எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (119) சிவன் வேறு; – ருத்திரன் வேறு!

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஏப்ரல் 1-15,2023

நேயன்

வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது.
1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் 10ஆவது பாடல்,
‘‘மனிதர்களின் தலைவர்களுமான மருத்துக்கள்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆக மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள் என்பது உறுதியாகிறது.

ரிக்வேதம் 2ஆம் மண்டலம் 33 ஆவது அத்தியாயம் முதல் பாடல் ருத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘மருத்துக்களின் தந்தையே!’’ என்று அழைக்கிறது.

அப்படியென்றால் என்ன பொருள்? மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள். அந்த மருத்துக்களின் தந்தை ருத்திரன் என்றால், ருத்திரன் மனிதன் என்பது உறுதியாகிறது. அப்படியிருக்கும் ருத்திரனைக் கடவுள் என்று காட்ட முற்படுவது தப்பான வாதம்.
‘‘சிவன் வேறு; ருத்திரன் வேறு. சிவன் திராவிடக் கடவுள்; ருத்திரன் ஆரியக்கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உண்டு. இது அபத்தமான கருத்து. ருத்திரன் ஆதித்தொன்ம வேர்களைக் கொண்ட ஒரு வடிவம். அதுவே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும்

சிவதெய்வமாக விளங்குகிறது’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

இவர் கூறுவது முற்றிலும் தப்பு என்பதை மேற்கண்ட ரிக் வேதப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ருத்திரன் மனிதர்களின் தலைவன், சிறந்த வீரன் என்ற அளவில்தான் ரிக் வேதம் கூறுகிறது. ஆனால், சிவ வழிபாடு என்பது நன்றியின்பாற்பட்ட வழிபாடாகத் தொடங்கி வளர்ந்தது.
மேலும், ரிக் வேதம் 8ஆவது மண்டலம் _ அத்தியாயம் 15ஆவது சுலோகம்,

‘‘பசு ருத்திரர்களின் அன்னையாயும், வசுக்களின் புதல்வியாயும், ஆதித்தியர்களின் சகோதரியாயும், அமிருதத்தின் நாபியாயும் இருக்கிறான்’’ என்கிறது.

இங்கு ருத்திரர்கள் என்று பன்மையில் சுட்டப்படுகிறது. எனவே, ருத்திரர்கள் ஒரு இனக்குழு என்பது உறுதியாகிறது. மனிதர்களுள் ஒரு கூட்டம்.
ஆனால், சிவ வழிபாடு என்பது வேறுபட்டது. தமிழர்களிடமிருந்த நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளில் ஆ-ண்-_பெண் உறுப்புகளைப் பொருத்தி வழிபாடு செய்வதும் ஒன்று. தங்களுக்குப் பயன்படுவனவற்றை வணங்குவது மட்டுமே தமிழரிடம் இருந்தது. மாறாக எந்தக் கடவுள் வழிபாடும் தென்மைத் தமிழர்களிடமில்லை.

நிலத் தலைவி வழிபாடு, நிலத் தலைவன் வழிபாடு, வீரர் வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப் பெரியோர் வழிபாடு வரிசையில் ஆண்-பெண் உறுப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இவையனைத்தும் பயன் தருவனவற்றை வணங்குதல் என்ற வழக்கத்தில் வந்தவை.
அந்த அடிப்படையில் வந்ததுதான் பொங்கல் விழாவும், உழவுக்கு உறுதுணையாய் இருக்கும் மழை, சூரியன், மாடு, பணியாளர்களுக்கு நன்றி சொல்வதே பொங்கல் விழா.

ஆண்-பெண் உறுப்பு இணையும் நிலையில்தான் இன்பமும் கிடைக்கும், இனமும் பெருகும். இந்த இரண்டு முதன்மைப் பயன்பாடு இதிலிருப்பதால் ஆண்-பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர் தமிழர்கள். தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தமையால், அவர்கள் வழிபட்ட இந்த ஆண்-பெண் உறுப்பு பொருந்திய நிலையில் உள்ள உருவங்கள், அப்பகுதிகளில் எல்லாம் கிடைத்துள்ளன.
இவ்வழிபாட்டிற்கும் ஆரியர்களின் வழிபாட்டிற்கும் எத்தொடர்பும் இல்லை. தமிழர்களுடைய தொன்மங்களைத் திரித்தும், மோசடி செய்தும், திருடியும் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டுள்ளவை பலப்பல.

போதி மரத்தடியில் வணங்கப்பட்ட (அரச மரத்தடியில்) புத்தர் சிலைகளை, தலையை மாற்றி, யானைத் தலையாக்கி வினாயகராக்கி, அரசமரத்தடி வினாயகர் ஆக்கியது போல, தமிழர்களுடைய பலவற்றையும் மாற்றி தங்களுடையதாக்கினர்.
அவர்கள் பிற்காலத்தில் உருவாக்கிய சமஸ்கிருதமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட
தேயாகும். ஆரியர்களுக்கென்று உரிமையானவை எதுவும் இல்லை  அவர்கள் வாழும் மண் உட்பட.

ஆண்-பெண் உறுப்புகள் வழிபாடு, உருவங்கள் தமிழர்
கள் வாழ்ந்த சிந்து சமவெளிப்-பகுதியிலும் கிடைத்துள்ளன.
ஆண்-பெண் உறுப்புகள் பொருத்தி வழிபடப்பட்ட இந்த உருவமே சிவலிங்கம் என்று பின்னாளில் ஆக்கப்பட்டது.
சிவணிய என்ற சொல்லே சிவன் என்று ஆனது. சிவணிய என்றால் பொருத்தப்பட்டது என்று பொருள். ஆண்_பெண் உறுப்பு பொருத்தப்பட்ட வடிவம். ஆகையால் அது சிவணிய வழிபாடு என்று அழைக்கப்பட்டு அதுவே சிவலிங்கம் ஆனது. லிங்கம் என்பது ஆண் உறுப்பு. பெண்ணுறுப்புக்கு முதன்மை அளிக்கப்படாமல், ஆண் உறுப்புக்கு முதன்மையளித்து லிங்கம் எனப்படுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம்,

‘‘தானே சேறலுந் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ என்கிறது.
இதில் ‘சிவணி’ என்றால் சேர்ந்து, கூடி, பொருந்தி என்று பொருள்.
அதேபோல் தொல்காப்பியம், பொருளதிகாரம்,

‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யானே’’ என்கிறது.
இங்கு சிவணிய என்ற சொல் பொருந்திய என்ற பொருளில் வருகிறது.
எனவே, சிவண் என்றால் பொருந்திய என்ற பொருள். அதன் அடிப்படையிலேதான் ஆண்-பெண் பொருத்தப்பட்ட உருவம் சிவண் எனப்பட்டது. அதுவே பின்னாளில் சிவன் ஆனது.

கன்னன் என்றால் கருப்பன் என்று பொருள். வடமொழியில் கிருஷ்ணன் என்று வரும். கன்னங்கரேல் என்ற சொல் வழக்கை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். கன்னன் என்பதே கண்ணன் என்று ஆனது போல, ‘சிவண்’ என்பது ‘சிவன்’ என்று ஆனது.
எனவே, இன்றைய சிவலிங்க வழிபாடு தொல் தமிழரின் உறுப்பு வழிபாடேயாகும். இது பயன்படுவனவற்றிற்கு நன்றி சொல்லும் வழிபாடேயன்றி கடவுள் வழிபாடல்ல.

தமிழர்களின் நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளையெல்லாம் கடவுள் வழிபாடாக்கி, அக்கடவுள்களுக்கு உற-வு கற்பித்து தொடர்புபடுத்தியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆரியர்களின் மேக வழிபாடு கரியமால் வழிபாடாகி, இராமன் அவதாரமாகியது _ ஆக்கப்பட்டது. தமிழர்களின் ஆண்_பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

நிலத்தலைவர் முருகன் கடவுளாக்கப்பட்டார். அரச மரத்து அடியில் இருந்த புத்தர் வினாயகராக்கப்பட்டார். ஆக, எல்லாவற்றையும் கடவுளாக்கி, ஒன்று சேர்த்தபோது இந்துக் கடவுள்கள் என்று காட்டுகின்றனர். எல்லாமே மோசடி. இதில் சிவனை ருத்திரன் என்பது மாபெரும் மோசடி.

தொடரும்…