வரலாற்றுச் சுவடு : பெரியாரின் பேரறிவு

ஆகஸ்ட் 01-15 2019

வ.க.கருப்பையா

அது எப்படி சுத்தமாகும்?

ஒரு சமயம், பெரியாரைப் பேட்டி காண வந்திருந்த ஒரு பத்திரிகை உதவி ஆசிரியருக்கு காபி கொடுக்கச் சொன்னார் பெரியார்.

காபியைச் சாப்பிட்ட உதவி ஆசிரியர், “இப்போது நான் உங்கள் வீட்டுக்கு வந்து, காபி சாப்பிடுகிறேன் பார்த்தீங்களா? போன தலைமுறையில் இப்படி நடந்திருக்குமா? நான் ஆசார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். இதற்கென்ன சொல்றீங்க?’’ என்றார் அந்த உதவி ஆசிரியர்.

அதற்குப் பெரியார், “இன்றைக்கு நீ என் வீட்டுக்கு வந்து காபி சாப்பிடுகிறாய் என்றால், அதுகூட என் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட மாற்றம்தானே?’’ என்றார்.

பெரியார் மேலும் “ஒரு சங்கதி சொல்றேன் கேளுங்க. ரொம்ப வருடத்துக்கு முன்னால், என் வீட்டுக்கு ஒரு பார்ப்பனர் வந்தார். எங்கள் குடும்பத்து நண்பர் அவர். ஏதாவது தாகத்துக்கு சாப்பிடுகிறீர்களா?’’ என்று அவரைக் கேட்டோம்.

“ஒண்ணும் வேணாம்னு’’ சொல்லிவிட்டார்.

நாங்க மேலும் வற்புறுத்தவே, ‘சரி கொஞ்சம் மோரும், தண்ணியும் தனித்தனியாகக் கொண்டாங்க’ என்றார் கொடுத்தோம்.

அந்த மோரில், கொஞ்சம் தண்ணியைச் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார். ‘அதென்னய்யா தண்ணி சேர்த்துச் சாப்பிடறீங்க’ன்னு கேட்டோம்.

‘மோரில் கொஞ்சம் தண்ணீர் கலந்துவிட்டால், மோர் சுத்தமாயிடும்’ன்னு சொன்னார்.

“மோர் எங்க வீட்டுது, தண்ணியும் எங்க வீட்டுது. எங்க வீட்டுத் தண்ணி, எங்க வீட்டு மோரைச் சுத்தப்படுத்திடுமோ?’’ என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் சிரிச்சிக்கிட்டுப் போயிட்டார்.

பயம் ஏன்?

பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது யாராகிலும் எழுத்து மூலமாகவோ அல்லது எழுந்து நின்றோ கேள்வி கேட்டால், உடனே தயங்காமல் பதில் அளிப்பது பெரியார் வழக்கம்.

ஒரு கூட்டத்தில், “நூறுக்கு மூன்று பேர் அவுங்க. மீதம் எல்லாம் நாமதான்னு சொல்கிறீர்களே. அப்புறம் ஏன்? மூன்று பேராக இருக்கின்ற அந்தப் பார்ப்பனர்களுக்கு நீங்கள் எல்லாம் பயப்படுகிறீர்கள்?’’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் சொன்னார் பெரியார்.

“சந்தைக்கு வாரா வாரம் எல்லோரும் போகிறோம். போகிறவர்களிலே ரொம்பப் பேர் யோக்கியமானவங்கதான். யாரோ ஒருத்தன் இரண்டு பேர்தான் முடிச்சவிழ்க்க(திருட) அங்கே வருகிறான். ஆனால் சந்தைக்குப் போகிற ஒவ்வொருத்தனுமே அப்பப்ப மடியைத் தொட்டுப் பாத்துக்கிறானே ஏன்? அந்த இரண்டு மூன்று திருடனுக்குப் பயந்துதான். அது மாதிரிதான் இதுவும். அவர்கள் மூன்று பேராக இருந்தாலும், ஒற்றுமையாக இருக்கிறார்கள். நம்ம ஆளுங்க 97 பேரும் தனித்தனியாக இருக்கிறார்கள். ஆகையினாலேதான், அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று சொல்கிறேன்’’ என்று கூறினார் பெரியார்.

மிகப் பெரிய பண்பு

பெரியாரும், ராஜாஜியும் சிறந்த நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

ராஜாஜி சென்னையில் இயற்கை எய்தி விட்டார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி டில்லியிலிருந்து ராஜாஜியின் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

சுடுகாட்டில் சிதையிலே ராஜாஜியின் உடல் வைக்கப்படுகிறது.

பெரியார் சக்கர நாற்காலியில் அங்கு வந்து சேர்ந்தார். திருவாளர்கள் வீரமணி, ராசாராம், சம்பந்தம் ஆகியோர் பெரியாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர்.

குடியரசுத் தலைவரும் இடுகாட்டுக்கு வந்துவிட்டார். இராணுவ மரியாதை முடிந்த பிறகு, மதச் சடங்குகள் சில நிறைவேற வேண்டியிருந்தன. அவை இருபது நிமிடம் நடந்தன.

அப்போது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியார் கண்கலங்கி அழுதவாறு இருந்தார்.

திடீரென்று என்ன தோன்றியதோ, தெரியவில்லை. அருகில் நின்ற வீரமணி முதலானோரை அழைத்து, “என்னை தரையில் உட்கார வையுங்கள்’’ என்ற சொன்னார் பெரியார்.

அவர்களும் பெரியாரைப் பிடித்துத் தரையிலே உட்கார வைத்தார்கள். பிறகு, “இந்த சக்கர நாற்காலியைக் கொண்டுபோய் குடியரசுத் தலைவர் பக்கத்திலே நிறுத்தி அதில் அவரை நான் உட்காரச் சொன்னதாகச் சொல்லுங்கள்’’ என்று கூறினார் பெரியார்.

அவர்களும் அப்படியே நாற்காலியைக் கொண்டு போய் அவருடைய பக்கத்தில் நிறுத்தி, “அய்யா அவர்கள் உங்களை இதில் உட்காரச் சொன்னார்கள்’’ என்று கூறினர்.

அதைக் கேட்டவுடன் குடியரசுத் தலைவர் உள்ளம் நெகிழ்ந்து போனார்.

குடியரசுத் தலைவர் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும், அவர் நாற்காலியில் உட்காரத்தான் வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டார் பெரியார்.

“நாட்டின் குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருக்கும் வேளையில், தான் நாற்காலியில் அமர்ந்திருக்கக் கூடாது’’ என்பது பெரியாரின் பண்பான எண்ணம் ஆகும்.

பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, வி.வி.கிரி அவர்கள் சாதாரணமாக இருந்தவரே.

பெரியாரின் நேர்மை

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் ‘தேசபக்தன்’ என்னும் தேசிய தின இதழை நடத்தி வந்தார்.

அப்போது திரு.வி.க.வும், பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தனர்.

‘தேசபக்தன்’ இதழுக்கு நிதி உதவியாக தம்முடைய பங்காக ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார் பெரியார்.

இச்செய்தியை, “பெரியார் இராமசாமி  ஆயிரம் ரூபாய் அளித்தார்’’ என்று தேசபக்தனில் வெளியிட்டார் திரு.வி.க.

அதைப் பார்த்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம் எழுதினார். என்ன என்றால்,

“நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே, ஒரு திருத்தம் போடுங்கள்.’’

“இராமசாமி மூலமாக வந்த தொகை ஆயிரம் ரூபாய் என்று போடுங்கள்’’ என்று எழுதினார்.

ஏனென்றால், அவர் மற்றவர்களிடமிருந்தும் பணம் வசூல் செய்துள்ளார். தன்னுடைய பணத்தையும் போட்டிருக்கின்றார்.

அதாவது, தானே ஆயிரம் ரூபாய் அளித்ததாக நினைத்துவிடக் கூடாதே என்று அவ்வாறு எழுதினார் பெரியார். எப்படிப்பட்ட நாணயம் பாருங்கள்!

                (தகவல் : ‘அறிஞர் உதிர்த்த முத்துக்கள்’ என்னும் நூலில் பி.எல்.முத்தையா தொகுத்தது.)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *