பெண்கள் கோயிலுக்குள் செல்லத் தடையா? பெரும் போராட்டம் வெடிக்கும்

பிப்ரவரி 16-28

மஞ்சை வசந்தன்

ஆரிய பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் படுமோசமான விளைவுகளில் இதுவும் ஒன்று! தமிழர்களின் மண்ணாகிய இந்தியாவிற்குள் ஆரியர்கள் நுழைவதற்கு முன்னும், நுழைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழர் பண்பாட்டைச் சிதைக்கும் வரை தமிழ்ச் சமூகத்தில் பெண்களே உயர்நிலையில், ஆளுமையில், வணங்கத்தக்க நிலையில் வாழ்ந்தனர். தமிழரிடையே தாய்வழிச் சமுதாயமே நிலவியது.

 

தாய்மை பெருமைக்குரியதாயும், போற்றுதற்-குரியதாயும் அதன் உச்சமாக வணக்கத்திற்கு உரியதாயும் இருந்தது. சொத்துக்கு உரியவர்களாய் பெண்களே இருந்தனர். ஆட்சி அதிகாரமும், நாட்டின் பாதுகாப்பும் பெண்கள் கையிலே இருந்தது. “தாடகை’’ போன்றவர்கள் அதற்கான சான்றுகள்.
ஆனால், ஆரியர் புகுந்து, பரவி, ஆதிக்கம் பெற்றபின் ஆட்சியாளர்களின் அறிவை மழுங்கச் செய்து, யாகம், வேள்விகளில் அவர்களை ஆர்வங்கொள்ளச் செய்து, அதன்வழி தங்கள் சொற்படி கேட்கும் நிலையை உருவாக்கி அதன்வழி தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தி நடைமுறைப்படுத்தினர்.

அறிவின்பாற்பட்ட தமிழர் வாழ்வு, சாஸ்திர, சம்பிரதாய வாழ்வாகவும், ஆரிய பார்ப்பன மேலாண்மையின்கீழ் அடிமையுறும் வாழ்வாகவும் ஆனது.

பெண்ணடிமைத்தனம், சாதியப் பிரிவுகள், கோயில் கருவறைப் புனிதம், வேதநூல் புனிதம், கல்வி ஒரு சாரார் உரிமை என்பன போன்ற ஆரியப் பண்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

பெண்ணடிமை முறை என்பது இழிவையும் சேர்த்து செயற்படுத்தப்பட்டது.

ஆண்களிலாவது உயர்ந்தவர் தாழ்ந்தவர் உண்டு. ஆனால், ஆரியப் பண்பாட்டின்படி  ஒட்டுமொத்த பெண்ணினமும் இழிவானது என்கிறது ஆரிய பார்ப்பனர் சாஸ்திரங்கள்.

1. பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் (Born out of the womb of sin)
(மனு -_ அத்யாயம்  9: சுலோகம் 32)

2. உள்ளமும், தோழமையும் இயற்கை-யாகவே இல்லாதவர்கள். (மனு  9:15)

3. பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (அத் 11, சுலோகம் 65)

4. ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். (மனு 9:52)

5. பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது. (அத் 5, சுலோ 148)

6. கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்திய ஸ்திரீலோலனாய் இருந்தாலும், நற்குணம் இல்லாதாவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானாவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது. (அத் 5, சுலோ 154)

அதுமட்டுமல்ல, “ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு வருவது, அவள் முற்பிறவியில் நடத்தைக் கெட்ட வாழ்க்கையை மேற்கொண்டிருந்தபோது, அவள் வீட்டிற்கு விளையாடச் சென்ற குழந்தைகளை விரட்டியதற்கு உரிய தண்டனை’’ என்கிறது இந்துமத சாஸ்திரம்.

மேலும், இதற்கு பரிகாரமும் சாஸ்திரம் சொல்கிறது. நூறு கிணறுகளிலிருந்து திரட்டிய நீரை ஒரு மண் பாத்திரத்தில் சேர்த்து, அதில் ஒரு முழுப் பாக்கையும் ஒரு தோலா (எடை) தங்கத்தையும் போட்டு பிராமணனுக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தின்ன பழங்களைக் கொடுக்க வேண்டும் என்கிறது.

“இந்துமதம் எவ்வளவு அர்த்தமுள்ளது பார்த்தீர்களா? மாதவிலக்கு என்பது ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்பதன் அடையாளம். ஒவ்வொரு மாதமும் கருப்பையில் தயாராயிருக்கும் சினை அணுவுடன் ஆணின் விந்து அணு சேரவில்லையென்றால், சினையணு சிதைந்து இரத்தமாக வெளிவரும். இது பெண்ணின் உடலில் நிகழும் ஒரு சுழற்சி. இது இல்லையென்றால் குழந்தையே பிறக்காது. உலகில் நீங்களும் பிறந்திருக்க முடியாது; நானும் பிறந்திருக்க முடியாது.

இவ்வளவு முதன்மைச் சிறப்பிற்குரிய மாத விலக்கை ஒரு பெண்ணின் பாவத்திற்குத் தண்டனை என்று பிதற்றும் அடிமுட்டாள்-களின் மூடநம்பிக்கையில் விளைந்ததே பெண்கள் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு.

மாத விலக்கு இரத்தத்தை அசுத்தம் என்றும், தீட்டு என்றும் கருதும் அறியாமையும் இதற்குக் காரணம். அறிவியல் ரீதியாக தீட்டும் இல்லை; அசுத்தமும் இல்லை.’’

மகாராட்டிர சனிப் பகவானும் மகளிரும்:

மகாராட்டிராவில் அகமது நகரில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்றக் கட்டுப்பாடு உள்ளது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புனே நகரில் உள்ள பெண்கள் ஜனவரி 26இல் பேருந்துகளில் சென்றனர். ஆனால், 40 கி.மீ. தூரத்திற்கு முன்பே அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை எதிர்த்து மகளிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“ஆண்கள் செல்லும் கோயிலுக்குள் பெண்கள் சென்றால் எந்தவகையில் புனிதம் கெட்டுவிடும் என்பதை எங்களுக்குக் கூறவேண்டும். இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’’ என்று பெண்கள் கொதித்-தெழுந்தனர்.

மாதவிடாயைக் காரணமாய்க் கூறும் மதவாதிகள் சிவன் முகத்தில் உள்ள பொட்டே (ரித்து (Ritu)) மாதவிடாய் இரத்தம் என்கிறது புராணம். (ஆதாரம்:Hindu encyclopedia – Benja min walker – volumes)
அப்படியிருக்க மாதவிடாய் வருகின்ற காரணத்திற்காக பெண்களை கோயிலுக்குள் விடமாட்டேன் என்பது எப்படிச் சரியாகும்?

திருநள்ளாறு சனிபகவான் மகளிரை மறுக்கவில்லையே!

அகமது நகர் சனிபகவான் அருகில் மகளிர் வரக்கூடாது என்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்குப் பெண்கள் செல்லத் தடையில்லையே! மதவாதிகள் கருத்துப்படி சனிபகவான் கோயிலுக்குப் பெண்கள் போகக் கூடாது என்றால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கும் பெண்கள் செல்லக் கூடாது என்றுதானே தடுக்க வேண்டும்.

ஆனால், அகமது நகரில் மட்டும் தடுக்கப்படுகிறார்கள் என்றால் இது மதவாதிகளின் அடாவடிச் செயல், அநியாயம் அல்லாமல் வேறு என்ன?

அகமது நகர் சனிபகவான் வேறு, திருநள்ளாறு சனிபகவான் வேறா? அப்படியென்றால் சனிபகவான் இரண்டா? ஒன்றா? இது என்ன நாடா? இங்கு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? இங்கு ஆட்சி, சட்டம், உரிமை என்று ஏதும் இல்லையா?

பெண்கள் மட்டுமல்ல மனித உரிமையில், சமநீதியில், சனநாயகத்தில் உறுதியுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய, இவற்றிற்கு எதிராய் செயல்பட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்பது மட்டுமல்ல, உடனடித் தீர்வு காண முயற்சிகளும் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.

அடுத்து, கேரளாவில் அய்யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப் படவில்லை என்று பெண்களின் போராட்டம் நடைபெறுகிறது!

அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.

அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் -_ பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? இதே அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:

சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளிகள் திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்பது வழக்கம். ஒரு பட்டு வியாபாரி மன்னருக்கு பட்டுத் துணிகளை விற்க மதுரையிலிருந்து திருவாங்கூர் சென்றார். உடன் தன் மகள் புஷ்கலையை அழைத்துச் சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, மேற்கொண்டு பயணத்தைத் தொடங்காமல் இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது,

“அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். நான் இந்த சாமியுடன் இன்னும் ஒரு நாள் வழிபட விரும்புகிறேன்’’ என்றாள்.

பட்டு வியாபாரிக்கு வியப்பு. கோயில் குருக்களோடு பேசினார். அதன்பின் அவர் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், காட்டில் ஒரு யானை வந்து வியாபாரியை விரட்டியது.

அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன் எப்படியிருக்கிறது என்று வியாபாரியை கேட்க, “மாப்பிள்ளை போல இருக்கிறாய்!’’ என்றார்.

“நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று வேடன் சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.

அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.
பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம்.
புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இப்படி தொழ வந்த பெண்ணையே துணைவியாக்கிக் கொண்ட கில்லாடி அய்யப்பனா பிரம்மச்சாரி! இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு.

அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார்.

எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

கோயில் கருவறையையே பள்ளியறையாக மாற்றி காமலீலை புரிகின்ற கயவர்களைத் தடுக்காது, தேவதாசி என்ற பெயரில் பெண்ணை கோயிலுக்குள் வைத்து விபச்சாரம் செய்த கயவர்கள், பெண்கள் என்ற காரணத்திற்காக கோயிலுக்குள் விட மறுப்பது குற்றச் செயலாகும்.

பெண்களையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் பெண்களைக் கோயிலுக்குள் விட மறுப்பது சுத்த பத்தாம்பசலித்தனமாகும்! அனைத்துத் துறையிலும் பெண்கள் ஆணுக்கு நிகராக சாதிப்பதோடு, விண்வெளிக்கே பெண்கள் சென்றுவரும் காலத்தில் பெண்களை கோயிலுக்குள் விட மறுப்பது மடமை என்பதோடு மனித எதிர் செயலுமாகும்.

இதை அரசு உடனே தலையிட்டு பெண்களின் மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி வெடிக்கும்!

 


அனைத்து கொயில்களிலும் பெண்ணுரிமைக்கான போராட்டம் தொடரும் போராட்டக்குழு தலைவர் திருப்தி தேசாய் பேட்டி

 

உங்கள் போராட்டம் தீவிரம் அடையக் காரணம் என்ன?

இந்தியாவில் எங்கு பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் எழுந்தாலும் நாங்கள் குரல் கொடுப்போம், முன்னின்று போராடுவோம். இந்த நிலையில் சனிக் கோவிலில் ஒரு பெண் நுழைந்துவிட்டார் என்ப தற்காக பெண்களால் கோவில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி பெண்களை இழிவு படுத்தும் விதமாக கோவில் நிர்வாகம் நடந்து கொண்டது, அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் பெண்களை தீண்டத்தகா தவர்கள் என்று கூறியிருந்தார்கள். அவர்களைப் பெற்ற தாயும் ஒரு பெண் தான் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும், இதனை அடுத்து கோவிலில் அனைத்துப் பெண்களும் நுழையவேண்டும் என்று நாங்கள் போராட முடிவுசெய்தோம்.

நீங்கள் போராட்டம் நடத்த குடியரசு தினத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

அந்த நாளில் தான் இந்திய அரசமைப்புச் சட்டம் டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப் பட்டது, அரசமைப்புச் சட்டத்தில் அனைத்து மக்களும் அது ஆண், பெண் என்ற பாகுபா டின்றி சமமாக பாவிக் கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெண் களுக்கான உரிமை அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது என்பதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக நாங்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம்,

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

கோவில் நிர்வாகம் பெண்களைக் கோவி லுக்குள் நுழைய அனுமதி யளிக்கும் வரையில் நாங்கள் போராட்டம் நடத்துவோம், தினசரி 10 பெண்கள் ஒன்று சேர்ந்து கோவிலில் நுழையும் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம், எங்கள் போராட்டம் இன்றோடு முடிந்து விடாது.  இந்தியாவில் பல கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதியில்லையே எடுத்துக்-காட்டாக கேர ளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் சமீபத்தில் நீதி மன்றம் சென்றுள்ளதே? எங்கள் போராட்டம் சனிக்கோவிலில் மட்டு மல்ல இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பெண்கள் நுழையும் வரை தொடரும், பெண்கள் உள்ளே நுழையக்-கூடாது என்று வேதத்திலோ சாஸ்திரத்திலோ எழுதப்படவில்லை.

பேட்டி கண்டவர்: நமது சிறப்புச் செய்தியாளர் சரவணா இராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *