ராகுல் காந்திககு சில கேள்விகள்

உங்களுக்குத் தெரியுமா? நவம்பர் 01-15

எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர்  மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் தணிய பல ஆண்டுகள் ஆகிறது. அதைத் தூண்டி விட ஒரு நிமிடம் போதும். கோபத்தை மறக்கவும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் பல நாட்கள் ஆகின்றன. இப்படிப் பேசியிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

இவரது உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கொலை என்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. கொலைகளை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சில கேள்விகளும் நம்மிடம் உள்ளன. இவரது தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் ஈழத் தமிழர்களில் சிலர் என்பதால் அவர்கள் மீதான கோபம்  இன்னும் ராகுலிடம் தணியவில்லையே, ஏன்? 22 ஆண்டுகள் கடந்தும் கூட அந்தக் கோபம் நீடிப்பது ஏன்? ஒரு சிலர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க சிங்களர் அரசுக்குத் துணைபோவது சரியா? 2009 ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்கு ராகுலின் கட்சி ஆளும் இந்திய அரசு துணைபோனதா? இல்லையா? இதற்குப் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை அல்லவா? 2009க்குப் பின் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது சரியா? அவரது தலைமையை ஏற்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லுவது என்ற முடிவில் இன்னும் மாற்றமில்லையே ஏன்?

அமைதிப் படை என்கிற பெயரில் ஈழத்தில் தமிழர்களை உங்கள் அப்பா ராஜீவின் இந்திய ராணுவம் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் கோபம் கொண்டார்கள் என்பதை அறிவீர்களா? இவ்வளவு நடந்த பின்னும் தமிழ்நாடு உங்கள் மீது கோபம் கொள்ளாமல் இன்னும் கோரிக்கை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறதே, இதனை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உங்கள் தந்தையைக் கொன்றதற்கு உங்கள் குடும்பத்தை விட அதிகம் அழுதவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ராகுல்? 1991 வரை ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி வந்த தமிழ்நாடு, உங்கள் தந்தையைக் கொன்றதையடுத்து, அவர்கள்மீது ஒருவித கண்டிப்புடனே நடந்ததே, நீங்கள் அறிவீர்களா?

பஞ்சாபியர்களின் கோபம் தணிக்க மன்மோகன் சிங்கை 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் உட்கார வைத்தீர்கள். இன்னும் தங்களிடம் நேசம் காட்டும் தமிழர்கள்மீது உங்களது பாசத்தை எப்போது காட்டுவீர்கள் ராகுல்?

– பெரியாரிடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *