சாமி குத்தம்…!

ஜூலை 16-31

பகுத்தறிவுப் பகலவன் தோன்றிய இந்த மண்ணில் இன்றும், இப்படியும் நடக்கிறதா என்று நெஞ்சம் பதைத்தது. ஒருவேளை, முத்துலட்சுமி ரெட்டியின் காலத்திற்கு முந்தி நடந்த சம்பவமாக இருக்குமோ? மனம் குழம்பியது. 6.6.2012 குமுதம் இதழில் தப்புத்தாளம் என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் ஜெயலட்சுமி என்ற மாரியம்மாவின் கதையைப் படித்தபோது…! பிழிவாக அதை இங்கே பார்ப்போம்:

ராஜம்மாவுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இனி குழந்தையே பிறக்காது என்று மருத்துவர்களும் கைவிட்ட நிலை. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் அவர்கள் ஏறி இறங்காத கோயில்களே இல்லை. கடைசியில் கல்லலுக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் வேண்டுதல் பலித்திருக்கிறது. ஆணோ பெண்ணோ அதை உனக்கே காணிக்கையா கொடுத்திடுறோம் என்றுதான் கணவன் மனைவியின் வேண்டுதல். (காணிக்கையாய்த் தருவதற்கு ஏன் பத்துமாதம் சுமந்து வேதனைப்பட வேண்டும்?) ஜெயலட்சுமி பிறந்தாள். பள்ளி சென்று கொண்டிருந்த அவள் பருவம் அடைந்தபோது வயது பன்னிரண்டு.

பெண் பிள்ளை ஆயிற்றே. கோயிலில் கொண்டுபோய்விட மனமில்லை. பொட்டுக் கட்டிவிட்டால் கடவுளுக்கும், கோயிலுக்கும் பணிவிடை செய்து அங்கேயே தங்கவேண்டும் என்பது வழக்கம். காலப்போக்கில் ஜமீன்தார்களும், செல்வந்தர்களும், நில பிரபுக்களும் பாலியல் உறவுக்கு உட்படுத்திய வரலாறுகளைக் கேட்டு இருவரும் அதிர்ந்து போனார்கள். எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். குழந்தைக்குப் பதிலாக ஆடும் மாடும் காணிக்கை தந்தார்கள். உறவுக்காரர்களோ சாமிக்கு நேர்ந்துவிட்ட பெண்ணை வீட்டுல வச்சுக்கிட்டிருந்தா சாமி குத்தமாயிரும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். கட்டிக் கிடந்த ஆடு மாடும் அடுத்தடுத்த மாதங்களில்  இறந்துபோக தானாஆடுமாடு சாகுதுன்னா என்ன அர்த்தம்? சாமி குத்தந்தேன் என்று பேசாத வாய் இல்லை.

ராஜம்மாவுக்குப் பயம்தான் என்றாலும் மகளைக் கோயிலுக்குத் துரத்த மனம் இடந்தரவில்லை. அதன் பிறகு ஆறேழு மாதத்தில் கணவனின் தந்தை கால்தவறி கிணற்றில் விழுந்து இறக்க, வேண்டாம் ராசம்மா, சாமி கொழந்தைய சாமி கிட்டேயே கொடுத்துடு. அதோட கோபத்துக்கு ஆளாகாதே என்று நச்சரித்தன உறவுகள்! இதற்கிடையே விழுப்புரம் அருகே குப்பம் என்ற ஊரில் ஒரு பெண்ணைத் தேவதாசி ஆக்கிய செய்தி அறிந்து கணவருடன் அங்கே ஓடினாள் ராசம்மா.

சாமிக்கு நேர்ந்துகிட்டா அந்தக் கொழந்தைய வீட்டுல வச்சுக்கப் படாது; அது சாமிகுத்தம். மீறினா அம்புட்டுப் பேத்தையும் போட்டுத்தள்ளிரும் என்று அவர்கள் சொல்ல அரண்டு போனார்கள் இருவரும். என்ன நடந்தாலும் சரி. பெண்ணை கோயிலுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அடுத்த ஆண்டில், ராசம்மாவின் கணவன் லாரியில் அடிபட்டு செத்துப் போக ஊரே கொதித்தெழுந்தது. சாமி சும்மாவிடுமா? அடுத்து சொந்தபந்தத்துல காவு வாங்கும். இந்த ஊரையே பலி வாங்கினாலும் வாங்கும். நோய் வந்து ஆடுமாடுக சாகும். வெவசாயம் வௌங்காமப் போகும். பேசாம ஜெயலட்சுமிய சாமிக்கே கொடுத்துரு என்று ஊரே திரண்டு வந்து நிர்பந்தப்படுத்தியது.

மகளை அழைத்துக்கொண்டு கண்காணாத இடத்துக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தாள்; வயசுக்கு வந்த பெண்ணோடு இந்தக் காலத்தில் எங்கே போவது? மகளைத் தேவதாசியாக்க உடன்பட்டாள். ஜெயலட்சுமி மாரியம்மாளாகும் சடங்கு நடந்தேறியது. கோயில் சொத்தானாள்! மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் போக, அவரது உத்தரவின் பேரில் மாரியம்மா இன்று காப்பகத்தில்! பொட்டுக் கட்டியாச்சு. இனி சாமிபாடு. அரசாங்கம் பாடு. ஊருக்கு வந்த ஆபத்து நீங்கிருச்சு என்கிறது ஊர்! காரைக்குடி வட்டாரத்தில் நடந்த கதையாம். கவனிக்கவும்!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை இது என்றால் கொளுத்திவிடலாம். கொடுமைப்படுத்தும் கோரத்தை என்ன செய்யப் போகிறோம்?

அம்மன் கோயில் வேண்டுதலால்தான் குழந்தைபாக்கியம் கிடைத்ததா? ஏற்கனவே பூஜிக்கப்பட்ட தெய்வங்களுக்கு இதில் பங்கில்லையா? கேட்ட வரத்தை உடனே தரும் வல்லமை அந்த பொம்மை அம்மனுக்கு இருக்குமானால் பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோய் வாய்ப்பட்டோர், வேலை இல்லாதோர், தொழில் முனைவோர், தேர்வு எழுதிய பள்ளிப் பிள்ளைகள், மழை வேண்டி வரும் உழவர்கள், கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருடர்கள் அங்கே வரிசை கட்டி நிற்க மாட்டார்களா? சுனாமியும், தானே புயலும் பலரின் உயிர்பறித்ததும், நாட்டைச் சீரழித்ததும் நேர்த்திக் கடனைச் செலுத்தத் தவறியதால் வந்த வினைதானா?

கேடேதும் இல்லாத வீடேதும் இருக்கிறதா? கீழ்மேல் ஆதலும், நோதலும், மகிழ்தலும், சாதலும் வாழ்வின் இயல்பே அன்றி வேறென்ன? புரிந்திருந்தால் மனப் பிறழ்வுகளுக்கும் உளைச்சல்களுக்கும் வேலை ஏது?
ஒருவர் இருவர் அல்ல, ஒரு குடும்பமே விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

படிப்பறிவில்லாத பாமரர்கள் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் காலத்தை என்றோ கடந்து வந்துவிட்டதாகச் சொல்கிறார்களே அதெல்லாம் கனவுதானா? கற்பனைதானா?

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக இன்னும் எத்தனை காலம் காத்திருக்கப் போகிறோம்?

கண்களை இறுக மூடிக்கொண்டு பாழ் கிணற்றில் விழும் ப(க்)தர்களே, கருத்துக் குருடர்களே விழித்தெழுந்து தேடுங்கள் நல்லறிவை! விடியலையும், விடுதலையையும் அது தேடித்தரும் உங்களுக்கு!
(வேலை நிறைய இருக்கு எங்களுக்கும்)

 

– சிவகாசி மணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *