நெசந்தானுங்க…

ஜனவரி 01-15

9.30க்கு மேல் போகாதே . . .

பாலியல் வன்முறையை நியாப்படுத்தும் மனநிலை

அந்தக் காலத்து வில்லுப்பாட்டுகள்ல-யெல்லாம் காந்தி என்ன சொன்னாரு? அண்ணல் காந்தி என்ன சொன்னார்? மகாத்மா காந்தி என்ன சொன்னார் _அப்படின்னு ஒருத்தர் கேட்டுக்கிட்டே இருப்பாராம். கடைசியா காந்தி என்ன சொன்னாருன்னு அவரு சொல்லி முடிக்கிறப்போ மேடை பிரிக்கிற ஆளு மட்டும் தான் இருக்குமாம்.

அப்புறமா வந்த பட்டிமன்றங்கள்லயும் அடிக்கடி ஒரு வசனம் சொல்வாங்க… கையில் குச்சியும், கதராடை போர்த்திய உடலுமாக, கால்நடையாகவே இந்த தேசத்தை அளந்த அகிம்சாமூர்த்தி …. …. …. …. …. காந்தி மகான் அப்படின்னு மூச்சுவிடாம வாயளந்துட்டு அதுக்கப்புறமா, என்ன சொன்னார் தெரியுமா? எப்படின்னு ஒரு வழியா ஒரே ஒரு கருத்தைச் சொல்வாங்க…

அது என்னன்னா? கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

***

டில்லியில ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் போராட்டம் – தடியடி – கண்ணீர்ப்புகை வீச்சு – அப்படியிப்படின்னு அல்லோல கல்லோலப்படுது! பாலியல் வன்முறைக்கு எதிரா கொதிச்செழுந்து போராடுறாங்க பலர்! ஒவ்வொரு நொடியிலயும் சொன்ன செய்தியையே பத்து தடவை திரும்பத் திரும்பச் சொல்லி மூச்சடைக்குது ஊடகங்கள்! நாடெங்கும் கற்பழிப்புக்கெதிரா குரல் கிளம்பியிருக்கு! என்ன நடந்தது? டிசம்பர் 16-ஆம் தேதி இரவுல டெல்லி முனிர்கா பகுதியில ஓடும் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார்னு ஒரு செய்தி மறுநாள் வெளிவந்தது. எதிர்ப்புக் குரல்கள் கேட்க ஆரம்பிசசது. யார் குற்றவாளிகள்னு அடுத்தடுத்து கண்டுபிடிச்சு தூக்கி உள்ள போட ஆரம்பிச்சுட்டாங்க போலீஸ். உலகம் அழியப்போகுதுன்னு பேசிக்கிட்டிருந்த ஊடகங்கள் அடுத்த பிரச்சினையாக இதை எடுக்க ஆரம்பிச்சாங்க… இந்தியா முழுமைக்கும் இந்தப் பிரச்சினை பேசப்பட்டது. கோபம் போராட்டமாவும் வெளிப்பட ஆரம்பிச்சது. மக்கள் பாலியல் வன்முறைக்கு தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பிச்சாங்க… இப்பவாவது இந்த உணர்வு வந்திருக்கேன்னு நமக்கும் ரொம்ப சரின்னு தான் படுது! அவ்வளவு கொடூரமா நடந்திருக்கு – அந்த வன்முறை! ஆனா இதில சில கேள்விகள் வராம இல்ல! பாலியல் வன்முறை செஞ்சவனுங்கள தூக்கில தொங்க விடணும்னு கொதிச்சுட்டாங்க பல பேர்…. ஆமாமா… தூக்கில போட்டே ஆகணும்னு ரொம்பப் பேரு கையெழுத்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க…! இது தான் சாக்குன்னு அரசு இயந்திரமும் தூக்கு தண்டனைக்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டிருக்கு! தூக்குத் தண்டனையால பாலியல் வன்முறையைத் தடுக்க முடியுமா-ன்னு யோசிக்கிறது ஒரு பக்கம்! தூக்குத் தண்டனையாலயோ, மரண தண்டனைகளாலோ பாலியல் கொடுமைகளைத் தடுக்க முடியுமா? நம்ம கண்ணுக்கு முன்னாடி, போன வருசம் கோயமுத்தூர்ல பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்குன ரெண்டு பேர, தப்பிக்கப் பார்த்தாங்கன்னு சொல்லி போலீஸ் என்கவுண்ட்டர்ல சுட்டது. அது தான் அவனுங்களுக்கு சரியான தண்டனைன்னு நாமளும் கைதட்டி, செத்தானுங்க… இன்னும் நல்லா கொன்னுருக்கனும்னு சொல்லிட்டு சமாதானமாயிட்டோம்.. இது மாதிரி பல இடங்கள்ல சுட்டிருக்காங்க… தண்டனை கடுமையா கொடுத்திருக்காங்க…

ஆனாலும், அதுக்கப்புறமும் நடக்குதே… என்ன காரணம்? பாலியல் வன்முறை செய்தால் மரண தண்டனைன்னு முடிவெடுத்தா எந்த வீட்டுலயாவது கணவன் இருக்க முடியுமா? வீடுகளில் நடக்கும் பாலியல் வன்முறையை, பொண்டாட்டிக்கிட்ட செய்யுற பாலியல் வன்முறையையெல்லாம் கணக்குல எடுக்கணுமா? வேண்டாமா? இந்தக் குற்றவுணர்வு தான் மாட்டிக்கிட்டவனுங்க மேல தூக்குத் தண்டனையைத் தள்ளிவிடுதுன்னு சொல்றாங்களே – அதுல உண்மை இருக்கா? இல்லையா?

டெல்லியில நடந்த பாலியல் வன்முறைக்கு எவ்வளவு கொதிச்செழுற இந்தியர்கள், இந்தியா முழுக்க தினசரி நடக்குற நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைக்கு எதிரா ஏன் கொதிக்கல? ராணுவம், காவல்துறை போன்றவங்களால நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரா ஏன் பொங்கல? சரி, இதெல்லாம் பழைய செய்தி! இப்போ தான் புத்தி வந்திருக்குன்னு வச்சுக்குவோம். அதுக்குப்பிறகு, தூத்துக்குடிக்கு பக்கத்தில ஒரு பிஞ்சுக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கே? இதுக்கு ஏன் நாடு முழுக்க பிரச்சினை வரல? குறைஞ்சபட்சம் பிரச்சினையை சேர்த்துக்கக் கூட இல்லையே? ஆனா, இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான கேள்வி இருக்கு!

கைது செய்யப்பட்ட ஆட்கள்ல அந்த பஸ் ஓட்டுநரும் ஒரு ஆளு! அவன் சொன்னான், அந்த நைட்டுல… ஒரு பையனோட… என்ன சுத்த வேண்டிக் கிடக்கு? அதுக்கு பாடம் கற்பிக்கத் தான் கற்பழிச்சோம்! ஊரே, நாடே கொதிக்கிற மாதிரியான பிரச்சினையில குற்றவாளிகள்ல ஒருத்தன், இப்படியொரு கருத்து சொல்றான்னா என்ன அர்த்தம்? என்ன தைரியம்? என்ன காரணம் – இப்படிச் சொல்ல? அப்படியெல்லாம் யாரும் யோசிக்கல… சொன்னவன் மேல தான் இன்னும் பல பேருக்குக் கோபம் வந்திச்சு! ஆனால், அதில யோசிக்க வேண்டிய விசயம் என்னன்னா, அதை அவன் மட்டுமா சொன்னான்? இவ்வளவு தைரியமா சொல்றான்னா, தனக்கு இதனால ஆதரவும், அனுதாபமும் கிடைக்கும்னு அவன் நம்புறான்னு தானே அர்த்தம். இல்லைன்னு சொல்ல முடியுமா?

இதில யார் யாருக்குப் பங்கிருக்கு? பெண்கள் ஒழுங்கா டிரஸ் போட்டுக்கிட்டு போகலைன்னா, பசங்க அப்படித்தான் இருப்பான்னு சொன்னவங்-களுக்கு இதில பங்கிருக்கா இல்லையா?

பசங்களை ஒழுங்கா வளர்க்காம, அவனுக்கு உரிய பக்குவத்தைக் கொடுக்காம, பொண்ணுங்களை மட்டும் அடங்கியிருங்கன்னு பழக்கினவங்களுக்கு இதில பொறுப்பு இல்லையா? ஆபாச உடையணிஞ்சதால தான் பசங்களுக்கு வேற மாதிரி தோணுதுன்னு சப்பைக் கட்டு கட்டுனவனுக்கு இதில பங்கு இல்லையா?

அசாம் மாநிலத்தில போன ஜூலை மாசம் இதே மாதிரி ஒரு பிரச்சினை வந்து, மதுக்கடைக்கு வந்தார்னு ஒரு பெண்ணை கூட்டம் கூட்டமா வந்து பாலியல் சீண்டலுக்குள்ளாக்கினப்போ, மத்தியப் பிரதேச பி.ஜெ.பி அமைச்சர் ஒருத்தர் அந்தப் பொண்ணு ஒழுங்கா இருந்தா, ஏன் இது நடக்குதுங்கிற மாதிரி கேட்டாரே, அவர் மேல குற்றம் இல்லையா?

ஆட்டோ-ல சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதேன்னு எழுதுனதை விட்டதுனால தானே, இன்னிக்கு ஒரு ஆட்டோவில ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல் படின்னு எழுத வச்சிருக்கு! இப்படியெல்லாம் பேசுற ஆள் இருக்கிறதால தான, பாலியல் வன்முறைக்கு ஆதரவு தேடுற அளவுக்கு தைரியம் வருது! இது எவனோ, யாரோ, ஒரு முட்டாள் -முரட்டு, ஆணதிக்க வெறி புடிச்ச அயோக்கியன்…. …. …. அப்படி எழுதியிருக்கான். அவனை விடு.. பொறுப்பான ஆளுங்களால அப்படி யோசிக்க முடியுமான்னு நினைச்சு நாம ஒதுங்கிட முடியாது!

இதையெல்லாம் தாண்டி இன்னிக்கு, சில பேரு தைரியமா பேசறாங்களே! அந்தப் பொண்ணை யாரு 9:30க்கு மேல வெளியில திரியச் சொன்னா? அதுவும் பாய் பிரண்டோட…? அப்படி இருந்தா இப்படித் தான் நடக்கும்னு சொல்றாங்களே! யாரு அந்தக் கொழுப்பெடுத்த ஆளு? மனுசத் தன்மையில்லாத ஆளு? எவன், அவன் ஆளைக் காட்டு-_னு நீங்க கோபப்படுறது எனக்குத் தெரியுது! ஏதோ ரோட்டில போறவன் சொல்லலைங்க! ஏட்டுல எழுதுறவரு… சொல்றாரே! அதுவும் தேசிய உணர்வோட சொல்றாரே! யாரு தெரியுங்களா? தினமணி வைத்தியநாதய்யரு! என்ன சொல்றாரு தெரியுமா?

ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை? … … … உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்து-கொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்து-கொள்வதில்லை. … … … சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. (தினமணி 20.12.2012)

அந்தக் கடைசி வரியை இன்னொரு முறை படிச்சுப் பாருங்க…. என்ன சொல்ல வர்றாரு தெரியுதா?

அந்தப் பொண்ணு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு வேற யாரும் காரணமில்லை… அந்தப் பொண்ணே தான் காரணம்னு சொல்றாரு வைத்தியநாதய்யரு! அங்க மட்டுமில்லை… எங்க பாலியல் வன்முறை நடந்தாலும் அதுக்கு அதுக்கு அந்த பொண்ணுங்க தான் காரணமா? அதுக்கு எவ்ளோ அயோக்கியத் தனமா புறநானூற்றுப் பாட்டுல இருந்து வரியை எடுத்துப் போடுறாரு? அசாம்ல நடந்ததுக்கும், டெல்லியில நடந்ததுக்கும் அந்தந்தப் பொண்ணுங்க தான் காரணம்னா தூத்துக்குடியில நடந்ததுக்கும் அந்த 13 வயசு சின்னப் பொண்ணு தான் காரணமா?

உரிய பாதுகாப்பு தராத அரசையும், பாலியல் கல்வியைக் கத்துக் கொடுக்கக்-கூடாதுன்னு கத்துற மதவாதிகளையும், மனநிலை சரியில்லாத பாலியல் பொறுக்கிகளா ஆண்களை வளர்த்துக்கிட்டிருக்கிற சமூகத்-தையும் கண்டிக்காமல், நீ லேட்டா போனதால தான் உன்ன ரேப் பண்ணியிருக்கான்.. நான் அங்க இருந்தா நானும் அப்படித் தான் பண்ணியிருப்பேன்னு சொல்ற மாதிரி எழுதுறதுக்குப் பேரு ஒரு தலையங்கம்.. அதுக்கு ஒரு ஆசிரியரு…? அடச்சீ…

ஜாதி, ஆணாதிக்கத் திமிர், மதவெறி, அடக்குமுறைன்னு பல காரணங்களால ஒவ்வொரு நாளும் நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் பெருகிக்கிடக்குற இந்த நாட்டுல காந்தி என்னமோ சொன்னாருன்னு சொல்றாங்களே! அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா… இன்னும் 9:30 மணி சுதந்திரத்துக்கு இந்த நாடு தகுதியில்லையே! பகல்-ல போன பொண்ணைத் தூக்கி வன்கொடுமை செஞ்சிருக்கிற இந்த நாடு என்னைக்கு 12 மணி சுதந்திரத்தை அடையுறது? எல்லாருக்கும் தேவை – பாலியல் கல்வி! பெண்களுக்கு அவசியம் தேவை தற்காப்புங்கிற ஆயுதம்! அதை செய்யலைன்னா… பட்டப் பகல் 12 மணிக்கு, பல பேரு முன்னிலையிலயே பாலியல் வன்முறை நடக்கும். அப்பவும், பெண்கள் மேல குற்றம் சொல்ற இதே பூணூல் எழுதும். அதைத் தடுக்க முடியாது!

– பவானந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *