விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் குவைத் செல்லப்பெருமாள்

பிப்ரவரி 16-28

கி.வீரமணி

அன்றும் இன்றும் என்றும் அப்பழுக்கற்ற கொள்கைவீரர் மானமிகு குவைத் எஸ்.செல்லப்பெருமாள் அவர்கள், ஒரு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக, அவர்தம் தொண்டறம் _ கொள்கை பரப்பு என்பது பெரியார் நூல் நிலையம் என்பதை தனது இல்லம், அல்லது தான் வாழும் பகுதியிலேயே இடையறாது செய்து, மற்ற நண்பர்களை பெரியார் கொள்கையாளர்களாக மாற்றிடும், அற்புதமான எடுத்துக்காட்டான தொண்டாகும்.

இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம்; இவரது இளமைக் காலத்திலிருந்தே பெரியார் கொள்கைப் பற்றாளர்.

இன்றைய மும்பை, முந்தைய பம்பாய் மாநகரில் இவரது அண்ணா கொலாபா சாமிக்கண்ணு அவர்கள் இவருக்கு முன்னோடியான பெரியார் கொள்கையாளர். அவ்விருவருக்கும் இருந்தது, இருப்பது பெரியார் _ திராவிடர் கழக _ கொள்கைப் பற்று என்று சொல்வதைவிட, ‘கொள்கை வெறி’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!

பம்பாயின் கொலாபா பகுதியில் தோழர் ஜான் முத்தய்யா என்ற பெரியார் பெருந்தொண்டர் இருந்தார். அவர் மூலம் திருவாளர் சாமிக்கண்ணு, செல்லப்பெருமாள் அங்கு வசதிபடைத்த பங்களாவாசிகளின் பணியாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு தனி அவுட் அவுஸ், வசதியான வீடு இணைப்பு உண்டு. தோழர் டார்ப்பீடோ ஜெனார்த்தனம் எம்.ஏ., மற்ற என்னைப் போன்ற பிரச்சாரத்திற்கு சென்ற தோழர்களை  அங்கேயே அழைத்துத் தங்க வைத்து, விருந்து உபச்சாரம் செய்வதில் அவர்களுக்குத்தான் எவ்வளவு எல்லையற்ற மகிழ்ச்சி.

அய்யா, அன்னையாரிடம் அளவு கடந்த மரியாதை கலந்த கொள்கை உணர்வைக் காட்டுவார்கள் இவர்கள்.

எஸ்.செல்லப்பெருமாள் எப்படியோ குவைத் சென்று அங்குள்ள அரேபிய ஷேக்கின் உதவியாளராக அவருக்குப் பணி செய்ததோடு, அவர் குடும்பத்து உறுப்பினர் போலவே, நம்பிக்கையைப் பெற்றார் _ தனது உறுதியான நாணயம், விசுவாசத்தின் மூலம்!

அந்த ஷேக்கு (மூத்தவர்) ஆண்டில் ஆறு மாதத்திற்கு மேல் இங்கிலாந்து சென்று அங்கே தங்கி பிறகு குவைத் திரும்புவார்.

அப்போது இவரையும் உடன் மெய்க்காவலர் போல அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொள்வார்! இவருக்கு எல்லாவற்றிலும் முழுச் சுதந்திரம் வழங்கினார் இவரது ‘முதலாளி’ ஷேக்.

இவர் ஒரு பெரியார் பற்றாளர் என்பதை எங்கும் மறைக்காதவர். குவைத்தில் இருந்தாலும், லண்டனில் இருந்தாலும், செப். 17 என்றால், தந்தை பெரியார் பிறந்த நாளை அங்குள்ளவர்களை அழைத்து விருந்து படைத்து, சிறப்பாக கொண்டாடிய படம் விடுதலைக்கு வந்து சேரும்! விடுதலையிலும் அவை வெளியாகியுள்ளன!

மூத்த முதியவர் ஷேக் காலமான பிறகு இவர் ஒரு ‘சுதந்திரப் பறவை’ போல தனியே பணியாற்றி குவைத்தில் உள்ள அத்தனை பெருமக்கள் _ தமிழர்கள், மற்றவர்கள் எவராயினும் அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெறத் தவறாதவர்!

அவருக்கு ஒரு வாழ்நாள் கனவு _ இலட்சியம். ‘எப்படியாவது ஆசிரியரை’ (என்னை) குவைத்திற்கு அழைத்து, பெரியார் விழா கொண்டாடிட வேண்டும்; அதில் அந்நாட்டுப் பிரமுகர்களுக்கு பெரியார் விருது கொடுக்க வேண்டும் என்பது.

எப்படியோ முயற்சித்து, கடந்த 3, 4 ஆண்டுகளுக்கு முன் (5 ஆண்டுகளுக்கு முன்கூட இருக்கலாம்) குவைத்தில் பெரிய விழாவை தன்னந்தனியராயினும், பலருடைய ஒத்துழைப்புடன் (நண்பர் லியாகத் அலி அவர்கள் இவருக்குப் பெருந்துணை) நடத்த, கட்டாயம் வரவேண்டும் என்றார்.

எனது உடல் நிலை, இதயத்திலே மோசமான நிலையில் இருந்த முந்தைய கட்டம் அது. மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயணம் இப்போது செல்வது உசிதமல்ல என்று ‘அறிவுரை’ ‘தடுப்புரை’ கூறினர்.

இதைக்கேட்டு, அந்த நிலையில் எனது வாழ்விணையர் மோகனாவிடம், ‘அம்மா ஆசிரியர் உடல்நிலைதான் முக்கியம்; எனது ஏற்பாடு, செலவு பற்றிக் கவலைப்படாதீர்; பிறகு நடத்திக் கொள்ளலாம்!’ என்று முந்திக்கொண்டு சமாதானம் சொன்ன பண்பினர் செல்லப்-பெருமாள் அவர்கள்!

எனது வாழ்விணையர் மோகனா அவர்கள் இவ்வளவு தூரம் வெளிநாட்டில் செய்யப்பட்ட தன்னந்தனியரின் ஏற்பாடு நட்டத்திலும் ஏமாற்றத்திலும் முடிவதா? கூடாது! நாம் ஒரு டாக்டர் நண்பரையும் உடன் அழைத்துச் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டே திரும்பலாம் என்று கூறினார்!

இது போதாதா எனக்கு! என்ன ஏதாவது நடந்தால், இங்கு என்ன? வெளிநாட்டில் என்ன? அதுபற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று முடிவு எடுத்து, திருமதி மோகனா, வழக்குரைஞர் த.வீரசேகரனின் வாழ்விணையர் டாக்டர் வசந்தி, வீரசேகரன் எல்லோரும் சேர்ந்து குவைத் சென்றோம். நிகழ்ச்சி பெருவெற்றியாக நடந்தது! அவரது வாழ்நாள் சேமிப்பையே செலவு செய்தார்! எங்களுக்குச் சங்கடம்.

(பிறகு உடல்நிலை தேறியவுடன் 2 ஆண்டு கழித்து இரண்டாவது முறையும் பெரியார் விழாவினை அவர் நடத்த, சென்று பேசித் திரும்பினோம்.)

நான் அவருக்கு வழிச்செலவு _ ‘விமான டிக்கெட்’ செலவு ஏற்படக்கூடாது என்று  திரும்பி வந்து தொகையை அவர் பெயரில் டிப்பாசிட் செய்து தகவல் கொடுத்தோம். அதன்பின் இங்கு வந்தவர், அதை வீரமணி_மோகனா அறக்கட்டளை தொகை-யாக்கி, வட்டியை ஆசிரியர் விரும்பு-கிறவர்களுக்கு கல்வி உதவி தரவும் என்று மாற்றி எழுதிவிட்டுச் சென்றுவிட்டார் _ பிடிவாதமாக. எப்படிப்பட்ட உணர்வு, பண்பாடு பாருங்கள்!

எளிய தோழர், பட்டறிவும் பகுத்தறிவும் மிக்கவர்; ‘விடுதலை’தான் அவரது கல்லூரி _ தந்தை பெரியாரும், இயக்கமும்தான் அவரது மூச்சு, பேச்சு எல்லாம்!

நெல்லையில் வீடு கட்டி அதில் அவரது துணைவியார் உள்ளார். திருச்செந்தூருக்கு திராவிட விழிப்புணர்வு மாநாட்டிற்கு வந்து என்னைப் பார்த்து பெரியார் உலகிற்கு நிதி தந்தார்.

இங்கே சென்னைக்கு எங்கள் இல்லத்திற்கு அவர்கள் இருவரும் வந்தபோது,  இருவருக்கும் திருமதி மோகனா விருந்து உபச்சாரம் செய்து அனுப்பியதில், எங்கள் குடும்பத்திற்குத்தான் எவ்வளவு மனநிறைவு _ மகிழ்ச்சி, பெருமை!

எத்தனையோ “செல்லப்பெருமாள்’’, சாமிக்கண்ணுகளை, பெரியார் தொண்டர்களை தந்தை பெரியாரின் ஒப்புவமையற்ற தொண்டு ஈர்த்துள்ளது!

கைம்மாறு கருதாத, ஏழை, எளிய தொண்டர்கள் _ தோழர்களே இவ்வியக்கத்தின் இரத்த நாளங்கள். உலகம் முழுவதும் இத்தகைய குடும்பங்கள் உண்டு.

அவரது தொண்டுக்கு சிறப்புச் சேர்க்க, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவனும், டாக்டர் இலக்குவனும், இவரை குவைத் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவராக்கி மகிழ்ந்தனர்.

அவர் பல்லாண்டு வாழ்ந்து கொள்கை பரப்பு செய்ய விழைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *