அருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா!

ஜூன் 16-30

 – பண்பாளன்

பிழைப்பு தேடி சென்னை நோக்கி வருபவர்கள், பெற்ற பிள்ளைகளாலும், உறவினர்களாலும் விரட்டி யடிக்கப் பட்டவர்கள், மனநலம் பாதித்து ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள்  என்று சென்னை நகரில் இப்படி அனாதைகளாக சாலை யோரங்களில் எண்ணற்றோரை பார்க்கிறோம். விபத்தோ, உடல்நலம் குன்றியோ, குடிப் பழக்கத்தாலோ  இவர்கள் இறந்து அனாதைப் பிணங்களாக கிடப்பதையும் பார்க்கிறோம்.

அதுபோன்ற அனாதை பிணங்களை அன்னையாக இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்து வருகிறார் ஆனந்தி அம்மா! 2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 3500க்கும் மேற்பட்ட சடலங்களை எடுத்து அடக்கம் செய்திருக்கிறார்.

இவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தில் இவரது பெற்றோருக்கு 8ஆவது பெண் பிள்ளையாக பிறந்திருக்கிறார். பெண் சிசுக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் அந்தப் பகுதியிலும் காலகட்டத்திலும் பெற்றோரின் மனிதாபிமானத்தால் கள்ளி ப்பாலுக்கு இறையாகாமல் பிழைத்திருக்கிறார்.

இவருடைய அப்பா அடிக்கடி இவரிடம் காமராஜர் பற்றியே அதிகம் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதன் பாதிப்பில் தனக்குப் பிள்ளைகள் பிறந்ததும் காமராஜர் போன்று வளர்க்க வேண்டும் என்று ஆனந்தி அம்மா நினைத்து கொண்டிருந்திருக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சென்னையில் வசதியான குடும்பத்தில் திருமணம் நடந்திருக்கிறது. 10 ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க., பல மருத்துவர்களிடம், சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் போக ஒரு கட்டத்தில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று பிழைத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் ஆதரவற்ற பெண் ஒருவர் தன் வீட்டருகே இறந்துபோக அவரை அடக்கம் செய்ய பண உதவி செய்திருக்கிறார். அந்த நிகழ்வு ஆனந்தி அம்மாவை பாதிக்கவே, அதன்பிறகு 1991ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்குச் சென்று முடிவெட்டுவது, சவரம் செய்வது அவர்களை குளிப்பாட்டி விடுவது என்று உதவியிருக்கிறார்.

இவர் முதியோர் இல்லங்களுக்குச் சென்று பணிவிடை செய்யும் செய்தி வீட்டிற்குத் தெரிந்ததால் வீட்டினரால் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து அம்மா வீட்டிற்கு செல்லவே அவர்களும் சேர்த்துக் கொள்ளாமல் அனாதை விடுதிக்கு அனுப்பியுள்ளனர். புகுந்த வீடும், பிறந்த வீடும், ஏற்றுக் கொள்ளாமல் வெளியேற்றப்பட்ட விரக்தியில் மீண்டும் சென்னைக்கே வந்திருக்கிறார். அப்போதுதான் அனாதை பிணங்களை கண்டெடுத்து அடக்கம் செய்யும் அந்தோணி அய்யாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. பிறகு அவரோடு இணைந்து “காக்கும் கைகள்’’ என்ற அறக்கட்டளையை உருவாக்கி பணிகளை தொடர்ந்திருக்கிறார். இப்போது அந்தோணி அய்யா உயிருடன் இல்லாத நிலையில் அறக்கட்டளைக்கு ஆனந்தி அம்மாவே தலைமையேற்று நடத்தி வருகிறார்.

அனாதை பிணங்களுக்கு மட்டுமல்லாமல் அறக்கட்டளை மூலம் கண்பார்வையற்ற பெண் பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். இதுவரை 48 பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைத்திருக்கிறார். மேலும் சமூகம் புறக்கணிக்கும் நபர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறார். வறுமையான சூழலில் பிறந்து, தாயாக முடியாமல் தவித்து, ஆதரவற்றவர்களுக்கு உதவப்போய் புகுந்த வீட்டினாலும், பிறந்த வீட்டினாலும் ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும் மனம் தளராது ஆதரவற்றோர்களுக்கு அன்னையாய் இருந்து அடக்கம் செய்து வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *