டி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்…?

ஜூன் 16-30

 

இந்தியாவிற்குப் பொதுவாகவும், தமிழ்நாட்டிற்குக் குறிப்பாகவும், தொலைக்காட்சிகள் இறக்குமதி ஆனதால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பது கண்கூடு.

மதம் எப்படி அபின் போன்று அதை உண்டவர்களுக்கு நெடு மயக்கத்தைத் தருகிறதோ, அதைவிட அதிக அளவுக்கு சினிமா போதை, கலாச்சார  பண்பாட்டுச் சீரழிவை அவைகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏற்படுத்தி வருகின்றன!

தின்றதையே தின்றால் தெவிட்டும் என்ற விதியைக்கூட பொய்யாக்கும் வகையில், பார்த்த திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் போட்டு, மகளிர் மற்றும் குடும்பத்து உறுப்பினர்களை ‘போதை’யாளர்களாக்கி, சினிமாக்காரர்களுக்கு ‘ஒரு தனி மவுசினை’ ஏற்படுத்தி அவர்களும் அந்த ‘மப்பில்’ நாடாளவே ஆசைப்படுகிறார்கள்!

தொலைக்காட்சிகளில் வரும் ‘சீரியல்கள்’ என்ற தொடர்கள் பெண்களை ‘வில்லி’களாகவே காட்டி, சூது, சூழ்ச்சியின் உற்பத்தி ஊற்றுகளாகக் காட்டி வருவது மகா மானக்கேடு அல்லவா?

அதைவிட பன்னாட்டு சுரண்டல்காரர்களின் விளம்பரப் பொருள்கள் மூலம் _ ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தவரிடம் ‘நுகர்வோர் கலாச்சாரத்தை’ சன்னமாக நுழைத்து, நாளாவட்டத்தில் கைப்பொருள் இழந்து, கடன்காரர்களாகிடும் நிலை!

டி.வி. விவாதங்கள் என்ற பெயரில் ‘அநாமதேயர்களை’ பெரும் சிந்தனையாளர்களைப் போல காட்டிடும் விளம்பர உத்திகள். இவை எல்லாவற்றையும்விட, டி.வி.யில் இராமாயணத் தொடர் போட்டு அந்தப்போதையால் பக்தி ஆட்சிக்கு வருவதற்கு  வடநாட்டின் பல மாநிலங்களில் (பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் அது ஒருபோதும் பலிக்காது; பலிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது) பதவிக்கு வந்தது ஹிந்துத்துவ வெறிகொண்ட பா.ஜ.க!

இன்னமும் பல டி.வி.க்களில் ‘அனுமான் தொடர், பாரதக் கதை தொடங்கி சனீஸ்வரன்’ தொடர், சமூகக் கதைகளில் திடீரென்று பாம்பு உருவம் போன்றவை வருவதாக டி.வி. உத்திகளைப் பயன்படுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பல பேய்க் கதைகள் இரவு 10 மணிக்குமேல் அதாவது பல டி.வி.கள் ‘பேய் பிடித்தாடுகின்றன’. பேய்களை ஓட்ட பகுத்தறிவுவாதிகள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி களம் இறங்க வேண்டும்!

வானொலியை இத்துடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது; ஆனால், மோடி ஆட்சி வந்ததிலிருந்து அவரைப் பற்றியே சுய தம்பட்டம் சதா. அதுவும் பாதி ஹிந்தித் திணிப்பு, பக்தி மயம் _ இப்படி ‘மனதின் குரல்’ என்று பேசுகிறாரே, அதேபோல மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் அத்தகைய வாய்ப்பு தரப்படுமா? எப்போதெல்லாம் பா.ஜ.க. மதத்தால் ஆட்சியைப் பிடிக்கிறார்களோ, அப்போதெல்லாம் கல்வி (மனிதவளம்), தகவல் ஒலிபரப்புத்துறை _ இவைகளை தங்களது தோழமைக் கட்சிகளுக்குக்கூட தராமல், அக்கட்சியினர் வசமே வைத்திருப்பதை கூர்ந்து நாடும் மக்களும் கவனிக்க வேண்டும்.  டி.வி.க்காரர்களும், வானொலி நிலையத்தாரும் இந்தப் போக்கைக் கைவிட்டு, அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையை ஒவ்வொரு குடிமகனுக்கும், மகளுக்கும் அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்டு சிந்திக்கும் திறன், சீர்திருத்தம், மனிதநேயம் பற்றி பிரச்சாரம் நடத்திட _ நாடகம், தொடர்களை நடத்திட வற்புறுத்தி அறப் போராட்டத்தினை நடத்திட வேண்டும்! அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம்,   ஜோதிடம், ராசிபலன் போன்ற மூடநம்பிக்கைகளை அறிவியல் போல சித்தரித்து, மூளையைக் கெடுக்கும் அறியாமை தொத்து நோய்க் கிருமிகளைப் பரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்த, ஒரு தனி பொது அமைப்பையே உருவாக்க வேண்டும்; இது அவசரம், அவசியம்.

– கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *