மழையை வருணஜெபம் மூலம் நிறுத்தலாமாம்!

டிசம்பர் 16-31

மழை நிற்பதற்கும் வருணஜெபம்! குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் தகவல் என்ற செய்தி மூன்று கலத்தில் தினமணி நாளேட்டில் 5ஆம் பக்கத்தில் இன்று (10.12.2015) வெளிவந்துள்ளது.

….. அதிகப்படியான மழையால் மக்களும் பிற உயிர்களும் துன்புறும்போது, மழையை நிறுத்தவும், மழையை காடுகள் _ கடலில் பெய்யும்படி வேண்டியும் ஜபம் செய்ய முடியும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் இதுபோன்று மழையால் பேரிடர் நேரிட்டபோது அதை நிறுத்த வருண பகவானை எண்ணி ஜபம் செய்யப் பணித்தார். அதுபோன்று ஜபம் செய்ய, மழை நின்றது.

எனவே, அகிப்படியான மழை நிற்க வேண்டி தமிழக மக்கள் இப்போதும் ஜபம் செய்யலாம்.
தனிப்பட்ட மனிதர்களும், திருக்கோயில் நிர்வாகம் சார்பிலும், மடங்கள், ஆஸ்ரமங்களிலும் அக்னி வளர்த்து ஹோமமாகவும், இதைச் செய்யலாம்.

சமஸ்கிருதத்தில் இதற்கான மந்திரங்கள் இருந்தாலும், தமிழில் ஜபம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மக்களின் நலன் கருதி, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் வருண ஜெபம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யலாம். பொதுமக்களேகூட தங்களது பகுதியில் உள்ள கோயில்களில் இதை நடத்தி பலன்பெறலாம் என்றார் அவர்!

பார்ப்பனர்கள் தங்களது புரோகித வியாபாரத்தை எந்த சந்தர்ப்பமானாலும் _ கருமாதி வீட்டிலும் விடமாட்டார்கள் என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா?

வருண ஜெபம் மழை நிற்பதற்கும் கூடச் செய்யலாம் என்ற அரிய ஆலோசனை கூறும் ஜோதிட சிகாமணியாரே, இதை கடந்த 1ஆம் தேதியிலேயே செய்யச் சொல்லி இருக்கலாமே! ஏன் கடும் மழை பெய்து, ஏரிகள் எல்லாம் திறந்துவிடும் அளவுக்கு மழை வெள்ளம் வந்து மக்கள் அவதிப்படும்போது செய்து காட்டியிருந்தால் உங்கள் பக்தியின் சக்தி எவ்வளவு என்று மக்கள் கண்டுகொண்டிருப்பார்கள்.

இனி மழை, மெல்ல மெல்ல நிற்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறிய பின்னர் இப்படி ஒரு உபதேசமா?

முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் வருண ஜெபத்திற்கு சிபாரிசு செய்தாராம். உடனே பலித்து விட்டதாம். அதனால் தமிழக அரசும் இந்து அறநிலையக் கோவில்களும் செய்ய வேண்டுமாம்!

என்னே அறிவு தீட்சண்யம் இவாளுக்கு! சங்கரமடம் உள்ள காஞ்சியில்தானே வெள்ளம் கரைபுரண்டு ஓடி பலர் இறந்தனர்.

ஏனாத்தூரில் வெள்ளத்தால் அடித்துச் செல்லும் நபர்களை தொலைக்காட்சியாளர் படமே எடுத்துப் போட்டு மக்களைப் பதற வைத்தனரே. காஞ்சி சங்கரமடத்தவர் _ மடத்தலைவர்கட்கே அவாள் ஆக்ஞை பிறப்பித்திருக்கலாமே!

வருண பகவானுக்கும் சங்கர மடத்திற்கும் இப்போது என்ன தகராறா?

இந்து அறநிலையத்தின் வேலை யாகம் நடத்துவதா? தணிக்கை செய்வதா?

தமிழக அரசு தன்னிச்சையாக இப்படிச் செய்தால் அதைவிட சட்ட விரோதமான போக்கு வேறு உண்டா?

ஜோதிடமே புரட்டு என்பதை உலகெங்கும் உள்ள 100க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கையொப்பமிட்டு அறிக்கையே பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளார்களே!

ஜோதிடம் அறிவியல் அல்ல; அது போலி விஞ்ஞானம்(Not Science but Pseudo Science) என்று உலகம் அறிந்ததை, இந்த ஜோதிட பிழைப்பாளர்கள் இப்படி புரோகித, வியாபாரம் செய்ய செழிப்புத் திட்டத்தை கூறுகிற தினமணி, இனமணியாக ஒலிப்பதில் இதை மதியின்றி வெளியிட்டு, அரசியல்சட்ட 51ஏ பிரிவில் உள்ள குடிமகனின் அடிப்படைக் கடமையைப் புறந்தள்ளி செய்திகளைப் பரப்பலாமா?

கர்நாடக அரசின் முற்போக்கு முதல் அமைச்சர் சித்தராமய்யா, ஜோதிடத்தை ஊடகங்கள் _ சீரியல்களில் பரப்புவதைத் தடுக்க சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடத்திவரும் செய்தி வரும் நிலையிலே, இப்படி இன்னொரு புறத்தில் அறிவியல் மனப்பான்மை பரப்புதலுக்கு எதிராய் வேட்டு வைக்கலாமா?

ஜோதிடந்தனை இகழ் என்றார் சுப்ரமணிய பாரதியார்.

திரு. சி.ராஜகோபாலாச்சாரியர், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பல பார்ப்பனர்களும்கூட ஜோதிடப் புரட்டு ஏற்க இயலாதது என்று கூறியதை, அவர்களைப் புகழும் இவ்வேடுகளும் மனிதர்களும் ஏனோ வசதியாக மறந்து விடுகின்றனர்!

சந்தடி சாக்கில் கந்தப்பொடித் தூவும் கயவாளித்தனம் பார்ப்பணீயத்தின் மாறாத புத்தி என்பதை இது சிறப்பாக உலகுக்கு உணர்த்தும்!

– கி.வீரமணி  ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *