“விடுதலை”, “உண்மை” வாசகர் வட்டம் எல்லா இடங்களிலும் வேண்டும்!

டிசம்பர் 16-31

கே:    தாங்கள் 85 வயதிலும் துடிப்புமிக்க ஆற்றல்வாய்ந்த 25 வயது இளைஞராகப் பணியாற்றுவதன் காரணம் என்ன?  
                           –  சீதாபதி, தாம்பரம்

ப:        ‘1.    தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணி முடிக்க வேண்டிய கடமை உணர்வுகளும்.

    2. கொள்கை எதிரிகளின் குதூகலத் துள்ளல்களும் எள்ளல்களும்

    3. பட்டுப்போகாத இன உணர்வாளர்களான எம் தோழர்களின் பேராதரவும்.
    என்னை உழைப்பதில் உற்சாகம் கொள்ளச் செய்கின்றன. 25 வயது இளைஞனா என்று எனக்குத் தெரியாது; ஆனால் என் உடல் உறுப்புகள் என்னிடம் பொய் சொல்வதில்லை!

கே:    டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை மற்ற கட்சி, அமைப்பினர் கொண்டாடுவதற்கும் சங்பரிவாரங்கள் கொண்டாடுவதற்கும் வேறுபாடுகள் யாவை?
                -கி.மாசிலமாணி, மதுராந்தகம்

ப:    மற்றவர்கள் உள்ளன்போடு கொண்டாடுகின்றனர். சங் பரிவாரங்கள் நயவஞ்சகத்தோடு ‘காரியத்தில் கண் வைக்கும் ஆரியத் தனத்தோடு’ கொண்டாடுகின்றனர். ஒன்று பாராட்டு; மற்றது புரட்டு. அணைத்து அழிக்கும் ஏமாற்று, சூழ்ச்சிவலைப் பின்னல்.

கே:    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வைகோ ஆதரிப்பதைத் தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
            –  மா.கன்னியப்பன், அரக்கோனம்

ப:    நல்ல திருப்பம். தேவையான நேரத்தில் ஆர்.கே.நகர் மட்டுமல்ல; நாடாளுமன்ற, சட்டமன்றத்தேர்தல்களிலும்  ம.தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு இது முன்னோட்டம் என்று கூறினாரே அது ஒரு தேவையான பிரகடனம் _ திராவிடர் இயக்கப் போராட்ட காலத்தில்.

கே:    உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்திய இடங்களில் படுதோல்வியும், ஓட்டு எந்திரம் பயன்படுத்திய இடங்களில் வெற்றியும் பெற்ற பி.ஜே.பி.யை எதிர்க்கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    பித்தலாட்டத்திற்கு யந்திரம் துணைபோகிறது என்ற உண்மை வெளிச்சமாகத் தெரிகிறது!

கே:    மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். கண்காட்சியில் பங்கேற்க வேண்டுமென ராஜஸ்தான் அரசின் அதிரடி உத்தரவு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51ஏ(எச்) பிரிவுக்கு முரணாக இருக்கிறதே?
               –  நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    ஆம். பிணம் தின்னும் சாத்தான்கள். ‘தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்’ _ பழமொழி. தம்பிக்குப் பதில் ‘தங்கை’ என மாற்றிப் படியுங்கள்.

கே:    கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சி என்ன?
       -இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43

ப:    மாநில சுயாட்சி மாநாடுகளை நடத்தி, அனைத்திந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை, முதல்வர்களை அரசியல் கட்சியினரை ஓர் குடைக்குள் ஓரணியில் கொண்டுவருவது முதல் கட்டப் பணியாக அமைய வேண்டும்.

கே:    நம்மோடு வாழ்ந்து மறைந்த கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் மட்டும் பாமர மக்களின் நெஞ்சில் நிலைத்திருக்கக் காரணம் என்ன?
           –  தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:    அவர்களின் தொண்டும், எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் காண உழைத்த உழைப்பும்தான்.

கே:    இடைத்தேர்தல்களில் சுயேச்சைகள் நூற்றுக்கணக்கில் போட்டியிடுவது தேர்தல் நடைமுறைகளை எந்தளவு பாதிக்கும்? இதைத் தடுக்கும் விதத்தில் ஏதேனும் சீர்திருத்தம் தேவையா?
             –  கெ.நா.சாமி, பட்டாபிராம்

ப:        நிச்சயம் தேவை. அரசியல் கட்சிகளே சுயேச்சைகளை நிற்க வைக்கும் தந்திர முறைகளைக் கையாளுகின்றனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணும் இடத்தினுள் இருக்க பலருக்கும் வாய்ப்பும் அதன் மூலம் தேவைப்படும்போது கலகங்களைச் செய்ய இதுவும் ஒரு உத்தியாகும். இப்போதுள்ள சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது. சட்டத் திருத்தம் வரவேண்டும்!

கே:    காட்சி ஊடகங்களே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் இன்றைய நவீன காலத்தில் பெரியார் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எளிதாய் பாமர மக்களிடம் கொண்டு சேர்க்க  தொலைக்காட்சி தொடங்குவீர்களா?
 – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    இது நீண்டகால பலரது வேட்கை; கோரிக்கை இன்றைய சூழலில் நாம் எதிர்பாக்கும் பலன் கிட்டுமா என்ற தயக்கமே தடையாக உள்ளது! என்றாலும் கனவுகள் நிறைவேறும். இப்போது “பெரியார் வலைக்காட்சி’’ பாருங்கள்.

கே:    வீடுதோறும் ‘விடுதலை’, ‘உண்மை’ என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்த தமிழர்களுக்குத் தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் யாவை?
 – எம்.ராஜேஷ், காட்டுமன்னார்குடி

ப:    முதலில் ஆங்காங்கு வாசகர் வட்டம் _ கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து தோழர்கள் நடத்த வேண்டும். 2018இல் நம் பணி நாடு தழுவிய அளவில் இதைச் செய்வதாகவே இருக்கும்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *