அறிவியல் படிப்பா? வாழ்க்கை முறையா?

ஜூலை 01-15

பள்ளிகளிலும் கல்லூரி பல்கலைக் கழகங்களிலும் அறிவியலைப் பாடமாக்கி, தேர்வெழுத வைத்து மதிப்பெண் பெறுவதற்குரிய ஒரு தகுதியாக மட்டுமே _ அறிவியல் பயன்படும் தற்போதைய முறையை, மேலும் விரிவாக்கி அதை வாழ்வியலின் அங்கமாக்கிட வேண்டும்.

பதவியேற்கும் நம் அரசியல்வாதிகளில் பலருக்கு இந்திய அரசியல் சட்டத்தினைக் காப்போம் என்று பிரமாணம் எடுக்கச் செய்யப்படுவது ஒரு சடங்கு (Ritual) ஆகத்தான் செயல்படுகிறதே தவிர, அதன் முக்கியக் குறிக்கோளான, இறையாண்மை, சமூகநீதி, சமதர்மம், ஜனநாயகம், குடிஅரசு ஆட்சி முறை, இதற்கெல்லாம் மூலமாக _ முக்கியத் தேவையான _ அடிப்படைக் கடமைகளில் முக்கியமான அறிவியல் மனப்பாங்கையும், கேள்வி கேட்டு சிந்தித்து, புதிய சீர்திருத்தங்களுடன் மனிதநேயத்தையும் வளர்க்கக் கூடிய ஒரு கடமை ஒவ்வொரு குடிமகனிடத்திலும் இருக்க வேண்டும்; அக்கொள்கைகளை வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது என்பது, அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எத்தனை பேருக்குத் தெரியுமோ நமக்குத் தெரியாது!

அறிவியல் மனப்பாங்குடன் நம் அன்றாட வாழ்க்கை அமையுமானால், அதைவிட வெற்றியின் வெளிச்சம் வேறு ஏது? அது இல்லாத எவருக்கும் அவ்வெளிச்சம் கிடைக்காது!
அன்றாட வாழ்வில் நாம் அறிவியல் தந்த அரிய கண்டுபிடிப்புகளை ஒவ்வொரு நொடியும் பயன்படுத்துகிறோம்.

மின்சாரம் முதல் கைப்பேசி வரை _ இவை இன்றியமையாதவைகளாகிவிட்டன. இதனைக் கண்டுபிடித்தவன் அறிவும், நம் அறிவும் எல்லாம் ஆறறிவுதான். பின் எப்படி சிலருக்கு மாத்திரம் அது வாய்ப்பாயிற்று; மற்றவர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?

அப்புதுமையைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஏழு அறிவா உள்ளது? கண்டுபிடிக்காமல், அதற்கு இங்கே ‘ஆயுத பூஜை’ அன்று பொட்டுவைத்து சந்தனம் தெளிப்போர்க்கு  என்ன அய்ந்து அறிவா? இல்லையே!

ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை தங்குதடையின்றிப் பயன்படுத்திடும் அறிவியல் மனப்பாங்கு நம்முள் பலருக்கு அமையவில்லை. காரணம் பழமை, அச்சம், அறியாமை, மூடத்தனம்,  எதுவும் நம் கையில் இல்லை என்ற தன்னம்பிக்கையற்ற தலையெழுத்தின் மீதுள்ள நம்பிக்கை போன்றவை.

உலகம் எப்படியெப்படியோ நாளும் வளர்ந்தோங்கி, 50க்கு மேல் உள்ள புதிய கிரகங்களில் மனிதர்கள் குடியேறி வாழும் வசதி வாய்ப்புகளை உள்ளடக்கி, அறிவியல், உலகம் புதுப்புது பரிமாணத்தை நோக்கி அதிவேகப் பயணம் செய்யும் காலத்தில், குழவிக் கற்களுக்குக் கொண்டாட்டங்கள் நடத்தியும் ‘லிங்க பூஜை’ என்று சற்றும் கூச்சநாச்சம் வெட்கமின்றி நடத்தி, நாம் இன்னமும் மனதால் காட்டுமிராண்டி ஆதிபருவத்தில்தான் இருக்கிறோம்! நாகரிக உலகின் நல்ல காட்டுமிராண்டிகளாக, மதத்திற்காக மண்டைகளை உடைத்து, ரத்த ஆறு ஓடச்செய்து, மனிதநேயத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் அவலத்தில் அல்லவா உழன்று கொண்டுள்ளோம்! நியாயந்தானா? இளைஞர்களே, மாணவர்களே, நீங்கள் சிந்தியுங்கள். புத்தாக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டும் நீங்கள் புத்தறிவு _ பகுத்தறிவு _ சுயமரியாதை ஏற்று வாழ்க்கையை ஒளிமயமாக்கிக் கொள்ளுங்கள்!

– கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *