சிறுகதை – சேமிப்பு

டிசம்பர் 16-31- 2013

சிங்காரத்திற்கு அன்று மனசே சரியில்லை, மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார், வாழ்க்கை இப்படி தன்மீது மட்டும்தான் சூறைக் காற்றையும் சுனாமியையும் ஏவி விடுகிறதா? தான் அப்படி யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே, பிறகு தனக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனையாகத் தொடர்கிறது என தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார்.

வானம் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் வேகமாய் வீசத் தொடங்கிய காற்றில், அந்தப் புளிய மரம் அவர் மீது பூவையும் இலைகளையும் தூவிக் கொண்டிருந்தது. மழை பெருசா புடிச்சிரும் போல தனக்குத் தானே பேசிக் கொண்டு சட்டென எழுந்தார். சிதறிக் கிடந்த செம்மண் படிந்த காலணிகளை மாட்டிக் கொண்டு விறுவிறுவென நடக்கத் தொடங்கினார்.

யாரு சிங்காரமா? என்னைய்யா இப்படி நனைஞ்சுட்டுப் போற, கோவில்ல ஒதுங்கிட்டுப் போகலாம்ல பூசாரியின் குரல் ஒலித்தது.

இருக்கட்டும் சாமி, நான் பொறப்படுறேன் என்றார் சிங்காரம்.

அடுத்த மாசம் திருவிழா இருக்கு நெனவு இருக்குல்ல…

இருக்கு சாமி

போன வருசம்தான் அது இதுன்னு காரணத்தக் காட்டி கைய விரிச்சுட்ட, என்னாச்சு? அடுத்த பத்தாம் நாள்ல காலு ஒடிஞ்சு கிடந்த. மனுசன ஏமாத்திடலாம், ஆத்தாள ஏமாத்த முடியுமா? இந்த வருசமாவது பாத்து செய், அம்புட்டுத்தே… சொல்லிப்புட்டேன் பூசாரி எல்லோரிடமும் போடும் பிட்டை சிங்காரத்திடமும் போட்டு வைத்தார்.

சிங்காரத்தின் அந்தக் கூரை வீடு அவ்வளவு நனைந்து போய் இருந்தது.

என்னங்க இப்படி தொப்புத் தொப்புன்னு நனைஞ்சு வந்திருக்கீங்க கணவனின் தலையைத் தன் முந்தானையால் துடைத்தாள் மேகலா.

இருங்க காப்பி கொண்டாறேன் என்று அடுக்களைக்கு விரைந்தாள்.

காக்க காக்க கனகவேல் காக்க… சிங்காரத்தின் கைப்பேசி சிணுங்கியது. தன் லுங்கியைத் தூக்கி டவுசரில் இருந்த செல்பேசியை எடுத்து பொத்தானை அழுத்தினார்.

அய்யா…. இல்லையா…

அடுத்த மாசம் கண்டிப்பா

என் மேல தப்புதான்யா

கண்டிப்பா நாளைக்கு வந்து பாக்குறேன்யா

இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

யாருங்க போன்ல? சூடான காபியை அவன் கையில் சேர்த்த வண்ணம் நெற்றி சுருங்கக் கேட்டாள் மேகலா.

அத விடு… பசங்க ரெண்டு பேரும் ஸ்கூலு விட்டு வந்தாச்சா?

சின்னவன் மட்டும் வந்துட்டான், வந்ததும் பேக்க வீட்ல போட்டுட்டு முருகேசன் வீட்டுக்கு வெளையாடப் போயிட்டான்.

எப்பப் பாரு, வெளையாட்டு வெளையாட்டு வெளையாட்டு, ஊரு பூராம் கடன வாங்கி இதுங்களப் படிக்க வைச்சா, பேட்டைத் தூக்கிட்டு ஊர் மேயப் போயிருதுங்க.

செந்தில் இன்னும் வரலையா?

இல்லங்க….

மேகலா…

என்னங்க?

ஒன்னும் இல்ல.

ஏதோ சொல்ல வந்திங்க, மறைக்காம சொல்லுங்க

ஒன்னும் இல்ல… உன்னோட செயின எம்புட்டுக்கு வச்சிருக்கோம் தயங்கியபடியே கேட்டார் சிங்காரம்.

எட்டாயிரமுங்க

கூடுதலா 5 ரூவா அதுமேல வாங்குவோமா?

என்னங்க திடீர்னு?

புரியாமல் கேட்டாள் மனைவி.

சின்னச்சாமி இப்ப போன் பண்ணாரு, போன மாசம் அவர்கிட்ட கைமாத்தா வாங்குன பணம் இப்பவே வேணும்கிறார், நாளைக்கு அவரு பொண்ணும் மாப்பிள்ளையும் ஊர்ல இருந்து வர்றாங்களாம், செலவு இருக்கு அவசியம் வேணும்னு சொல்லிட்டாரு

நல்ல மனுசனுங்க அவரு, அவசரத்துக்குக் குடுத்தாரு, நாளைக்குக் குடுத்திடலாம்.
பக்குவமாய்ப் பேசினாள் மேகலா.

அடகுக் கடையில உன் பேர்லதானே வச்சிருக்கு

ஆமாங்க, விடிஞ்சதும் போய் வாங்கியாந்திறேன்

மனைவி வாயிலிருந்து வந்த சொல் சிங்காரத்திற்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்திருந்தது.

இதோ செந்தில் வந்துட்டாங்க, இப்பதான் உன்ன அப்பா கேட்டாரு

அம்மாவின் பேச்சுக்குக் காது கொடுக்காதவனாய் அறைக்குள் நுழைந்தான் செந்தில், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறான்.

ஏன்டா லேட்டு

சத்தமாய்க் கேட்டார் சிங்காரம்.

தன் பையிலிருந்த சர்ட்டிபிகேட்டை அப்பாவின்முன் நீட்டினான் செந்தில்.

என்னடா இது? அப்பாவியாய்க் கேட்டாள் அம்மா

இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே, லாங் ஜம்ப்லயும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலயும் நான்தான் ஃபர்ஸ்ட்

மேகலாவின் விரல்கள் அந்த சர்ட்டிபிகேட்டை ஆசையாய்த் தடவிக் கொண்டிருந்தன.

ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, படிப்புல எத்தனாவது ரேங்க்னு உன்னோட புள்ளைகிட்ட கேளு சிடுசிடுத்தார் சிங்காரம்.

விடுங்க… படிப்பான், வெளையாட்டுப் புத்தி அதிகம், போகப் போகச் சரியாகிருவான் என கணவனைச் சாந்தப்படுத்திவிட்டு, இந்தாடா இத சாமிப் படத்துக்கிட்ட வை என்றாள் அம்மா.

ஏன் வைக்கணும்? கோபமாய்க் கேட்டான் செந்தில்.

பஸ்ட்டு வந்திருக்கல்ல, எல்லாம் அந்த ஆத்தாவோட அருளு, பேசாம போய் வையிடா.

முடியாதும்மா, நான் கஷ்டப்பட்டு பிராக்டிஸ் பண்ணி போட்டியில கலந்து ஜெயிச்சுருக்கேன், ஆத்தா என்ன பண்ணுச்சு இதுல.

நியாயமாய்க் கேட்டான் செந்தில்.

டேய்… பாவிப் பயலே, அப்படியெல்லாம் பேசாத, நாக்கு அழுகிடும்.

அழுகுனா அழுகட்டும், நான் சாமிப் படத்துக்கிட்ட வைக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான் செந்தில்.

ஊருக்குள்ள நூலகம் வந்ததில் இருந்து, கண்ட புத்தகத்தப் படிச்சுக் கெட்டுப் போச்சு,  அதான் இப்படிப் பேசுது, இதெல்லாம் அடிபட்டாதான் திருந்தும் கடுப்பாய் சொன்னார் சிங்காரம்.

அதிகாலையில் குருவிகள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டு இருந்தன.

சிங்காரம் முன்னமே எழுந்துவிட்டார். பணத்தைச் சின்னச்சாமிகிட்ட கொடுத்துட்டுத்தான் வேலைக்குப் போகணும், மேஸ்திரி ஏன் லேட்டுன்னு கேட்டா வயிறு சரியில்லைன்னு சொல்லிட வேண்டியதுதான் தனக்குள்ளே திட்டம் வகுத்துக் கொண்டிருந்தார் சிங்காரம்.

பள்ளிச் சீருடையோடு சின்னவன் அப்பாவின்முன் வந்து நின்றான்.

என்னடா?

கையெழுத்து… ரேங்க் காடு… இழுத்தான் சின்னவன். குடு… என மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த சிங்காரம் கொதித்துப் போனார். காரணம், அது

சிவப்புக் கோடுகளால் நனைந்து போயிருந்தது.

சனியங்க.. சனியங்க… என் உசுர எடுக்கவே வந்திருக்குங்க… போய் ஒன்னோட ஆத்தாகிட்டயே கையெழுத்து வாங்கிக்க, அவதானே நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்டுறா

அப்பா அடுத்த தடவ…

தரையைப் பார்த்தபடியே பேசினான் சின்னவன்.

ச்சீ நாயே.. ஒவ்வொரு முறையும் இதையே சொல்லு, குடுத்துத் தொல, பெருங்கோபத்தோடு மை தொட்டு கைநாட்டு வைத்தார் சிங்காரம்.

செந்திலு… நீட்டி முழங்கினாள் மேகலா.

என்னம்மா?

அடகுக் கடை வரை போறேன், சைக்கிள்ல என்ன விட்டுட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போயா அன்பாய்ச் சொன்னாள் அம்மா.

ஏம்மா?

சின்னச்சாமி அண்ணனுக்கு இன்னிக்குப் பணம் குடுக்கணும்டா, அதெல்லாம் ஏன் கேட்டுட்டு, என்னை விடுவியா மாட்டியா

இதோ வரேன்மா என்று அறைக்குள் நுழைந்தான் செந்தில்.

எங்கடா போற

கையில் ஒரு பெரிய செம்போடு வந்தான் செந்தில்.

என்னடா இது? என அம்மா கேட்டுக் கொண்டிருந்தபோதே சிங்காரமும் உள்ளே வந்துவிட்டார்.

நீ அப்பப்ப கோவில் உண்டியலில் போடச் சொன்ன காசெல்லாம் இதுல போட்டு வச்சிருக்கேன்மா. அது இல்லாம சாயங்கலமா வாணி அக்காவோட சேர்ந்து கூடை பின்னுவேன். அவங்களும் அப்பப்போ தரும் காசுகளைச் சேர்த்து வச்சிருக்கேன். இந்தக் காசுகளை வச்சுக்கம்மா எனச் சொல்லிவிட்டு சில்லறைகளை எண்ணத் தொடங்கினான் செந்தில்.

சிங்காரமும் மேகலாவும் தம் மகனை ஏதோ மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

– ஓவியச் செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *