சாலையோரப் பெண்ணாலும் சாதிக்க முடியும்!

டிசம்பர் 16-31

 

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்-கோவில் நடைபெறும் வீடற்றவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சங்கீதா தகுதி பெற்றுள்ளார். சென்னை எழும்பூர் வால்டேக்ஸ் சாலையில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சங்கீதா. இவர் சிறுவயது முதலே கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எப்போதும் தனது நண்பர்-களுடன் ஏதாவது ஒரு மய்தானத்தில் விளையாடிக் கொண்டிருப்பார். தனது குடிகாரத் தந்தையால் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டவர். இவரது தாய்க்கு சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

இவர் குடும்பச் சூழல் காரணமாக 9ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். வீதியில் வாடும் குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் குழந்தைகளுக்கான  கருணாலயா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் கால்பந்துப் பயிற்சிக்கான முகாம் குறித்து அறிந்துள்ளார். பின்னர் அவர்-களின் உதவியுடன் பயிற்சி முகாமில் சேர்ந்து, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் ஹோம்லெஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

“பொதுவா எங்களை மாதிரி ரோட்டுல வாழுற ஜனங்களை யாரும் மனுஷங்களா மதிக்கிறதே இல்லை. தலைமுறை மாறுனாலும் எங்க ரோட்டு வாழ்க்கை மட்டும் மாறவே மாறாது. ‘இந்த விளையாட்டாவது வாழ்க்கையை மாத்தட்டுமேனு அம்மா நினைச்சுச்சு.

முதன்முதல்ல, சென்னை அளவுல டிஃபன்ஸ் பிளேயரா ஆடினேன். அதுல எங்க டீம் கப் வின் பண்ணுச்சு. பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ் அவார்டு எனக்குக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் தீவிரமா விளையாட ஆரம்பிச்சுட்டேன். ஃபார்வர்டும் ஆடுவேன்.

வீடில்லாத குடும்பங்களைச் சேர்ந்த கால்பந்து வீரர்களுக்காக தேசிய அளவுலயும், உலக அளவிலயும் ஹோம்லெஸ் ஃபுட்பால் டோர்னமென்ட் நடத்துறாங்க. அதுக்கு நாங்க தயாரானோம்.

வழக்கமா ஃபுட்பால் விளையாடுறவங்க முட்டை, பால், ஆப்பிள்னு சத்தான உணவுகளா சாப்பிடணும். எனக்கு மூணு வேளை சோறு கிடைக்கிறதே சிரமம். இதுல சத்துணவுக்கு எங்கே போறது…? கருணாலயாவுல அவிச்ச பயறு, பால் தருவாங்க. மத்தபடி வீட்டுல என்ன கிடைக்குதோ அதுதான் சத்துணவு.

நாக்பூர்ல ராஜீவ் காந்தி மெமோரியல் ஃபுட்பால் டோர்னமென்ட்… தமிழ்நாடு பெண்கள் டீமுக்கு நான்தான் கேப்டன். நல்லா விளையாண்டோம். இருந்தாலும் உடல்அளவுல வலுவா இருந்த சில அணிகள் எங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டாங்க. ஒன்பதாவது இடம்தான் கிடைச்சுச்சு. அதேநேரம், டீம் டிசிப்பிளினுக்காக ‘ஃபேர்பிளே’ அவார்டு எங்களுக்குக் கிடைச்சுச்சு. ஒரு கேப்டனா அது எனக்கு உற்சாகமா இருந்துச்சு…’’

கடந்த பிப்ரவரியில் கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹோம்லெஸ் ஃபுட்பால் டோர்ன-மென்டில் அண்டர்_16 பிரிவில் தமிழக அணியை வழிநடத்திச் சென்று அப்போட்டியில் விளையாடிட வேர்ல்டு கப் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.

வேர்ல்டு கப் டோர்னமென்ட் ஸ்காட்லாந்து நாட்டுல நடந்துச்சு. இந்தப் போட்டிக்கு நான் தேர்வானதை எங்க மக்கள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. ஃபிளக்ஸ் போர்டெல்லாம் வெச்சாங்க. இங்க உள்ள கடைகாரங்கள்லாம் சேர்ந்து 8 ஆயிரம் ரூபாய் கலெக்ட் பண்ணித் தந்தாங்க. அதுலதான் டிரெஸ், மருந்து, தைலமெல்லாம் வாங்கினேன். ஃபிளைட்ல ஏறும்போது உண்மையிலேயே நம்ப முடியலே… ‘நாம எல்லாம் ஏரோபிளேன் பக்கத்துல நின்னு பாப்போமா’னு நினைச்சிருக்கேன். ஆனா, அதிலயே பயணம் செய்வேன்னு நினைச்சுக்கூட பாத்ததில்லை!

ஸ்காட்லாந்துல அந்த நாட்டோட பிரபலமான ஃபுட்பால் பிளேயர் ஆண்டிஹூக் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். ஒவ்வொருத்த-ரோட திறமையையும் தனித்தனியா கண்டு-பிடிச்சு அதுக்குத் தகுந்த மாதிரி அவர் கத்துக்கொடுத்த நுட்பங்கள் வியப்பா இருந்துச்சு!

பெண்கள் பிரிவுல மொத்தம் 19 அணிகள். ஒவ்வொரு மேட்ச்சுமே ரொம்ப டஃப்பா இருந்துச்சு. ஸ்காட்லாந்து டீமோட மோதும்-போது ஒரு பாஸிங் கோல் போட்டேன். நிறையப் பேர் பாராட்டினாங்க. சில, மெக்ஸிகோ நாட்டு அணிகள் நல்ல ஃபிட்னஸோட வந்திருந்தாங்க. அவங்ககூட முடிஞ்சவரைக்கும் போராடினோம். இறுதியா 7ஆவது இடம் பிடிச்சோம்…’’ என்கிறார் சங்கீதா.

சங்கீதாவுக்கு ரோல்மாடல் பிரேசில் வீராங்கனை மார்ட்டா. அவரைப் போலவே சர்வதேச வீராங்கனை ஆவதே தன் லட்சியம் என்கிறார்.

‘எல்லாத்தையும்விட பெரிய செல்வம் நம்ம நம்பிக்கையும் திறமையும்தான். நம்மகிட்ட இல்லாத ஒண்ணைப் பத்தி நினைச்சுக்கிட்டு, மனம் தளர்ந்து போறதைவிட பெரிய தோல்வி எதுவும் இல்லை. நம்ம திறமையை அடை-யாளம் கண்டுபிடிச்சு உழைக்கிறதுலதான் வெற்றி இருக்கு’னு மார்ட்டா சொல்லுவாங்க.
எனக்கு வீடில்லை… நல்ல உணவில்லை. ஆனா, மனசு முழுக்க நம்பிக்கையிருக்கு. திறமை இருக்கு. ரேஷன்கார்டுகூட இல்லாத ஒரு இந்தியக் குடும்பத்துல பிறந்து, நாடு விட்டு நாடு போய், வேர்ல்டு கப் கால்பந்து போட்டியில இந்தியாவோட பிரதிநிதியா விளையாடி-யிருக்கேன். இன்னும் காலமும் வயசும் இருக்கு. நிச்சயம், பிரதான இந்திய அணியில இடம்பிடிச்சு உலகக் கோப்பையில விளையாடுவேன். இந்தியாவோட நம்பிக்கை நட்சத்திரமா ஆவேன். மார்ட்டா மாதிரி நானும் மத்த பிள்ளைகளுக்கு ரோல்மாடலா இருப்பேன்…’’ உணர்ச்சி ததும்பச் சொல்லும் சங்கீதா சாலையோரத்தில் வாழும் பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சரியான உந்துசக்தி!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *