எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (50) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்

டிசம்பர் 16-31 2019

– நேயன்

கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் வேலையிலிருந்து வெளியேறி விட்டு, பார்ப்பன நிறுவனங்களில் மற்றவர்களைச் சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யட்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் எங்கள் நிறுவனத்தில் நுழைந்து பிழைப்பீர்கள். எங்கள் மண்ணில் கொள்ளையடித்து நீங்கள் உருவாக்கியிருக்கும் நிறுவனத்தில் நாங்கள் வரக்கூடாது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

கேள்வி 14: ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு, பார்ப்பானைக் கொல்’ என்ற உங்களால் அந்தப் பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

பதில் 14: இது என்ன பைத்திய உளறல்! முதலில் இதைச் சொன்னது பெரியார் அல்ல என்கிற உண்மையை அரைவேக்காடுகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இது ஒரு வடநாட்டுப் பழமொழி என்பதை பீவர்லி நிக்கலஸ் என்பவர் 1944இல் எழுதிய (Beverly Nicholas – Verdict of India, Pg 32, British Travel Book) என்னும் நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நாங்கள் எந்த தனி நபரையும் எதிர்ப்பவர்களும் அல்ல; வன்முறையில் ஈடுபடுகின்றவர்களும் அல்ல. அப்படி இறங்கியிருந்தால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.

கேள்வி 15: குங்குமம் வைத்தவரை, “நெற்றியில் என்ன காயம், ரத்தம் வந்திருக்கிறதே’’?  என்று கேலி பேசியவர் வைணவத்தைப் பரப்பிய ராமானுஜரைப் பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

பதில் 15: அவரே பதில் சொல்லிவிட்டாரே! எதையும் அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக  கேள்வி கேட்கலாமா? ஆன்மிகத் தலைவர்கள் சுயமரியாதைக்கும் சமதர்மத்திற்கும் பாடுபட்டிருப்பின் அவர்களை நாங்களே பாராட்டியிருக்கிறோம்.

கொள்கையில் சமரசம் என்றைக்கும் எங்களிடமில்லை! கொள்கை ரீதியாக தி.மு.க.வோடு நாங்கள் கடுமையாக மோதிக் கொண்டதெல்லாம் வரலாறு அறிந்தவர் களுக்குத் தெரியும்.

கேள்வி 16: ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள்; கிறிஸ்துவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்துவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

பதில் 16: அடிமைச் சின்னம் எது இருந்தாலும், அறிவுக்கு ஒவ்வாதது எதுவாயினும் அதை அகற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதைச் செய்ய யார் முன்வந்தாலும் நாங்கள் வாய்ப்பளிப்போம். கிறிஸ்துவர்களின் திருமண மோதிரம் இருபாலருக்குமானது; தாலியைப் போல பெண்கள் கழுத்தில் மட்டும் திணிக்கப்படுவதல்ல. அதே நேரத்தில் மத அடையாளங்களாக “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பூணூலும் சிலுவையும் அகற்றப்பட்டதை வரவேற்றுப் பாராட்டியவர்கள் நாங்கள்.

கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து நாங்கள் நூல் வெளியிடுவது உங்களைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இனிமேலாவது படித்துத் தெரிந்து கொள்க.

கேள்வி 17: பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனைக் கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது – பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்க வேண்டும் – என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

பதில் 17: அதென்ன பிறப்புத் திறன்? அட அடிமுட்டாளே! பிறவியில் திறமை பேசியவனெல்லாம் இன்று வெட்கித் தலைகுனியும் வண்ணம், பார்ப்பனரல்லாதார் படிப்பில் சாதிப்பது உமக்குத் தெரியாதா?

சமையலுக்கு மட்டுமே பெண் என்கிற நிலையை மாற்றி, பெண்கள் சாதிப்பது உமக்குத் தெரியாதா?

தொழில்துறை, கலைத்துறை, அறிவியல் துறை, அரசியல் என்று எல்லாவற்றிலும் பார்ப்பானைவிட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சாதிப்பது உமக்கு மறந்து போயிற்றா?

பார்ப்பான் மற்றவர்களைவிட எதில் புத்திசாலி, திறமைசாலியாய் இன்று சாதிக்கிறான்? காட்ட முடியுமா?

அப்துல்கலாமையும், மயில்சாமி அண்ணாதுரையையும்விட எந்தப் பார்ப்பான் சாதித்துவிட்டான்?

வழக்கறிஞராகட்டும், நீதியாகட்டும், நிருவாகமாகட்டும் _ எதில் மற்றவர்கள் சாதிக்கவில்லை?

இசைக்கு இளையராஜா, பாட்டுக்குக் கண்ணதாசன், நடிப்புக்கு சிவாஜிகணேசன். இவர்கள் சாதிக்காததை எந்தப் பார்ப்பான் சாதித்துவிட்டான்? பிறப்பால் இவர்கள் திறமை அமையவில்லையே!

உங்கள் கருத்துப்படி இராணுவத்திற்கு ஷத்திரியன் மட்டுந்தானே போகவேண்டும்? பார்ப்பான் ஏன் போகிறான்? உங்கள் வாதப்படி அது தப்பாயிற்றே!

ஆட்சிக்கும் ஷத்திரியன்தானே உரியவன். பார்ப்பான் எப்படிச் செல்கிறான்? வணிகம் வைசியர்க்கு உரியது என்னும்போது இன்று பார்ப்பான் வருகிறான். தொழிற்சாலைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? தர்ப்பைப் புல்லைப் புடுங்கி, பூணூலைத் தடவி, வேதம் படித்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்?

இதில் நாய் உதாரணம் வேறு! ஒரு நாயைப் பார்த்தவுடன் இது இன்ன வகை என்று சொல்ல முடியும். ஆனால், ஒரு மனிதனைப் பார்த்தவுடன் இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா? பிறப்பால் திறமை கூறும் நீயெல்லாம் ஒரு சமுதாயத் துரோகி, சமுதாய நோய் அல்லவா? அப்படியிருக்க, உமக்கெல்லாம் கேள்வி கேட்கும் யோக்கியதை ஏது? மனிதனைப்பற்றி பேசும்போது நாய் உதாரணம் தருகிறாயே! நாயும் நீயும் ஒன்றா?

அல்சேஷன், பாமரேனியன், இராஜபாளையம் நாய்கள் வகை. ஆனால், மனிதரின் இப்படி வகை உண்டா? எல்லா மனிதனும் ஒரே இயல்பு உடையவர்தானே? நாயோடு மனிதனை ஒப்பிடுவது அறிவின்மை என்பது மட்டுமல்ல, அயோக்கியத்தனமும் ஆகும்.

இன்றைய இடஒதுக்கீடுகூட, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமுக்கப்பட்டவர்கள் உடனடியாக உயர் ஜாதியினரோடு போட்டியிட முடியாது என்பதால்தானே ஒழிய, அவர்களுக்குத் திறமை இல்லை என்பதற்காக அல்ல. இடஒதுக்கீடு ஓர் இழப்பீட்டு உரிமை! அவ்வளவே!

மாறாக பார்ப்பான் அறிவாளி என்பதால் இடஒதுக்கீடு மறுக்கப்படவில்லை.

உண்மை இப்படி இருக்க பிறப்புத் திறன் என்கிறாயே! உம்மையெல்லாம் மனிதன் என்றே அங்கீகரிக்க முடியாதே!

பிறப்புத் திறன்பற்றி பேசும் உமக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்ப்பான் திறமையெல்லாம் சூழ்ச்சியும், பித்தலாட்டமும் மட்டுமே! மற்றபடி திறமை, அறிவுக்கூர்மை என்பதெல்லாம் அசல் மோசடி. இன்றைய சாதனைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *