தலையங்கம் : சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி!

2023 தலையங்கம் ஜனவரி 16-31 ,2023

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரமும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும், பொதுவான வகையில் தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும் வகையில் வெகுநீண்ட காலமாக, டாக்டர் சர்.ஏ.இராமசாமி (முதலியார்) போன்ற அரசியல் ஆய்வறிஞர்கள் அறிக்கை தந்தும், 100 ஆண்டுகளுக்குமேல் கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், செயல்வடிவம் பெறவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் நிலுவையாகும்.
கடந்த 2004ஆம் ஆண்டில், தி.மு.க.வின் பங்களிப் போடு காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய ஆட்சி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக பொறுப்பேற்ற நிலையில், 2005ஆம் ஆண்டு, தி.மு.க.வின் தலைவர் கலைஞரால் இத்திட்டம் வற்புறுத்தப்பட்டு செயலுருக் கொள்ள ஆரம்பித்தது.

தி.மு.க.வின் சார்பில், அன்றைய கப்பல் துறை அமைச்சரான நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பேற்று, மிக வேகமாகச் செயல்பட்டார். அதன் தொடக்க விழா கூட ஜூலை 2ஆம் தேதி, 2005ஆம் ஆண்டு மதுரையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அனைத்துத் தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மக்கள் பெருந்திரள் விழாவாக நடத்தப்பட்டது. (2005, மே 19ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது).
2,427.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெற்று, அதன் கட்டுமானப்பணிகள் மிக வேகமாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன. பாக். நீரிணையில் 167 கி.மீ. கால்வாய் வெட்டப்பட்ட நிலையில், இந்தியா -இலங்கைக்கு இடையே இது அமைவதால், மேற்கே செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிப் போகாமல், பயண நேரம் 30 மணிநேரம் குறையவும் கூடும்.
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஒன்றிய அரசின் அமைச்சரயிருந்த டி.ஆர்.பாலு அவர்களது சீரிய செயல்வேகமும், அன்றைய முதலமைச்சர் கலைஞரின் இடையறாத கண்காணிப்பும், தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஊக்கத்தாலும், சேதுக் கால்வாய் அமைக்கும் பணி புயல்வேகத்தில் நடைபெற்று, ஒரு சிறு பகுதி சுமார் 12 கிலோ மீட்டர் அளவில்தான் பணிகள் எஞ்சியிருந்தன.

2009 பொதுத் தேர்தலுக்குமுன் இப்பணி நிறைவடைந்து கப்பல்கள் ஓட ஆரம்பித்தால், அந்த முழுப் பெருமையும், அரசியல் பயனும் தி.மு.க. – காங்கிரஸ் (அய்க்கிய முற்போக்கு)கூட்டணிக்கே போய்ச் சேரும் என்பதால், தமிழ்நாட்டில் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ஜ.க., சோ போன்ற பார்ப்பனர்கள், அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி என்கிற பார்ப்பனரை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, இத்திட்டத்தின் பெரும் பகுதி பணிகள் முடிந்த நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போட்டு, அரசியல் தடுப்பணை எழுப்பியது -கொடுமையிலும் கொடுமை; தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இக்கூட்டம் இழைத்த மாபெரும் துரோகமாகும்!
ஆதாம் பாலம் என்ற சுண்ணாம்புப் பவளப் பாறைகள் ஒரு சிறு பகுதியில் இருப்பதை உடைத்து, வழித் தடத்தின் கட்டுமானம் தொடர இருந்த நிலையில், அதற்குப் ‘புனித’ மதச் சாயம் பூசி, ‘‘ஆகா, இராமர் கட்டிய பாலம், அதை உடைப்பதா?’’ என்று பல பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினர்!

பாமர மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்திக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தடையாணை என்ற வாய்ப்பின்மூலம், சுமார் 2400 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்து முடியும் நிலையில் இருந்த திட்டத்தை நிறுத்தினர். இராமர் பாலம் _- சேதுக் கால்வாய் வழக்கு இன்னமும்கூட நிலுவையில்தான் இருக்கிறது.
அன்றைய முதலமைச்சர் கலைஞரும், முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், அரசிய
லுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் போன்ற பொது அமைப்புகளும்கூட நாடு தழுவிய அளவில் கண்டனக் கூட்டங்கள் போட்டு, மக்களிடையே ‘‘இராமர் பாலம் என்பது ஒரு புனைவு_ – கற்பனை-_ – அதற்குப் புவியியல் ரீதியாக
எந்தவித சான்றாவணமும் கிடையாது’’ என்று சென்னை உள்பட பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்தனர்.
இந்த மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், சேதுக் கால்வாய்_ – இராமன் பாலம் பற்றி மாநிலங்களவையில் கார்த்திகேய சர்மா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்,
‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பழங்கால இராமர் பாலம் இருந்த
தாகக் கூறப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள், தீவுகள், சுண்ணாம்புக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பாலத்தின் எச்சங்கள் எனத் துல்லியமாகக் கூற முடியாது.
மேலும், வரலாறு 18,000 ஆண்டுகளுக்கு மேலானது என்பதாலும், பாலம் 56 கி.மீ. கொண்டது என்பதாலும், அந்தப் பாலம் இருந்ததற்கான சரியான கட்டமைப்பைக் கூற முடியாது’’ என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். இதை அன்றே தி.மு.க., திராவிடர் கழகம், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற கட்சிகளும், அமைப்புகளும் தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தன!
இத்திட்டத்தினால் ஏற்படவிருக்கும் தமிழ்நாட்டு வளர்ச்சியைக் கருதி, கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு, ‘‘இராமர் பாலம் எனப்படும் பகுதியை விட்டுவிட்டு, அதற்குப்பின் பொறுப்பேற்ற பா.ஜ.க. ஆட்சி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தட்டும்; அதைக்கூட வரவேற்கத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது’’ என்று கூறினார்.

இன்றுள்ள ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி அவர்களும் இத்திட்டத்தைக் கைவிடவில்லை, செயல்படுத்துவோம் என்று உறுதியளித்தார், நாடாளுமன்றத்தில் -மக்கள் மன்றத்தில். ஆனால், இதுவரை பிரதமர் மோடி அரசில், ‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’’ முழக்கம் வளர்ச்சிக் குரல் வந்தும், அத்திட்டத்தைச் செயல்படுத்த ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே!
சேதுக் கால்வாய் என்ற தமிழன் கால்வாய் (ஆதித்தனார் வைத்த பெயர் இது) பணியை மீண்டும்
தொடங்க ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்து, சாதிக்க வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!
”இராமர் பாலம் அல்ல, அது வெறும் பவளம், சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்ட ஆதாம்பாலம்தான்” என்று நாடா ளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெளி வாகவே, இராமர் பாலம் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என்று இப்பொழுது கூறியுள்ளார்.
”மீண்டும் அந்தத் திட்டத்தை நிறை வேற்றி
முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும்” என்று தந்தை பெரியார் நினைவு நாளில், திருச்சியில் செய்தியாளர் களிடையே விளக்கமாகக் கூறியதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதலமைச்சருக்கு வேண்டுகோளும் விடுத்தோம்.
12.1.2023 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்களால் முன்மொழியப்பட்ட அந்தத் தீர்மானத்தை, ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்ததற்கு, முதலமைச்சர் அவர்களுக்கு நமதுநெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்து, முயற்சி திருவினையாகட்டும் என்று வாழ்த்துகிறோம்! நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்!!
(அந்தத் தீர்மானம் வேறு பக்கத்தில்)
உண்மையாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்புபவர்கள் ஓரணியில் நிற்காவிட்டாலும், ஓங்கியாவது குரல் எழுப்பட்டும்!