இந்துத்துவாவின் தந்திர வலை ஒடுக்கப்பட்டோரே எச்சரிக்கை!

மார்ச் 01-15

15.2.2014 நாளிட்ட மதுரை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள 7 கலம் செய்தியின் தலைப்பு “RSS Aims for Bigger Role in Electoral என்பதாகும். அதாவது, வரும் (நாடாளுமன்ற) பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் மிகப் பெரிய பங்காற்றும் கடமையைக் கையில் எடுத்துள்ளது என்பதாகும்.

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதிய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.

நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா கொள்கையை அப்பட்டமாகக் கடைப்பிடிப்பதில் சற்றும்கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே -_ பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் _- இணையதளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது!  சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப்தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மையான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத்துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படையாகவே  இறங்கி விட்டது! அந்தந்த மாநிலங்களில் பதவிப் பசி கொண்டவர்களை – புகலிடம் தேடியவர்களையெல்லாம் தங்களது அணிக்கு அழைத்துக் கொள்ள, பணபலம், பத்திரிகைப் பலம், இனபலம் எல்லாவற்றையும் _- சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி, களத்தில் நேரிடையாகவே ஒரு யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டது!
எனவே, இப்போது நரேந்திர மோடி என்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏவி விடும் மன்மத அம்பு என்பதை நாடும் மதச் சார்பற்ற, சமதர்மக் கொள்கையில், பாசிசம் அல்லாத ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலுவோர் மிகக் கவனமாக வரும் பொதுத் தேர்தலை அணுக வேண்டியவர்களாவர். மேற்சொல்லப்பட்ட (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) செய்தியின் முக்கிய சாராம்சத்தை அப்படியே தருகிறோம்.

ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் மோகன்பகத் அவர்கள் தலைமையில் வாரணாசியில், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடிய ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத் (அதிகமான எம்.பி.களைக் கொண்ட மாநிலம்)திற்குப் பொறுப்பான பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பேயி, அமைப்புச் செயலாளர் ராதேஷ் ஜெயின், கட்சித் தேர்தல்  பொறுப்பாளர் (குஜராத்தில் மோடியை வெற்றி பெறச் செய்த) அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் தனது தேர்தல் பணிக்கான திட்டங்களை முன் வைத்துள்ளார்.

1. பிரதமர் வேட்பாளர் எப்படி ஹிந்துத்துவா கொள்கையில் ஊறித் திளைத்தவரான மோடியையே தேர்ந்தெடுத்துள்ளோமோ, அதே போல் அக்கொள்கையில் வேரூன்றியவர்களையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக இந்தஅணி சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.

2. இப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நல்ல பெயரையும், பொது மக்கள் மத்தியில் மதிப்பையும் கொண்ட கேள்வி கேட்கப்பட முடியாத  தகுதியான வேட்பாளராகவும் அமைதல் வேண்டும்.

3. பா.ஜ.க.வுக்குச் சொல்லப்பட்ட கருத்து என்னவென்றால், ஆணைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸால் தரப்பட்டால் அதை அப்படியே கட்சி (பா.ஜ.க.) அமைப்பு பின்பற்றியாக வேண்டும்.

4. அவ்வமைப்புகள் கிராமாந்திரங்களிலும் இறங்கி ஆதரவாளர்களான வாக்காளர்களை ஒன்று திரட்ட ஆவன செய்ய முன்வர வேண்டும்.

5. மற்ற இடங்களில் தெரிகின்ற மோடி அலை எப்படி 2014-இல் வீசுகிறதோ, அதை உ.பி.யில் 80 இடங்கள் உள்ள மாநிலத்தில் வீச வைக்கத் தேவையான அத்தனை உத்திகளையும் கையாளத் தயங்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டோர், தலித் என்ற தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கத் தேவையான அத்துணை முயற்சிகளையும் செய்யத் தவறக் கூடாது. இதற்காக தனித்தனி மாநாடுகளை ஆங்காங்கே நடத்திட வேண்டும்; சமூக சீர்திருத்தவாதியான கான்சிராம் பெயரில் நிகழ்ச்சிகளை உ.பி.யில் கவுதம சவுத்ரி என்பவர் நடத்தியதுபோல் நடத்த வேண்டும். பாபு ஜெகஜீவன்ராம் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு, இந்தத் தேர்தல் பயணத்தை சளைக்காது பா.ஜ.க. நடத்திட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு அதிகம் (அங்கே) இல்லை என்றாலும், பிரதமர் வேட்பாளரான மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்பதை சதா விடாமல் எங்கும் தொடர்ந்து பிரச்சாரத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இவைதான் ஆர்.எஸ்.எஸ்., _- பிஜேபி சேர்ந்து எடுத்துள்ள முடிவுகளும், வியூகங்களும் ஆகும்.

அது மட்டுமா?  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  வெளிப்படையான பிரகடனம்தான் இவை. லால்கிஷன் அத்வானி போன்ற மூத்த தலைவரைப் புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கக்கூடிய ஒன்றாகும்  இந்தப் பிரகடனம்.

அ) சில வருடங்களுக்குமுன் அத்வானி ஒருமுறை தனது குமுறலை வெளிப்படையாகவே வெளியிட்டார். பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற ரீதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல; பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி சுதந்திரமாக இயங்கும் தன்மை ஏற்பட வேண்டும் என்றும் கூறினார்.

அன்று முதலே அவர் பல வகையிலும் புறந்தள்ளப்பட்டு வரும் தலைவரானார்; ஜின்னாவைப் பாராட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தே விலகும்படி ஆக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் எல்.கே. அத்வானி இவ்வாறு குறிப்பிட்டார்:

ஆர்.எஸ்.எஸின் அனுமதியில்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தை இந்நிகழ்ச்சி (அத்வானி கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்ச்சி) வலுப்படுத்தி விட்டது. நாம் கொண்டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால் பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது.

ஓர் நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நற்தோற்றத்தைக் குறைத்துவிடும் என்பதுபற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும்; மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்குவதற்கு ஆர்.எஸ்.எசும், பி.ஜே.பி.யும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார் எல்.கே. அத்வானி (தி இந்து 8.10.2013).

மோடியைக் காட்டினால்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் சமூக நீதியாளர்களின் வாக்குகளைப் பறிக்க ஏதுவாகும் என்கிற வியூகத்தில், அத்வானியை முன்னிலைப்படுத்தினால் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் அடைய முடியாது என்பதும் அதன் உத்தி _- வியூகம் என்பது இதன் மூலம் புரிகிறது அல்லவா? இதுவரை ஒளிந்திருந்து பி.ஜே.பி.யை வழி நடத்திய ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முக்காட்டைக் கலைத்துவிட்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்து மாயமானாக செயல்படத் துடிக்கிறது.
இதனைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புரிந்துகொண்டு, ஹிந்துத்துவா கூட்டத்தின் தந்திர வலையில் சிக்காமல், வீறுகொண்டு எழ வேண்டும்; பி.ஜே.பி.யின் வியூகத்தை முறியடிக்க மதச்சார்பின்மைச் சக்திகள் ஒன்று திரண்டு பிஜேபிக்கு எதிரான சரியான வியூகங்களை  வகுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் இப்போது பா.ஜ.க. அணியை எதிர்ப்பதாகக் காட்டி பிறகு அவருடன் சேரும் அணியையும் சரியாக அடையாளம் கண்டு, ஏமாறாமல் புறந்தள்ளி, உண்மையான மதச் சார்பற்ற அணியை அடையாளம் காண வேண்டும்.

– கி.வீரமணி
ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *