கருப்பு வண்ணம் புரட்சி எண்ணம்…

மார்ச் 01-15

– ப. கல்யாணசுந்தரம்

ந்த நள்ளிரவு நேரத்திலும் கிருபாவால் உறங்க முடியவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தாள். சுற்றிச்சுற்றி வரும் கடந்தகால எண்ண அலைகளிலிருந்து அவளால் விடுபடமுடியவில்லை.

அருகில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அம்மா கைகளால் தட்டி, தான் உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளிரிலும் கிருபாவுக்கு வியர்த்தது. இடதுகையைக் கன்னத்தில் வைத்து ஒருக்களித்துக் கண்களை மூடினாள். உடல் கசகசத்தது. மனம் அதைவிடக் கசந்தது.

ஏதோ ஒன்றை இழந்தது போலவும், அதை மீட்க என்னசெய்வது என்பது போலவும் கற்பனையும் கனவாயும், சிறிது அச்சமாயும் இருந்தது அவளுக்கு.

மின்விளக்கைப் போட்டுவிட்டு, தண்ணீர் குடிக்க எண்ணினாள். தண்ணீர் குடிக்க ஏனோ முடியாமலும், உறக்கம் வரப் பிடிக்காமலும், எழுந்து ஓசைப்படாமல் வெளியில் வந்து நடைக்கதவைத் திறந்து, தெருவைப் பார்த்தபடி நின்றுகொண்டாள்.

தெரு நிசப்தமாயும், வெறிச்சோடியும் கிடந்தது. அருகில் உள்ள மின்கம்ப விளக்கைச் சுற்றி வட்டமாக, சில்வண்டுப் பூச்சிகள் கும்மியடித்துப் பாடிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியதால் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

கடந்தகால எண்ண வட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு, பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தாள்.

… புதிதாகக் கல்லூரி திறந்து இரண்டு மாதமானாலும் இன்னும் கிருபாவுக்கு, எல்லாமே ஒருவித அச்சமாக இருந்தது. தன் அண்ணனின் நண்பனான சேகரும் அக்கல்லூரியில் சேர்ந்திருந்தான். அவனை ஒரு தேநீர்க்கடையில் கிருபாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான் அண்ணன்.

சேகர் மிகவும் சுறுசுறுப்பானவன். படிப்பில் கெட்டி. தன் வகுப்பிற்கு அடுத்த வகுப்பில் படிப்பவன். உயரமும், பருமனும் இல்லாத கச்சிதமான உடல்வாகு உள்ளவன். அடிக்கடி கண்சிமிட்டிப் பேசும் அவனை யாருக்கும் பிடிக்கும்.

காதலில் நம்பிக்கையில்லாத கிருபாவைத் தன் புன்னகையாலும், அன்பான உபசரிப்பாலும் கட்டிப் போட்டு, அவனை எப்போது பார்ப்போம்? பேசுவோம்? என்று நினைக்க வைத்துவிட்டான் சேகர்.

ஒருநாள்…

கல்லூரி திடீரென்று வேலைநிறுத்தம் செய்தபோது, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தனர். கிருபாவும், சேகரும் ஒரு அய்ஸ்கிரீம் கடையில் எதிரெதிரே அமர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தனர்.

கிருபா! இந்த புளுலைட் கலர் சுடிதார் உனக்கு மிகவும் எடுப்பா இருக்கு. ஆனால், அந்த ஒற்றை வளையலும், கர்சிப்பும் நல்லா இல்லே. அதும் லைட் கலரில் இருந்தா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

அப்படியா…? சிறிது நாணத்துடன் சொன்னாள். உனக்குப் பிடிச்சிருந்தா அந்தக் கலரிலேயே எனக்கு வாங்கித் தர்றியா?

ஓ… தாராளமாக. இப்பவே வா.! நம்ப லேடீஸ் சாய்ஸ்ல உனக்காக இன்னொரு டிரஸ் எல்லாமே, எனக்குப் பிடிச்சதா வாங்கித்தர்றேன்!

இருவரும் போனார்கள். அவனுக்கு விருப்பமானதையே அவளுக்கு வாங்கிக் கொடுத்தான். அன்று முழுதும், அவள் மனதில் சேகர் முழு ஆக்கிரமிப்பில் இருந்தான். அவனுக்குப் பிடித்தமானதாகவே அவள் உடையணிய, சாப்பிட, உண்டு உறங்க எத்தனிக்கும்போது, கிருபாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தனக்காக எல்லாமே வாங்கித் தருகிறானே என்று. இனி அவனின் விருப்பப்படியே  நடக்க உறுதிபூண்டுவிட்டாள். எல்லாம் காதல் மயக்கந்தானே!

மற்றொரு நாள் சேகர், அவள் காதில் கிசுகிசுத்தான். கிருபா…! எனக்குப் பிடித்த உன் உதடுகள், எனக்குப் பிடித்த இந்த விரல்கள், எனக்குப் பிடித்த சங்குக் கழுத்து…

எனக்குப் பிடித்த உன்…

போதும்… போதும்! இனிமே நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்! அவன் வாயைப் பொத்தி _ சிரித்தாள் கிருபா.

எனக்குப் பிடித்ததைத்தான், நீ சாப்பிட்டே… உடை உடுத்தியிருக்கே. நீ, என்னோட மட்டுந்தான் அதிகம் பேசணும், மற்ற யாரிடத்திலும் என்னைக் கேட்டுத்தான் பேசணும் தெரியுதா?

இது என்ன சர்வாதிகாரமாயிருக்கு? என் குடும்பத்தினர் கூடவாவது பேசலாமா?

அதுகூட… ஒரு வரையறை வேணும் கிருபா!  நான் அனுமதிச்சா மட்டும்! கண்டிப்புடனும், அன்புடனும் கன்னத்தில் தட்டிச் சொன்னான் சேகர்.

எம்மேலே உனக்கு அவ்வளவு காதலா? என்னால நம்பவே முடியல! எனக்கு.. உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குடா!

அவனது ஆசையும், விருப்பமும் காதலாய் அதேசமயம் அடிமை விலங்காய் பூட்டிவிடும் கொடூரம் அவளுக்குப் புரிய சில நாட்களாயிற்று. கனவு கலைந்தது!

வானம் இடியொன்றை இடித்து மழை வருமெனக் கட்டியங்கூறியது. அந்த நினைவிலிருந்து மீண்டாள் கிருபா. சில மின்னலுக்குப் பிறகு தூறல் போட்டது. நடைக்கதவைச் சாத்திவிட்டு வீட்டிற்குள் சென்றாள். எப்போது உறங்கிப் போனோம் என்றே தெரியாத அளவுக்கு உறங்கிப் போனாள்.

தூங்கி எழுந்து பார்த்தபோது, உலகம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. காலை வெயில் சுள்ளென்று வந்தது. ஒன்பதரைக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

அவசரஅவசரமாகச் சமையல்செய்து, அம்மாவிற்குச் சாப்பாடு கொடுத்து விட்டு, குளித்து, உடை மாற்றிக்கொண்டு, டிபன் பாக்ஸை எடுத்து கைப்பையில் போட்டு, செருப்பை மாட்டும்போது…

அந்த பிளாஸ்டிக் செருப்பின் மேல்வார் அறுந்து போவேன் என்று பயமுறுத்தியது! சரி. சமாளித்துக் கொள்ளலாம் என்று காலில் மாட்டிக் கொண்டாள் கிருபா. தற்போது எம்.ஏ. முடித்துவிட்டு, ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் யு.கே.ஜி. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் தாமதமானாலும் திட்டிவிடுவார் அந்தப் பள்ளியின் தாளாளர். எனவே, வேகவேகமாகப் பேருந்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள் கிருபா. அறுந்துபோக இருந்த அந்தச் செருப்பைப் பார்த்ததும் கடந்த காலத்தில் கல்லூரியில் நடந்த அந்த நிகழ்வு ஒரு மின்னல்போல் பின்னோக்கியது.

அன்று கல்லூரிமுன்… மாலை 4 மணி இருக்கும்… மாணவர்கள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அவளுடைய வகுப்புத் தோழன் அமல்ராஜ், அவள் செல்பேசிக்கு ஒரு குறுந்தகவல் (S.M.S) அனுப்பியிருந்தான். அதைப் படித்தபோது அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

அந்தக் குறுந்தகவலில்..

உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு என்னைப் பிடித்தது என்றால் ஆமாம் என்று மட்டும் பதிவு செய்யுங்கள்! என்று வந்தது.

அப்போது, அமல்ராஜ், தன் காதலன் சேகர் இன்னபிற மாணவர்களும் வந்து கொண்டிருந்தனர். அமல்ராஜைப் பார்த்ததும், வேகமாக அவன் முன் சென்றாள் கிருபா. கீழே குனிந்து தன் செருப்பைக் கழற்றி, என்ன தைரியமிருந்தா, எனக்கு அய் லவ் யூன்னு எஸ்.எம்.எஸ். பண்ணியிருப்பே? ஆத்திரத்தில் அவனை அடிக்க எத்தனிக்கும் வேளையில், அவளது மாணவியர்த் தோழிகள் அவளைப் பிடித்து அழைத்துப் போனார்கள்.

கிருபாவைப் பார்த்து சேகர், தன் கட்டை விரலை உயர்த்தி சபாஷ்! அப்படித்தான் சொல்லவேண்டும் என்பதுபோல சைகை காட்டிப் புன்னகைத்தான்.

மாலை வானம்போல சிவந்த கிருபாவின் முகம் சேகரைப் பார்த்ததும் குளிர்ந்தது!
எஸ்.எம்.எஸ். அனுப்பிய அந்த அமல்ராஜின் முகம் அவமானத்தில் கருமேகம்போல் இருண்டது.

பேருந்து குலுங்கி, அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் எனச் சொல்லியது. அன்றைக்கு நிகழ்ந்த அந்த நினைவுகள் மறைந்து போனது. பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்தச் செருப்பு, கல்லூரி நிகழ்வு துண்டித்துப் போனது. பள்ளியை நோக்கி கிருபா விரைந்தபோது மணி 9.30.

மதியம் 1 மணி…

பள்ளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மதியச் சாப்பாடு முடித்து, ஆசிரியர் ஓய்வறையில் ஓய்வெடுக்கப் போனாள் கிருபா. ஒரு குழந்தை, இன்னொரு குழந்தையைக் கன்னத்தில் அடித்துவிட… அடிவாங்கிய குழந்தை, அவளிடம் புகார் செய்துகொண்டிருந்தது. பாழாய்ப் போன அந்தக் கல்லூரி நினைவுகள் வந்தது! அவள்முன் காட்சியாய் விரிந்தது!

கல்லூரியில் ஒரு நாள்…!

தனக்கு வேண்டிய புராஜெக்ட் நோட்டினை அமல்ராஜிடம் வாங்கி எழுதுவதற்காக, கிருபா கேட்க, அதை அமல்ராஜ் அவளிடம் கொடுக்க _ இந்நிகழ்வைத் தன் காதலன் சேகர் பார்த்துவிட்டு ஓடிவந்து, கிருபாவின் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டான்.

மாணவ மாணவியர் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிருபாவின் நிலைகண்டு வருந்தினர். கிருபாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நோட்டு வாங்கியதற்கா நம்மை அடிப்பது? அதைத் தன்னிடம் வாங்காமல் அமல்ராஜிடம் கேட்டதனாலும், அமல்ராஜிடம் பேசக்கூடாது என்று சொல்லியிருந்ததைக் கேட்காமல் பேசியதும், சேகரின் பொறாமையினாலும் தனக்கே உரியவள், அடுத்தவனிடம் எப்படிப் பழகலாம் என்ற ஆணாதிக்க சிந்தனையாலும் அவ்வாறு அடித்தான் என்பதை நினைக்க, நினைக்க கிருபாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

அன்று, மௌனமாக வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

ஒருவாரம் சேகரிடம் பேசவில்லை. எத்தனையோ முறை செல்பேசியில் அழைத்தபோதும் அவனைக் கிருபா தவிர்த்து வந்தாள்.
அன்று… திங்கட்கிழமை!

அவளுக்குப் பிடித்த கருப்பு வண்ணச்  சுடிதாரும், வெள்ளைத் துப்பட்டாவும் அணிந்து கல்லூரிக்கு வந்தாள். அதைக் கண்ணுற்ற சேகர், கிருபாவிடம் மிகவும் சினத்துடன் கேட்டான்.

ஏன்டி எனக்குப் பிடிக்காத கலர்ல உடை அணிந்துவந்தே? என்று எல்லோர் முன்னிலையிலும் அவளை ஓங்கிக் கன்னத்தில் அறைந்து விட்டான். அவளுக்கு அவனிடமிருந்த கொஞ்சநஞ்ச உறவும், அன்பும் காதலும் நீர்த்துப் போனதில் வியப்பேதுமில்லை.

பெண் என்றால் கேவலமா? ஆண்களின் அடிமையா? ஆணின் விருப்பப்படியேதான் நடை, உடை, பாவனை, உணவு, விருப்பு, வெறுப்பு எல்லாமே இருக்கணுமா? ஆண் எஜமான், பெண் அடிமையா? காதல் எனும் போர்வையில், ஆசையென்ற மாயையில் ஆணாதிக்கம் செலுத்தும் அனைத்து வடிவங்களும் பெண்களை அடிமைப்படுத்தும் செயல்தானோ? ஆண் விருப்பத்தை காலங்காலமாய் பூர்த்திசெய்யும் போகப் பொருள்தானா? உணர்வும், உரிமையும் இல்லாத மரக்கட்டையா? எதற்காக இப்படிப்பட்ட ஆண்களைக் காதலித்துத் தொலைக்க வேண்டும்? ஆணும் பெண்ணும் சமமாக நடத்தும், சமவுரிமை அளிக்கும் மனிதர்களை நாம் மதிக்க வேண்டும். நட்பாக அல்லது காதலித்துக் கருத்தொருமித்துப் பழக வேண்டும்.

சிறுவயதில் தந்தைக்கு அடிமை; பின் கணவனுக்கு அடிமை; பிறகு மகனுக்கு அடிமை! இத்தகைய இந்துத்துவ பெண்ணடிமைத்தனப் பிற்போக்குக் கருத்தாக்கம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலுமா? இதைப் புரிய வேண்டுமானால் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்னும் நூலை வாங்கிப் படியுங்கள்! அறிவு தெளியுங்கள்! என்று கருப்புச் சட்டையணிந்த இளைஞரொருவர், கிருபா வந்த பேருந்தினுள் பரப்புரை செய்துகொண்டிருந்தார்.

அந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது அவளுக்கு! ஒருமுறையல்ல… அய்ந்துமுறை அந்நூலைப் படித்து மனம் தெளிந்தாள். ஆணாதிக்கம் கொண்ட சமூகம் பெண்களுக்கு இழைக்கும் அநீதியையும், அடிமைத்தனத்தையும் மீட்டெடுக்க பெண்ணுக்கான சகல உரிமைகளையும் பெற _ பெண்களே போராடிப் பெற வேண்டிய உத்வேகத்தை அவளுக்கு அளித்தது அந்நூல்!

சேகரிடம் சென்று கோபமாகச் சொன்னாள் கிருபா.

இனிமேல்… எங்கிட்ட எந்தப் பழக்கமும் வச்சுக்காதே! நான் உனக்குக் கொத்தடிமையில்லை. பொண்ணுங்கன்னா உங்களுக்கு அவ்வளவுக் கீழ்த்தரமாப் போயிருச்சா? உன்னைப் போல ஆணாதிக்கச் சிந்தனையுள்ள காதல் எனக்குத் தேவையில்லை! ஆவேசமாகப் பேசிவிட்டு அமல்ராஜிடம் வந்தாள்.

அமல்! என்னை மன்னிச்சுருங்க! அன்னைக்கு ஒரு நாள் உங்களை அவமானப்படுத்தியதற்காக மீண்டும் மன்னிக்கணும்! அந்த ப்ராஜெக்ட் நோட்டைக் கொடுங்கள்! நான் எழுதிவிட்டு, நாளை மறுநாள் கொடுத்து விடுகிறேன்.

நோட்டைக் கொடுத்தான் அமல்ராஜ்.

நன்றி! என்று கூறிவிட்டு வாங்கிக் கொண்டாள் கிருபா. அமல்ராஜ் அவளைத் திரும்பிப் பார்த்தான். கருப்பு வண்ண உடையணிந்த அவளுக்குள் இப்படியொரு சிவப்பு எண்ணங்களா என்று வியந்து போனான்.

டொய்ங்…! டொய்ங்….!

பள்ளி மணி பிற்பகல் நேரத்தைக் கிருபாவிற்கு நினைவூட்டியது. கடந்தகாலக் கல்லூரி நினைவுகளிலிருந்து அவள் மீண்டுவர சிறிதுநேரம் ஆனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *