விளம்பரமில்லா வியக்கத்தகு பெரியார் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி நெல்லிக்குப்பம் மு.சுப்பிரமணியம்

டிசம்பர் 16-31

– கி.வீரமணி

நான் கடலூரில் ஆசிரியர் திராவிட மணியின் மாணவனாக இருந்து கழகப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்று வந்த நிலையில், கடலூருக்குப் பக்கத்தில் இருந்த நெல்லிக்குப்பத்திற்கும் அதனையொட்டிய கிராமங்களான சுரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், சி.என்.பாளையம் என்று அழைக்கப்படும் சென்னப்பநாயக்கன் பாளையம், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை இவைகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வார்கள் இயக்கச் செம்மல்கள்.

நெல்லிக்குப்பத்தில் E.I.D.  பாரி இந்தியா  லிமிடெட் (East India Distilleries -Parry India Limited) வெள்ளைக்கார கம்பெனி. பிறகு இந்தியர் வசம் வந்து விட்டது. அங்கே நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை உண்டு. பாரீஸ் (Parrys) மிட்டாய் ஆம் சாக்லெட்டுதான் பிரபலமான Brand Name என்ற அளவில் பேர் பெற்றது.

அதில் பணியாற்றியவர்தான் நமது சுயமரியாதைச் சுடரொளி நெல்லிக்குப்பம் மு.சுப்ரமணியம் அவர்கள் ஆவார்கள். அவருக்கு மிகப்பெரும் துணையாய் இருந்தவர் தோழர் ஜெனார்த்தனம் _ இவர் மிராசுதாரர். நன்கு வசதி படைத்த கழக ஈடுபாட்டுக்காரர். மாணவ இளைஞர் பருவத்தில் இவரும் மு.சுப்ரமணியம் அவர்களும் நெருக்கமான நண்பர்கள். நான் பெரும்பாலான சனி, ஞாயிறு பிரதி விடுமுறை நாள்களில் அங்கே      சென்று, அவர்கள் வீட்டில் உண்டு, உறங்கி, பிரச்சாரம் செய்து கடலூர் திரும்புவோம். அதற்கு உடன் இருந்தவர் தோழர் சுப்ரமணியம் அவர்கள் ஆவார்கள்!

பாரி அண்கோ மிட்டாய் தயாரிக்கும் பகுதியில் பணியாற்றியவர் தோழர் சுப்ரமணியம். எங்களுக்கெல்லாம் பாரி மிட்டாய் கொண்டு வந்து கொடுப்பார்; தந்தை பெரியாரிடம் அளவற்ற மரியாதையும் கொள்கை ஈர்ப்பும் கொண்டவர். அண்ணா, பேராசிரியர், கலைஞர், நாவலர் முதலிய பலரையும் அழைத்துக் கூட்டங்களை நெல்லிக்குப்பம் பகுதியில் நடத்தியவர் அக்காலத்தில் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்.

இயக்கம் (தி.மு.க.) பிரிந்த நிலையில் தோழர் ஜனார்த்தனம் தி.மு.க. ஆதரவாளரானார்.

தோழர் சுப்ரமணியமோ, கிஞ்சிற்றும் மாறாமல் தந்தை பெரியார் தொண்டராகவே தொடர்ந்து பணியாற்றினார். தி.மு.க. நட்பு வட்டாரத்துடன் பழகுவதைக் குறைத்துக் கொள்ளாதவர்.

கடலூரில் எங்களைத் தயாரித்த ஆ.திராவிடமணி பல மாணவர்களைப் பேச்சாளராக்க முயன்றார். என்னுடன் அவரால் தயாரிக்கப்பட்டவர் பாலவேலாயுதம் என்ற மூத்த மாணவர்; அவர் பெயரை தமிழாக்கி ‘இளவழகன்’ என்று மாற்றினார். அவர் கல்லூரிக்கு வராமல், உயர்நிலைப் பள்ளியோடு முடித்து, அவரது மாமாவின் உதவியால் நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி சர்க்கரை ஆலையில் பணியாற்றத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து அங்கே தி.மு.க. தொழிற்சங்க பிரமுகர் ஆனார்!

அவரும் எம்.சுப்ரமணியம் அவர்களும் (அவர் குடியிருந்தது ரெட்டிநெல்லிக்குப்பம்) நெருக்கமான நண்பர்கள்.

இவர் தி.மு.க.வில் இணையாமல் தந்தை பெரியார் தொண்டராகவே உறுதியுடன் இருந்து அய்யாவை அழைத்துக் கூட்டம் போடுவார். 15 மைல்களுக்கு மேல் உள்ள கடலூருக்கு நெல்லிக்குப்பத்திலிருந்து “மிதிவண்டி’’ சைக்கிளிலிலேயே கடலூர் கூட்டங்களுக்கும் வந்துவிடுவார்.

நம் கழக வெளியீடுகள், மலர்கள் கழக ஏடுகளைச் சேகரித்து, பத்திரப்படுத்துவது இவரது கழகக் கடமைகளில் ஒன்றாகும்.

பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பணி ஓய்வுடன் -_ சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் குடியேறினார். அவரது அரிய புத்தக சேகரிப்புகள் _ மலர்கள் _ ஏடுகளை அவர் பைண்ட் செய்து வைத்து, பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகத்திற்கு அவர் அளித்து மகிழ்வும் மனநிறைவும் அடைந்தார்!
பெரியார் திடலிலேயே இறுதி நாள்கள் பலவற்றை அவர் கழித்து, நூலகத்தில் சேவை புரிவதில் மகிழ்ச்சி பெற்றார். அன்னை மணியம்மையாரின் தலைமைக்குப் பின்னரும் அவர்கள் அம்மா அவர்களிடம் காட்டிய மரியாதையும், அன்பும், என்னிடம் ‘ஆசிரியர்’ என்று அன்பொழுகப் பேசுவதும், என்னை மாணவப் பருவத்திலிருந்து அறிந்தவர். சைக்கிள் பின் சீட்டில் அமரவைத்துப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற அவர் வயதில், கழக அனுபவத்தில் மூத்த முதியவர் என்றாலும் கட்டுப்பாடு கருதி, அவர் என்னை மிகுந்த மரியாதையுடன் விளிக்கும்போது, நான் அடைந்த கூச்சத்திற்கும் சங்கடத்திற்கும் அளவே இல்லை!

நம் இனமான பேராசிரியரின் ‘வகுப்புரிமை’   நூல் புதுப்பதிப்பு கண்டுள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் நெல்லிக்குப்பம் மானமிகு தோழர் சுப்ரமணியம்தான்! அவர்தான் பழைய முதல் பதிப்பு 1 ரூபாய் விலையுடன் (1952இல் வெளியானது) அவர் தந்தார்! அதை அந்நூலிலேயே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

கழகச் செயல்பாடுகள், தந்தை பெரியாரின் பேச்சு, எழுத்து, எனது பேச்சு, எழுத்து என்று பலவற்றை தன் கைப்பட ஏட்டில் பதிவு செய்து வைத்தவர். அரிய தகவல்களைப் பெறுதற்குரிய கருவூலமாகவும் அது உள்ளதோடு, அவரது கழக ஈடுபாட்டைக் காட்டும் அடையாள-மாகவும் அமைந்துள்ளது.
இறுதிவரை அவர் பெரியார் திடலுக்கு வந்து சென்றுகொண்டே இருந்தார். அவரது மகன் பொறியாளர் _ பாரம்பரிய குடும்பங்கள் பேரன், பேத்திகள், நல்ல நிலையில் உள்ளனர். என்றாலும், இயக்க உணர்வுடன் எவரும் இல்லையே அவர்களில்! என்ற ஆதங்கம் நமக்கு உண்டு. நம் குடும்பத்து வாரிசுகளை கொள்கை வாரிசுகளாக ஆக்கவும் நாம் தவறக் கூடாது என்பதே முக்கியம். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *