பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”?

ஜூன் 01-15

 

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அவரும் அவரது கட்சிகளான ஆர்.எஸ்.எஸ்._பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில், பதவிக்கு வருமுன் _ என்னென்ன வாய்நீள வாக்குறுதிகளை, இந்த “56 அங்குல மார்பு’’ என்று பெருமையடித்துப் பேசியவருடைய ஆட்சி எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது? என்று கணக்குப் பார்க்க வேண்டும்.

1.                    “ஓர் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன். ‘சப்கா சாத்’  (Sabka Sath), ‘சப்கா விகாஸ்’  (Sabka Vikas) ‘வளர்ச்சி வளர்ச்சி’ என்று மேடை தவறாமல் கூறியதற்கு, நாடு எந்த வளர்ச்சியை நோக்கிப் பயணித்துள்ளது?

எதில் வளர்ச்சி?  யாருக்கு வளர்ச்சி?

மதவெறியில் _ ஹிந்துத்துவா திணிப்பதில்  _ உண்பதில்கூட எவ்வகை உணவு என்று மேலே இருந்து ஆர்.எஸ்.எஸ். இடும் ஆணையை அகிலமும் ஏற்க வேண்டும் என்று ஆணவப் போக்கின் _ வளர்ச்சி!

பசு பாதுகாவலர்கள் என்று தலையில் காவித் துணி கட்டிய காலிகள், அடியாள் கூட்டமான கிரிமினல்களின் வளர்ச்சி!

வேற்று மதம் (இஸ்லாம்) என்பதற்காக சிறு பச்சிளம் இளந்தளிரை குழந்தையைக் கடத்திச் சென்று வன்புணர்ச்சி _ பாலுறவு துன்புறுத்தல் செய்து, கொன்று எறிந்து விடுவது போன்ற சமூக அக்கிரமங்களும் அநீதியும் (ஜம்மு பகுதியில் நடந்தது போல்) பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் “வளர்ச்சி’’_(?)

விஞ்ஞான சாதனைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், புராண இதிகாச காலங்களிலேயே இருந்தது. விஞ்ஞானிகள் ஒன்றும் புதிதாக இதைக் கண்டுபிடித்து விடவில்லை. எல்லாம் நமது முன்னோர்களான புராண இதிகாச காலத்திலேயே இருந்ததுதான் என்று உளறும் பிற்போக்குத்தனம் _ அறிவீனம் பிரதமர் மோடி உரையிலிருந்து தொடங்கி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை வரையில் “வளர்ச்சி’’ பெற்றிருக்கிறது!

பண மதிப்பிழப்பின் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் பாதிப்படைந்தாலும், நீரவ் மோடி போன்றவர்கள் செய்யும் பல லட்சம் கோடி வங்கிப் பண மோசடி என்று நாளொருமேனியும் “வளர்ச்சி’’தான்!

விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையைக் கூடுதலாக்குவதும் வளர்ச்சிதான்! வேலையில்லாத் திண்டாட்டம் விபரீதமாய் பெருக்குவதும் வளர்ச்சிதான்!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு _ அதிலும் கர்நாடகத் தேர்தல் வரை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்ட நிலை போக _ அதிகமாக விண்ணை முட்டும் “வளர்ச்சி’’யைக் கண்டு வாகன ஓட்டிகளை மயக்கமடையச் செய்வது வளர்ச்சிதான்!

‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை ஏழை, எளிய, இருபால் மாணவர்கள் தற்கொலை _ பெற்றோர்கள் மரணம் போன்றவையும் “வளர்ச்சி’’தானே?

வெளியுறவில் அமெரிக்காவின் டிரம்ப் முதலியவர்களுடன் மோடி பேசி எச்1 விசாவின் தடுப்பில் பெரும் மாறுதல் _ இந்தியாவுக்கு சாதகமான நிலையை உருவாக்குகிறா என்றால் இல்லை! இல்லை!

இப்படி ‘வேலியே பயிரை மேயும்’ ஆர்.எஸ்.எஸ். ஆதரவு, பார்ப்பன (பா.ஜ.க.) ஆசாமிகள் தயவில் குறுக்கு அடாவடிகள் ஆட்சிகள் அமைத்து 22 மாநிலங்களில் எங்கள் ஆட்சி என்று மார்தட்டும் “வளர்ச்சி’’!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்விலும் செய்யப்படும் அடாத சூழ்ச்சிகளின் “வளர்ச்சி’’?

கல்வித் துறையை மத்திய கல்வித் துறையாக ஆக்கி, ஆரம்பக் கல்வியை குருகுலக் கல்வியாக்கி, சமஸ்கிருத வேத கலாச்சாரக் கல்வியாக்கி, பல்கலைக்கழகங்களை ஆர்.எஸ்.எஸ். பண்ணைகளாக வேகமாக _ விரைவாக ஆக்குவதில்தான் “வளர்ச்சி வளர்ச்சி’’ அதிகம்!

இதற்கு முடிவு தென்மாநிலங்களிலிருந்து தான் துவங்கியுள்ளது!

2019இல் பா.ஜ.க.வின் மகுடம் பறிக்கப்பட்டால் ஒழிய, உண்மையான வளர்ச்சியை நாடு பார்க்கவே முடியாது!

-_ கி.வீரமணி,

 ஆசிரியர்.

 ———————————————————————————–

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆட்சியில் அடுத்தடுத்து சதித் திட்டங்கள்!

வங்கி வேலைகளில் வேறு மாநிலத்தார் நுழைய வாசல் திறப்பு;

தமிழர் வேலைவாய்ப்பு பறிப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் ‘கிளார்க்’ பணிகளுக்கு, அந்தந்த மாநிலத்தவர்க்கே இதுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ் நாட்டில், அரசு வங்கிகளில் ‘கிளார்க்’ பணிகளில் தமிழ் நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தன.

இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் “இந்திய வங்கி தேர்வு நிறுவனம்’’ சென்ற ஆண்டு வெளியிட்ட விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தியது. இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ் நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

யூனியன் வங்கி ஓர் எடுத்துக்காட்டு!

தற்போது அரசுடைமையாக்கப்பட்ட வங்கியான “யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின்’’ தமிழக கிளைகளில் பணியமர்த்த கிளார்க்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 65 கிளார்க்குகளில், பத்து பேர் வேறு மாநிலத்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் எழுத, படிக்க, பேச தெரியாது என்பது மட்டுமல்ல; இவர்களது விண்ணப்பத்தில் தங்களுக்கு தமிழ் பேச, எழுத, படிக்க தெரியும் என்று பொய்யாக விண்ணப்பித்து, இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்; வங்கி தேர்வு நிறுவனம் நடத்திய தேர்வின் மூலம் தேர்வு பெற்ற, தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட வேண்டும் என்று யூனியன் வங்கியின் தலைவருக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தின் நகல் தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய வங்கிகளிலும் இதே போன்று தமிழ் மொழி தெரியும் என பொய்யாக விண்ணப்பித்து, வங்கியில் அதிக எண்ணிக்கையில் வேறு மாநிலத்தவர் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்து வங்கிகளின் தலைமைக்கும் கூட்டமைப்பு கடிதம் எழுதிட உள்ளது.

வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் ‘கிளார்க்’ பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், இளைஞர்களும், ஆட்சியாளர்களும் உடன் இச்சதியை முறியடித்து பொய்யான தகவல் அளித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு, தமிழ் கட்டாயம் என்ற பழைய நிலையை மீண்டும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

– கோ.கருணாநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *