தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு!

டிசம்பர் 16-31, 2020

7.3.1995 அன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு பினாங்கு சென்றடைந்தேன். என்னுடன் சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் திரு.சந்திரன் அவர்களும் உடன் வந்தார். பினாங்கு விமான நிலையத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் திரு.ரெ.சு.முத்தய்யா, பொதுச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், பினாங்கு மாநில தி.க.தலைவர் திரு.ச.புட்பநாதன், திரு.அண்ணாமலை, சுங்கைப் பட்டாணி திருவாளர் வேலு, திருமதி வேலு, துரை.அசோகன், செ.குணாளன் ஆகியோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு சிறப்பான விருந்து கொடுத்து, மகிழ்ந்து உரையாடினார்கள்.

திரு.ச.புட்பநாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பெரியார் காணவிரும்பிய சமுதாயம் என்னும் தலைப்பில் ஒரு மணி நேர நீண்ட உரையை நிகழ்த்தினேன்.

 

8.3.1995 அன்று கார் பயணம் மூலம் கோலாலம்பூர் சென்றடைந்தேன். பாலஸ் ஓட்டலில் தங்கி, சொடாங் பகுதியில் பெர்த்தானிலா வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் திரு.அனந்தராமன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஆசிரியராக இருந்தவர். அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.

பின்னர், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் மலேசிய தொலைத்தொடர்பு, எரிசக்தி அமைச்சரும், மலேசியத் தமிழர் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களை அவர்களது அமைச்சகத்தில் சந்தித்தேன். பல்வேறு நிலவரங்கள் பற்றி உரையாடினோம். தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியின் இரண்டாம் பகுதி கட்டடத்தினைத் திறந்து வைக்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள ஒப்புதல் வழங்கினார். அன்று அவருடைய 59ஆம் பிறந்த நாள் என்பதாலும், அவர் போட்டியின்றித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதற்கும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்தேன். அவரது துறையின் சாதனைகளை விளக்கிக் கூறினார். அவரது அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தொலைபேசிக் கருவி ஒன்றினையும் எனக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்தச் சந்திப்பின்போது, துணை அமைச்சர் திரு. டத்தோ மகாலிங்கம், பாரிஸ்டர் வடிவேலு எம்.பி. ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

மாலை 6:00 மணிக்கு ஈப்போ, தாப்பா கழகத் தோழர்களின் சந்திப்பில் தோழர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன்.
9.3.1995 மலேசிய தாப்பா கிளைக் கழகச் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகத் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கிளைத் தலைவர் திரு.கெங்கய்யா தலைமை தாங்கினார். தேசியத் தலைவர் திரு.ரெ.சு.முத்தய்யா உரையாற்றினார். இறுதியாக உரையாற்றுகையில், மலேசிய மண்ணில் கழக வளர்ச்சி, அடுத்துச் செய்யவேண்டிய பணிகள், கழகக் கட்டுப்பாடு, மூடநம்பிக்கை, ஜாதி ஒழிப்பு இவற்றை மய்யமாக வைத்துச் செய்ய வேண்டிய இலக்குபற்றி நீண்ட நேரம் உரையாற்றினேன்.

இறுதியில், கடைவீதிப் பகுதியில் கழகத்திற்கு என அங்கு வாங்கப்பட்ட மனையைக் காட்டி, பெரியார் மாளிகை என்று கழகப் பணிமனை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டதை விளக்கி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு அவசியம் தாங்கள் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைப்பு விடுத்தனர்.
10.3.1995 அன்று மலேசியத் தலைநகரில் உள்ள மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற தேசியப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

பச்சை அட்டை கொண்ட குடிஅரசு பத்திரிகையில் 1929இல் பெரியார் மலேயாவுக்கு வந்த செய்திகளில், பத்தாங் பெர்சுந்தை-யிலும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடந்துள்ளதைக் காண முடிந்தது. நான் பிறப்பதற்கு முன்பே சுயமரியாதை உணர்வு பெற்றவர்கள் இங்கு இருந்துள்ளார்கள். இயக்க வரலாற்றில் இடம்பெற்ற நகரம் பத்தாங் பெர்சுந்தை.
மலேசியாவில் இனி வருங்காலத்தில் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும், ஒற்றுமையுடன் கழகப் பணிகளை ஆற்றுமாறு மலேசிய திராவிடர் கழகத் தோழர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் அறிவுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

பின்னர், மலேசிய நாளேடுகளான தமிழ்நேசன், மலேசிய நண்பன், தினமுரசு, உயர்வோம் நாளேடுகளின் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். இந்த நீண்ட செவ்வியில் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். மாலை பத்தாங் பெர்சுந்தையில் இந்திய சமூக மண்டபத்தில் கழகத் தோழர்கள், மகளிர் அணிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாற்றினேன்.

11.3.1995 அன்று மலேசியாவின் பிரபல தொழில் நிறுவனமான ஜோகூர்பாரு சின்னய்யா அண்ட் சன்ஸ் தொழிற்பணிமனைகளைப் பார்வையிட அழைத்துச்சென்றனர். அங்கு கோலாலம்பூர் முதுபெரும் சுயமரியாதை வீரர் ஏ.எம்.திருநாவுக்கரசு, திரு.அன்புராயன், திருமதி விஜயா மருதமுத்து, இரமாமணி மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும், கழகப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாடினேன். தமிழர்களால் நடத்தப்படும் மலேசிய நாட்டுத் தொழிற்கூடங்களில் மிகவும் முன்னணியில் இருப்பது திரு.சின்னய்யா அண்ட் சன்ஸ் நிறுவனம் என்பதில் மகிழ்ச்சியும், பாராட்டையும் தெரிவித்தேன்.

12.3.1995 அன்று சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினேன்.

21.3.1995 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.இராமதாஸ் அவர்களை விடுதலை செய்யக்கோரி விடுதலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அதில், தடா சட்டத்தை எதிர்த்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அவர்கள் அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும். அதைத் தடை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படியே தடை விதித்திருந்தாலும் பா.ம.க.வினரை முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டியதுதானே? தடையை எதிர்த்துக் கூட்டம் கூடுவது வரை அனுமதித்து விட்டு, அதன் பின்னர் கைது செய்யும் நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? அப்படி நடந்திருந்தால் தடியடி நடத்த வேண்டியது இருக்காதே! வேலூர் சிறையில் இருக்கும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவரை உடனே விடுதலை செய்வதுதான் சரியானது, பொறியை பெருநெருப்பாக்காமல் தீயை அணைப்பதுதான் நல்ல முறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

23.3.1995 பெரியார் பெருந்தொண்டர் மருதமுத்து இல்ல மணவிழா திருவாரூர் பி.ஆர்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவாரூர் மருதமுத்து _ நாகம்மாள் ஆகியோரின் மகன் காந்திக்கும், மயிலாப்பூர் அண்ணாமலை_பாக்கியம் ஆகியோரின் மகள் ரேவதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து நடத்திவைத்தேன். மருதமுத்துவின் பேரன் சித்தார்த்தன் _ உஷா ஆகியோரின் மகனுக்கு அறிவுச்செல்வன் எனப் பெயர் சூட்டினேன். அங்கு உரையாற்றுகையில், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மருதமுத்து கொள்கைப் பிடிப்புள்ள கடமை வீரர்.
அந்த உறவின் அடிப்படையில்தான் அவரது இல்ல மணவிழாவிலே கலந்துகொள்கிறேன். அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறக்காவிட்டால் இதுபோன்ற திருமணங்களை நடத்த உரிமை உண்டா? இன்றைக்கு சுயமரியாதைத் திருமண முறையை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள அரசாங்கமே ஏற்றுக்கொண்டு இருக்கிறது என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

  

24.3.1995 அன்று கடலூரில் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடும், சிறப்பாகவும் நடைபெற்றது. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கும், மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த கழகப் பொறுப்பாளர்களுக்கும் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன்.

மாநாட்டில் ஆபாசத்திலும், ஒழுக்கக் கேட்டிலும், மோசடியிலும் விஞ்சி நிற்பவர் _ பிரேமானந்தாவே! சாய்பாபாவே! என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட பட்டிமன்றம் மக்களுக்கு போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழித்து வெளிக்காட்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. மக்களும் இறுதி வரையிலும் அமைதியாகக் கேட்டனர்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, வீதி நாடகம் என சிறப்பாக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்கள் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக வைக்கம் மண்ணில் மனித உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்த வைக்கத்தில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை, இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவுக்கு அகில இந்திய மாநாடாக நடத்தப் போகின்றோம். இந்திய அரசியல் சட்டத்திலே ஜாதி பாதுகாக்கப்படுகிறது. ஜாதியை எந்தெந்த அமைப்புகள் பாதுகாக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாம் உடைத்தாக வேண்டும் என ஜாதி ஒழிப்பு அவசியம் குறித்து பல கருத்துகளைக் கூறினேன்.

26.3.1995 அன்று கரூரை அடுத்த நொய்யலில் கே.கே.பொன்னப்பா முயற்சியால் பெரியார் ஈ.வெ.ரா. அரசு உயர்நிலைப் பள்ளியில் உருவான தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையிலே திறந்து வைத்தேன். இவ்விழாவில தமிழகத் தொழில்துறை அமைச்சர் ம.சின்னசாமி கலந்துகொண்டு பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட வெள்ளி விழாக் கட்டடத்தையும், அறிவியல் ஆய்வகத்தையும் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தோழர்களும் கழகப் பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

1.4.1995 செங்கை எம்.ஜி.ஆர் (தெற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் கே.எம்.ராசகோபால் நினைவுப் பந்தலில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கழகக் கொடியை சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ந.சி.ராசவேலு ஏற்றி வைத்தார். பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், மாநாட்டை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்கிய கழக இளைஞரணித் தோழர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து, கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பித்தேன். சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் பட்டி மன்றம், கருத்தரங்கம் என சிறப்புடன் நடத்தப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றன. மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்ட மாதிரி தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் வந்து சிறப்பித்தனர்.

 

 

 

2.4.1995 அன்று வடசெங்கை எம்.ஜி.ஆர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புழல் காமராஜர் திடலில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை பெரியார் பெருந்தொண்டர் வடகரை முனுசாமி ஏற்றி வைத்தார். புழல் சிறைச்சாலை முன் மிகச் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டிருந்த அறிவு ஆசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்துவைத்தேன். மாநாட்டில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியின் மாநிலத் தலைவர் பூவை.மூர்த்தி சால்வை அணிவித்து மகிழ்ந்தார். வீதி நாடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கலவரம், திடீர் பிள்ளையார், ஜாதிக் கலவரம், பெண்ணடிமை, சாமியார்களின் மோசடிகள் போன்றவற்றை விளக்கி சிறப்பாக நடத்தப்பட்டது.

3.4.1995 அன்று தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இந்திரா நகர் ரெங்கநாதபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் இலவச நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், மக்களுக்குச் சிறப்பாகப் பயன்படும் இலவச நூலகத்தையும், இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் மய்யத்தையும் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

ஒரு நல்ல படிப்பகத்தைத் திறப்பதன் மூலம் இளைஞர்களிடையே ஒழுக்கமும் அறிவும் வளர இந்த நூலகம் பெரும் பங்காற்றும், இந்த நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்கள் போகும்போது துணிச்சல் மிகுந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உணர்வு உள்ளவர்களாகவும் செல்வார்கள் என பல கருத்துகளை எடுத்துரைத்தேன். மாநாட்டை யொட்டி வீதி நாடகமும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் வழங்கிச் சிறப்பித்தேன். மாநாட்டில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

 

 

8.4.1995 அன்று உடல் நலமற்று மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்று இல்லம் திரும்பிய டாக்டர் சிவாஜி கணேசனை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசினார். உடன் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றனும் வந்திருந்தார். 9.4.1995 நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்னிலத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. நன்னிலம் சுந்தரராசு_வேதாம்பாள் நினைவுக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கி வைத்தேன். பேருந்து நிலையம் அருகில் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர்களின் நினைவாக மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டைத் திறந்து வைத்தேன்.

அ.சுந்தரராசன் நினைவுக் கல்வெட்டு அருகில் அமைக்கப்பட்ட அவரது துணைவியார் சு.வேதாம்பாள் நினைவுக் கல்வெட்டையும் திறந்துவைத்தேன்.
பெரியார் பெருந்தொண்டர் நினைவரங்கத்தில் இருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டது. வீதி நாடகம், பெரியார் பெருந்தொண்டர்களின் இயக்கப் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கி அவர்களை சிறப்பித்தோம். மேடையில் கழகத் தோழர்களின் குழந்தைகளுக்கு அஞ்சாநெஞ்சன், அன்புநெஞ்சன், மணியம்மை என பெயர் சூட்டினேன். தீர்மான அரங்கம் நடத்தப்பட்டு ஜாதி முறையை ஒழிக்கப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பங்கேற்ற பெண்களைப் பாராட்டி அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தோம். மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் விதவைகளுக்குப் பூச்சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

மாநாட்டில் திருவாரூர் வீரய்யன்_ராஜம்மாள் ஆகியோரின் மகள் கமலத்திற்கும், திருவாரூர் தங்கராசு_ராஜாத்தி ஆகியோரின் மகன் கரிகாலனுக்கும், லால்குடி தியாகராசன்_ நாகம்மாள் ஆகியோரின் மகள் ரேணுகாவுக்கும், நெய்க்குப்பை கோபால்_ஜெயம் ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து இரண்டு சுயமரியாதைத் திருமணங்களையும நடத்தி வைத்தேன்.
சோழங்கநல்லூர் அந்தோணிசாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டை ஒட்டி நகரம் முழுவதும் சிறப்பான மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டும், பதாகைகள் வைக்கப்பட்டும் கழகப் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக மாநாடு நடத்தப்பட்டது பாராட்டுக்குரியதாகும்.

11.4.1995 அன்று இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இயற்கை எய்தினார் என செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரது மறைவையொட்டி கழகம் வெளியிட்ட இரங்கலில் 99 ஆண்டுகள் நிறைவு பெற்று, 100ஆவது பிறந்த நாளைக் கண்ட முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மாநில அமைச்சர், முதல் அமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர். 1975_76இல் மிசா கைதியாக அவர் அடைக்கப்பட்டார் என்பது ஒரு வரலாறு. மீண்டும் அவர் பிரதமர் ஆனார்! எதிலும் பிடிவாதமான கொள்கை கொண்டவர். இராமலீலாவில் கலந்துகொள்வது மதச்சார்பின்மைக்கு முரணானது என்று நமது கழகம் சுட்டிக்காட்டியபோது, அதை ஏற்றுக்கொண்டு அவரது செயலாளர் மூலம் _ பிரதமர் அதில் கலந்துகொள்ள மாட்டார் என்ற பதிலும் நமக்குக் கிடைத்தது!
அவர் நிதியமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை, அவருடைய பல்வேறு கொள்கைகளிலிருந்து மாறுபட்ட நமது இயக்கம் வரவேற்றது.
நிறை வாழ்வு வாழ்ந்த அவர், தன் வழி தனி வழி என்று இறுதிவரை வாழ்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு நமது இயக்கச் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

14.4.1995 அன்று அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செந்துறையில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெண்ணாடத்திலிருந்து ரயில் மூலம் செந்துறைக்குச் சென்றபோது கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புலவர் வை.நாத்திகநம்பி மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். சி.காமராஜ் மாநாட்டைத் திறந்து வைத்தார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன், பகுத்தறிவு ஆசிரியரணி செயல்முறைத் தலைவர் ந.வெற்றியழகன் ஆகியோர் பேசினார்கள்.
அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச் சிலையை தோழர்களின் பலத்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே திறந்து வைத்து உரையாற்றுகையில், பக்தி மோசடி, ஜாதி ஏன் ஒழிய வேண்டும் என்பதற்கான காரணங்கள், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை ஆகியவை பற்றி விரிவாகக் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தேன். மாநாட்டையொட்டி, மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் தீ மிதித்தல் மற்றும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு நிகழ்வில் கூவாகம் ரவி_தேன்மொழி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மணியம்மை எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தேன். ஜாதி ஒழிப்பு வீரர்களைப் பாராட்டிச் சிறப்பித்தேன். அடிமைச் சின்னமாம் தாலி அகற்றல் நிகழ்வில் பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முரசொலி முகிலனின் ஈரோட்டுப் பூகம்பம் என்னும் தலைப்பில் சிறப்பான நாடகமும் நிகழ்த்தப்பட்டது. மாநாட்டிற்காக செந்துறை நகரமே வண்ண வண்ண சுவரெழுத்துகளால் எங்கு பார்த்தாலும் பளிச்சிட்டன.

 

 

 

15.4.1995 அன்று திருச்சி (மேற்கு) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குளித்தலையில் பேருந்து நிலையம் அருகில் ஜாதி ஒழிப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. குளித்தலை நகர தலைவர் கி.திராவிடமணி கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கட்டடத்தில் தந்தை பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தேன். கட்டடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் படத்தையும் திறந்து வைத்தேன். நிகழ்ச்சியில் தென் மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் கல்வி வள்ளல் மதுரை பே.தேவசகாயம், உரத்தநாடு இரா.குணசேகரன், மதுரை மாவட்ட மகளிரணித் தலைவர் அன்னத்தாயம்மாள் உடனிருந்தனர்.

பெரியார் பாலத்திலிருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், நா.சந்தானகிருட்டினன் அரங்கில் எஸ்.பி.செல்வத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரத்தை வழங்கியும், பெரியார் பெருந் தொண்டர்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிவித்தும் சிறப்பித்தோம். ஈட்டி கணேசன்_லட்சுமி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வன் எனப் பெயர் சூட்டினேன். தெற்குநத்தம் சித்தார்த்தன் குழுவினரின் கருத்துச் செறிவுமிக்க வீதி நாடகமும் மேடையில் நடத்தப்பட்டது.

மாவட்ட கழகப் பொருளாளர் கவிஞர் பழ.ராமசாமி நாணயங்களாலான மாலையும், ஓட்டல் அதிபர் சீனன் நோட்டுகளால் ஆன மாலையையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாநாடு மேடைக்குச் செல்லும் வழி நெடுகிலும் கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் வணக்கம் செலுத்தி சிறப்பான வரவேற்பை அளித்தனர். மாநாடு முடியும் வரை மக்கள் பெரும் கூட்டமாக இருந்து உரையை செவிமடுத்துக் கேட்டுச் சென்றனர்.

15.4.1995 அன்று தமிழர் சமுதாயத்துக்குக் கிடைத்த ஒப்பற்ற கருவூலம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைந்துவிட்டார் என்னும் செய்தி அறிந்து, மிகுந்த வருத்தத்துடன் இரங்கல் செய்தியை வெளியிட்டோம். அதில்,
தமிழ் இனமான உணர்வின் கொள்கலனும், தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளரும், சமயப் பார்வை சமுதாயப் பார்வையாகவே இருக்க வேண்டும் என்ற தத்துவத்தினை தமது வாழ்வில் இறுதிவரை கடைப்பிடித்தவரும், பகுத்தறிவுப் பகலவன் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது பேரன்புக்குரியவருமான மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நேற்றிரவு மறைந்தார் என்கிற செய்தி பேரிடி போன்று நம்மையும் தமிழ்ச் சமூகத்தினையும் தாக்கும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
மகாசன்னிதானம் அவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன் அவர்கள் மருத்துவ மனையிலிருந்து வெளியேறி, குன்றக்குடிக்குப் புறப்பட்டுச் செல்லுமுன் சென்னையில் கழகப் பொறுப்பாளர்களுடன் நான் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்து, உரையாடியபோதுகூட மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்கள் பேசியது இன்னமும் பசுமையாக நம் நெஞ்சில் நிழலாடுகிறது.

இயற்கை தன் கோணல் புத்தியை இவ்வளவு விரைவில் காட்டும் என்று நாம் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
சமயவாதிகளிலே அவர் ஒரு தனி வழிச் சிந்தனையாளர்; பகுத்தறிவுக் கருத்தினை ஏற்கத் தயங்காத ஒரு திறந்த மனங்கொண்ட, தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த ஓர் ஒப்பற்ற கருவூலம்.
அய்யா, அம்மா அவர்களிடம் காட்டிய அதே அன்பையும், மரியாதையையும் இறுதிவரைக்கும், இயக்கத்திடமும், இந்த எளியவனிடமும் காட்டுவதற்குத் தயங்காத தமிழ்ப் புலச் செம்மல் அவர்!
நமது மீளாத் துன்பத்தையும், துயரத்தினையும் வெளிப்படுத்த நமக்குச் சொற்களேகூடக் கிடைக்கவில்லை.

உலகத் தமிழர்களின் உண்மை அன்புக்குரியவராக உயர்ந்த மாபெரும் மானுடப் பெருங்கோ அவர்!


அய்யா தந்தை பெரியார் அவர்கள் மறைவினால், அன்னை மணியம்மையார் இழப்பினால் வலிமை இழந்த நமக்கு, அதே தாய், தந்தை பாசத்தைப் பொழிந்த அன்பு மலையாக அடிகளார் இருந்து வந்தார்கள். அந்த மலையும் சாய்ந்து விட்டதே, அய்யகோ!
வரலாறு ஆகிவிட்ட அந்தப் பெருமானின் தொண்டு உள்ளம் தமிழ் இனத்துக்கும், மானுடத்திற்கும் நிரந்தரக் கலங்கரை விளக்கமாக என்றும் ஒளி காட்டட்டும்!
திராவிடர் கழகம் _ அவர்களது தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி தலைதாழ்த்தி தனது இறுதி மரியாதையை அந்த ஒப்பற்ற தொண்டு மலைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தோம்.
திராவிடர் கழகத்திற்கும் அடிகளாருக்கும் இருந்த புரிதலுடன் கூடிய நட்பும், தந்தை பெரியார் மீது அவர் கொண்டிருந்த பேரன்பையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் சில வரலாற்றுப் பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பெரியாரும் அடிகளாரும்

இம்மாத உண்மை இதழின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது குன்றக்குடி அடிகளார் சந்நிதானத்தின் திருவுருவமேயாகும்.
அடிகளார் சந்நிதானம் மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உண்மை இதழ் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டனவாக இருந்தாலும், உண்மையான மதமும், உண்மையான பகுத்தறிவும், மனித சமுதாய நல்வாழ்வு, வளர்ச்சி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டனவாதலால், மதமும் _ பகுத்தறிவும் ஒன்றுபட்டுப் பணியாற்றுவதால் கேடு ஒன்றும் ஏற்பட்டுவிடாது.

ஆனால், மதங்கள் என்பவை பெரும்பாலும் மதம் வாழ்வதற்கு _ நிலைப்பதற்கு ஆகவே இருப்பதால், அவற்றுக்குப் பெரிதும் மக்களின் நல்வாழ்விலும், வளர்ச்சியிலும் உள்ள கவலையைவிட மதப் பாதுகாப்பிலும் மத நிலைப்பிலுமே அதிகக் கவலை இருப்பதால் அவ்வாறே பணியாற்றிவர நேரிடுகிறது.

மதம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்புகொள்கிறது.
மதத்தைச் சேர்ந்த மக்கள், மதத் தலைவர்கள், மதப் பிரச்சாரகர்கள். மதம் என்ன சொல்லுகிறது? என்பதைப் பற்றித்தான் கவலை கொள்கிறார்கள். உதாரணமாக, சைவர்கள் நெற்றியில் விபூதி பூசிக்கொள்வதுதான் மத பக்தனின் இன்றியமையாத கடமை என்பார்கள். வைஷ்ணவர்கள் நெற்றியில் நாமம் (மண்ணைப்) பூசிக்கொள்வதுதான் இன்றியமையாத கடமை என்பார்கள்.
பகுத்தறிவுவாதிகளோ இவை இரண்டையும் பார்த்துச் சிரிப்பார்கள்.
இதுதான் இரு சமயத்தவர்களின் கடமையாகும்.

ஆனால், மனித சமுதாய நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் மதம் ஒரு முட்டுக்கட்டை என்று கருதுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகள் சிரிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களால் முடிந்த அளவுக்குப் பகுத்தறிவுவாதிகளை அனுசரித்து, ஆதரித்துப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள். அக்குழுவில் சேர்ந்தவர்கள்தாம் நமது பணிவுக்கும், போற்றுதலுக்கும் உரிய குன்றக்குடி மகாசந்நிதானமாவார்கள்.

அதாவது சர்க்கஸ் வளையத்தில் சிங்கமும் ஆடும் எப்படி ஒன்றுபட்டு, ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விளையாட்டுக் காட்டி ஒன்றையொன்று சுமக்கின்றதோ, அதுபோல்தான் ஒன்றுக்கொன்று பரிகாசம், வெறுப்பு, எதிர்ப்பு கொள்ளக்கூடிய பகுத்தறிவும், மதமும் குலாவுவதுமாகும்.
காரணம், சிங்கத்துக்கும் ஆட்டுக்கும் ஒற்றுமைக்குக் காரணம் சர்க்கஸ் மாஸ்டரின் சவுக்கடிதான். அதுபோல இந்த மதமும், பகுத்தறிவும் ஒன்றுபட்டுக் குலாவக் காரணம் மக்கள் நலமும் வளர்ச்சியும்தான். (தந்தை பெரியார், உண்மை 14.10.1971, பக்கம் 4)

விடுதலை பற்றி அடிகளார்
தலைவர் பெரியார் அவர்கள்தான், துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலையைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க, மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல் மட்டத்திற்கும், அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்பொழுதுதான் அவர்கள் கைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய விடுதலையினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
(விடுதலை பணிமனை (பெரியார் திடல்) திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் – விடுதலை – 2.11.1965)

கருப்பும் – காவியும்!
தந்தை பெரியார் அவர்களை மேடையில் சுட்டிப் பேசும்போது அடிகளார், தலைவர் பெரியார் என்றே குறிப்பிடுவது வழக்கம்!
திராவிடர் கழக மேடைகளில் அடிகளார் பங்கேற்றுப் பேசும்போது ஒரு மதத் தலைவர் என்கிற மரியாதையோடு தந்தை பெரியார் அவர்கள் அடிகளாரை நடத்துவார்கள்! தந்தை பெரியாரிடம் இருந்த அந்தப் பண்புக்கு ஈடாகவே _ அடிகளாரும் நடந்து கொள்வார்கள்.

ஒரே மேடையில் கருப்புடையும் _ காவி உடையும் தோன்றினாலும், தமிழர் நலம் என்னும் பொது உணர்வும் உயர்ந்த மனிதப் பண்பாடுகளும் அவர்களை இணைத்தன; கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் மிளிர்ந்த பண்பாட்டு நாகரிகத்தை _ அவை நாட்டுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தன!

அடிகளார் விடுதலைக்கு எழுதிய கட்டுரைகள்

தமிழ்நாட்டில் மதவெறிச் சக்திகள், மதத்தை அரசியலாக்கும் நோக்கத்தோடு மேற்கொண்ட முயற்சிகளை அடிகளார் எதிர்த்தே வந்தார். மதத்தின் பெயரால் _ பார்ப்பன மேலாண்மையை நிலைநிறுத்தும் வாதங்களை அவர்கள் முன்வைத்தபோது அடிகளார் அவர்கள் அந்த வாதங்களுக்குப் பதிலடி தந்து சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை விடுதலைக்கு அவ்வப்போது அனுப்பிவைப்பார்.

மயில்வாகனன் என்னும் புனைபெயரில் அந்தக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மயில்வாகனன் என்னும் புனை பெயரில் அந்தக் கட்டுரைகளை வடித்த சிந்தனையாளர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான்!
அடிகளாருக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
திராவிடர் கழகத்தின் சார்பில் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிவகங்கை ச.இன்பலாதன், மாவட்டக் கழகச் செயலாளர் சாமி.திராவிடமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
(நினைவுகள் நீளும்…)

-கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *