எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (41) : ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பெரியார் எதிர்த்தாரா?

ஆகஸ்ட் 01-15 2019

நேயன்

 “இந்து மதத் தத்துவங்கள், விதிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய புரட்சி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.

இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சையானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத்தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.

லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்பிற்கு இருப்பதுபோல இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்கதரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால், இவை இறுதியானவை, மாற்ற முடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்தபடியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக் கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே, இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.

இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதற்கு மதம் என்று பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ, ஒழிக்க வேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், சட்டம் என்பது மாற்றப்படக் கூடியது. ஆகவே, மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம்தான் என்று மக்கள் தெரிந்துகொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.

இந்து என்று சொல்லப்படும் ஒவ்வொருவரும் புரோகிதராய் வர அனுமதிக்க வேண்டும். (இதைத்தான் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.) புரோகிதர் அரசுப் பணியாளராக இருக்க வேண்டும். இதற்கான தகுதியை அரசு (அய்.சிஎஸ். அதிகாரிகளுக்கு செய்வதுபோல) வரையறுக்க வேண்டும். (ஆனால், தற்போது பிறப்பால் ஜாதியடிப்படையில் வரும் புரோகிதன் அறிவற்றவனாக, ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோயுடையவனாக, ஒழுக்கக் கேடனாக இருக்கிறான்.) இதன்மூலம் பிராமணியத்தையும், அதன் வழிவரும் ஜாதியையும் ஒழிக்க முடியும்.’’

(ஆதாரம்: அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்)

(தமிழ் பக்கம் 111-114, ஆங்கிலம் பக்கம் 66 மற்றும் 76)

இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும், தவறான வாழ்வை நடத்துவதாலும் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது, அவர்களின் நெறிமுறைகள் பற்றியது.

இந்துத் தலைவர்கள் வெட்கமில்லாமல் நிகழ்காலத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றுப் போய்விட்ட கடந்தகால லட்சியங்களை ஆதரித்து நிற்கிறார்கள். தாம் தோன்றிய காலத்தில் பொருத்தமாக இருக்கக்கூடிய இலட்சியங்களை இன்றைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக இப்படிச் செய்கிறார்கள்.

பிராமணர்கள் சாஸ்திர விரோதமாய் எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். செருப்பு விற்கும் பிராமணர்கள் அதிகமாகி வருகிறார்கள். அதேநேரத்தில் ஜாதியையும், சாஸ்திரத்தையும் தினம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? என்று சாடுகிறார் அம்பேத்கர்.

(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – ஜாதி ஒழிப்பு)

ஆக, அம்பேத்கர் சொல்ல வருவதென்ன? மனித பேதம் நீங்க வேண்டும், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும்வரை புரோகிதர் தொழில் எல்லா ஜாதிக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாவற்றிலும் சம உரிமையும் சம தகுதியும் பெற வேண்டும். அதன் வழி ஜாதி ஒழிய வேண்டும். இதையடைய இந்து மதச் சட்டங்களை ஒழித்து விட்டு, காலத்திற்கேற்ப புரட்சியான சட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதை ஜனநாயக வழியில் ஓட்டுப்போட்டுச் செய்ய முடியுமா? சற்றேறக்குறைய 70 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் விரும்பிய மாற்றம் வரவில்லையே! இந்து மதக் கொடுமை, பேதம், இழிவு, தீண்டாமை, ஜாதி நீங்கவில்லையே!

அதற்குத்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வாதிகாரம் வேண்டும் என்றார். அம்பேத்கருடைய கருத்தும் அதுதான்.

மக்கள் அனைவரின் கருத்தறிந்து இதை ஒழிக்க முடியுமா? ஜாதியை மக்கள் விட்டுக் கொடுப்பார்களா?

குடிப்பவன் சம்மதத்தோடுதான் மதுவிலக்கு செய்ய வேண்டும் என்றால் அது சாத்தியமா? லாட்டரி சீட்டு தடை மக்கள் கருத்தறிந்து செய்யப்பட்டதா? ஆக, ஜனநாயகத்திலேகூட பலவற்றைச் செய்ய சர்வாதிகார நடைமுறைதானே தேவைப்படுகிறது. அதைத்தான் பெரியார் சொன்னார். அதைத்தான் அம்பேத்கர் விரும்பினார். இதில் என்ன முரண்பாடு?

இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய காந்தி உள்பட சனாதனிகள் எண்ணியபோது, இந்து மதத்தை அறவே ஒழித்து புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அம்பேத்கர் உறுதியாகக் கூறியதோடு,

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. செய்து கொண்டிருக்கிறார் என்று அம்பேத்கரே சான்றிதழ் கொடுத்தார்.

அது மட்டுமல்ல; ஜாதியை ஒழிக்க என்ன வழி? என்ற என் ஆங்கில உரையை வெளியிட்டு, என்னைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர் தோழர் ஈ.வெ.ரா. என்றார் அம்பேத்கர்.

இந்தியாவின் முதல் மனித உரிமைப் போரே ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டம்தான்! தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராட என்னை உந்தித் தள்ளியதும் பெரியார்தான் என்று கூறினார், அம்பேத்கர்.

அப்படியிருக்க, அவர்கள் இருவருக்குள்ளே வேறுபாட்டை கற்பித்து பிரித்தாளத் துடிக்கும் பித்தலாட்டப் பிரச்சாரம் எங்களிடம் எடுபடாது; எம் மக்களிடமும் எடுபடாது. மாறாக, இன்னும் உறவு பலப்படும்; உணர்வும் வலுப்படும்!

(தொடரும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *