தழைக்கும் நாத்திகம் தகரும் ஆன்மிகம்

ஜூன் 16-30

ஆய்வு சொல்லும் அதிரடி தகவல்

பொதுவாக கருத்துக் கணிப்புகளை அப்படியே ஏற்க முடியாது என்றாலும், மக்களின் மனவோட்டங்களைச் சொல்பவையாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தேர்தல் காலங்களில் ஊடகங்களால் எடுக்கப்படுபவை இதில் சேர்க்க முடியாது. காரணம், தாம் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கோ, அல்லது யாரால் பேரம் பேசப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவாகவோதான் பெரும்பாலும் கணிப்புகளை வெளியிடுகிறார்கள்.

அவை கணிப்புகள் அல்ல; திணிப்புகள். ஊசலாட்டத்தில் இருப்பவர்களை ஒரு பக்கமாகச் சாய்க்கும் ஒரு வகைத் தந்திரம். சரி, இது இருக்கட்டும்.

 

நாம் இப்போது சொல்ல வருவது மக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு பற்றியது. அதாவது மக்களின் கடவுள் -மத நம்பிக்கை குறித்த மன ஆய்வு பற்றியது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வின்-_காலப் இண்டர்நேசனல் (Win-Gallup International) ஆகிய இரு நிறுவனங்கள் அண்மையில் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளன. வணிக மேலாண்மை உத்திகளை வகுத்திடத் துணை செய்யும் உலகளாவிய ஆய்வுகளை இந்நிறுவனங்கள் எடுத்துத் தருகின்றன. நீண்ட அனுபவம் பெற்ற இவை மதநம்பிக்கை மற்றும் நாத்திகம் குறித்து தாம் எடுத்த கணக்கெடுப்பு முடிவுகளை அண்மையில் அறிவித்தன.

மத உணர்வு மாந்தர்கள், நாத்திகம் என்பதைக் கடவுள் மறுப்பு, மத மறுப்பாகவே கருதுகிற சூழலில் நாம் மேற்சொன்ன வின்_-காலப் இண்டர்நேசனல் ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ள 57 நாடுகளில், 51,927 பேரிடம் (ஆண்,பெண் இருபாலரிடமும்)  முன்வைக்கப்பட்ட கேள்வி இதுதான்.

மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்பவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், நீங்கள் மத நம்பிக்கை உள்ளவரா?அல்லது மத நம்பிக்கை இல்லாதவரா? அல்லது கடவுள் மறுப்பாளரா? எனக் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு, 59 விழுக்காட்டினர் தமக்கு மத நம்பிக்கை உண்டு என்றும், 23 விழுக்காட்டினர் தமக்கு மத நம்பிக்கை இல்லை என்றும், 13 விழுக்காட்டினர் தாம் கடவுள் மறுப் பாளர் என்றும் கூறியுள்ளனர். 5 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் கூறவில்லை.

இந்தக் கணக்கெடுப்பு களை நேரடியாக 35 நாடுகளிலும், தொலைப்பேசி வாயிலாக 11 நாடுகளிலும், இணையதளம் வாயிலாக 11 நாடுகளிலும் எடுத்திருக் கிறார்கள்.
பொதுவாக மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், இந்தக் கணக்கெடுப்பு அதனை மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களில் ஆண்களைவிட பெண்கள் 1.5 விழுக்காடு குறைவாக உள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் ஆண்களைவிட பெண்கள் 1 விழுக்காடு அதிகமாக உள்ளனர். மதநம்பிக்கை இல்லாதவர்களில் ஆண்களும் பெண்களும் சம அளவில் இருக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

மத நம்பிக்கை யுள்ளவர்களில் அதிகமானவர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினரே. அதிக வருவாய்ப் பிரிவினரைவிட இவர்கள் 17 விழுக்காடு அதிகம்.

இந்தக் கணக்கெடுப்பு எடுத்த ஆண்டு 2012. இதற்கு முன் 2005 ஆம் ஆண்டில் இதே கேள்வியுடன் கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். அதனுடன் 2012 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது உலக அளவில் மத நம்பிக்கை குறைந்து வருவதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

40 நாடுகளில் 2005இல் மத நம்பிக்கையாளர்கள் 77 விழுக்காடு; 2012இல் இது 68 விழுக்காடாகக் குறைந்து விட்டது.

39 நாடுகளில் 2005இல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் 4 விழுக்காட்டினர்; 2012இல் இது 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இந்த வகையில் மத நம்பிக்கை 9 விழுக்காடு குறைந்தும், கடவுள் நம்பிக்கையின்மை 3 விழுக்காடு அதிகரித்தும் உள்ளது தெரிய வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 47 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; 30 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதோர்; 14 விழுக்காட்டினர் மட்டுமே மத நம்பிக்கையாளர்கள்.

வியட்நாமில் 2005இல் 53 விழுக்காட்டினராக இருந்த மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 2012இல் 30 விழுக்காடாகக் குறைந்து உள்ளது.

ஜப்பானில் 2005இல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் விழுக்காடு 23. இது 2012இல் 31 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 2005இல் 4 விழுக் காடாக இருந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2012இல் 3 விழுக்காடாகக் குறைந்தாலும், 2005இல் 87 விழுக்காடாக இருந்த மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை 2012இல் 81 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இதன்மூலம் இந்தியாவில் 6 விழுக்காட்டினர் மத நம்பிக்கையைக் கை விட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் எந்தக் கருத்தும் சொல்லாத 3 விழுக்காட்டினரை கடவுள், மதங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையினரும் ஒரு வகையில் கடவுள், மதங்களுக்கு எதிரானவர்கள்தானே! இந்தியாவில் தொலைப்பேசி வாயிலாக இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.  இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ள, அழுத்தமான மத நம்பிக்கை கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மத நம்பிக்கையற்றோர் கணிசமான அளவில் உள்ளனர். இவ்விரு நாடுகளிலும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டில் மத நம்பிக்கை இல்லாதவர்களின் விழுக்காடு 15 என்கிறது இந்தக் கணக்கெடுப்பு (2 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள்). பாகிஸ்தானில் 8 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும், 2 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் (6 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள்) உள்ளனர்.

உலக மக்கள் தொகை 712 கோடி. இவர்களில் 51,927 பேர்களிடம் மட்டுமே இந்தக் கருத்துக் கேட்பு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையான ஆய்வாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மேலோட்டமாக மக்களின் மன ஓட்டம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இந்த மேலோட்டமான ஆய்விலேயே 59 விழுக்காட்டினர்தான் தமக்கு மத நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ளனர். எஞ்சிய 41 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர் மற்றும் எந்தக் கருத்தும் சொல்லாதோர். ஆக, உலகில் சரி பகுதிக்குக் கொஞ்சம் அதிகமாகத்தான் மத உணர்வாளர்கள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஆனால், எதார்த்தம் என்ன? நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மத மோதல்கள் உலகை அச்சுறுத்துகின்றன. மத அடிப்படைவாதம் மனிதநேயத்தை அழிக்கிறது. மதங்கள் ஊட்டும் போதனைகளால் சக மனிதர்கள் வெறுக்கப்படுகிறார்கள். மத வேறுபாடுகளால் நாடுகளுக்குள் பகை மூண்டு போர்கள் நடக்கின்றன. மனிதனை மனிதனாகப் பார்க்காமல் மதவாதியாகப் பார்க்கும் நிலை நீடிக்கிறது. உலகமே என் மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என ஒவ்வொரு மதமும் நினைக்கிறது. இதனால் மேலும் மேலும் பிரிவினைகளே வளரும். இந்நிலையில்தான் மதமற்ற உலகைப் படைப்போம் என பகுத்தறிவாளர்கள் அழைக்கிறார்கள்.

அறிவுக்கு இடம் தராமல் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மத அடிப்படை அரசுகளும், மதச்சார்பற்ற அரசுகள் என்று சொல்லிக் கொண்டாலும் மதச்சார்பற்ற மனித நேயர்களுக்குப் போதிய பங்களிப்பைத் தராத அரசுகளுமே உலகில் உள்ளன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கும்போது கண்டிப்பாக மதம் எது? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. மதமற்றவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இந்தப் பட்டியலில் இதுவரை இடம் தரப்படவில்லை. தன் கடவுளையும் தன் மதத்தையும் அடுத்தவன் மீது திணிக்கும் மத வெறியே இங்கு மேலோங்கியுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பகுத்தறிவாளர் என்ற பிரிவு இல்லாததால் வேறு வழியின்றி தாம் பிறந்த மதத்தைப் போடவேண்டிய அவசியம் நேருகிறது. இதனால் இந்தியாவில் பகுத்தறிவாளர்களின் உண்மையான எண்ணிக்கை சரியாகத் தெரியாத நிலை.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் பகுத்தறிவு இயக்கங்கள் மக்கள் இயக்கங்களாக உள்ளன. குறிப்பாக, தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பகுத்தறிவை மக்கள் மயமாக்கினார். அதன் தாக்கம் எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உண்டு. இந்தியாவில் பகுத்தறிவாளர்களை உரிய முறையில் கணக்கெடுத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை அறிய முடியும். வாய்ப்பையே அளிக்காமல் குறைந்த எண்ணிக்கையினர் என்று மதவாதிகள் அலறுவது அசல் அயோக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன.   ஒரு சமுதாயத்தைக் கட்டமைப்பதிலும், ஒரு நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறச் செய்வதிலும், சமூகத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதிலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களான பகுத்தறிவாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இதனை யார்தான் மறுக்க முடியும்?
எல்லோரையும் போலவே நாட்டின் குடிமகன் என்ற முறையில் பகுத்தறிவாளர்கள் நாட்டிற்கு வரி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்களுக்குரிய பங்கு எல்லாவிடங்களிலும் கொடுக்கப்படுகின்றனவா?

மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசு எல்லா மதங்களுக்கும் செலவிடுகிறது. பகுத்தறிவாளர்களுக்கு என்ன தருகிறது? ஹஜ் பயணத்திற்கும், ஜெருசலேம் பயணத்திற்கும், மான்சரோவர் -முக்திநாத் பயணத்திற்கும் சலுகைக் கட்டணம் அளிக்கும் அரசுகள் பகுத்தறிவாளர்களின் அறிவியல் பயணத்திற்குச் சலுகை அளிப்பதில்லை. இது, தன் நாட்டு மக்களைப் பேதப்படுத்தும் செயல் அல்லவா?

ஒவ்வொரு நாடும் எவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் பின்பற்றாமல் போனாலும் அவர் தன் நாட்டுக் குடிமகன்/குடிமகள்; அனைவரும் சமமே. எல்லாச் சலுகைகளும் எல்லோர்க்கும் உண்டு. வாழ்விடங்களில், சமூகப் பொதுத்தளங்களில் எந்தவித பேதமும் இல்லை; மதத்தின் பெயரால் எந்தச் சலுகையும் இல்லை என்ற நிலையை உருவாக்கும் காலம் வந்துதான் தீரும்.   மதங்களில் வெறிச் செயல்பாடுகள் அதிகமாக அதிகமாக மக்களின் மனங்கள் மனிதநேயத்தின் பக்கம் திரும்பும்; அது இயற்கை. உலக அளவில் மதமற்றவர்கள் மற்றும் நாத்திகர்களின் என்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது இதைத்தான் உணர்த்துகிறது.

ஆன்மீகம் என்ற சொல் மத நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறது. அதாவது ஆன்மாவோடு தொடர்புடையது. தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்பது ஒவ்வொரு மத நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதிகளின் கருத்து. இதேபோல நாத்திகம் என்ற சொல்லை இங்கே விளங்கிக் கொள்வோம். இந்து மதத்தின் படி, நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பாளன் என்று பொருள் அல்ல; வேத மறுப்பாளன் என்பதே அதற்குப் பொருள். இதுகூட வேத விருப்பாளர்கள் சூட்டிய பெயர்தான். கடவுள் மறுப்பாளர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர் பகுத்தறிவாளர் என்பது. மத நம்பிக்கையாளர்களான வேத(ங்களின்-எல்லா மதங்களின்) விருப்பாளர்களுக்குக் கடவுளை மறுக்கும், மதங்களை ஏற்காத மனிதர்கள்மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், பகுத்தறிவாளர்களோ ஒருபோதும் மனிதர்களை வெறுப்பதில்லை; மனிதர்களிடையே பிரிவினையை விதைத்துவிட்ட மதங்களை வெறுப்பவர்கள்.உலக மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். இப்போது சொல்லுங்கள். ஆன்மீகம் தகர்ந்து நாத்திகம் தழைப்பது நல்லதுதானே!

–    அன்பன்

 


 

கலகலக்கும் கடவுள்

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடுவோர், யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? என்று விடுதலையில் வெளிவந்த செய்தியைப் பார்த்து மதவாதிகள் சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இறை நம்பிக்கையாளர்கள் 6% குறைந்தால் கடவுள் நம்பிக்கையற்றோரில் 6% கூடியிருக்க வேண்டாமா? என்பது அவர்கள் கேள்வி. இந்தக் கணக்கெடுப்பு ஒன்றும் முழுமையான ஒன்றோ, இதை வைத்து போட்டி போடுவதற்கான ஒன்றோ, எண்ணிக்கை விளையாட்டு விளையாடத் தேவையான ஒன்றோ அல்ல என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. அது என்னவெனில், மதநம்பிக்கையற்றோர் என்றொரு வகையும் இதில் உள்ளது. அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 13% பேர் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கை என்ற கருத்திலிருந்து கடவுள் மறுப்பு என்ற சிந்தனைப் போக்குக்கு வரும் வழியான ஒரு இடைநிலைப் பகுதியே மத நம்பிக்கையற்றோர் என்பதாகும். கடவுள் கருத்து கலகலத்துப் போயிருக்கிறது. அதன் அடிப்படையிலான மத நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டவர்களாக 13% பேர் இருக்கின்றனர் என்பது, இவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. -_லிருந்து +க்குப் போவதற்கு நடுவில் 0 என்ற இடத்தைத் தாண்டித்தானே ஆகவேண்டும். இந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவர் என்பதே இக்கணக்கெடுப்பு கூறும் உண்மை.

–    அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *