ஆதரவற்ற நிலையில் அய்.ஏ.ஸ். ஆக ஆட்டோ ஒட்டும் பெண்!

பிப்ரவரி 16-28

தற்கொலையை நாடும் இளைஞர்களே இவரை பின்பற்றுங்கள்!

எல்லம்மா குடும்ப சூழ்நிலை காரணமாக பூக்கள் அலங்காரம் செய்யும் ஒருவருக்கு 18வது வயதிலேயே  திருமணம் செய்து வைக்கப்-பட்டார். ஆனால், அந்த வாழ்வு அதிக காலம் நீடிக்கவில்லை. கணவரை இழந்தார்; தனிமரமானார். வாழ்வின் சோகத்தின் விளிம்புக்குச் சென்ற இவர் தன்னுடைய இரண்டரை வயது குழந்தைக்காக தன் இலட்சியத்திற்காக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை வந்தது.

என்றாலும் அவர் சோர்ந்து போகவில்லை, தன் சொந்தங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. மாறாக  வாழ்வில் தன் இலக்கை அடைய அவரிடம் ஒரு யோசனை தோன்றியது. ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தலாம் என்று முடிவு செய்து, தன் மைத்துனரிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டார். சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு வசதியில்லை. எனவே வாடகைக்கு ஆட்டோ கிடைக்குமா என்று பலரிடம் போய் கேட்டார். ஆனால் இவர் பெண் என்பதாலும், இந்தத் தொழிலுக்குப் புதியவர் என்பதாலும், யாரும் வாடகைக்கு ஆட்டோ தர மறுத்தனர்.

இறுதியில் இவரது தன்னம்பிக்கையைப் பார்த்த ஒரு ஆட்டோ மெக்கானிக், நாள் ஒன்றுக்கு ரூ130 என வாடகை பேசி இவருக்கு ஆட்டோ கொடுத்தார். எல்லம்மாவுக்கு ஒரே சந்தோஷம். நாட்கள் ஆக ஆக இவர் மிகவும் திறமையாக பெங்களூரு சாலைகளில் ஆட்டோ ஓட்டி வருவாய் ஈட்டினார்.

தனக்குக் கிடைக்கும் வருவாயை வைத்து பி.யூ.சி., படிக்கவும் அதே நேரத்தில் அய்.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கவும்  முடிவு செய்தார். அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் தன்னுடைய ஆட்டோவில் எப்போதும் இருக்கும்படிச் செய்தார். அதேபோல பி.யூ.சி. படிப்பும் படித்துக் கொண்டிருக்கிறார். தினசரி பத்திரிகைகள் அனைத்தும் இவரது ஆட்டோவில் இருக்கும். பொது அறிவுக்காக அனைத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு தற்போது, தினமும்  ரூ.700 முதல் 800 வரை வருமானம் கிடைக்கிறது. இதில் பாதி வாடகை மற்றும் பெட்ரோலுக்குப் போக மீதி இவருக்கு மிஞ்சுகிறது. தன்னுடைய இலட்சியம் நிறைவேற இவர் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார்.
இவரது ஆட்டோவில் செல்பவர்கள்

ஆட்டோவில் உள்ள புத்தகங்களைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்கிறார்கள். இவரின் இலட்சியங்களைக் கேட்டு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வாழ்த்திச் செல்கிறார்கள். மேலும் மீட்டருக்கு மேல் பணமும் கொடுக்கிறார்களாம். இது இவரது வெற்றிப் பயணத்தின் உந்துகோலாக அமைகிறது.
எல்லம்மாள் அய்.ஏ.எஸ். ஆக, அவர் மகள் சாதனைப் படைக்க வாழ்த்துக்கள்.

நொந்து, வெந்து, வாழ்க்கையை வெறுத்து கயிற்றிலோ, கிணத்திலோ, நஞ்சிலோ, நான்கு-மாடி உச்சியிலோ தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் இவரை எண்ணுங்கள். வாழ்ந்து காட்டுங்கள்.

வெட்டியாய் போகும் உயிர் சாதிக்கும் முயற்சியில் போகட்டுமே! வெற்றிபெற வாய்ப்புண்டல்லவா! சிந்திப்பீர்! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *