சிங்கப்பூர் தமிழ்முரசின் வரலாற்றுப் பதிவு

ஆகஸ்ட் 01-15

 

எனக்கு எழுதிய கடிதத்தில், “வெடிகுண்டு வீசுவோம்; வேல் கொண்டு தாக்குவோம். உன்னைக் கொலை செய்வோம். திருச்செந்தூருக்கு எட்டாம் தேதி வருவாயா?’’ என்று எழுதியிருந்தார்கள்.

அவ்வூரில் முதல் கூட்டம் எனக்கு! பரபரப்பு.

நாங்கள் ஒன்பதாம் தேதிதான் இந்த திருச்செந்தூருக்கு முதலிலே வருவதாக இருந்தோம். என்ன என்றாலும், “பிராமணர்’’ வேண்டுகோள் அல்லவா? அதற்காக எட்டாம் தேதியே வந்து அவர்களைச் சந்திப்போம் என்று அன்றையதினமே திருச்செந்தூர் சென்றேன். பார்ப்பன ஆதிக்கத்தை _ சதியைக் கண்டித்துப் பேசினேன். கூட்டம் முழு வெற்றி _ பல இளைஞர்கள் கிடைத்தார்கள்.

22.03.1981 அன்று சென்னை தியாகராய நகரில், “உரிமை பறிக்கப்பட்ட முற்பட்டோர்கள் பேரணி’’ என்ற பெயரில் குஜராத்தில் நடைபெற்றுவந்த (இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களை ஆதரிக்கும் வகையில்) கிளர்ச்சிக்கு ஆதரவு என்ற அறிவிப்புடன் தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் நடைபெறவிருந்தது அப்பேரணி. “முற்பட்டோர் பேரணிக்கு அரசு தடை’’ விதித்தது.

இதனை நான் வரவேற்று, “நமது பாராட்டு _
நன்றி!’’ என்று விடுதலை முதல் பக்கத்தில் 21.03.1981 அன்றே அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டை மற்றொரு “குஜராத்’’ ஆகாமல் தடுத்த முதல் முயற்சிக்கு வழிவகுத்த தமிழ்நாடு அரசிற்கும் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கும் நமது கழகத்தின் சார்பிலும், கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பிலும், நமது மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டு-தலையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

21.03.1981 அன்று சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் திடலில் நடைபெற்ற பார்ப்பனர்கள் பேரணிக் கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
அப்போது, தமிழ்நாட்டை ‘குஜராத்’ ஆக்கத் திட்டமிட்டு பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சில விபீஷணர்களைப் பிடித்து பேரணி ஒன்றை நடத்தப்போவதாக இரண்டு நாள்களுக்கு முன் சவால் விட்டனர். திடீரென்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தமிழகத்தில் அவர்கள், “குஜராத்தை’’ இறக்குமதி செய்ய முடியுமா? என்று வினவினேன். பொதுக்கூட்டத்தில் பொதுமக்களும், கழகத் தோழர்கள், தோழியர்கள் உள்பட பலரும் பெருந்திரளாக கலந்து-கொண்டார்கள்.

“இடஒதுக்கீடு பிச்சை அல்ல; உரிமையே!’’ என்று 25.03.1981 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கை ஒன்றை விளக்கி எழுதியிருந்தேன். அதில், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக் கண்ணைப் பெறாதவாறு தடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாவார்கள்.
இக்கொடுமைக்குப் பரிகாரம் தேட, அவர்களுக்கு சாதி காரணமாகத்தான் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், உத்தியோக கதவுகள் தானே சாத்தப்பட்டுவிட்ட நிலையும் ஏற்பட்டது என்பதை விரிவாகவும், விளக்கமாவும் விளக்கி அந்த அறிக்கையை எழுதியிருந்தேன்.
‘தமிழ் முரசு’ நாளேடு சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான   நாளேடு. பல்லாயிரம் பேர் அதை விரும்பிப் படிப்பர்.

அதன், 11.01.1981 ஞாயிறு இதழில், “சென்னைக் கடிதம்” என்ற தலைப்பில், “வீரமணியை வரலாற்று வீரராக அடையாளம் காட்டிய ஆண்டு’’ என்று எழுதியிருந்தார்கள்.

அதனை விடுதலை 22.03.1981 அன்று இதழில் வெளியிட்டோம். அக்கடிதத்தில் கூறியுள்ளவை, அயல்நாடு வாழ் மக்கள் நம் இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மீதும், அவர்களுக்குப் பின் இயக்கத்தை வழிநடத்தும் என் மீதும் கொண்டுள்ள மதிப்பீட்டையும் தெளிவையும் காட்டுவதால் அதனை அப்படியே உங்களுக்கு இங்கு பதிவு செய்கிறேன்.

“1980ஆம் ஆண்டின் பெரியலாபம் திராவிடர் கழகத்துக்கே _ குறிப்பாக பழம் பெருமையுடைய திராவிடர் கழகத்தின் இளந் தலைவர் வீரமணிக்கே. இதன் மூலம் தமிழகப் பொதுவாழ்வில் வீரமணி புதியதொரு தாரகையாகப் புத்தொளியுடன் பிரகாசிக்கத் துவங்கியுள்ளார்.

ஆக, 1980 வீரமணியின் ஆண்டு, தமிழினத்தின் நலனுக்கு ஒரு புதிய காவலர் கிடைத்த ஆண்டு! இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் வீரமணியின் புத்திளம் தலைமை புதுச்சோபையுடன் எழுவதற்கு மறைமுகமாக எம்.ஜி.ஆரே. காரணமாக இருந்ததுதான்! ஒரு பெரிய பிரச்னையில் எம்.ஜி.ஆரின் அரசு, ஏனோ தானோ என்ற போக்கில் நடந்துகொள்ள, இதன் ஒட்டுமொத்த விளைவாக ஏற்பட்ட புதிய சூழ்நிலையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட வீரமணி, தமிழினத்தின் சார்பில் ஒரு புதிய போராட்டத்தையே ஆரம்பித்துவிட்டார். இப்போருக்கான உபாயங்களையும், வியூகங்களையும் அவரே வகுத்து நடத்தினார். இறுதியில்பெரிய வெற்றியைப் பெற்றார். அதிலிருந்து தமிழர் நெஞ்சில் அவருக்கென ஒரு புதிய வடிவமே சமைந்துவிட்டது.

திராவிடர் இயக்க மூலநாடி

இதைச் சற்று விளக்கினால்தான் புரியும். திராவிடர் இயக்கத்தின் மூலநாடி ஆதாரச் சுருதி – ஜீவ பலம் சமூகநீதிக் கொள்கையாகும். இதை அடிப்படையாக வைத்துத்தான் பெரியாரின் இயக்கமும் அண்ணாவின் கழகமும் இரண்டுமே வளர்ந்தன. இதன் நியாயத்தையும் ஜீவசக்தியையும் நன்கு உணர்ந்து இதனை ஆட்சி பீடத்தில் அமர வைத்ததால்தான், காமராஜர் தமிழ் இனத்தின் ரட்சகர் ஆனார். இவ்வளவு பெரிய பிரச்னையில் எம்.ஜி.ஆரின் அரசு மிக இலேசான முறையில் நடந்துகொண்டது 1979இல். கல்விக்கூட மேல் நிலையங்களிலும் அரசாங்கப் பதவிகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீதமும் ஒதுக்கும் முறை அரசின் கொள்கையாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. காமராஜர் ஆட்சியிலிருந்து கருணாநிதி ஆட்சிவரை இந்தக் கொள்கை அப்படியே அனுசரிக்கப்பட்டு வந்தது. காமராஜரின் ஆட்சியில் இக்கொள்கை முழுமனத்தோடு _ முழு வேகத்தோடு நடைமுறையில் இருந்து வந்தது. இதன் உட்பொருள் என்ன தெரியுமா? உயர்ந்த பதவிகளான நீதிபதி உத்தியோகங்களி-லிருந்து சாதாரண குமாஸ்தா வேலைவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தத்தில் 31 சதவிகித இடங்களை ஒதுக்கிவிட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் என்பதை எந்த அடிப்படையில் நிர்ணயிப்பது? ஒருவர் கல்வித் துறையிலும் அவருடைய குடும்பம் சமூக ரீதியிலும் காலம் காலமாகப் பின் தங்கிக் கிடப்பதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்தச் சமூக நீதிக் கொள்கையின் பலனாக தலைமுறை தலைமுறைகளாக எழுத்து வாசனையே அறியாதவர்கள், உத்தியோகத்தையே பார்த்தறியாதவர்கள், உயர் கல்வி பெற்று கவுரவமான பதவிகளிலும் அமர்ந்திருக் கிறார்கள். இந்தச் சமூகநீதிக் கொள்கைதான். பெரியாரின் உயிர், அண்ணாவின் மூச்சு. பிற்படுத்தப்பட்டோருக்கும் _ தாழ்த்தப் பட்டோருக்கும் ஒதுக்கியது போக எஞ்சியுள்ள 51 சதவிகித இடங்கள் தகுதி அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோர் உட்பட எல்லா சமூகங்களுக்கும் பகிரங்கப் போட்டியில் நிரப்பப்பட்டு வந்தன.

சமூக நீதிக்கு வேட்டு

இந்தக் கொள்கையில் சர்வசாதாரண முறையில் சாதாரண அரசாங்க ஆணையின் மூலம் பெரிய மாற்றத்தைப் புகுத்திவிட்டார் _ எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோருக்குரிய 31 சதவீத இடங்களுக்கு ரூ.9000க்கு மேல் வருவாய் உடையவர்கள் உரிமை கொண்டாட முடியாதபடி அரசு ஆணை செய்து விட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்ப வருவாய் ரூ.9000த்தை தாண்டிவிட்டால் இந்த அரசு ஆணைப்படி அவர் முற்பட்ட வகுப்பினராகி விடுகிறார்.

இப்பொழுதுதான் சற்று இலேசாகத் தலைதூக்கி வருகின்ற எண்ணிறந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் தலைமேல் பேரிடி போல வந்தது இந்த ஆணை. இதனை சில வட்டாரங்களும் சில பத்திரிகைகளும் ‘ஆலவட்டம்’ கட்டி வரவேற்ற ஒன்றே இந்த ஆணையினால் யார் பலனை அடைவார்கள் என்பதற்கு அடையாளமாகி விட்டது. இந்த ஆணையை தி.மு.க.வும் எதிர்த்தது.

தமிழரின் தன்மானப் பிரச்னை

ஆயினும் இதை மானப் பிரச்சினையாகக் கொண்டு ஒரு போராட்டத்தையே தமிழ்நாடு முழுவதிலும் நடத்திக் காட்டியது _ திராவிடர் கழகந்தான். இந்தப் பிரச்னையை அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுப் பிரச்னை ஆக்கி, வலது கம்யூனிஸ்டு _ தி.மு.க. _ ஜனதா _ பழைய காங்கிரஸ் _ முஸ்லீம் லீக் போன்ற பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளையும் ஒரே மேடையில் கொண்டுவந்து மாவட்டந்தோறும் ‘வகுப்புரிமை மாநாடு’களை முன்னின்று நடத்தி பொது மக்களை விழித்தெழச் செய்தது. முதலில் அலட்சியம் செய்த எம்.ஜி.ஆர். அரசு பின்னர் இப்பிரச்னையில் தமிழர் கருத்து எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்து விட்டது; ஆயினும் பின்வாங்க-வில்லை.

1980 ஆரம்பத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடம் ஒதுக்கும் பிரச்னை அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இதன் பலன்? இதில் எம்.ஜி.ஆர். அரசின் கொள்கையை எதிர்த்த தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது.

எம்.ஜி.ஆரின் தவறு சுட்டிக்காட்டவில்லை

மக்களின் உணர்வைப் புரிந்துகொண்ட அ.தி.மு.க. அரசு வீண் கவுரவம் பார்க்காமல், தனது பழைய ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் பிற்படுத்தப்பட்டோருக்குரிய ஒதுக்கீட்டு அளவையும் 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்திவிட்டது! எம்.ஜி.ஆரின் மூத்த அமைச்சர்கள் பெரியாரிடம் பயின்றவர்கள்கூட, முதலில் எம்.ஜி.ஆருக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரச்னையில் திடீரெனப் புது ஆணை பிறப்பிப்பது எவ்வளவு தவறு என்பதைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டார்கள்.

திராவிடர் கழகத்தின் பாராட்டு

எனினும், ஏற்கனவே திருத்திய ஆணையைத்  திரும்பப் பெற்றதுடன், பிற்படுத்தப் பட்டோருக்குரிய இடஒதுக்கீட்டு அளவையும் துணிச்சலுடன் உயர்த்தியதற்காக, முதல்வர் எம்.ஜி.ஆரைத் திராவிடர் கழகம் மனமாரப் பாராட்டியது.

நிரூபணம்

சமூகநீதிப் பிரச்னையில் தி.மு.க. முழு வேகத்துடன் முழுக் காரத்துடன் நடந்து-கொள்ள முடியவில்லை. இந்திரா காங்கிரசுடன் அக்கட்சி கொண்டுள்ள நேசக் கூட்டு, சமுதாயப் பிரச்னைகளில் அதனுடைய பழைய கூர்மையை ஓரளவு மழுங்கச் செய்துவிட்டது. எம்.ஜி.ஆரோ சதா சர்வ காலமும் கருணாநிதி பற்றியே நினைக்கிறார். இதுதான் சமயம் என்று கருதியவர்கள் மிகத் தந்திரமாக தங்கள் பிரச்சார பலத்தை நம்பி, தமிழ்நாட்டின் ‘அடித்தளமான’ சமூகநீதிக் கொள்கையையே புரட்டிப் போட்டுவிட எத்தனித்தபோது, தனித்து நின்று அந்த முயற்சியை முறியடித்தார் _ வீரமணி, அரசியல் கலவாத,சமுதாய இயக்கமாக திராவிடர் கழகத்தை பெரியார் விட்டுச் சென்றதன் பலனை தமிழினத்தின் எதிர்காலத்துக்கே ‘பேரபாயம்’ வந்த தருணத்தில் உணர முடிந்தது. அது மட்டுமல்ல; பெரியாரின் அடி நிழலில் வீரமணி பெற்ற அகப் பயிற்சி கருத்துப் போராட்ட உபாயங்கள் கொள்கைத் தெளிவு அறிவுக் கனிவு எத்தகையது என்பது நிரூபணமாயிற்று. வீரமணி மட்டும் இல்லாதிருந்தால், பிற்பட்ட மக்களின் எதிர்காலம் ‘அதோ கதிக்கு’ ஆளாகி இருக்கும்.

முப்பெரும் மாநாட்டு முக்கியத்துவம்

சமூகநீதிப் பிரச்னையில் வெற்றி பெற்றவுடனே வீரமணி ஓய்ந்துவிடவில்லை. இத்தகைய விபரீத விளையாட்டில் இறங்கக்கூடிய அசட்டுத் துணிச்சலே யாருக்கும் வரமுடியாதபடி தடுக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு முழுவதிலுமாக முப்பெரும் மாநாடுகளை வரிசையாக நடத்தி வருகிறார். முதலில் வகுப்புரிமை மாநாடு அடுத்து மேல்சாதிக்காரர்களின் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு, பெண்கள் விடுதலை மாநாடு இம்மூன்றிலும் முதலாவது _ வகுப்புரிமை மாநாடுதான் மிக முக்கியமானது. முதலில் மாநில அரசு கடைப்பிடிக்கும் பிற்பட்டோர் இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசும் அனுசரிக்க வேண்டுமென்ற கோரிக்கை. இதன் பொருள் என்னவென்றால் மத்திய அரசின் பதவிகளிலும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டுக் கிடக்கும் பெரும்பான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு செய்வது அவசியம் என்பதாகும். அதோடு நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு போன்றவற்றிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பங்கு கிடைப்பது முக்கியம்.

மேல்சாதி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் கோயிலில் தமிழில் அர்ச்சனை நடைபெறாமல் இருந்து வருவது தமிழரின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழினத்தின் பொதுத் தலைவர்

பெண்கள் விடுதலை மாநாட்டில் பெண்ணினத்தை இழிவுபடுத்தும் நடைமுறைகள் ஏற்பாடுகளுக்கு எதிர்ப்பு. இம்மாநாடுகளைக்கண்டு வயிறு எரிகின்றனர் சிலர். இம்மாதிரிப் பிரச்னைகளில் தி.க. எழுப்பும் கேள்வி தமிழினத்திலுள்ள விவரம் தெரிந்த அனைவர் சார்பிலும் எழுப்பப்படுகின்ற கேள்வி.

“தி..க.வைத் தடை செய்; வீரமணியைக் கைது செய்’’ என்று விவரம் தெரியாத இளம் பிஞ்சு வாலிபர்கள் ஊர்வலம் போகிறார்கள்.

திராவிடர் கழகத்தின் சமயக் கொள்கைகளை ஏற்கும் படித்த சமூகத்தினர் கூட இப்பொழுது வீரமணியை பொதுத் தலைவராக தமிழின உரிமைக் காவலராக கருத ஆரம்பித்துவிட்டனர்.’’

நன்றி: ‘தமிழ் முரசு’, சிங்கப்பர், 11.1.1981

29.03.1981 அன்று குடந்தை வகுப்புரிமை மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். பிரமாண்டமான பந்தல் முழுமையும் நிரம்பி பந்தலுக்கு வெளியேயும், சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களும், பொதுமக்களும் தாய்மார்களும் உணர்ச்சியோடு கலந்துகொண்டார்கள் என்றால் மிகையாகாது. என்னுடைய மாநாட்டு உரையைக் கூர்ந்து கவனித்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்ததாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டுக் காட்டினார்.

இந்த வகுப்புரிமை என்பது நீண்ட சரித்திரத்தைத் கொண்டது. இதனை எதிர்த்து யார் யார் என்ன என்ன பேசுகிறார்கள் என்பதற்குத் தகுந்த பதிலை சொல்லக்கூடிய வாய்ப்பும் பொறுமையும் பெரியார் அவர்களாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவைகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைப்பதற்கு நம்மால் முடியும்.

பேராசிரியர் வீரபாண்டியன், பேராசிரியர் பொன்முடி, பேராசிரியர் நெடுஞ்செழியன், பேராசிரியர் இறையன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சென்னை தியாகராயர் நகரில் 19.04.1981 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 1976ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை சிறைச்சாலையில் வித்யாசாகரன் செய்த கொடுமைளை நியாயப்படுத்தி பதவி உயர்வு கொடுக்க முன்வந்துள்ள தமிழக அரசை, கண்டித்து மாபெரும் கழக கண்டனப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நான் ஆற்றிய உரையில் சென்னை சிறைச்சாலையில் மிருகத்தனமான தாக்குதல்கள் அரசியல் கைதிகள், பொது வாழ்க்கையிலே காரண காரியங்கள் ஏதுமின்றி சிறைபிடிக்கப்பட்டவர் மீது சட்டத்திற்குப் புறம்பாக _ நியாயமற்ற முறையில் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். மற்றொரு ஜாலியன் வாலாபாக் போன்று சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. பொறுப்பு வாய்ந்த ஒரு கமிஷன் தலைவராக ஆய்வாளராக இருந்து மிகத் தெளிவாக ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று சொல்லி யிருக்கின்ற பிறகும்கூட, அந்த அளவுக்கு குற்றவாளியாக இருக்கின்ற அதிகாரிகள் மீது மனிதாபிமான அடிப்படையில் நியாயம், நேர்மை ஆகியவைகளின் அடிப்படையில், அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில்கூட, இத்தனை ஆண்டுகள் உருண்டோடியும்கூட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது மட்டுமல்ல; அப்படி நடந்துகொண்டவர்களுக்கு இந்த ஆட்சி பரிசு வழங்குகின்ற அளவுக்கு வந்திருக்கின்றது.

இந்த ஆட்சிக்கு திராவிடப் பாரம்பரியம் என்ற முத்திரை இருக்கின்றதே என்ற வேதனை எங்களைத் தலைகுனியச் செய்திருக்கிறது.

அய்யா வழி, அண்ணா வழி என்று வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அக்கிரமங்களை நியாயப்படுத்திக் கொண்டு _ மனிதாபிமானத்தை அறவே கைவிட்டுவிட்டு, அநியாயங்களை நியாயப்படுத்தி அதிலே மகிழ்ச்சியும் அடையக்கூடிய அளவுக்கு இந்த ஆட்சி இருக்கின்றதே என்பதை எண்ணி தலைகுனிவு ஏற்படுகிறது.

இது தனிப்பட்ட ‘வித்யாசாகர்’ என்ற ஒரு நபர்மீது போர் தொடுக்கின்ற ஒரு முயற்சி அல்ல இது. இந்த நிலை இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட கண்டனக் கூட்டங்களை நாம் நடத்துகிறோம்.

“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஏனைய நிவாரண நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தனித்தனியே ஆணைகள் பிறப்பிக்கப்படும்.’’

ஒன்று, தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது; இன்னொன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த அதிகாரி மீது இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இலாகாவூர்வ விசாரணை யாவது நடைபெற்றதா? அரசுத் தரப்பில் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வளவுக்குப் பிறகும் இந்த ஆட்சியாளர்கள், “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; செய்ததே முடிவு’’ என்று இருப்பார்களேயானால், அதைத் தண்டிப்பதற்கு தமிழகம் கிளம்பும், எழுச்சி பெறும். அப்போது இந்த ஆட்சியாளர்களின் முடிவு மாற்றப்பட்டு விடும் என்று அன்று நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு தி.க., தி.மு.க. தோழர்களும் ஏராளமான பொது மக்களும் மாநாடு போல் கூடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22.04.1981 அன்று தந்தை பெரியார்_ மணியம்மையார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் ஆண்டு விழா தஞ்சையில் சிறப்புடன் நடைபெற்றது. ஆண்டு அறிக்கை பாலிடெக்னிக் முதல்வர் திருமதி சுந்தரி  வெள்ளையன் (அண்மையில் அவர் 2.7.2017 அன்று அமெரிக்காவில் காலமானார்.) வாசித்தார்கள். விழாவில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கோபால் அவர்களும், மாண்புமிகு அமைச்சர் க.ராசாராம் அவர்களும் சிறப்புரையை சீறிய முறையில் நிகழ்த்தினார்கள். இந்த விழாவில்  தொழில் அதிபர் க்ஷிரிழி கண்ணப்பன் அவர்களும் அறக்கட்டளைக்கு நிதியாக 10,000/_ ரூபாய் மிகுந்த கரவொலிக்கிடையே என்னிடத்தில் வழங்கினார். விழாவில் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி எப்படித் தொடங்கப்-பெற்றது என்பது முதல் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார் யார்? என்பதுவரை விழாவில் எடுத்துரைத்தேன். விழாவில் ஆசிரியர் பெருமக்களும், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *