துளிக்கதை

பிப்ரவரி 16-28

கண்

ஏங்க சுரேசுக்குக் கண்ணு வலின்னு படுத்துக்கெடக்காங்க என்றாள் மனைவி காளியம்மாள். ஏன் என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே மகனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கண்களை இரு விரல்களால் நீவிப் பார்த்தார் மாரியப்பன்.  என்ன கண்ணு இப்படிச் செவந்து போயிக்கெடக்கு என்றார்.

அவனும் ஒரு வராமாத்தான் கண்ணு வலிக்குங்கிறான்.  நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா கோயிலுக்கு உப்பு வாங்கிக் கொட்டணும்னு நேத்திக்கடன் இருக்குனு சொல்றேன் கேட்க மாட்டீங்கிறீங்க.

நேத்திக்கடன் இருக்கட்டும் முதல்ல ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப்போயிக் காட்டுவோம் என்றார்.  அரசு மருத்துவ மனையில் சுரேசை மருத்துவரிடம் காண்பித்தனர்.  பல மணி நேர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஒன்றும் இல்லை, வலது கண்ணில லேசா சதை வளர்ந்திருக்கு, சின்ன ஆபரேசன்தான், நாலு நாளைக்கு அட்மிஷன் போட்டிருக்கேன், பெட்டுல இருங்க பயப்படாதீங்க சரிசெஞ்சுடுவோம்.  நான் இருக்கிறவரைக்கும் கவலைப்படவே வேண்டாம் என தன்னம்பிக்கையோடு ஆறுதலும் கூறினார் டாக்டர்.

ஆபரேசன் முடிந்து டாக்டர் இரண்டு மூன்று முறை-கூட தினம் வந்து சுரேஷ் எப்படி இருக்க… என்று, முதுகில் தட்டிக்கொடுத்துச் செல்வார்.  தன் மகனை டாக்டர் இவ்வளவு சிரத்தையுடன் கவனித்துக் கொள்வதைப் பார்த்து மாரியப்பன் டாக்டரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தான்.

டிஸ்சார்ஜ் ஆகும் நான்காவது நாள் காளியம்மாள் சுரேசின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஏங்க…வீட்டுக்குப் போகும்போது ஆஸ்பத்திரி வாசல்ல இருக்கிற மாரியாத்தா கோயிலுக்கு மூனு செதறு தேங்கா ஒடச்சு சாமி கும்பிடறதா நேத்திக்கடன் நேந்துக்கிட்டேங்க.  தேங்காயும் மாலையும் மறந்திடாம வாங்கிக்கிட்டு வந்திருங்க…. என்றாள்.

வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருள்களைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள் காளியம்மாள்.  மாத்திரை மருந்துகளை ஒரு வாரத்திற்கு வாங்கிக்கொண்டு கையில் மூன்று தேங்காய் ஒரு மாலையுடன் வந்தார் மாரியப்பன்.

வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லிட்டாங்க சீக்கரமாப் புறப்படு என விரைவுபடுத்தினார்.

கண்ணைக் காப்பாற்றி அன்போடு உபசரித்து உதவிய டாக்டரிடம் நன்றி சொல்லக்கூட நினைவில்லாமல் சுரேசைக் கூட்டிக்கொண்டு மூவரும் மாரியம்மன் கோவிலுக்குமுன் வந்தனர்.

மாலையை மாரியம்மனுக்குப் போட்டுவிட்டு, மூன்று தேங்காய்களை உடைப்பதற்காக தேங்காய்க் கல் முன் நின்று கொண்டிருந்தான் மாரியப்பன்.  அவன் மனைவி கண்மூடித்தனமான பக்தியில் சாமியின் முன்பு வீழ்ந்து வீழ்ந்து கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.  சுரேஷ் மாத்திரை மருந்துக்கூடையை கையில் சுமந்தபடி ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டு நின்றுகொண்டி ருந்தான்.

சிதறு தேங்காய்…. ஒன்று…. இரண்டு… உடைத்து… மூன்றாவது தேங்காயை ஓங்கி உடைக்கும்பொழுது தேங்காய் ஓட்டின் சில் ஒன்று சிதறி அடித்துப் பறந்து வந்து எதிரே நின்று கொண்டிருந்த சுரேசின் இடது கண்ணில் குத்தியது.
அய்யோ… அம்மா…என அலறிக் கீழே வீழ்ந்தான் சுரேஷ்.  வேகமாக ஓடிவந்த அவனது அப்பாவும் அம்மாவும் கதறித்துடித்தபடி டாக்டர் அய்யா….. காப்பாத்துங்க….என கத்தினர். பகுத்தறிவுக்கண் திறந்து.

– அணு கலைமகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *