ஆசிரியர் பதில்கள்

டிசம்பர் 16-31

சகாயத்தின் கருத்து

சரியான கருத்து

கே :    அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு இந்து சேனா அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளதன் காரணம் என்ன?
    – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப :    ஒரே முக்கியக் காரணம். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்-களுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த குஷிதான்!

கே :    பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு சரியில்லையென்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?
    – கு.அன்புமணி, சேலம்-2.
ப :    இனிமேலும் இப்படிப்பட்ட கண்டனங்கள் வராத அளவுக்கு எச்சரிக்கையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும் என்பதையே காட்டுகிறது!

கே :    தில்லுமுல்லும், பார்ப்பன ஆதிக்கமும் மிகுந்த திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தமிழர்கள் கூட்டங்கூட்டமாய்ச் செல்வது ஏன்?
    – சு.கண்ணன், ஆரூர்
ப :    பக்திக்கும் புத்திக்கும் சம்பந்தமில்லை என்பதால்; பாவங்களைக் கரைத்துவிடலாம் என்ற முட்டாள்தன நம்பிக்கையிருப்பதால், சென்னை தியாகராய நகர், வெங்கட்ட நாராயணா தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட திருப்பதி _ திருமலை தேவஸ்தான தகவல் அலுவலகமே இப்போது கோயிலாக மாற்றப்பட்ட மடத்தனம் பற்றி எங்கே போய் முட்டிக்கொள்வது? புரியவில்லையே!

கே :    சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று சகாயம் அய்.ஏ.எஸ். வலியுறுத்தியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
    – இரா.செந்தில், கும்பகோணம்
ப :    தலைசிறந்த அதிகாரியான திரு.சகாயத்தின் கருத்து பொருள் பொதிந்த கருத்து; தந்தை பெரியார் கருத்தின் எதிரொலியே அது!

கே :    உலகில் கடவுள் நம்பிக்கையற்ற நாடுகளில் முதலிடம் வகிப்பது சீனா. அது வல்லரசு. ஆனால், ஆன்மீகத்தில் முதலிடம் வகிக்கும் இந்தியா பின்னோக்கிச் செல்கிறது! இவை உணர்த்துவது என்ன?
    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப :    கடவுள் நம்பிக்கை நம் நாட்டைப் பின்னோக்கித் தள்ளும்; உழைப்பும் நாணயமுமே நம்மை _ நம் நாட்டை முன்னேற்ற உதவக் கூடும்! அதற்குத் தாங்கள் கூறியவை நல்ல எடுத்துக்காட்டுகள்!

கே :    தி.மு.க.வுடன் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைப்பதுதானே இரு தரப்புக்கும், தமிழர் நலத்திற்கும் நல்லது?
    – அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி
ப :    ஆமென்! ஆனால், முடிவு அவர்கள் அல்லவா செய்ய வேண்டும்?

கே :    நிர்வாக மொழியாக, வழக்காடு மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ் ஆகாமல் இருக்க காரணங்கள் எவை?
    – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப :    மத்திய அரசின் ஒத்துழையாமையே முக்கியக் காரணம்!

கே :    ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ‘மோடி வேடம்’ போட்டு வெள்ளையின வெறியைக் காட்டி, மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்கிறாரே? பார்ப்பனர்கள் ஆதரவு காட்டியது வீணா?
    – இல.சங்கத்தமிழன், செங்கை
ப :    போகப்போகப் புரியும் _ அவரது வார்த்தைகளையே அவரே விழுங்கி வாடும் _ திணறும் நிலை வரவிருக்கிறது! ஆட்சிக்குப் போன அவர் பிறகுதானே தனது உளறலுக்கு வருந்துவார்! வாக்கு வங்கிக்கானப் பேச்சு அது!

கே :    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், எளிய மக்கள் குறைந்த செலவில் திருமணம் செய்ய முடியாத நிலையில், தனது சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. ஜனார்த்தன ரெட்டி 650 கோடி ரூபாயில் தன் மகள் திருமணத்தை மத்திய அரசு பார்க்க நடத்தியது எதைக் காட்டுகிறது?
    – கெ.நா.சாமி, சென்னை-72
ப :    ‘ஏழைக்கொரு நீதி, கோடீசுவர கொள்ளைக்காரர்களுக்கு மற்றொரு நீதி’ என்ற மோடி அரசின் இரட்டை வேடத்தையே காட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *