நெஞ்சில் வாழ்வார் கலைவாணர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

2023 ஆகஸ்ட் 16-31,2023 கவிதைகள்
நகைச்சுவையின் பேரிமயம்! சிரிப்பால் நாட்டு
நடப்புகளைச் சிந்திக்கத் தூண்டி வந்தார்!
தகைசான்ற மழையுள்ளம் வாய்க்கப் பெற்றார்;
தக்கோர்க்குத் தயங்காமல் வழங்கி வந்தார்!
பகையாக எவரையுமே எண்ணார்! நாளும்
பச்சைஅட்டைக் ‘குடியரசு” இதழின் மூலம்
வகைதொகையாய்ப் படித்துணர்ந்து பெரியார் கொள்கை
வளம்சேர்க்கும் என்பதனால் வளர்த்துக் கொண்டார்!
கலைவாணர் தமிழர்தம் அன்பைப் பெற்றார்;
கண்ணியத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்து வந்தார்!
நிலைமாறாப் பேருள்ளம் பெற்றார்; மாந்த
நேயத்தைக் கடைப்பிடித்த நேர்மைத் தொண்டர்
கலையுலகில் முடிசூடா மன்ன ராகக்
காலமெல்லாம் கோலோச்சி வந்தார்! வாழ்வில்
விலைபோகும் இழிமனத்தர் வஞ்ச கத்தின்
வேரறுக்கப் போராடி நிமிர்ந்து நின்றார்!
கொடையுள்ளக் குரிசிலெனப் பாரி போலக்
குறிப்பறிந்து கொடுத்துதவி மகிழ்ந்து வந்தார்!
தடைக்கற்கள் எவைவரினும் படிக்கல் லாகத்
தன்மானச் சிரிப்பாலே அனைத்தும் வென்றார்!
படைசூழ்ந்து பகைமோத வரினும் அஞ்சார்;
பகுத்தறிவால் சீர்திருத்தப் பான்மை நோக்கில்
நடைபோட்ட கலைவாணர் பிறந்து வாழ்ந்த
நாகர்கோ வில்மண்ணின் பெருமை சேர்த்தார்!
அறிவாண்மைத் திறம்மிக்கார்! அழகாய் ஒருநூற்(று)
அய்ம்பதுக்கும் மேற்பட்ட திரைப்ப டத்தில்
குறிக்கோளை, கொள்கையினை விதைத்தார்! மக்கள்
குறையறிந்து நிறைவாழ்வு வாழச் செய்தார்!
வறியவர்க்கே புகலிடமாய் வாழ்ந்தார்! அன்னோர்
வளம்பெறவே உளமகிழ்ந்து பரிசில் ஈந்தார்!
நெறிதவறாக் கலைவாணர் நினைக்கும் தோறும்
நெஞ்சினிலே என்றென்றும் நிலைத்து வாழ்வார்! ♦