முகப்புக் கட்டுரை : உலகிற்கே ஒளிதரும் சுயமரியாதைச் சூரியன் பெரியார்!

டிசம்பர் 16-31 2019

தந்தை பெரியார் அவர்களை கடவுள் மறுப்பாளர், ஆரிய பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற அளவில் சுருக்கி, குறுக்கிக்காட்டும் செயலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் சூழ்ச்சிக்காரர்கள்.

ஆனால், பெரியார் உலகம் உய்ய உரிய வழிகளைச் சொன்ன ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அதனால் அவர்தம் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

அவரின் உலகளாவிய சிந்தனைகள் சிலவற்றை தொகுத்து நோக்கின் இவ்வுண்மையை எளிதில் அறியலாம்.

உலக நோக்கில் உயரிய சிந்தனைகள் :

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி (அமைதி) வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.                                           

(“குடிஅரசு’’ 07.08.1938)

நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.                   

(“விடுதலை’’, 02.09.1967)

மனிதன், உலகில் தன் சுயமரியாதையை,-தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.                             

(“விடுதலை’’, 20.9.1962)

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும், மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும், அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்குக் கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்?

(“விடுதலை’’, 18.10.1957)

உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழவேண்டுமானால் பிச்சை கொடுப்பதும், பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.

(“குடிஅரசு’’ 21.4.1945)

வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

(“குடிஅரசு’’ 4.5.1930)

ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தக் காலத்திலும் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது கிடையாது என்பதை வரலாறு கூறும். சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்; மக்களும் சமுதாயச் சீர்திருத்தம் அடைந்துதான் வருவர்.     

(“விடுதலை’’, 16.10.1958)

சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை – மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்துவிட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை- ஜாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும்.                                                            

(“விடுதலை’’, 15.5.1962)

உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான், மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிக மிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக்கொண்டு, கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.                                               

(“விடுதலை’’, 22.5.1961)

இன்றைய உலக நிலை-அதாவது மக்களுக்கு உள்ள தொல்லைகள், துயரங்கள், மக்களை மக்கள் ஏய்த்து வஞ்சித்தல் ஆகியன ஒழித்து, மக்களுக்குச் சாந்தியும் திருப்தியும் ஏற்பட வேண்டுமானால், பொதுவுடைமைத் தத்துவ ஆட்சி ஏற்பட்டே ஆக வேண்டும். இதில் ராசிக்கு (சமாதானத்துக்கு) இடமே இல்லை. ஆனால், நம் முயற்சியில், பாமர மக்களுக்கு இம்சையும், நாச வேலையும் சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.

(“விடுதலை’’, 5.5.1950)

நிலம் முழுவதும் ஏராளமாக ஒரு மனிதன் வசம் தேக்கப்பட்டிருக்கக் கூடாது. அனைவருக்கும் அவரவர்கள் அளவுக்குப் பிரித்துக் கொடுக்கும் காலம் வரும். அந்தப்படியான காலத்தை விரைவில் ஏற்படுத்த நம்மால் முடியாவிட்டாலும் நாம் வழிகாட்டிகளாயிருக்க வேண்டும்.                        

(திராவிட விவசாய தொழிலாளர் கழகம் ஏன்? 16)

கவலையற்ற-பேதமற்ற நிலை ஏற்படவேண்டுமானால், யாவரும் ஒரு நிலையில் இருக்கத்தக்க சமதர்ம நிலை உருவாக வேண்டும். இந்தச் சமதர்ம நிலை உருவாவதற்கு முதலில் சொத்துரிமையை ஒழித்தாக வேண்டும். உடைமைகள் எல்லாம் பொதுவாக ஆக்கப்பட வேண்டும்.

(பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, 16)

பாட்டாளிகளின் கவலையும் தொல்லையும் தொலைய வேண்டுமானால், முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும்.                                                     

(“விடுதலை’’, 7.4.1950)

பொது உடைமைக் கொள்கையின் கடைசி லட்சியம் _ உலகம் பூராவும் ஒரு குடும்பம், உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்;-உலகத்தில் உள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; -குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்பதேயாகும்.

(“குடிஅரசு’’ 10.9.1933)

ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையே மனித சமுதாயத்தில் இல்லாதிருக்குமாறு செய்வதேயொழிய, அங்கொருவனுக்கும் இங்கொருவனுக்கும் பிச்சைச் சோறு போட்டுச் சோம்பேறியாக்குவதல்ல.                       

(“விடுதலை’’, 22.4.1950)

அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதைப் பற்றியதல்ல. நமது மக்களுக்கு எந்தமாதிரியான ஆட்சிமுறை இருக்கவேண்டும் என்பதைப் பற்றியதே ஆகும்.                             

(“குடிஅரசு’’ 26.2.1928)

ஒரு தேசத்தை, அல்லது ஒரு சமூகத்தை ஒருவர் ஆட்சி புரிவது என்பது அந்தத் தேசத்து மக்களின் நன்மைக்காகவே ஒழிய, ஆட்சி புரிவோரின் நன்மைக்காக அல்ல.

மக்களுக்கு நாணயமாக, நடுநிலையாகத் தொண்டாற்றுவதும், தயவு தாட்சண்யம், அனுதாபம், ஆகியவைகளுடன் மக்களிடம் நடந்துகொள்வதும் அதிகாரிகளின் கடமையாகும்.

(“விடுதலை’’, 25.1.1947)

தொண்டறச் சிந்தனைகள் :

தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள்-பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.

(“விடுதலை’’, 17.08.1961)

ஒருவன், தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரிகம். அதற்கேற்ற வகையில் நமது உழைப்பு பயன்பட வேண்டும்.

(“விடுதலை’’, 04.05.1962)

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது; நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.                      

(“குடிஅரசு’’, 19.1.1936)

ஜனநாயக வாழ்வு என்பது பண்பட்ட மக்களிடையே இருக்க வேண்டியதாகும்.  

                                                 (“விடுதலை’’, 10.7.1969)

புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது, மாற்றி அமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல், மதம் ஆகிய துறைகளில் பெரிய தலைகீழ் மாற்றம் செய்தாக வேண்டும்.

(“விடுதலை’’, 25.5.1961)

எந்த நாடும் முதலில் சமூகச் சீர்திருத்தமும் சமூக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூறமுடியாது.

(“குடிஅரசு’’, 26.2.1928)

அடிக்கடி கட்சி மாறிக் கொண்டும் மந்திரி சபைகளைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்தும் அராஜகம் விளைவித்துவரும் நிலையில், இந்த நாடு சுதந்திரத்துக்கோ சனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

(“விடுதலை’’, 15.2.1968)

உலக வாழ்வில் மற்றொருவனுக்கு இம்சையின்றி, பிறருக்கு எப்படி உபயோகப்படுவது என்பதையே முக்கியக் கொள்கையாகக் கொண்டு உழைப்பவனுக்கு, வேறு மதம் வேண்டியதில்லை.

(“குடிஅரசு’’, 14.4.1928)

இவை போன்று உலக மக்கள் வாழ்வதற்கான, பகுத்தறிவு அடிப்படையிலான சிந்தனைகளை வழங்கிய பெரியார், உழைப்பது கேவலம் அல்ல என்ற அரிய சிந்தனையை தன்னையே எடுத்துக்காட்டி கூறியுள்ளார்.

“நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் (சுமையால்) வேதனைப்பட்டிருப்பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் வேதனைப்பட்டதில்லை’’ என்றார்.

சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.                                         

(“விடுதலை’’, 2.7.1962)

பொதுக் காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால் அவர், தன் சொந்த கவுரவத்திற்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.

(“அறிவுப் பேழை’’, 1976)

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவதுபோல், உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல் நினைக்கும்படியும், அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.

(“விடுதலை’’, 12.1.1958)

அறம் என்றால், மக்களுக்குத் தம்மாலான நல்லனவற்றைச் செய்வதுதான், அதுதான் உண்மையான தொண்டு. இதனை விடுத்து, இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்லவேண்டும் என்று கருதியோ, மற்ற முட்டாள்தனமான காரியங்களுக்கோ தொண்டு செய்வதனால் உண்மையான இன்பம் கிட்டாது.    

(“விடுதலை’’, 16.8.1961)

பொதுத் தொண்டில் நம்முடைய வேலைக்கு உறைகல்லாக உபயோகப்படுவதே, பிறருடைய தூற்றுதலைச் சகிப்பதுதான்.

(“விடுதலை’’, 31.3.1950)

பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை.   

   (“விடுதலை’’, 20.9.1962)

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.                                                      

(“குடிஅரசு’’ 17.11.1940)

எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும் ஏச்சு வந்தாலும் எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசி வரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.

(“விடுதலை’’, 6.1.1958)

ஒரு சமூகமென்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழைகள் இல்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.              

(“குடிஅரசு’’, 30.1.1927)

பொருளாதாரச் சிந்தனைகள் :

நம் பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணமே கடவுள், மதம், சாத்திரம்தான். எப்படி என்பீர்கள்? நீ எப்படிப் பணக்காரன் ஆனாய் என்று ஒருவனைக் கேட்டால், அவன் என்ன சொல்லுகின்றான்? எனது சாமர்த்தியத்தால் சம்பாதித்தேன் என்று சொல்வது கிடையாது. கடவுள் அருளால் கிடைத்தது என்கிறான், லட்சுமி கடாட்சம் என்கிறான். அதை மற்றவனும் நம்புகிறான்.                           

(“விடுதலை’’, 6.10.1968)

செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதில் இறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டி. இத்யாதி போட்டிகள் அவனது ஊக்கத்தை எல்லாம் கொள்ளை கொண்டு விடுகின்றன.

(“குடிஅரசு’’, 8.3.1936)

இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றிக் கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் திருமணம் போன்ற நிமிட காரியத்துக்காக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்காக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப்படலாமா?                                      

(“விடுதலை’’, 6.10.1962)

செல்வம் என்பது உலகின் பொதுச் சொத்து. அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச் சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.                                               

(“விடுதலை’’, 17.3.1965)

லேவாதேவி என்பது ஒரு கொடுமையான தொழிலேயாகும். அதற்கு வேறு பெயர் சொல்ல வேண்டுமானால் சட்டப்படி கொடுமைப்படுத்திக் கொள்ளையடிப்பதேயாகும்.                               

(“குடிஅரசு’’, 27.8.1933)

எனக்கு முதலாவது, இன இழிவு நீக்கம் முக்கியம். அடுத்தது, பொருளாதார பேதம் நீக்கம். ஏனென்றால் இந்நாட்டு நிலைமை அது.

(திராவிட விவசாய தொழிலாளர் கழகம் ஏன்? 13)

சர்க்காரின் வரவு _ செலவுத் திட்டம், குடும்பத்தினர் செய்வது போன்றதல்ல. குடும்பத்தினர் வரவுக்குத் தக்கப்படி செலவுத் திட்டம் வகுக்க வேண்டும். சர்க்காரோ மக்கள் நலத்துக்குத் தேவைப்பட்டவைகளைக் கணக்குப் பார்த்து அதற்கேற்ப வருவாய் தேடும் வகையில் வரிகளை நிர்ணயித்துத் திட்டம் அமைக்க வேண்டும்

(“விடுதலை’’, 12.2.1963)

சகல தொழிற்சாலைகளும், சகல தொழிற்சாலை நிருவாகமும், தபால், தந்தி, ரயில், குளம், ஏரி, வாய்க்கால் நிருவாகம் போன்று சர்க்காருடையதாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய, தனிப்பட்ட முதலாளி ஒருவன்கூட நம் நாட்டில் இருக்கக் கூடாது. எந்தத் தனிப்பட்ட மனிதனும் நமக்குக் கூலி அளப்பவனாய் இருக்கக்கூடாது.

(“விடுதலை’’, 11.12.1947)

ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம்பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

(“குடிஅரசு’’, 26.12.1937)

சொத்துரிமை:

நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.        

(“விடுதலை’’, 11.12.1967)

மனிதனுக்குச் சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஓர் அளவுக்கு உண்மைதான். ஆனால், அதற்குச் சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல.

(“குடிஅரசு’’, 8.3.1936)

கல்வி சார் சிந்தனைகள் :

கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

(“விடுதலை’’, 11.9.1955)

ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.                                                          

(“குடிஅரசு’’, 1.5.1927)

சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்க வேண்டும்.                                                          

(“விடுதலை’’, 21.7.1961)

நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்படவேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.                                         

(“குடிஅரசு’’, 22.8.1937)

மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயே புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.                 

(“விடுதலை’’, 17.3.1968)

மொழி சார்ந்த சிந்தனைகள் :

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயபற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.

(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 169)

குணத்திற்காகவும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது மொழி, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, என்னுடையது பழமையானது என்பதற்காகவோ ஒன்றை நான் பாராட்டுவதில்லை.

நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.

(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்; 204,-205)

எனது நாடு எனது இலட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அதுபோலவே, எனது மொழி என்பதானது எனது இலட்சியத்திற்கு, -என்னுடைய மக்கள் முற்போக்கு அடைவதற்கு மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.

(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 205)

மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால் நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல் தான் எதிர்க்கிறேனே யொழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 205)

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன்மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.       

(பெரியார் 99-ஆம் பிறந்த நாள் மலர், பக்: 63)

மொழியின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்ததே ஒழிய வேறில்லை.

(“குடிஅரசு’’, 20.1.1935)

திருமணம் பற்றிய புரட்சி சிந்தனைகள் :

கணவன்_-மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான்; இதில் ஒருவருக்கொருவர் அடிமை_ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.                          

(“விடுதலை’’, 12.2.1968)

ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

(“குடிஅரசு’’, 21.7.1945)

ஆண்-_பெண் சமத்துவமாய்ப் பாவிக்கப்பட்டுச் சமத்துவமாய் நடத்தப்படுவதாக இருந்தால்தான் வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமணக் காரியங்கள் இருக்க வேண்டுமே ஒழிய, அப்படி இல்லாவிட்டால் பெண்கள் திருமணம் இல்லாமல் தனித்து வாழ்வதே மேல். எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்?

(“குடிஅரசு’’, 13.12.1936)

ஆணும், பெண்ணும் பதிவாளர் அலுவலகத்துக்குப் போய், வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லிக் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்திற்கு அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு.                                                             

(“குடிஅரசு’’, 7.6.1936)

மணமுறைக்குப் பழைமையைத் தேடித் திரிய வேண்டியதில்லை. கால நிலைக்கும் சமுதாய நிலைக்கும் அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய, ஒரு காலத்து முறைகளே எக்காலத்திற்குமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.                            

(“விடுதலை’’, 30.10.1940)

சீர்திருத்தக்காரர்கள் :

சீர்திருத்தங்கள் – மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமையவேண்டும்.                                             

(“குடிஅரசு’’, 9.12.1928)

சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.               

(“விடுதலை’’, 29.1.1956)

சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதே சீர்திருத்தத்திற்கு உண்மையான பாதையாகும்.                           

(“விடுதலை’’, 23.3.1958)

இழிவின் மூலகாரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்து, அவ்விழிவு பின்சந்ததிக்கும் என்றென்றும் திரும்பி வரமுடியாதபடி பரிகாரம் தேடுவதுதான் உண்மையான சீர்திருத்தவாதியின் கடமை.

(“விடுதலை’’, 28.2.1965)

சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், ஜாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.

(“குடிஅரசு’’, 23.6.1935)

கூட்டுறவு:

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும்.                                                   

(“குடிஅரசு’’ 12.11.1933)

நாம் செலவழிப்பதில் வகைதொகையற்ற முறையில் வீண் செலவு செய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம்தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அதோ கதியாகிவிடுமென்பது நிச்சயம்.                  

(“குடிஅரசு’’, 12.11.1933)

மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டுவாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத் திட்டங்களை நிறைவேற்ற தனி, மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது

(“விடுதலை’’, 13.1.1961)

கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம் நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக _ -குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.

(“விடுதலை’’, 24.4.1961)

ஓழுக்கம் :

சமுதாயக் கூட்டு ஒழுக்கம், பச்சாதாபம், நாணயம், நன்றி, நம்பிக்கை முதலியவை மக்களிடையில் பழக்கத்தில் இருக்கவேண்டும். நலம் செய்ய முந்தவேண்டும்; நல்லதை எண்ண வேண்டும்; கெடுதியை எதிர்க்க வேண்டும்; பாதுகாப்பு இல்லாத சமயத்தில் பிறர் பொருளைக் கவராமல் தூய்மையாக நடந்து கொள்ளவேண்டும்.

(தத்துவ விளக்கம், 19)

அறிவு எவ்வளவோ வளர்ச்சிபெற்று இருக்கிறது என்றாலும், மனித வாழ்வு மிகமிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும் புரட்டுக்குமே  நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்துவிடக்கூடாது.

(“விடுதலை’’, 20.6.1956)

உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால், தேவை குறைய வேண்டும்; அவசியம் குறைய வேண்டும். தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக் கேடும் ஒழுக்கக்கேடும் வளர்ந்துகொண்டுதான் போகும்.

(“விடுதலை’’, 22.7.1969)

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல், அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும்                                     

(“விடுதலை’’, 30.7.1969)

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

(“குடிஅரசு’’, 22.12.1929)

பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லுவதை விட, தன்னிடத்து அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.                                               

(“விடுதலை’’, 20.11.1958)

மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.                  

                                    (“விடுதலை’’, 20.3.1956)

பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில் தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.                

(“விடுதலை’’, 20.2.1968)

மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் ஒழுக்கம்.                                                        

(“விடுதலை’’, 7.2.1961)

அறிவியல்:

இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.

(“குடிஅரசு’’, 13.8.1933)

மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

(“குடிஅரசு’’, 30.1.1936)

மேலே காட்டிய பெரியாரின் சிந்தனைகள் ஒரு நாட்டிற்கோ ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவை அல்ல.அவை, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஆழமாய் உள்ளத்தில் கொள்ளவேண்டிய அரிய கருத்தாகும். தனக்குத் தேவையான பொருள்களை ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்வதுகூட மரியாதைக் குறைவு, கேவலம் என்று எண்ணி, அதை வேறு ஒருவர் எடுத்து வரவேண்டும் என்ற உளநிலை உலகில் பலருக்கு உள்ளது. பெருமையும், கேவலமும் இது போன்றவற்றில் இல்லை. உழைப்பது பெருமைக்குரியதேயன்றி, கேவலமானதல்ல என்பதை உலக மக்கள் உணரும்படி உரைத்தவர் பெரியார்.

இவ்வாறு உலக மக்களுக்குரிய உயரிய முற்போக்குச் சிந்தனைகளை 75ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிய பெரியார் என்பதாலேதான் உலகத் தலைவராய் அவரை உலக மக்கள் ஏற்றுப் போற்றுகின்றனர்.

எனவே, பெரியார் தமிழர்களுக்கோ, திராவிட இனத்துக்கோ மட்டும் தலைவர் அல்ல. அவர் உலக மக்களுக்கான உயரிய தலைவர்! அவரின் சிந்தனைச் சுடர், உலக மக்களுக்கு என்றென்றும் ஒளி காட்டும்!

வாழ்க பெரியார்!

– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *