90இல் 80 அவர்தான் வீரமணி!

2023 மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

27.6.2023 அன்று மாலை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் மண்டபத்தில், தமிழர் தலைவர் ஆசிரியரின் பணிகளை வியந்து பாராட்டி, “90இல்80 அவர்தான் வீரமணி’’ என்னும் விழா நடைபெற்றது. அதில் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில்,

சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத்துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை வழிநடத்துபவர்களுக்குத் தன்மானத்தைவிட இனமானமே பெரிதாக இருக்கும். இருக்க வேண்டும்.

தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும், நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

தன்மீது வீசப்படும் சொற்களையும், கற்களையும் எதிர்கொண்டு, எதிரிகளின் வசவுகளை உரமாக்கிக் கொண்டு, உயர்ந்து வளர்ந்து, பழமும், நிழலும் தரும் மரமாக நிலைத்து நிற்பதே திராவிட இயக்கத்திற்கான தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்தான் நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள்.

90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்கிற பெருமையைத் திராவிட இயக்கத்தில் அன்றி, வேறு எந்த இயக்கத்திலும் காண்பது அரிது! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 94 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர். இனமானப் பேராசிரியர் அவர்கள் தனது 96 ஆண்டு கால வாழ்வில் ஏறத்தாழ அதே அளவிலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்று நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வு
என்பது நம் தலைவர்களுக்கு வாய்த்தது என்பது,நமக்குப் பெருமையாக மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் பயனாகவும் அமைந்துள்ளது.

மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்

தன்னலமற்ற தொண்டறத்தால்தான் சமுதாயச் சீர்திருத்தத்தை உருவாக்க முடியும் என்று தனது 95 வயது வரை ஓயாமல் பயணித்து,
மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு, மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவர் கண் முன்னாலேயே சட்ட வடிவமாக்கிக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் வாழ்ந்த
காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் அவரது சிந்தனைகளைச் சட்டங்களாகத் திட்டங்களாகத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
சுயமரியாதை – சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்!
திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும் பாதை சற்று மாறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான்.

இரு இயக்கங்களுமே சுயமரியாதை – சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்.

10 வயதிலேயே, திராவிடர் கழக மேடை மீது போடப்பட்டிருந்த மேசை மீது ஏறி நின்று பகுத்தறிவை முழங்கிய மாணவரான ஆசிரியர் அய்யாவின் முழக்கம் இன்று வரை ஓயாமல் தொடர்கிறது. அது என்றும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நம் விருப்பம்.

தந்தை பெரியாரின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்!

நமது இயக்கத்திலே, தந்தை பெரியாரிடம் இருந்து நற்சான்றை மட்டுமல்ல, அவரது முழுமையான நம்பிக் கையையும் பெற்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெற்ற நம்பிக்கையை இன்றளவிலும் முழுமையாகக் காப்பாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எனும் ஆலமரத்தைப் பாதுகாப்பதுடன் பல புதிய விழுது களையும் உருவாக்கி, இந்தக் கொள்கை ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் தொண்டாற்றி வருபவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

பேரறிஞர் அண்ணா பொறுப்பு வகித்த, குத்தூசி குருசாமி போன்றவர்கள் பொறுப்பு வகித்த ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றி வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் இந்தப் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!
தன்னிடம் தந்தை பெரியார் ஒப்படைத்த இயக் கத்தை, பத்திரிகையை, நிறுவனங்களை பன்மடங்கு பெருக்கி, பகுத்தறிவுப் பயணத்தைப் பழுதறத் தொடர்ந்து, தொண்டால் பொழுதளக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை மட்டுமல்ல, வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன்ஆலோசனைகள் வழங்கி வருபவர்!

நெருக்கடி நிலைக்கால ‘மிசா’ சிறைவாசத்தில் நான் சித்திரவதைகளை எதிர்கொண்ட போது, என் தோள் பற்றித் துணைநின்ற தோழமைத் தலைவர் நம் ஆசிரியர் அய்யா. அந்த நெருக்கடி நிலைகாலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லா சானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்கள்.

இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை இந்திய ஒன்றியம் சந்தித்து வரும் நிலையில், வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

அரசியல் குறித்த ஆலோசனைகள் மட்டுமல்ல, வாழ்வியலுக்கான ஆலோசனைகளையும் அவரிட மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 90 வயதிலும் இளைஞருக்குரிய வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அவர் செயலாற்றுவதை வியப்புடன் பார்க்கிறேன்.

‘பெரியார் உலகம்‘ முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும்!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நூற்றாண்டு விழா கொண்டாடி, இன்னும் பலப்பல ஆண்டுகள் இதே சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் செயலாற்றி எங்களை வழிநடத்த வேண்டும். அவர் சிந்தனையில் உருவாகிச் செயல்வடிவம் பெற்று வரும் ‘பெரியார் உலகம்‘ முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும். பெரியாரையும் அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளையும் உலகமயமாக்கும் அவரது பெரும் பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்து, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
நன்றி!

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

அவரது உரையில்: நீதிக்கட்சியின் தந்தையாக போற்றப்படும் சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் பெயர் தாங்கிய அரங்கத்தில், அந்த இயக்கத்தின் வழிவந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்துவது என்பது வரலாற்றுப் பொருத்தமான ஒன்று என்றும், 1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. அப்போது ஆசிரியரை இந்த இயக்கத்திற்கு கொண்டு வந்த அவர்களின் மூத்த அண்ணன் கோவிந்தராசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சென்றார். அவர் மட்டுமின்றி, அன்றைக்கு இருந்த மூத்தவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சென்றனர். அந்த நிலையில் 16 வயதான ஒருவருக்கு – உளவியல் ரீதியாக தன்னை இயக்கத்திற்கு அழைத்து வந்தவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கு தான் செல்வார். ஆனால் “திராவிடர் கழகம்தான் எனது இயக்கம்; எனது தலைவர் தந்தை பெரியார் தான்” என்று 16 வயதில் ஆசிரியர் எடுத்த முடிவு உலக அதிசயம் என்றார்.

2024ஆம் ஆண்டு வந்தால் 50 ஆண்டுகள் அவரோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே தன்னுடைய வாழ்நாள் பெருமை என்றும், ‘விடுதலை’ ஆசிரியராக 61 ஆண்டுகள் என்ற வரலாற்று சாதனை நம்முடைய ஆசிரி யரை தவிர யாருக்கும் இல்லை என்றார். அந்த சாதனை நிகழ்ந்த போது ஆசிரியரின் வயது 29 என்றும், நீங்கள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே ‘விடுதலை’யை நாளேடாக நடத்துகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதையும், அதன் பிறகு நடந்த வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் எடுத்துரைத்து, இன்று ‘விடுதலை’ தமிழர்களின் போர்வாளாக, நாளேடாக வருகிறது என்றால் அதற்கான அடித்தளம், காரணம் ஆசிரியர் என்பதை தமிழர்கள் நன்றி உணர்ச்சியோடு கூற கடமைப்பட்டிருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் ஆசிரியர் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு “இது போல் ஒருவர் முன்பு வந்தார், இனிமேல் வரக்கூடும் என்று உவமை சொல்ல முடியாத ஒரு பொறுப்பை வீரமணி ஏற்றிருக்கிறார்” என்று பெரியார் சொன்னதை கூறி,இந்தளவிற்கு யாரையும் அய்யா பாராட்டியதாகத் தெரியவில்லை என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவரது உரையில் பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்கவேண்டும், பொது வாழ்வில் தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் முன்மாதிரியாக வாழும் சாட்சியாக வாழ்ந்து காட்டுபவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சிறுவயதிலேயே பெரியாரின் நம்பிக்கை-யையும், அறிஞர் அண்ணாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்பது மிகப்பெரிய பெருமை என்றும், தமிழ் மண்ணின் அரசியலை புதிய திசைவழிப் போக்கில் செலுத்தியவர்கள் அய்யாவும் அண்ணாவும், அப்படிப்பட்ட ஆளுமைகளே வியந்து பார்த்த பேராளுமையாக பயணிப்பவர் தான் ஆசிரியர் அவர்கள் என்றார்.

தான் சட்டக் கல்லூரியில் படித்தபோது ஈழ விடுதலைக்காக ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட போது ஆசிரியர் அவர்கள் திடலில் இவர்கள் முன்னால் பேசியதை நினைவு கூர்ந்து, ஈழத்தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பிரபாகரனை ஆசிரியர் அவர்கள் ஆதரித்ததையும் பிரபாகரன் அவர்களால் தான் சரியாக இதை கொண்டு செல்ல முடியும் என்று தொலைநோக்கோடு ஆசிரியர் சொன்னது பின்நாளில் அதுதான் நிலைத்து நின்றது என்பதையும் விவரித்து, பிரபாகரன் அவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது அப்போது அவரும் அருள்மொழி அவர்களும் சட்ட கல்லூரி மாணவர்கள் என்றும் அப்போது நடந்த வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் எடுத்துரைத்து, ஆசிரியர் அவர்கள் தான் பிரபாகரனின் பட்டினிப் போராட்டத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் என்பதை விளக்கி, எவ்வளவு நிதானமாக அரசியலைக் கையாளுகிறார் என்ற பக்குவத்தை ஆசிரியரிடம் இதன் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

எத்தனையோ சர்ச்சைகள் வந்த போதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்-செயலாளர் ரவிக்குமார் அவர்கள் மாறாக எழுதிய போதும் ஒருபோதும் ஆசிரியர் தன்னை விமர்சிக்கவில்லை என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரியாருக்கு எதிராகச் இருக்கிறது என்று கட்டமைக்கப் பட்டாலும் எப்போதும் ஆசிரியர் தன்னை அரவணைத்துத்தான் சென்றிருக்கிறார் என்பதையும் உளப்பூர்வமாக எடுத்து ரைத்தார். அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வை, நிதானம், விமர்சனங்கள் இருந்தாலும் அவதூறு பரப்பாத அணுகு முறையை ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த களத்தில் திருமாவளவன் நமக்கு தோழமை சக்தி என்று ஆசிரியர் உணர்ந்தார். அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நமக்கு பேரரணாக இருப்பது ஆசிரியர்தான் என்றார். எல்லா சூழ்நிலையிலும் உடனடியாக முடிவு எடுப்பவர் ஆசிரியர் என்றும், அப்படித்தான் தருமபுரியில் மிகப்பெரிய அந்த கலவரத்திற்கு மத்தியில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை கூட்டி அந்த மாநாட்டில் திருமாவளவன் பேசுவார் என்ற துணிச்சல் மிக்க முடிவை எடுத்த துணிச்சல் மிக்க பேராளுமை தான் ஆசிரியர் என்றார். ஒட்டுமொத்த தமிழகமும் வேறு நிலையில் இருந்த போது தனிப்பட்ட முறையில் விடுதலைச் சிறுத்தை கட்சி ஓர் ஆர்ப்பாட்டத்தையோ, பொதுக் கூட்டத்தையோ கூட அங்கு நடத்த வாய்ப்பில்லை. ஆனால் திராவிடர் கழகம் சார்பில் மேடை போட்டு அந்த மேடையில் நான் பேசுவதற்கு பதிலாக தம்பி திருமாவளவன் பேசுவார் என்று கூறினார். அதனால்தான் அவர் பெரியாரின் வாரிசாக இருக்கிறார் என்றார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தமது உரையில்,

1945இல் இராமநாதபுர மாவட்ட திராவிடர் கழக முதல் மாநாடு!

காரைக்குடியில் நடந்த இராமநாதபுர மாவட்ட திராவிடர் கழக முதல் மாநாடு – 1945, ஏப்ரல் 8,
அந்தத் துண்டறிக்கையைப் படித்துக்கொண்டு வந்தால், அய்யா பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் _ இவர்கள் போக இளைஞர்கள் பேசியிருக்கிறார்கள்.

23 வயது இளைஞர், அந்த மாநாட்டில் கொடியேற்றுபவராக இருந்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் க. அன்பழகன்.

21 வயது இளைஞர் பேசுகிறார், அவர் பெயர் மு. கருணாநிதி.
ஒரு 12 வயது சிறுவனும் பேசியிருக்கிறார். அவர் பெயர் கி. வீரமணி என்று போட்டிருக்கிறது.

1945, இத்தனைக்கும் 12 வயது நிறைவடைய
வில்லை. இன்னும் அதில் எங்களுக்குத் தொடர்பு இருக்கிறது. அதன் செயலாளர்களில் ஒருவரின் பெயர் ந. இராமசாமி. அவர் வேறு யாருமல்ல_ என்.ஆர். சாமி என்று பிற்காலத்தில் அறியப்பட்ட பிரின்சு, பிராட்லா ஆகியோரின் தாத்தா.

1943ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம், 27ஆம் தேதி, கடலூரில் ஆசிரியர் திராவிடமணி அவர்களால் தயாரிக்கப்பட்டு, நம்முடைய ஆசிரியர், அய்யாவிற்கும், அண்ணாவிற்கும் முன்னிலையில் பேசினார். அந்தக் கூட்டம் எதற்காக என்றால், 1942ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் ‘திராவிட நாடு’ தொடங்கப் பெற்றிருக்கிறது. அந்தத் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி வழங்குகின்ற கூட்டம். எவ்வளவு நிதி என்றால் 103 ரூபாய் என்பது சாதாரணமானதல்ல.
80 ஆண்டுகளுக்கு முன்பு, 103 ரூபாய் என்றால், இன்றைக்கு பல லட்சம் ரூபாய்க்கு சமம்.

அப்படி ஒரு நிதி கொடுக்கின்ற கூட்டத்தில், ஒரு சிறிய ஸ்டூலின்மீது ஏறி நின்றுதான் ஆசிரியர் பேசினார் எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியை முழுவதுமாக வாசித்து தனது உரையைத் தொடங்கினார்.

ஆசிரியரைப் பற்றி நினைக்கிற போது தனக்கு ஆச்சரியமாக இருக்கும் செய்திகளைப் பட்டியலிட்டு,

10 வயதில் மேடையில் பேசியிருக்கிறார்;
11 வயதில் திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கி}இருக்கிறார்;
12 வயதில் பொதுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று இருக்கிறார்;
13 வயதில் மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார்;
27 வயதில் கழகத்தின் பொதுச்செயலாளர்;
29 வயதில் ‘விடுதலை’ ஆசிரியர்;
45 வயதில் திராவிடர் கழகத்தின் தலைவர்

என்றால் அரசியல் கட்சிகளில் 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் கலைஞர் அவர்கள், ஒரு சமூக இயக்கத்திற்கு 45 ஆண்டு காலம் ஒரே தலைவராக இருந்து வருபவர் நமது ஆசிரியர் என்றார். இத்தனையையும் சிந்திக்கின்றபோது அந்த சிறு வயதில் இவரை அங்கீகரித்த இந்த இயக்கம் எவ்வளவு போற்றத்தக்கது என்பதை எடுத்துரைத்தார். இத்தனைப் பணிகளுக்கு மத்தியிலும் கல்வியிலும் அவர் தளர்ச்சி அடையவில்லை என்பதை பெருமிதத்தோடு, ஆசிரியர் பெற்ற பட்டங்களை எல்லாம் விளக்கிப் பேசினார். விடுதலைக்கு ஆசிரியராக தமிழர் தலைவர் பொறுப்பேற்ற போது ‘வரவேற்கிறேன்’ என்று அய்யா எழுதிய அறிக்கையையும், 1956 இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச் செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என்று அண்ணா அழைத்ததையும் பொருத்திப் பார்த்து இந்தப் பாங்கு பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் என்று நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக இருக்கிறது என்றார். வீரமிக்க தலைவர்களாக நீங்கள் இருந்தீர்கள் அதனால் நாங்கள் வீரமாக இருக்கிறோம் என்று கலைஞர் எழுதிய வரிகளை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார்.

இன எதிரிகளின் கோட்டைக்கே சென்று, துக்ளக் சோவுக்கு ஆசிரியர் அளித்த பேட்டியை எடுத்துரைத்து, “சீண்டக் கூடிய வகையில் நான் கேள்வி கேட்டாலும் அவர் உணர்ச்சிவசப்படாமல் தன் கருத்தை வலியுறுத்துவதிலேயே கவனமாக இருந்தார்” என்று எதிர்தரப்பும் பாராட்டக்கூடிய வகையில் ஆசிரியர் பயணித்த விதத்தை விளக்கினார். 1982இல் மம்சாபுரத்தில் ஆசிரியருக்கு எதிராக தாக்குதல் நடந்த போது தான் தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பில் இருந்ததாகவும், பல பேர் அதைக் கண்டு கொந்தளித்த போது நம்முடைய தலைவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள், தீவிர பிரச்சாரத்தால் தான் அவர்களை நாம் சந்திக்க வேண்டும்; அதைத்தான் இவர்களிடம் நாம் கற்றிருக்கிறோம் என்று தான் எடுத்துரைத்ததை விளக்கினார். ♦