அய்யாவின் அடிச்சுவட்டில்…- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்!

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் ஏப்ரல் 1-15,2023

இயக்க வரலாறான தன் வரலாறு (313)
கி.வீரமணி

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் சிறப்பாக நடைபெற உழைத்த கழகத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு விழா திருச்சி பெரியார் மாளிகையில் 3.3.2003 மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. நாம் கலந்துகொண்டு நூல்களைப்பரிசாக அளித்து, பாராட்டி சிறப்புரையாற்றுகையில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை விளக்கிப் பேசினோம்.
சமூகநீதியை அனைத்து மட்டத்திலும் உறுதிப்படுத்த  போராட உருவாக்கப்பட்ட அமைப்பான சமூக நீதிக்கான வழக்குரைஞர் பேரவை( Lawyers Forum for Social justice) அமைப்பின் தமிழ் மாநில மாநாடு சென்னை பெரியார் திடலில் 8.3.2003 அன்று நடைபெற்றது. தொடங்கிவைக்க வருகை தந்த மேனாள் இந்திய பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை விமான நிலையம் சென்று வரவேற்பளித்து அழைத்து வந்தோம்.

மாநாடு தொடக்க நிகழ்ச்சி, உயர்நீதி-மன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் அவற்றின் பணியகங்களிலும் நீதிபதிகளின் அமர்த்தத்தில் இடஒதுக்கீடு, மகளிருக்கு இடவொதுக்கீடு, தேசிய நீதித்துறை ஆணையத்தில் அனைத்துப் பிரிவினர்க்கும் இடவொதுக்கீடு, நிறைவு நிகழ்ச்சி என்னும் அமர்வுகளாகத் திட்டமிட்டுப் பொருத்தமாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் மாநாடு…

அமைப்பின் அறங்காவலர் என்ற முறையில் மாநாட்டின் வரவேற்புரையாற்றினேன். இந்தியத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், இந்தியச் சட்ட அமைச்சர் கொண்ட குழுவால் உயர்மட்ட நீதிபதிகள் நியமனம் என்பது புதிய மொந்
தையில் பழைய கள்ளே! இந்தக் குழுவிலும் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இந்தியப் பேரரசின் தலைமையமைச்சர் பதவியையே சமூக நீதிக்காகத் துறந்தெறிந்த பெருமகன் வி.பி. சிங் அவர்கள் மாநாட்டினைத் தொடக்கி வைத்துப் பேசுமுன், மேடையில் நாராயண குரு, சாகு மகராஜ், தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே ஆகிய சமூக நீதிச் சான்றோர்களின் உருவப்படங்களைத் திறந்து வைத்தார்.

தமது ஆட்சிக் காலத்தில்தான் முதன்-முதலாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் நீதிபதியாக அமர்த்தப்பட்டார் என்னும் உண்மையை வெளியிட்ட வி.பி. சிங் அவர்கள், “நாட்டில் பெரும்பான்மை மக்களைத் ஒடுக்கி வைத்துவிட்டுப் பார்ப்பனர் தங்கட்கு மட்டும் சமூகத்தில் உயர்ந்த இடத்தை ஒதுக்கிக் கொண்டது நியாயமா? 26 நீதியரசர்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு ஒவ்வோர் இடம் மட்டும் தருதல் சமூக நீதியா?’ நீதித்துறை ஆணையத்தில் எல்லாப் பிரிவினர்க்கும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு இருக்குமாறு செய்யும் கடமை உண்டு. ஆதிக்கச் சக்திகளை எதிர் கொள்வோம்” என உந்தார்வம் ஊட்டும் உரை பொழிந்தார்.

மேலும், “சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருப்பது குறித்து மகிழ்கிறது.. மக்களின் நிகழ் கால ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான அவர்களின் வேட்கைகளும் சட்ட வடிவம் பெறுகின்றன. ஆகையால், சட்டங்கள் மாறத்தக்கவை. எந்த ஒரு சட்டமும் சமுதாய எதார்த்தத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்க முடியாது. சமுதாயத்தின் தேவைக்குத்தக அவை அமையவேண்டும்.

நான்கு வண்ண வெப்-அச்சு இயந்திரத்தை இயக்கி வைக்கும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.

நாம் பெற்றுள்ள சமுதாய முறையில் திறமை (மெரிட்) அங்கீகரிக்கப்படவில்லை. திறமைக்கு எதிரான சமூக அமைப்பால் நலன் பெற்றுவரும் சிலர், திறமை வேண்டுமெனக் கூக்குரல் போடுகிறார்கள். திறமையின் பெயரால் அநீதி இழைக்கப்படும் மக்களை விழித்து எழச் செய்த தலைவர், தந்தை பெரியார்.

அநீதியால் ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்குவதற்கான ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு என்பது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அநீதி அடிப்படையிலான துன்பம் பிறப்பில் அமைந்தது. ஆகையால் அதைப் போக்க, பிறப்பு அடிப்படையை (ஜாதியை) மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சொந்த நாட்டில் அகதிகள்போல் வாழ்வோருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான செயல் முறையில் முக்கியமான ஒன்றாக இடஒதுக்கீடு தேவைப்படுகிறது.

வி.பி.சிங் அவர்களுக்கு வரவேற்பு அளித்து
கைத்தடி வழங்கும் ஆசிரியர்

சம வாய்ப்பு என்பது நடைமுறையில் சமத்துவத்தைத் தரவேண்டும்; விளைவு சமத்துவமாக இருக்கவேண்டும். அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமத்துவத்தை ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கிறார்களா? அவர்களைச் சமத்துவ நிலைக்குக் கொண்டு வருவதற்குத்தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் பொழுது, அவர்களில் கிரீமிலேயர் என்போரை நீக்கவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்புக் கூறினர். அப்படியானால் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு தரப்படும் பொழுது, அதில் பெரும்பான்மையான இடங்களை மேல் ஜாதியினர் தட்டிச் செல்கின்ற நிலையை உணர
வேண்டாமா? ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு செய்வதுதான் நியாயமாகும்’’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து முன்னான் கருநாடகச் சட்ட அமைச்சர் எல்.ஜி.ஹாவனூர் தலைமையிலான முதலாம் அமர்வில் நீதியரசர்கள் வரதராசன், வேணுகோபால், அனுமந்தப்பா, மருதமுத்து ஆகியோரும், இரண்டாம் அமர்வில் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையேற்க, பேராசிரியர் ரவிவர்மகுமார், வழக்குரைஞர் கோ. சந்துரு ஆகியோரும், மூன்றாம் அமர்வில் வழக்குரைஞர் ஷீலா ஜெயப்ரகாஷ் தலைமையின் கீழ், வழக்குரைஞர் கோகிலவாணி, ஆந்திர வழக்குரைஞர் ரமா பார்வதி, வழக்குரைஞர் எழில் கரோலின், எஸ்.தமிழரசி, முகம். சிவமூர்த்தி ஆகியோரும், நான்காம் அமர்வில் நீதியரசர் ஆறுமுகம் தலைமையில் பொஜ்ஜ தாரகம், ஜி. தேவதாஸ் ஆகியோரும், அய்ந்தாம் அமர்வில் நீதியரசர் கே. ராமசாமி தலைமையின்கீழ்ஏ. சுப்பாராவ், பேரா. கு.வெ.கி.ஆசான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த அமர்வில் நானும் பங்கேற்று நீதிபதிகள் ஆணையத்தில் அனைத்து பிரிவினர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
வழக்குரைஞர் த.வீரசேகரன் நன்றியுரையாற்றினார்.

இடையில் ‘விடுதலை’ ஏட்டின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த அச்சகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட _ ஒரே நேரத்தில் நான்கு வண்ணங்களை அச்சிடக்கூடிய _ வெப் எந்திரத்தை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தொடங்கிவைத்தார். அவர் என் அறைக்கு வந்தபோது, நான் எனக்கு வழங்கப்பட்ட ஒரு நினைவுப் பரிசை அவரிடம் வழங்கினேன்.

சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் எழுச்சி மாநாட்டில் எனக்கு கைத்தடி ஒன்றை மாணவர்கள் வழங்கினார்கள். அதையே நான் வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கினேன்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Litt) எமக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்க பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டபின், பல நாள்கள் கழித்து, ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். இலட்சுமிபதி அவர்கள் பெயரும் இணைக்கப்பட்டது. இது குறித்த ஒரு செய்தியை நான் பின்னாட்களில் அறிந்தேன். பல்கலைக் கழக ஆட்சிக் குழு முடிவு செய்து வேந்தரின் ஒப்புதலும் பெறப்பட்டு, விழாவிற்கான அழைப்புகள் எல்லாம் தயாராகி விட்டபின், அந்தப் பெருமை எனக்கு தனியே ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்த சிலர், ஆளுநர் மாளிகைக்கு அன்றைய ஆளுநரான ராம்மோகன் ராவ் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து திடீரென்று தினமலர் வெளியீட்டாளருக்கும் சேர்த்து தர வேண்டும் என்று வற்புறுத்தவே, ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் விதிகளை மீறி அவரது பெயரும் இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கு சட்டம், வளைந்து கொடுத்தது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது.

பட்டமளிப்பு விழா மரபுப்படி முதலாவதாக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகனராவ், துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி, மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்பெறும் நாமும், ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். லட்சுமிபதி, செனட் உறுப்பினர்களுடன் பட்டமளிப்பு நடைபெறும் முருகப்பா அரங்கிற்குச் சென்றோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற்புரையாற்றி
னார். பல்கலைக் கழகத்தின் சாதனைகள் சிறப்புத் திட்டங்கள், உலகளாவிய அளவில் அதன் தொடர்புகள், செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர் விரிவாக அவ்வுரையில் குறிப்பிட்டார்.

எமக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்குமுன் எமது சிறப்பு இயல்புகளை, சாதனைகளை, கல்வித் தகுதிகளை, அரை நூற்றாண்டைக் கடந்த தொண்டுப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டினார் துணைவேந்தர். (சிவீtணீtவீஷீஸீ) மகளிர் கல்வி, மகளிர் முன்னேற்றம், சமூகநீதி, சமூக சீர்திருத்தம் முதலிய துறைகளில் எமது பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டார். (பெட்டிச்செய்தி காண்க)சரியாக 10:40 மணிக்கு மதிப்புறு டாக்டர் (டி.லிட்) பட்டத்தினை எமக்கு தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகவேந்தர் மேதகு ராம்மோகனராவ் அவர்கள் நீண்ட கரவொலிக்கிடையே வழங்கினார்கள்.

40 ஆண்டுகளாகப் பத்திரிகைத்துறையில் சிறந்த சேவைகளை புரிந்ததற்காக ‘தினமலர்’ வெளியிட்டாளர் ஆர். லட்சுமிபதி அவர்களுக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகத் துணைவேந்தர் அறிவிக்க, அதனைத் தொடர்ந்து மேதகு ஆளுநர் அவர்கள் பட்டத்தினை வழங்கினார்.

டாக்டர் அழகப்பா செட்டியார் அவர்களின் மகளும் பல்கலைக் கழக ஆயுள்கால ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமாகிய உமையாள் ராமநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரையை நிகழ்த்தினார்.
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். அவர்கள் முன்னேற்றம் என்பது சமுதாய முன்னேற்றமாகும். ஆனாலும், நடைமுறையில் உயர்கல்வி, பெரிய பதவிப் பொறுப்புகளில் ஆண்களைவிடப் பெண்கள் சதவிகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

ஆனாலும் அழகப்பா பல்கலைக்கழகம் பெண் கல்விக்கு உரிய இடத்தைத் தருகிறது; இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களைவிட மாணவிகளின் சேர்க்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்ள் 407 பேர்களில் 236 பேர் பெண்கள்; தங்கப்பதக்கம் பெற்ற 21 பேரில் 15 பேர் பெண்கள் என்று மிகவும் பெருமிதமாகச் சுட்டிக்காட்டினார் உமையாள் ராமநாதன் அவர்கள்.

விழாவில் ஆளுநர் அவர்கள் 54 பேர்களுக்கு டாக்டர் பட்டமும், நூறு பேர்களுக்கு எம்.ஃபில். பட்டமும் 356 மாணவ-மாணவியர்களுக்கு முதுகலை மற்றும் பி.எட்., பட்டமும் வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 510 பேர் நேரில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகம் தழுவிய அளவில் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் காரைக்குடிக்கு திரண்டு வந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அழகப்பா பல்கலைக் கழகம்
அளித்த சிறப்புக் குறிப்புகள்…

2003 ஏப்ரல் 4ஆம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது பட்டமளிப்பு விழாவில்
கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டத்தை வழங்கியபோது பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் அ. ராமசாமி அவர்கள் ஆற்றிய குறிப்புரை.
பல்கலைக் கழக வேந்தர் அவர்களே!
சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களின் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் போராடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கழகத் தொண்டரும், சமூகநீதிப் போராளியுமான திரு.கி. வீரமணி அவர்களைத் தங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெரு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூரில் 1933 டிசம்பர் 2ஆம் தேதி அன்று பிறந்த திரு.கி. வீரமணி கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டப் படிப்பில் பயிலும் போது மதிப்பு மிகுந்த தங்கப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்வி பயின்று 1960இல் பட்டம் பெற்ற அவர் அந்த ஆண்டிலேயே தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார்.
திரு.கி. வீரமணி அவர்கள் ஓர் ஆழ்ந்த சிந்தனையாளரும், மாபெரும் எழுத்தாளருமாவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியுள்ள அய்ம்பதுக்கும் ‘மேற்பட்ட நூல்களே அதற்குத் தகுந்த சான்றாகும். அவரது நூல்களில் சிறப்பானவை:
சமூகநீதிக்காகத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போராட்ட வரலாறு,

மனித நேயமும் நாகரிகமும், பெரியார் களஞ்சியம் (ஆறு தொகுதிகள்) விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – உண்மை வரலாறு.
அத்துடன் அவர் ‘விடுதலை’ என்னும் தமிழ் நாளேடு, ‘உண்மை’ என்னும் தமிழ் மாதமிருமுறை இதழ், ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்னும் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியருமாவார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு பேசவல்ல ஆற்றல்மிகு பேச்சாளரான அவர், தனது மாணவப் பருவம் முதற்கொண்டே பல விருதுகளையும் பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளார்.

அவர் பல சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985இல் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பன்னாட்டு அமைதி மாநாடு, 1995இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்நாடு நிறுவனத்தின் ஆண்டு மாநாடு, 1998இல் மும்பையில் மனிதநேய அறநெறி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட சர்வதேசக் கருத்தரங்கம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாகும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் பல நினைவுச் சொற் பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

உலகெங்கும் பரவலாகப் பயணம் செய்துள்ள அவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, ஜப்பான், மியான்மர் மற்றும் பல இதர அய்ரோப்பிய நாடுகளுக்கும் பலமுறை சென்று பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் சிறப்புச் சொற்பொழிவுகளாற்றியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களாலும், அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளாலும் தனது இளம் வயது முதலே கவரப்பட்ட திரு. வீரமணி அவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்களுக்கான சமஉரிமை, ஆகிய பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் ஆவார். சமூகநீதிக்காகவும், மனித உரிமைகள், பெண்கள் சமஉரிமை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்காகவும் போராடும் ஒரு சமூகத் தொண்டராக இவர் தனது அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் திகழ்கிறார்.
பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப இவர் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானவை:
* பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டு மய்யம்
* மகளிர் மேம்பாடு மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (‘பவர்’)
பெண்களும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவு மக்களும் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், தனது ஆசானான பெரியார் அவர்களின் பெயரில் பல கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார்.
இக்கல்வி நிறுவனங்கள்:
* பெரியார் மணியம்மை மகளிர், பொறியியற் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர் (பெண்களுக்கென முதன்முதலாகத் தொடங்கப்பட்ட முற்றிலும் பெண்களுக்கான பொறியியற் கல்லூரி இதுவே!
* பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பயிற்சி மய்யம், சென்னை.
* பெரியார் கணினி உயர்கல்விக் கல்லூரி, திருச்சி.
* பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி,
பாராட்டத்தக்க சமூகத் தொண்டாற்றிய திரு.கி.வீரமணி அவர்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
* சமூக நீதி இயக்கத்திற்காக சிறப்பான முறையில் தொண்டாற்றியதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சமூக நீதிக்கான “பெரியார் விருது.’’
சுற்றுச் சூழல், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் முறையில் சமூக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கனடா அரசால் வழங்கப்பட்ட ‘சிடா’ சிறப்பு நிலைப் “பன்னாட்டு விருது.’’
புதுடில்லி தேசிய முன்னேற்ற முன்னணியால் வழங்கப்பட்ட “பாரத் ஜோதி’’ விருது.
சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவு மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புக் கோரும் சமூக நீதிக்காகவும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் இடைவிடாது போராடி வருபவரான திரு.கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க அழகப்பா பல்கலைக் கழக ஆலோசனைக் குழு (சிண்டிகேட்) பரிந்துரைத்துள்ளதை ஏற்றுக்கொண்டு வழங்குமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

நினைவுகள் நீளும்…