உலப்பகுத்தறிவாளர்

பிப்ரவரி 16-28

சல்மான் ருஸ்டி

சாத்தானின் கவிதைகள் படிக்கும்போது முதலில் விளங்காததுபோல் தெரியும்; குழப்பமாகத் தோன்றும்.  மறுமுறை படிக்கும்போது தெளிவாகப் புரியும்.  என்ன கருத்தைச் சொல்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.  கதை ஒன்பது பாகங்களைக் கொண்டது.  கதைப்போக்கு ஒற்றைப்படை எண்களைக் கொண்ட அய்ந்து பாகங்களில் சொல்லப்படுகிறது.  இரட்டைப்படை எண்களைக் கொண்ட 2,6 பாகங்கள் முகமது நபியின் செயல்பாடுகளை விவரிக்கிறது.  தொடக்க நிலையில், மெக்கா என்றழைக்கப்படும் ஜாகிலியா எனும் பாலைவன நகரில் அவரது செய்கைகளையும், 4,8 பாகங்கள் ஆயிஷா எனும் ஏழைப் பெண்ணின் கதையையும் கூறுகிறது.  வலிப்பு நோயால் பீடிக்கப்பட்ட ஆயிஷா தன்னை கபிரியேல் எனும் தேவதூதனின் தூதுவராகக் கருதிக் கொண்டு அரபிக் கடலைக் கடந்து மெக்கா செல்ல முயலும் கதையைச் சுவைபட விவரிக்கிறது.
இந்நூலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தடையும், மதக் கட்டளையும் வந்ததற்குக் காரணம் இதுதான்; குர்ஆன் வசனங்கள் இறைத்தூதரான முகமது நபிக்குத் தெரிவிக்கப்பட்டன, எழுதப் படிக்கத் தெரியாதவரான முகமது அவற்றைக் கேட்டுத் திருப்பிக் கூற அவையே குர்ஆன் ஆகத் தொகுக்கப்பட்டன என்பது இசுலாமிய நம்பிக்கை.  இவற்றில் மூன்று வசனங்கள் (சூரா) மெக்காவில் கடவுள்கள்ஆக வணங்கப்பட்ட மூன்று கடவுளச்சிகள் தொடர்பானவையும் சேர்ந்து உள்ளன.  மறுநாள், இம்மூன்று சூராக்களும் சாத்தானின் வேலையால் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டன என்று முகமது நபி அறிவித்துவிட்டதால் அவை சாத்தானின் வரிகள் எனக் கருதப்படுகின்றன.

பல கடவுள் வணக்கங்களைக் கைக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த அரபிக்களின் மத்தியில் ஒரே கடவுள் எனும் கொள்கையைப் பரப்பி நிறுவிட முகமது நபி மிகவும் பாடுபட்டார் என்பது வரலாறு.  அத்தகைய அரபிக்களின் முக்கிய வணக்க இடமாக மெக்காவில் உள்ள காபா விளங்குகிறது.  அங்கே காதல் கடவுளான உஜ்ஜா (UZZAH)  தலைவிதிக் கடவுள் மனத் (MANAT) தாய்க்கடவுளான இலாத் (ILAT) ஆகிய மூன்றும் மிக முக்கியமாக வணங்கப்பட்டன.  இப்பெண்கடவுள்களை வணங்கிய மக்களின் வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகாத வகையில், அவர்களை அனுசரித்துப்போய், தம் கொள்கையைப் பரப்பிடும் எண்ணத்தில் அவர்களின் கடவுள் நம்பிக்கையைக் கண்டிக்கவில்லை.  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.  ஆனால், மறுநாள் சைத்தானின் விஷம வேலையை இறைத்தூதர் கபிரியேல் சுட்டிக்காட்டிய பின்னர், குர்ஆனின் சூராக்கள் திருத்தி அமைக்கப்பட்டன.

(சூரா 53_19, 20).

இலாத் மனித உருவிலும், உஜ்ஜா மரம் உருவிலும், மனத் வெள்ளை நிறக் கல் உருவிலும் இருந்ததாகக் குறிப்பிடப் படுகிறது.  இவையெல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றன.  அதுவே தலைப்பாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.  நாவலில் வரும் சல்மான் எனும் கதாபாத்திரம் சாத்தானின் கவிதைவரிகளைக் காரணம் காட்டி நபிகளிடமிருந்து விலகிப்போய் விட்டதாகக் கதையை அமைத்துள்ளார்.  என்னுடைய சொற்களுக்கும் இறைத்தூதரின் சொற்களுக்கும் வேறுபாடு கண்டுபிடிக்கக்கூடச் சக்தியற்றவர் என்றால், என்ன அர்த்தம்?  தெய்வீகச் செய்யுளின் தன்மையைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?  இங்கே பாருங்கள்!  இதனால் என் மனம் ஆடிப்போய்விட்டது என்று ஒரு கதாபாத்திரம் (சாத்தான்) கூறுவதுபோல உரையாடலை அமைத்துள்ளார்.

இந்த மனிதன் இசுலாத்தை அவமதித்துவிட்டான்; இவன் சாகடிக்கப்படவேண்டும் என்று இதனால்தான் கொமேனி கூறினாரோ?

சலாவுதின் எனும் பாத்திரம் நடிகராக விரும்பி விநாயகன், அனுமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழ் பெறுகிறது  (என்.டி.ராமராவைப்போல). நாளடைவில் ரசிகர்கள் சலாவுதினையே இந்துக் கடவுளாகக் கருதிக் கும்பிடுகிற நிலையையும் வருணிக்கிறார்.  தேவதூதன் எனும் பொருள்படும் ஃபரிஷ்டா என்று தன் பெயரை மாற்றிக் கொள்கிறார்.  விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் இருக்கும்போது (தன் மத அடிப்படையில்) தனக்கு இந்தத் தண்டனையை அல்லா வழங்கும் அளவுக்குத் தான் செய்த பாவம் என்ன என்று அல்லாவிடம் இறைஞ்சுகிறார்.  அல்லாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை!  (எப்படி வரும்?  இருந்தால்தானே!  கேட்டால்தானே!  பேசினால்தானே!) விரக்தியும் கோபமும் அடைந்த சலாவுதீன் _ ஃபரிஷ்டா _ ஓட்டலுக்குப் போய் பன்றிக்கறி சாப்பிடுகிறார்.  (பன்றிக்கறி இசுலாத்தில் சாப்பிடக்கூடாதது).  இதன்மூலம் கடவுள் இல்லை என்ற முடிவுக்குத் தாம் வந்துவிட்டதை வெளிப்படுத்துகிறார்.

இப்படியாகத் தம்முடைய கடவுள் நம்பிக்கையற்ற கொள்கையை இந்நாவலின் கதாபாத்திரங்களின் மூலம் நகைச்சுவையாக, அதே சமயத்தில் மிகவும் வலிமையாக வெளிப்படுத்திக் கையாள்கிறார்.  மதக் குப்பைகளைக் கிளறி குறிப்பாக இசுலாமிய மதக் குப்பையைக் கிண்டி – அதன் பயங்கரங்களையும் அதிலிருந்து விடுதலை பெறும் வழிகளையும் விவரிக்க முயற்சி செய்துள்ளார், மதச்சார்பற்றவர் என்ற தன்மையில் தன் இலக்கியப் படைப்புகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.  கட்டுரை எழுதுபவர் நேரிடையாகத் தம் கருத்துகளைப் பதிவு செய்ய முடியும்.  பேச்சாளர் தம் எண்ணங்களை நேருக்கு நேராக எடுத்துக் கூறமுடியும்.  ஆனால் கதை சொல்லும் படைப்பாளி, தாம் படைக்கும் கதை நாயகர்களின் வாய்களின் மூலம்தான் தனது கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.  அந்த உத்தியைத்தான் சல்மான் ருஷ்டி கையாண்டு வருகிறார்_மிகவும் வெற்றிகரமாக!  அதுதான் மதவாதிகளை உறுத்துகிறதோ?

உருவ வணக்கம் செய்பவர்களைக் கண்டால் வெட்டுங்கள், கொல்லுங்கள் என உபதேசம் செய்கிறது இசுலாம்.  தங்கள் மதத்தை எதிர்ப்பவர்களை விசாரித்து மரண தண்டனையைக் காட்டுவிலங்காண்டித் தனமான கொடூர வழிகளில் நிறைவேற்றிட ஓர் அமைப்பையே வைத்திருந்தது அந்நாள்களில் கத்தோலிக்க மதமும் அதன் தலைவர் போப்பும்.  தங்கள் கடவுள்களை நம்பாதவர்களை மட்டுமல்ல, தங்கள் வேதங்களை மறுப்பவர்களையும் நாத்திகர் எனக்கூறி அவர்களின் தலையை ஆங்கே அறுப்பதே கடமை என வலியுறுத்துகிறது இந்து மதம். முரண்பாடுகளைக் கொண்டுள்ள இம்மதங்கள், தங்களுக்குள் பகைமை பாராட்டி வெறுத்து எதிர்க்கின்றன. இரண்டு மதங்களை மூன்றாம் மதம் எதிர்க்கிறது.  அந்த மூன்றாம் மதத்தையும் எதிர்ப்பவர்களை – மதக் கட்டளையின் பேரில் கொல்ல முயலும் கொடுமை!

நஜீப் மாபுஸ் (NAGIB MAHFUZ)  எனும் எகிப்திய எழுத்தாளர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1988 ஆம் ஆண்டில் பெற்றவர்.  1981 இல் அவர் எழுதிய கெபலவியின் பிள்ளைகள் எனும் நாவலில் இசுலாமியக் கருத்துகளுக்கு மாறாக எழுதிவிட்டார் என்று அவரைக் கொல்லும்படி எகிப்தின் மன்னர் ஷேக் உமர் அப்துல் ரஹ்மான் பகிரங்கமாகவே பேசினார்.  பசவண்ணா எனும் பசவரேஸ்வராவைப்பற்றி எழுதினார் என்பதற்காக சரித்திர ஆய்வாளர் கல்பர்கி (KALBURGI)  இந்துக்களால் அண்மையில் மிரட்டப்பட்டார்.  கம்யூனிச நாடான சீனாவில் திருமணங்கள், உடல்உறவு பற்றிய ஆய்வு நூலை எழுதிய கிலீ மற்றும் சங்யா ஆகிய இருவரும் இசுலாமியர்களால் மிரட்டப்பட்டு, 4000 பேர் கொண்ட கும்பல் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் அவர்கள் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டது.  3 விழுக்காடு உள்ள சீன முசுலிம்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டதன் விளைவு இது.

ஈரான் நாட்டு மதத் தலைவராக இருந்த காலஞ்சென்ற கொமேனி, ஏறத்தாழ 20 ஆயிரம் (பாட்வா) மதக் கட்டளைகளைப் பிறப்பித்த பெருமைக்குரியவர்.  1947 இல் முதன்முதலாகப் பிறப்பிக்கத் தொடங்கி தன் ஆயுள்காலம் வரை இதே தொழிலாக இருந்துள்ளார்.  அகமது கஸ்ரவி எனும் ஈரானியர் இசுலாமிய முல்லாக்களைப் பற்றிய தம் கருத்தைக் கூறினார்  என்பதற்காக அவரது கழுத்தை அறுத்துக் கொன்றவர் கொமேனி.  மதம் மக்களின் சிந்தனையை அடக்குகிறது.  கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மறுக்கிறது.  இவற்றின் மூலம் எதைச் சாதித்தன மதங்கள்?  மக்களுக்காக மதமா?  மதங்களுக்காக மக்களா?

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *