நூல் மதிப்புரை – ‘இந்திய இழிவு’

2023 நூல் மதிப்புரை மார்ச் 16-31,2023

நூல் : ‘இந்திய இழிவு’
ஆசிரியர் : அருந்ததி ராய்
தமிழாக்கம் : நலங்கிள்ளி
வெளியீடு: ஈரோடை வெளியீடு, 1-E, (2ஆவது மாடி) கோகுல் அடுக்ககம், 17, 4ஆம் குறுக்குத் தெரு, யுனைடெட் குடியிருப்புகள், கோடம்பாக்கம், சென்னை-600024.
பக்கங்கள் : 48; விலை : ரூ.50/-

இந்தியாவின் துணிவுமிக்க முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர் அருந்ததிராய் ஆவார். அவர் இந்திய அரசியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம் குறித்த தகவல்களை தக்க புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாய் வடித்துத் தருபவர். ‘பிராஸ்பெக்ட்’ இதழில் அவர் எழுதிய நெடுங்கட்டுரையின் தமிழாக்கமே இந்நூலாகும். இந்நூலை எழுத்தாளர் நலங்கிள்ளி அவர்கள்

எளிய தமிழ்நடையில், புதிய சொல்லாக்கங்களுடன் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நூல்.

ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து மொழி-பெயர்ப்பாளர் நலங்கிள்ளி அவர்கள் எழுதிய முன்னுரையுடன் தொடங்குகிறது.

காரல்மார்க்ஸ் அவர்கள், தாம் எழுதிய(Das Capital) மூலதனத்திற்குத் தரவாக அமைந்த இங்கிலாந்து அரசின் புள்ளிவிவரங்களைப் பாராட்டியுள்ளதை எடுத்துக்காட்டி, அதுபோல் “இந்தியாவில் ஜாதி பற்றிய ஆராய்ச்சி செய்யவில்லை என்றால் நம்மால் அம்பேத்கரின், பெரியாரின் சமூகநீதி அறிவியலைப் பட்டைதீட்டி வளர்க்க முடியாது’’ என்கிறார்.

தொடர்ந்து அருந்ததிராய் எழுதிய “இந்திய இழிவு’’ நெடுங்கட்டுரை தொடங்குகிறது. அருந்ததிராய் அவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும் இக்கட்டுரை நவீன இந்தியாவின் ஜாதியக் கட்டமைப்பை விளக்குகிறது.

2014ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசாஃப்ஸ் பற்றி அறிமுகம் செய்து, அவரது போர்க்குணத்தையும், தாலிபான்களின் கொடூரத் தாக்குதலை எதிர்கொண்டு அவர் வெற்றி பெற்றதையும், அவருக்கு ஆதரவாக அமெரிக்க அதிபரும், அரசு செயலாளரும் அய்.நா.வின் சிறப்புத் தூதராகவும் இருந்த ஜார்டன் ப்ரவுன் அவர்களும் குரல் கொடுத்ததையும், சர்வதேச ஏடுகளில் அட்டைப் படச் செய்தியாக அவரைப் பற்றி எழுதியுள்ளதைப் பதிவு செய்து, மராட்டிய மாநிலத்தில் பிறந்த தலித் பெண்ணான 40 வயது நிரம்பிய சுரேகா போட்மங்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கி, அதற்காக யாரும் குரல் கொடுக்காததைச் சுட்டிக்காட்டுகிறார். யார் இந்த சுரேகா போட்மங்கே? அவருக்கு ஏன் இந்த அரசுகளும், அய்.நா.மன்றமும் குரல் கொடுக்கவில்லை?

அவர் ஒரு தலித் பெண். அவர் ஏழ்மையில் உழன்றவரோ, படிக்காதவரோ அல்ல. தமது கணவரைவிட நன்கு படித்தவர். டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி ஏற்றவர். தம் குடும்பத்தின் தலைவராய் இருந்து வழிநடத்தியவர். இந்து மதத்தைத் துறந்துவிட்டு பவுத்தத்தைத் தழுவியவர். அவருடைய மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோர் கல்லூரியில் பயின்று வந்தார்கள். அவருடைய மகள் பிரியங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். சுரேகா தன் கணவரின் உதவியுடன் உழைத்து ‘கயர்லாஞ்சி’ என்னும் இடத்தில் ஒரு நிலம் (மனை) வாங்கினார். இந்த மனை அவரது ஜாதியைவிட சற்று உயர்ந்த ஜாதியாக தம்மை நினைத்துக்கொண்ட ஆதிக்க ஜாதியினரின் பண்ணைகளுக்கு நடுவில் இருந்தது.

அவர் ஒரு தலித் என்பதால், அவருக்கு நல்ல வாழ்க்கை வாழ உரிமை இல்லை என்னும் உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மையைக் கொண்ட கிராமப் பஞ்சாயத்து அவருக்கு மின் இணைப்பு வழங்க மறுத்தது. யாரும் அவரது வயலுக்கு தண்ணீர் வழங்கிடவும், தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கவும் முன்வரவில்லை. அவரது வயலின் நடுவில் பொதுச் சாலை போட முயன்றனர். அவரது வயல் பயிர்களை தங்களின் கால்நடைகளைக் கொண்டு அழித்தனர். இவற்றை எல்லாம் காவல்துறையில் முறையீடு செய்தாலும், காவல்துறையோ பிற அரசுத் துறைகளோ நடவடிக்கை எதுவும் எடுக்க-வில்லை. இதன் உச்சகட்டமாக சுரேகாவிற்கு உதவிவந்த அவரது உறவினர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டில் மட்டும் காவல்துறை சிலரை கைது செய்து பிணையில் வெளியில்விட்டது.

கயர்லாஞ்சி கிராமத்தில் பதற்றம் உச்சத்தைத் தொட்டது. ஒரு நாள் ஆண்களும் பெண்களும் திரண்டுவந்து சுரேகாவின் மகன்களை கொடுமைப்படுத்திக் கொன்றனர். சுரேகாவையும், அவரது மகளையும் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து வாய்க்காலில் புதைத்தனர்.
ஆனால், இதுபற்றிய செய்திகளோ, சுரேகா கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், கட்டுப்பாடுமிக்க அந்தக் கிராம மக்கள் அவரைக் கொன்றதாகவும் செய்தித்தாள்களில் வெளியாயின.

மலாலாவுக்கு ஏற்பட்ட கொடுமைக்காகக் குரல்கொடுத்த அமெரிக்காவோ, அய்.நா.சபையோ சுரேகாவுக்காகக் குரல் கொடுக்கவில்லை. இது ஏதோ கதையல்ல; நடந்த சம்பவம். இதற்கான காரணத்தை ஆராய்வதுதான் இக்கட்டுரை.
ஜாதி, ஜாதிக் கொடுமைகள் குறித்தும், கொலை, பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களையும், தேசிய குற்றப் பதிவுத் துறைக் குறிப்புகளின் உதவியுடன் விளக்குகிறார்.

இந்தியாவுடன் வர்ணஜாதி சிக்கலை புள்ளி விவரங்களுடனும் வரலாற்று ஆதாரங்களோடும் விளக்கும் ஆசிரியர், கால் நூற்றாண்டுக்கு முன் குஷ்வந் சிங் அவர்கள் ‘பார்ப்பனர் ஆற்றல்’(Brahmin Power)என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை மேற்கோளாகத் தந்து விளக்குகிறார்.
மேலும் ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த தகவல்களை “வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சி மய்யம்’’ தரும் தகவல்களைக் கொண்டு விளக்கிறார்.
மேலும் சமூகநீதியாளர்களின் கோட்டை எனக் கூறப்படும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செய்யப்படுகிற சமூக அநீதியையும் விளக்குகிறார்.

– பொ. அறிவன்