ஆசிரியர் பதில்கள்

ஜூன் 16-30

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால்

2019இல் வெற்றி நிச்சயம்!

 

 

கே:                 நாடாளுமன்றத் தேர்தலில் (2019) மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் விரும்புவது ஏன்?  தாழ்த்தப்பட்டோர் தலைவர்களே இப்படி நடக்கலாமா?

                        – அ.கார்த்திகேயன், வேளச்சேரி

ப:                    அவர் சார்ந்துள்ள கூட்டணி என்பதால் உள்ளுக்குள் தோல்வி நிதர்சனம் என்றாலும், இருப்பவர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறார் போலும்!

கே:                 காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்னும் செய்ய வேண்டியவை யாவை?

                        – மா.காமாட்சி, திருவள்ளூர்

ப:                    அதன் செயற்பாடுகள் பற்றி ஜூன் 12ஆம் தேதிக்குப் பிறகு புரிந்துவிடுமே! கைவிரித்து விட்டாரே தமிழக முதல்வர்!

கே:                 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது இறுதியாகவும் உறுதியாகவும் கொள்ள முடியுமா?

                        – வே.மாணிக்கவேலன், திண்டிவனம்

ப:                    நாம் ஏற்கெனவே எழுதியுள்ளபடி – பேசியபடி ‘கொள்கை முடிவு’ (றிஷீறீவீநீஹ் ஞிமீநீவீsவீஷீஸீ) என்பதை அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தால் அவர்களால் மீண்டும் திறக்க முடியாது.

கே:                 “தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார்’’ என தங்களுக்குத் தெரியும் என்று கூறும் நடிகர் ரஜினியும், பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் அந்தப் பட்டியலை வெளியிடாதது எதைக் காட்டுகிறது?

– அ.செண்பகப்பிரியா, திருச்சி

ப:                    ஆதாரமில்லாமல் அள்ளி விட்டவை அவை என்பது புரிகிறது!

கே:                 “சிஸ்டம் சரியில்லை’’ என்று கூறி, “நீதிகேட்டு போராடியவர்களை சமூக விரோதிகள்’’ என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த், போராடச் சொல்லி படத்தில் நடிப்பது மோசடியல்லவா?

                        – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:                    படத்தில்தான் சில நடிகர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்! இவரது அரசியல் பிரவேசமும் அப்படியே இரட்டை வேடமாக உள்ளது!

கே:                 கள்ள நோட்டுகளைத் தடுக்க புதிய இரண்டாயிரம் ரூபாய் புழக்கத்தில் விடுவதாகக் கூறினார் பிரதமர் மோடி. ஆனால், தற்போது கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஏராளமாக பிடிபட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளதே?

                        – சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:                    ஒருவேளை இதையும் தடை செய்து அறிவித்து மற்றொரு புரட்சி செய்வாரோ பிரதமர் மோடி -_ யாவருமறியோம்!

கே:                 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கிராமப் பகுதிகளில் சென்று ‘சம்பூரண அரிச்சந்திரா’, ‘சம்பூரண இராமாயணா’ போன்ற புராண நாடகங்களை பணம் கொடுத்து நடத்திடச் செய்கிறார்கள். அதுபோல் திராவிட இயக்க தோழர்கள் நடத்திய சீர்திருத்த நாடகங்களை மீண்டும் நடத்தலாமே?

                        – அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

ப:                    நல்ல யோசனை! திராவிடர் கழக நாடகக் குழு சிறப்பாக இயங்குவது அவசியம், அவசரம்! ‘நடிகவேள் நாடகக்குழு’ மாதிரி ஒன்று விரைவில் தயாராக வேண்டும்.

கே:                 திராவிடர் இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வுசெய்து குறும்படமாகத் தயாரித்து சமூக ஊடகங்களிலும், பெரியார் வலைக்காட்சியிலும் காட்சிப்படுத்துவீர்களா?

                        – செங்கதிர், இரமாலிங்கபுரம்

ப:                    இதுவும் அற்புதமான யோசனை! திராவிடர் கழக பகுத்தறிவு ஊடகப் பிரிவு பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை இதனைச் செயல்படுத்தும்!

கே:                 தொடர்ந்து இடைத்தேர்தல்களில் மரணஅடி வாங்கிவருகிறது பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின்  எதிர்ப்பு நிலையும், மாநிலக் கட்சிகளின் ஒற்றுமையும் 2019 தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு முன்னுரையாகக் கொள்ளலாமா?

                        – க.காளிதாஸ், காஞ்சி

ப:                    இப்போது ஒரே அணி சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 2019லும் ஒன்று சேர்ந்தால் வெற்றிக்கனி நிச்சயம்! பிரதமர் மோடிக்குத் தோல்வி முகம்தான் மிச்சமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *