் சேர்ந்த ஆறுமுகம்_விஜயா ஆகியோரின் அருமைச் செல்வி கனகவல்லி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் தலைமையில், முதல்வர் மாயாவதி அவர்கள் மணமக்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்கள்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக உ.பி. முதல்வர் மாயாவதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வீரவாள் ஒன்றினை பரிசளித்தோம். வீரவாள் கொடுத்தபோது மக்கள் சமுத்திரம் ஆர்ப்பரித்து பெரு முழக்கம் செய்தது. “அவாளின்’’ ஆதிக்கத்தை வீழ்த்த இவ்“வாள்’’ பயன்படும் என்று நான் கூற, கூடியிருந்த மக்கள் எரிமலையாய் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள்.

உ.பி. மாநில முதல்வர் தமது உரையில், “தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டார்கள். இங்கே நடைபெறும் சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் எந்த மதத்துக்கும் நாங்கள் கடுமையான எதிரிகள்’’ என கொள்கை விளக்கி உரையாற்றினார்.

தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் _ மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரிக்கு உ.பி. அரசு சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

கன்சிராம் உரையாற்றுகையில், “1956இல் லக்னோவில் பெரியாருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். எனவேதான் நானும், நண்பர் வீரமணியும் பெரியாரை அவரை எதிர்த்த இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்தோம்.

லக்னோ விழாவில் நீங்கள் கலந்துகொண்டு நடந்துகொண்ட விதமும் உ.பி. மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். நான் காணும், கலந்துகொண்ட முதல் சுயமரியாதைத் திருமணம் இது. இந்தச் சிந்தனை தந்தை பெரியாரின் புரட்சி வடிவம். இதுபோன்ற திருமணங்கள் இந்தியா முழுமைக்குமே தேவை’’ என பல்வேறு கருத்துகளைக் கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில், “பெரியார் மேளா என்ற ஏ.கே.47 துப்பாக்கியை ஆரியத்துக்கு எதிராகத் தாங்கிக் காட்டியவர் கன்சிராம். 1956இல் தந்தை பெரியார் லக்னோ வந்தபோது கறுப்புக்கொடி பிடித்தவர்கள் அதே லக்னோவில் இந்தியாவே குலுங்க பெரியாருக்கு விழா எடுத்தீர்களே! அதற்கான நன்றித் திருவிழா இது. முதல்வரின் நன்கொடையை விட வடக்கு தெற்குக்கு அளித்துள்ள அங்கீகாரம். சகோதரத்துவத்தின் சங்கநாதம்! எங்கள் அன்பின் அடையாளம்!’’ என நன்றி உணர்வுடன் உரையாற்றினேன். திருச்சியே குலுங்குமளவுக்கு பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி பாராட்டும் விழாவினையடுத்து, 11.10.1995 அன்று உ.பி. முதல்வரும், கன்சிராம் அவர்களும் வல்லம் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்தனர். மாணவியர்கள் இருமருங்கிலும் வரிசையாக நின்று விருந்தினர் பெருமக்களை மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச.ராஜசேகரன் விருந்தினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் காட்சியை கன்சிராம் திறந்து வைத்தார்.

முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள், நாகம்மையார் விடுதியின் இரண்டாம் பகுதியை பலத்த கர ஒலிக்கிடையே திறந்துவைத்து வாழ்த்தினார். சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியோடு உரையாற்றுகையில், “தென்னிந்தியாவில் இரண்டு மாமனிதர்கள் _ தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள். அவர்களின் பெயரால் பெண்களுக்குத் தொழில்நுட்பக் கல்லூரி நடத்துவது சரியானது _ சிறப்பானது! உங்களது சமூகநீதி வளர்ச்சிக்கான நிறுவனங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என பாராட்டி உரையாற்றினார்.

கட்டட எழிற்கலை பட்டப்படிப்புப் பிரிவை (B.Arch.,) துவக்கி வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை சகோதரர் கி.வீரமணி சிறப்பாகச் செய்து வருகிறார். இந்தியா முழுவதும் இந்தப் பணியினை எடுத்துச் செல்ல வேண்டும்’’ என வாழ்த்தி உரையாற்றினார். 10 லட்சம் ரூபாய்  உ.பி. அரசு சார்பில் வழங்கினார்.

இவ்விழாவினையொட்டி, “பெரியார் டெக்மேக் 95’’ என முதல் மலரை கல்லூரி தலைவராக நான் வெளியிட, கல்லூரி தாளாளர்கள் கோ.சாமிதுரை, வீகேயென் கண்ணப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவினையொட்டி ஏராளமான பேராசிரியர்களும், கழகப் பொறுப்பாளர்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிடர் கழகத்தில் இயக்கப் பற்றோடும் தந்தை பெரியார் நிறுவனங்களில் நாணயமாகவும், எங்கள் நம்பிக்கையை என்றும் காத்து பணிபுரிந்து வரும் சகோதரர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நிதி அலுவலர் (மறைந்த) ப.முத்துகிருட்டினன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ப.சுப்பிரமணியம், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோரின் தந்தையார் திரு.பண்டாரம் அவர்கள் 11.10.1995 அன்று நள்ளிரவு மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். உடனடியாக கழகப் பொறுப்பாளர்களையும், தஞ்சை, திருச்சி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு இரங்கல் தந்தி அனுப்பப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பண்டாரம் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தினேன். கழகப் பொறுப்பாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

அதனையொட்டி 18.10.1995 அன்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், களக்காடு அடுத்த தேவநல்லூர் கிராமத்தில் அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலுந்துகொண்டேன். மொத்த கிராம மக்களும் இந்த படத்திறப்பில் குழுமியது வியப்படையச் செய்தது.

மறைந்த அய்யா பண்டாரம் அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், “இந்த கிராமத்திலே தன் பிள்ளைகள் _ தன்னுடைய குடும்பப் பிள்ளைகள் படித்தால் மட்டும் போதாது என்ற உணர்வோடு, மறைந்த அய்யா பண்டாரம் அவர்கள் இந்த ஊர்ப் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெற்று ஒரு தொடக்கப் பள்ளிக் கூடத்தை துவக்கி சிறப்பாக நடத்தி வந்தார்கள் என்பதை நினைக்கும்போது அவர்களுடைய பரந்த மனப்பான்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பண்டாரம் அய்யா அவர்களையும், அம்மா அவர்களையும் நான் ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாக எனக்கு உடல்நல நிதி கொடுக்கிறேன் என்று அவர்கள் சென்னைக்கு வந்து சால்வை போர்த்தி விட்டு நிதி கொடுத்தார்கள். அப்போது அவர்களிடம் கூறினேன், “அய்யா! உங்கள் பிள்ளைகள் எல்லாம் எங்களுக்கு உதவியாக இருக்கிறதே போதுமே, வேறு எதுவுமே தேவையில்லையே’’ என்று நெகிழ்ந்து போய்ச் சொன்னேன். “உங்கள் பிள்ளைகள் நாணயத்துக்கு இலக்கண மானவர்கள். தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்துக்கு, இந்தச் சகோதரர்கள் செய்து வருகிற பணிக்கு, அவர்களைத் தந்ததன்மூலம் அய்யா அவர்கள் இந்த இயக்கத்துக்கும் சமுதாயத்துக்கும் மிகப் பெரிய ஒரு தொண்டாற்றி இருக்கிறீர்கள்.’’ என்றேன்.

எங்களுடைய குடும்பத்திலே அங்கங்களாக இருக்கக் கூடியவர்கள் மட்டுமல்ல! எங்கள் நிறுவனத்தின் அங்கங்கள் அவர்கள், எங்களுக்கே அங்கங்கள் மாதிரிதான். இங்கு இயங்கும் பள்ளிக்கூடம் அவர் பெயரிலே இயங்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் உறுதுணையாக இருந்து துணை நிற்போம். அய்யா அவர்கள் நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். நல்ல பிள்ளைகளை இயக்கத்துக்கு _ நிறுவனத்துக்குத் தந்ததன் மூலம் சமுதாயத்துக்கு நற்றொண்டு ஆற்றியவர். அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நடத்த வேண்டும்’’எனக் கூறி அய்யாவுக்கு புகழ் மாலை சூட்டி மரியாதை செலுத்தினேன். கிராம மக்கள் அனைவரும் ஜாதிப் பாகுபாடின்றி கூடி நின்று படத்திறப்பில் கலந்துகொண்டு அய்யா நினைவைப் போற்றி மரியாதை செலுத்தினார்கள். கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கிராம முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *