குரல்

பிப்ரவரி 16-28

அமைதி, வளர்ச்சி என்ற பாதையில் செல்வதையே சீனா விரும்புகிறது.  ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ, எந்த ஒரு நாட்டுக்கும் ராணுவ அச்சுறுத்தலாக இருப்பதையோ விரும்பவில்லை.  செல்வாக்கு செலுத்துவதையோ அல்லது விரிவாக்கத்தைப் பின்பற்றுவதையோ சீனா விரும்பாது.

ஹூ ஜிண்டாவோ, அதிபர், சீனா

நாம் நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உள்ளத்தைத் தாளில் பார்க்கிறோம்.  எழுத்து எங்கோ ஓர் இதயத்தில் தைக்கிறது.  மாற்றங்களை உருவாக்குகிறது.  எழுதுவது மக்களுக்காகத்தான்.  எழுத்து எழுதுவதற்காகவே என்பதில் நான் மாறுபடுகிறேன்.

மேத்தா, கவிஞர்

தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு குறைந்துவிட்டது.  தமிழ்மொழி நன்றாக வளர்ந்துள்ளது.  ஆனால், தமிழ் உணர்வுதான் வளர்ச்சியடையாமல் குழந்தையாகவே உள்ளது.

வள்ளிநாயகம், ஓய்வுபெற்ற நீதிபதி

கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் அமெரிக்கா கவனம் செலுத்தாவிட்டால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம்  தோற்றுப் போகும்.

பராக் ஒபாமா, அதிபர், அமெரிக்கா

பாலினப் பாகுபாடு காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது முடிவதற்கு முன்பே 17 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன.  குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை.  அதற்கான மருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சத்தியபிரதா பால், தேசிய மனித உரிமைக் கமிசன் உறுப்பினர்

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் இந்தியாவிலேயே உள்ளன.  எந்தத் துறையில் பணியாற்றினாலும் அந்தத் துறையில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி தம்மை மேம்படுத்திக்கொள்வதோடு, நாட்டின் ஆக்கப் பணிகளிலும் பங்கு பெறும் உணர்வை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் திட்ட இயக்குநர்

எங்களது அரசை நாடு கடந்த அரசாக உருவாக்கி இருக்கிறோம்.  நாட்டுக்கு வெளியே இருக்கும் அரசாக அல்ல. எங்கள் செயல்பாடுகள் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இலங்கைக்குள் வாழும் ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலும் செயல்படுவதாக இருக்கும்.

இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

விசுவநாதன் ருத்ரகுமாரன், பிரதமர், நாடு கடந்த தமிழீழம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *