இதுவரை பார்க்காத முகம் மெட்ராஸ்

அக்டோபர் 16-31

இதுவரை பார்க்காத முகம்

மெட்ராஸ்

 

படம் தொடங்கியதுமே அன்பு பேசும் வசனங்-களிலும், வாய்ஸ் ஓவரிலும் இது யாரைப் பற்றிய, யாருக்கான படமெனத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். முக்கியமாக, எந்தக் குறியீடுகளுமின்றி. ஊர்ல யார் கொலையானாலும் போலீஸ் எங்க ஹவுஸிங் போர்டு ஆளுங்களத்தான் புடிச்சுட்டுப் போகும் என்கிறார். அன்பு என்பவன் அரசியல் அதிகாரம் ஒன்றுதான் தன் மக்களின் விடியல் என தீவிரமாக நம்புகிறான். ஆனால் கல்வியறிவு அந்த மக்கள் எல்லோரையும் அதற்குத் தயாராக்கும் என்பதை அறியாத கோபக்காரனாக இருக்கிறான். இதை இன்னும் எளிமையாகப் பதிவு செய்ய தன் மகன் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கட்சிக்காகச் செலவு பண்ணியதாக ஒரு காட்சி வைக்கிறார் இயக்குநர்.

காளி சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். நல்ல வேலை. அதனால் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சராசரி இளைஞன். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் அன்பும் காளியும் பேசும் வசனங்கள் ஒரு திரைப்படமாக தேவையற்ற இடைச்செருகலாகத் தெரியலாம். ஆனால், ஒரு படித்த இளைஞனின் அறிவும் அதே சமயம் மற்றவர்களைப் பற்றிய அலட்சியமும், அன்புவின் வேகமும் கோபமும் மிகச்சரியாகப் பதிவு செய்யப்படுகிறது. இம்மக்களுக்குத் தேவை அன்புவும், காளியும் இணைந்த ஒரு கலவை என்பதை அழுத்தமாகச் சொல்லும் காட்சி அது.

மாரி ஒரு சுயநல அரசியல்வாதி. அவன் அப்பா காலத்தில் இருந்தே அதிகாரம் அவர்கள் கைகளில். இவர்கள் எப்படி தன் சொந்த மக்களையே பயன்படுத்தி குளிர்காய்கிறார்கள் என்பதும் வெளிப்படையாகவே சொல்லப்-படுகிறது.

கலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கையாள்வார்கள். பணம் சம்பாதிக்க, பொழுதுபோக்காய், தன்னிறைவுக்காக, வரலாறாக்க, இப்படி.. சிலர், அதைத் தான் நம்பும் புரட்சிக்குத் தூண்டுகோலாய் பயன்படுத்துவார்கள்.  ரஞ்சித் அப்படிப்பட்ட ஒருவர். அட்டைக்கத்தியின் வணிக வெற்றியை மீறி ஒரு நல்ல படம் என்ற பெயர் கிடைத்ததும் அவருக்கு முன்னணி நாயகனின் படம் கிடைக்கிறது. நல்ல கதையும் வைத்திருக்கிறார். இரண்டாம் பாதியை அன்புவுக்காக காளி பழி வாங்கப் புறப்படுவதாய் திரைக்கதை அமைத்து, இறுதியில் அந்தச் சுவற்றில் அன்பு படத்தை வரைவது போல் மாற்றியிருந்தால் அன்பு பாத்திரத்தில் நடிக்க எந்த நடிகராய் இருந்தாலும் சம்மதித்து இருப்பார்கள். இன்னொரு நாயகன் சேரும்போது 20 கோடியில்கூட படமெடுக்கலாம். ஆனால் ரஞ்சித் தன் நோக்கத்தில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

ஜே.பி.சாணக்யாவை உடன்வைத்துக் கொள்கிறார். பாடல்களை அந்த மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்களை எழுத வைக்கிறார். சுவரை அரசியல் அதிகாரமாக்கி, அதன் முடிவில் இரட்டைமலை சீனிவாசனார் சொன்ன கல்வி பற்றிய வாசகத்தை எழுதி கல்வி விழுப்புணர்வோடு கூடிய அரசியல் அதிகாரமே நம் விடுதலைக்கான தீர்வு என்று, தான் நம்பும் அரசியலைத் தீர்க்கமாக முன் வைக்கிறார். இரண்டு படங்கள் என்பது போதுமான காலம் இல்லைதான். ஆனால் ரஞ்சித் எப்போதும் தடம்மாற மாட்டார் என்பதை அடித்துச் சொல்லும் படம்தான் மெட்ராஸ்.

மேலே சொன்ன விஷயங்கள் தாண்டி குறியீடாய் சில விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். தலித்தியத்தின் நீல நிற வண்ணம் படம் நெடுகிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. காளியின் கால்பந்து அணி நிறம், இறுதியில் சுவரில் ஊற்றப்படும் பெயிண்ட்டின் நிறம், காளியின் வீட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரின் நூல்கள், இன்னும் பல. இவையெல்லாம் இல்லாமலும் இது பேசும் விஷயம் நன்றாகப் புரிகிறது.

நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு மனிதனாகக் கூட வாழ விடாத ஒரு சமூகம் மெள்ள எழுச்சி பெற்று எல்லாத் துறைகளிலும் கால்பதிக்கும் போது ஆண்டைகளுக்குப் பற்றிக் கொண்டு தான் வரும். மெட்ராஸை ஒரு திரைப்படமாக மட்டுமே அணுகி வேகம் குறைவு.. செகண்ட் ஹாஃப் போர் என்ற ரீதியில் எழுதுவது ரஞ்சித்திற்கு நாம் செய்யும் துரோகம்.  ஜானி, என் உயிர்த்தோழனிலே இருக்கிறார். மெட்ராஸ் பற்றிப் பேசும்போது புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் பற்றியெல்லாம் பேசினார்கள். எனக்கு என் உயிர்த்தோழன் மட்டுமே இணையான படமாகத் தோன்றியது.

– கார்க்கி

விரிவாக படிக்க……

——–

மாறுபட்ட முயற்சி!

 

ஜானியாக வாழ்ந்திருக்கும் ஹரியின் உடல் மொழியும், திறனும் வியக்க வைக்கிறது, அநேகமாக எல்லாப் பாத்திரங்களையும் அவர் வென்றுவிட்டார் _ ஒரு நடிகனாக என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல் பாதியில் சென்னையின் நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கை முறையை அற்புதமாகப் படம் பிடித்திருக்கும் பா. ரஞ்சித் பிற்பாதியில் அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். ஜி.முரளியின் ஒளிப்பதிவு இன்னும் எட்ட முடியாத உயரங்களுக்குப் போகும் வாய்ப்பிருக்கிறது. இரவு நேரச் சென்னையின் தெருக்கள், அதிகாலை மனிதர்களின் உடல், இயல்பாக வீட்டுக்குள் நிகழ்கிற உரையாடல்களை அவர் படம் பிடித்திருக்கும் கோணம் என்று வியக்க வைக்கிறார்.

குறைகளைத் தாண்டி, இந்தச் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை, அவர்களின் உடலைப் படமாக்குவதில் சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி அடைய வைத்திருக்கும் பா. ரஞ்சித் பாராட்டுக்குரியவர்.  எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை “ஸ்டுடியோ கிரீன்” தயாரித்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

மெட்ராஸ் _ உண்மையில் ஒரு மாறுபட்ட முயற்சி. வாழ்த்துகள்.

– அறிவழகன்

விரிவாக படிக்க……

——–

பொறுப்பானவர்களிடம் தானே பொறுப்பை எதிர்பார்க்க முடியும்!

அட்டக்கத்தி பார்த்தபோது இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு வாஞ்சை உண்டானது. தலித் வாழ்வின் சிலபல அம்சங்களையேனும் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சமரசமின்றி பதிவு செய்திருந்ததால் அவர்மீது மிகுந்த நம்பிக்கை உண்டானது.

படத்தில் வரும் அன்பு, காளி குழுவினரின் நட்பு மிகவும் இயல்பாய் நெருக்கத்தைத் தந்தது. அதுவும் அன்புவின் மனைவி மேரி… அடடா… என்ன இயல்பான தோற்றம்… அன்னியோன்னியம்… அவர் காளியை அண்ணே என அழைக்கும்போதெல்லாம் நமக்கு நமது நண்பர்களின் துணையர்தான் நினைவுக்கு வந்தனர். காளியின் அப்பாவும் அம்மாவும் துட்டுக் கேட்கும் ஆயாவும் அற்புதமான யதார்த்த மனிதர்கள். பாத்திரப் படைப்புகளில் இயக்குநரின் எளிமை தெரிகிறது. படத்தில் இரண்டு மோசமான அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றன. அந்தக் கூட்டணிக்கு  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர். எவ்வளவு ஆபத்தான பெயர் சூட்டல் இது. மதச்சார்பற்ற தன்மைக்கு வேட்டுவைக்கும் ஒரு வலதுசாரி அரசியல் மேலோங்கியுள்ள நிலையில், அந்த வார்த்தையே கேலிக்-குரியதாகவும் கிண்டலானதாகவும் ஊடகங்-களின் துணையோடு கட்டமைக்கப்பட்டுவரும் நிலையில், அதை இன்றைய இளம்-தலைமுறையினர் நம்பத் தொடங்கியிருக்கும் நிலையில் மோசமானவர்களாகச் சித்தரிக்கப்-படும் அரசியல்வாதிகளை மதச்சார்பற்ற.. முற்போக்கு என்ற வார்த்தைகளால் அடையாளப்-படுத்துவது என்பது யாருக்குத் துணைபோகிற அரசியல்..?

எல்லா அரசியல்வாதிகளுமே மோசம்.. அரசியலே மோசம்.. என அரசியல் ஒவ்வாமை வியாதி இளம் தலைமுறையினரைப் பீடித்திருக்கும் நிலையில், மோசமான அரசியல்வாதிகளை (அவர்களின் அரசியல் கொள்கைகள் குறித்து எந்தக் குறிப்பும் படத்தில் இல்லை. உணமையில் அம்பலப்படுத்தப்பட வேண்டியது அதுதான்) வலுவாக சித்தரிக்கும் இயக்குநர், அதற்கு மாற்றான அரசியலையும் அதே வலுவுடன் முன்மொழிய வேண்டாமா..? கடைசிக் காட்சியில் போகிறபோக்கில் சொல்லும்போது அது பார்வையாளனுக்கு எந்தத் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்..?

ரஞ்சித் போன்ற பொறுப்பான கலைஞர்-களுக்கு அந்தப் பொறுப்பும் இருக்கிறதே…

– கருப்பு கருணா

விரிவாக படிக்க……

——–

பெரியாரை உள்வாங்க வேண்டும்!

சென்னையைப் பற்றிய திரைப்படம் என்றால் பொதுவாக மெரினா கடற்கரை, சத்யம் திரையரங்கம், அண்ணா சாலை, நட்சத்திர விடுதிகள், பெசன்ட் நகர் வீதிகள் என்றுதான் நமக்குத் தமிழ் சினிமாக்கள் அறிமுகப்-படுத்தியுள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த சினிமாக்களைப் பார்த்து-விட்டு சென்னையை இப்படிப்பட்ட பிம்பத்துடனேயே உணருவார்கள். அப்படியே வடசென்னையைப் பற்றி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், அவை வடசென்னையை ரவுடிகளின் வாழ்விடம் போலவும், அங்கு சாதாரண மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும் என்ற நிலைமை நிலவுவது போல சித்தரிக்கப்-பட்டிருக்கும். ஆனால் மெட்ராஸ் திரைப்படம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள்ளான அரசியலை, மன உணர்வுகளை மிக அழகாக, நேர்த்தியாக, இயல்பு மாறாமல் கொடுத்ததற்காக இயக்குநர் ரஞ்சித் பாராட்டுக்குரியவர். ஆனால் படத்தில் நமக்கு ஒரு சிறு நெருடல் உண்டு. அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் அரசியல் ரீதியாக சுரண்டப்-படுவதிலிருந்து மீண்டு விடுகின்றனர். அதன்பின்பு, இறுதிக்காட்சியில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் படிப்பகத்தில் மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் கதாநாயகன், கல்வியோடு சேர்ந்து பகுத்தறி-வோடு கூடிய சமூக, அரசியல் அறிவையும் பெற வேண்டும் என்று போதிக்கிறார். அப்போது அந்தப் படிப்பகத்தில், அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன் படங்கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரியார் தவிர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடி, தான் வாழும் காலத்திலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் பெரியார். பகுத்தறிவு என்ற வார்த்தையையே வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்தான். அதுவும் நமக்கு உள்ள வருத்தம், வடசென்னை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக இருந்த பகுதி. அப்படியிருக்கும்-போது வடசென்னையைப் பற்றிய படத்தில் பெரியார் தவிர்க்கப்பட்டிருப்பது தற்செயலான-தாகத் தெரியவில்லை. இந்த நிலைப்பாடு, அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகவும், பெரியாரை பிற்படுத்தப்-பட்டவர்களின் தலைவராகவும் பார்க்கின்ற பார்வையின் வெளிப்பாடு. இந்த நிலைப்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வலுசேர்க்காது.

இப்போதும் படத்தினுடைய கருத்தில் முரண்பாடு இல்லை. ஆனால், இயக்குநர் ரஞ்சித் பெரியாரை உள்வாங்க வேண்டும்; இந்த விமர்சனத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகோள் வைக்கிறோம்.

– குட்டிமணி, சூலூர்

——–

 

திறமையான எளிய மக்களின் சென்னை!

கட்டிட இடுக்குகளில் நுழையத் தொடங்கும் படத்தில ஆரவாரமின்றி கதாநாயகனைக் கால்பந்தாட்டத்துடன் இணைத்து நகர்கிறது. கதாநாயகனிலிருந்து தொடங்கி அதில் நடித்துள்ள அனைத்துக் கதாபாத்திரங்களும் நடிக்கவில்லை, மாறாக, அப்பகுதியினராகவே பிரதிபலித்திருக்கிறார்கள். இப்படத்தில் காட்டியிருக்கும் மக்களின் விளையாட்டான கால்பந்து, கபாடி, கேரம் விளையாட்டுகளில் அவர்களின் ஈடுபாடு. (கேரம் போட்டியில் உலக சாம்பியன் அவர்களில் ஒருவராகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.) பாடல்களின்போது சிறுவர்கள் ஆடும் (ஹிப் பாப்) நடனம் மேற்கத்திய நடனக் கலைஞர்களுக்கு ஏற்ற போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள்… தமிழர்கள் என்று பேசுபவர்கள் ஜாதி மாறித் திருமணங்களைச் செய்வதில்லை என்று ஆரம்பித்து சுயநலத்திற்காக மக்களைப் பிரித்து தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை சுவரை மய்யக் கருத்தாக வைத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். – சோசு எங்கள் வாழ்வியலும் ‘அழகியல்’ தான்!

இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற ‘இழி நிலை’ மிக மோசமானது,

தலித்தாக இருப்பின் ஒரு ‘மாநில முதல்வரானாலும்’ அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மைப்படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்தைக் குறித்து ‘ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் ‘பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அதுதான் ஒரே பிரச்சினை’ என்பதுமாகவும், இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பலநூறு தலித் மாணவர்களை அவமானத்தில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்-பதாகவும், ‘சேரில உள்ளவன் மாதிரிப் பேசாத’ என்ற சொல்லாடல் போலவும், அனைவருக்கும் வருவது போல் இளம் பருவத்தில் ஒரு தலித்துக்கு இயல்பாக காதல் வந்தால் அதனை ‘நாடகக் காதல்’ என்று இழிவு செய்வது போலவும், தலித் மக்களின் உடை, மொழி, இருப்பிடம், நிறம், உணவு முறை, காதல் என்று பலவற்றையும் (அனைத்தையும்) இந்து சமூகம் தீட்டாகக் கருதி அவமானம் செய்கிறது.

அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என்று சமூகத்தில் தலித்துகள் எதிர்கொள்ளும் ‘நவீன தீண்டாமை’ எழுத்து வடிவத்திற்கும் சொல் வடிவத்திற்கும் அப்பாற்பட்டது. இவ்வாறான சுழலில் இந்த ‘இந்து ஜாதி’ச் சமூகத்திலிருந்து வந்த சினிமாக்காரர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!

அவர்கள் தங்கள் ஜாதி வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் மற்றொரு தளமாக ‘சினிமா’வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் ‘ஓட்டுக்காக’ ஜாதி வெறியைத் தூண்டிவிடுவது-போல வியாபாரத்திற்காக ஜாதி வன்மத்தைத் தூண்டிவிடும் சினிமாக்காரர்கள் பலர் தமிழகத்திலே உள்ளனர்.

இவ்வாறான சூழலில் ‘இயக்குநர்’ ரஞ்சித் எங்களுக்கு ஒரு விடி வெள்ளியாகத் தெரிகின்றார். அவரின் காட்சி அமைப்புகள் ‘காயம் பட்ட எங்கள் நெஞ்சங்களுக்கு மருந்து தடவுவதாக உள்ளன. ‘அட்டக்கத்தி’ திரைப்-படத்தைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறினர். அந்தக் கண்ணீர் அந்தப் படத்தில் வரும் நாயகனுக்காக அல்லது கதைக்காக அல்ல’ அந்தக் கண்ணீர் வெகுநாள் தமிழ் சினிமாவில் இழிவாகக் காட்டப்பட்டு வந்த தங்களை முதன் முறையாக ஒரு ஹீரோவாகப் பார்த்ததால் வந்தது.. அது எங்கள் வாழ்வியலும் அழகியல்தான் என்ற ‘ஆற்றாமையில்’ வந்தது.

ஆகவே, குடும்பத்தோடு நடனமாடுவதும், ‘மெட்ராசின்’ மொழியில் ஹீரோயின் பேசுவதும், ஹீரோ நன்கு படித்து வேலைக்கு’ச் சென்றவனாக இருப்பதும், காதலிக்கும் செய்தி தெரிந்ததும் பெற்றோர்கள் ‘எங்கள் கவுரவத்தைக் கெடுத்துடாத’ என்று பேசாமல் இருப்பதும், ஊர் கூடி ஒரு சாவுக்கு அழுவதும், எங்கள் இளைஞர்களின் ‘கானா ‘ பாடல்களும், நாடி நரம்புகளை அசைத்துப் பார்க்கும் பறை இசையும், மாட்டுக் கறியும், எங்கள் வாழ்வியலும் அழகியல்தான்!

– ஜானகிராமன்

விரிவாக படிக்க……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *