இறந்த பின்னும் வாழும் ஈகையர் !

2023 அக்டோபர் 16-31, 2023 கட்டுரைகள் மற்றவர்கள்

நேர்காணல்: வி.சி.வில்வம்

இரத்ததானம் செய்வது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஊர்கள்தோறும் குழுவாக இணைந்து ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்! அதேபோல, “மண்ணுக்குப் போகும் கண்களை மனிதருக்கு வழங்கினால் என்ன?” என்கிற விழிப்புணர்வும் பெருகி கண் தானங்களும் ஓரளவிற்கு வளர்ந்துள்ளன! இதேபோல உடல்தானம் வழங்குவதும் பெருக வேண்டும் என மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது!

இதுகுறித்து “உண்மை” இதழுக்காக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் (ANATOMY) துறைத் தலைவர் திருமிகு வீ.ஆனந்தி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., எம்.எஸ்., அவர்களைச் சந்தித்தோம்.

உடல் கொடை குறித்த விழிப்புணர்வு எந்தளவில் உள்ளது?

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம். அதையொட்டி மாணவர்களும் அதிகம். மாணவர்கள் உடற்கூறுகள் தொடர்பாகப் பயில்வதற்குப் (Practical) போதுமான உடல்கள் கிடைப்பதில்லை. 10 மாணவர்களுக்கு ஒரு உடல் என்கிற அளவில் தான் பயன்பாட்டில் இருக்கிறது! இவற்றை ஓர் ஆண்டு வரையிலும் பயன்படுத்துவோம். ஒரு சில ஆண்டுகளில் போதுமான உடல்கள் கிடைத்துவிடும். எனினும் பற்றாக்குறையே நிலவுகிறது!

உடல்கள் எந்தெந்த வழிகளில் கிடைக்கின்றன? நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை எடுப்பதில் பிரச்சினைகள் இருக்காது. ஏனென்றால் அந்த உடல் குறித்த முழு விவரத்தையும் மருத்துவர்கள் அறிக்கையாகக் (Death Certificate) கொடுத்து விடுவார்கள். இதுவே வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் எப்படி இறந்தார்? பிரச்சினைகள் ஏதும் இருந்ததா? என்பதை அப்பகுதியின் கிராம நிருவாக அலுவலர் (VAO) சான்றிதழ் கொடுக்க வேண்டும்!

ஆதரவற்ற நிலையில் இறந்து போன ஒருவரின் உடலைப் பெற முடியுமா?

நேரடியாக எந்த உடலையும் மருத்துவக் கல்லூரிகள் பெற முடியாது. மருத்துவமனையிலோ, வீட்டிலோ இறந்து போன ஒருவரின் உடலை உரிய சான்றிதழ் மூலம் நாங்கள் பெற முடியும். சாலைகளில் ஆதரவற்ற நிலையில் இறந்து போன உடலைப் பெறுவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அந்த மரணம் இயல்பானதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து அறியப்பட வேண்டும். காவல்துறை அதற்கான முயற்சிகள் செய்து, தடையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்கினால் ஏற்றுக் கொள்வோம்.

உடல்தானம் வழங்குவதற்கு நிறைய ஆவணங்கள் தேவைப்படுமா?

முன்பு சான்றிதழ்கள் அதிகம் தேவைப்பட்டன. இப்போது அது இலகுவாக மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் உடல்தானம் செய்ய விரும்புவோர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. இறந்தவர் விரும்பாமல் இருந்து, அவர் வீட்டார் விரும்பினால் உடல்தானம் வழங்கலாம்! மருத்துவமனையில் இறந்தால் மருத்துவர் சான்றிதழ், வீட்டில் இறந்தால் கிராம நிருவாக அலுவலர் சான்றிதழ் போதுமானது. தவிர ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதி, இறந்தவர் ஆதார் அட்டையும், ஒப்படைப்பவரின் ஆதார் அட்டையும் இணைக்க வேண்டும்!

ஏற்றுக் கொள்ள முடியாத உடல்தானங்கள் ஏதும் உள்ளதா?

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, கொரோனா போன்ற தொற்றுகள், முற்றிய நிலையிலான புற்றுநோய், படுக்கைப் புண்கள், சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்சினைகள், உடல்பருமன், விபத்தில் கடுமையான காயம், பிரேதப் பரிசோதனைகள் உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் அந்த உடல்கள் தானம் செய்ய ஏற்றவை அல்ல.
இறந்த பிறகு எத்தனை மணி நேரத்திற்குள் உடலைக் கொடுக்க வேண்டும்?

பொதுவாக இறந்தவர் உடல் சில மணி நேரத்திற்குப் பிறகு “விறைக்க”த் (Rigor Mortis) தொடங்கும். சற்றொப்ப 24 மணி நேரத்திற்குள் அந்த விறைப்புத் தன்மை நீங்கிவிடும். பிறகு தோல்களில் சுருக்கம் ஏற்பட்டுவிடும். ஆதலால், அதற்கு முன்பே உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்து விட வேண்டும்.

உடலைப் பெற்றதும் மருத்துவக் கல்லூரியின் செயல்முறை என்ன?

உடனடியாக உடலைப் பதப்படுத்தும் (Embalming) பணியைச் செய்வோம். அதற்குரிய பல்வேறு திரவங்கள் 5 முதல் 7 லிட்டர் வரை சேர்த்து, இறந்தவர் உடலின் தொடைப் பகுதி இரத்தக் குழாய் வழியாகச் செலுத்துவோம்! சிறிது, சிறிதாக முழு உடலுக்கும் அது பரவும். சடலத்தின் உடலில் அப்போது வேர்வை வரத் தொடங்கும். நரம்புகள் புடைத்தாற்போன்று காட்சி தரும். கண், மூக்கு வழியாகச் செலுத்தப்பட்ட திரவம் நீர்க் குவளைகளாக வெளிவரும். அப்போது தான் அந்த உடல் முழுமையாகப் பதப்படுத்தப்பட்டது என்பதை அறிவோம்.
ஓர் உடலை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்துவீர்கள்?

10 மாணவர்களுக்கு ஓர் உடல் என்பது வாய்ப்பாக இருக்கும். தட்டுப்பாடான சூழலில் அதிக மாணவர்கள் வகுப்பில் இருப்பர். ஓர் உடலை ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு கை, கால்கள் என உறுப்புகளைப் பிரித்துப் பல்வேறு ஆண்டுகள் அது பயன்பாட்டில் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல், அந்தப் பாகங்களை எரித்துவிடுவோம்! அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தேவைப்படுகிற போது, இறந்த உடலின் பாகங்களைப் பார்த்துக் கூடுதல் தகவல் பெற்றுச் செல்வர். இது அரசு மருத்துவர்களுக்கு மட்டும் பொருந்தும்!
சடலங்களுக்கு ஊடாக வசிக்கிற போது, ஏற்படுகிற மன உணர்வுகள் என்ன?

புதிதாகப் படிக்க வரும் மாணவர்களில் சிலர் மயக்கம் அடைவதுண்டு. ஆனால், அது விரைவிலே சரியாகிவிடும். உடலைப் பதப்படுத்திவிட்டால் (Embalming) துர்நாற்றம் என்பது இருக்காது. அதே நேரம் மாணவர்களின் வகுப்பிற்குப் பயன்பட்டது போக, மீதி நேரத்தில் அந்த உடலைப் பல்வேறு கரைசல்கள் அடங்கிய நீர்த் தொட்டியில் வைத்துவிடுவோம். அந்த வேதிக் கரைசல்களில் சில நெடிகள் வரலாம். அதனால் பாதிப்புகளும் இல்லை; தொற்று நோயும் ஏற்படாது.
இறந்த உடல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம் எப்படி இருக்கும்?

பொதுவாக எம்.பி.பி.எஸ்., படிப்பவர்கள் உடலின் அனைத்து உறுப்புகள் குறித்தும் படிப்பார்கள். பிறகு Ortho, ENTஉள்ளிட்ட தனித்தனிப் படிப்பு படிப்பவர்கள் தொடர்புடையதை மேலும் அறிவர். இறந்தவர் உடலைச் சடலம் என்று எண்ணாமல், மனிதர் என்பதாகவே மாணவர்கள் மதிப்பர். அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளோம்! ஆசைகள், கனவுகள், உறவுகள், அன்பு என அனைத்தும் கொண்ட மனிதர் அவர்! மருத்துவ மாணவர்களுக்குத் தம் உடலை வழங்கியதால் என்றென்றும் நன்றியும், மரியாதையும் செலுத்துவார்கள் மாணவர்கள்! அந்த உடலின் அருகே இருந்து பாடம் படிக்கும் போது, ஒளிப்படம் எடுப்பதோ, சிரிப்பதோ அல்லது வேறு எந்த உணர்வுகளுக்கும் ஆட்படுதலோ இல்லாமல், மனிதாபிமானம் கொண்ட மனிதர்களாக விளங்குவார்கள் வருங்கால மருத்துவர்கள்! ♦