ஆசிரியர் பதில்கள்: பொது எதிரியை முன்னிறுத்துவோம்!

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜனவரி 1-15, 2023

கே: வானூர்தி நிலையங்களையும் குத்தகைவிட முடிவெடுத்துவிட்டார்கள்! ஒன்றிய பா.ஜ.க. அரசின் இம்முடிவு பற்றித் தங்கள் கருத்து
என்ன?
– கோவர்தன், வையாவூர்.

ப: இந்தத் திட்டத்தின்கீழ் ‘சர்வம் கார்ப்பரேட்மயம்’ _குறிப்பாக, அடானி, அம்பானி,டாடா மயம் விமான நிலையங்கள்,
விளையாட்டு மைதானங்கள் எல்லாம் குத்தகை என்பது ஒருபுறம்; இடஒதுக்கீட்டை ஒழிக்கும் தனியார்துறை ஆதிக்கம்
மறுபுறம். கேட்டால், விற்கவில்லை குத்தகைக்கு விடுகிறோம் என்றநிலை. நாட்டையே குத்தகை விடாமல்இருந்தாலொழிய _ 2024 தீர்வு ஏற்பட்டால் ஒழிய, நாடு மிக வேகமான கீழிறக்கம் நோக்கிச் செல்லும்.
சிறிய நாடுகள் கூட சொந்த விமான நிறுவனங்களை நடத்தி லாபம் ஈட்டுகின்றன. நம் நாட்டிலிருந்த ஒன்றும்
தனியார் மயமாகிவிட்டது வேதனை!

கே: குறுக்கு வழியிலே பா.ஜ.க. அரசியல் செய்யும் நிலையில், அக்கட்சிப் பிரதமர் மோடி “குறுக்குவழி அரசியல் கூடாது!”
என்பது நேர்மையா?
– மன்னைசித்து, மன்னை-1.

ப: ‘பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி’ என்று ஆரிய மாயையில் அறிஞர் அண்ணா
எழுதியது அதிகமாய்ப் பொருந்துவது இவரது ஆட்சிக்கே! மற்றொரு உதாரணம்_ இலவசங்கள் கூடாது என்று கூறிவருவது ஒருபுறம்! குஜராத், ஹிமாலச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலில் இலவசத் திட்டங்களைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

கே : கொரோனா பரவல் என்ற அச்சுறுத்தல் ராகுல்காந்தி நடைப்பயணத்தைத்தடுக்கும் யுக்தியா? ஏன் பெரிதுபடுத்த
வேண்டும்?
– சிவலிங்கம், வானூர்.

ப : நமது 23.12.2022 ‘விடுதலை’ அறிக்கையை அருள்கூர்ந்து படிக்கவும். விரிவான, விளக்கமான பதில் அதில் உள்ளது.

கே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற மம்தாவின் வேண்டுகோளை எப்படிப்
பார்க்கிறீர்கள்-?
– ரங்கநாதன், செங்கல்பட்டு.

ப: பொது எதிரியை மட்டும் பார்த்து இலக்கு அமையவேண்டும்.; அதில் தலைவர்கள் தங்களின் தன்னார்வத்தைக் கரைத்துவிடவேண்டும். அப்படிச்செய்தால் நமது வெற்றி உறுதி!

கே: ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எந்தப் பொருளின் விலையும் உயரவில்லை
என்று பா.ஜ.க.வினர் கூறுவது சரியா?
– தாமஸ்பெயின், தல்லாகுளம்.

ப: பகாசுரப்பொய்யர்களின் வாரிசுகள் இவர்கள்; கோணிப்புளுகன் கொயபெல்சின் ‘குருநாதர்கள்’ இவர்கள்!

கே: கருநாடகாவில் காவிமயமாக்கும் முயற்சி, காற்றுள்ளபோதே தூற்று என்று அவசர கதியில் நடக்கிறதே!
அங்கு, எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்?
– ஹென்றி தாமஸ், அரக்கோணம்.

ப : கவலைப்படாதீர்கள்! அங்கு (கருநாடகாவில்) மக்கள் தயாராகிவிட்டார்கள். ஒழுங்காக உள்ளடி வேலைகள் இன்றி காங்கிரசார் தேர்
தலில் உழைத்தால் வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கலாம்.

கே : அ.தி.மு.க.வை பி.ஜே.பி. விழுங்கா மலிருக்க அ.தி.மு.க.வினர் எப்படி
நடந்துகொள்ள வேண்டும்?
– சோமன், ஆவடி.

ப: போட்டி போட்டுக்கொண்டு பா.ஜ.க. காலில் விழாமல், தங்களது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்.
“மோடியா? லேடியா? என்று கேட்ட ஜெ.யின் குரலை மறக்கக்கூடாது. அதைவிட்டு ‘அம்மா அம்மா’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேசினாலும் அது ‘சும்மா, சும்மா’தான்!

கே : “கொலிஜியம் அமைப்பை பா.ஜ.க. எதிர்ப்பது நீதித்துறையைக் காவிமயமாக்கவே” என்ற கபில்சிபல்
கூற்று பற்றி, தங்கள் கருத்து என்ன?
– லிங்கேஸ்வரன், வேங்கைவாசல்.

ப : நூற்றுக்கு நூறு விழுக்காடு அப்பட்ட மான உண்மை இது.

கே: “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலத்திலே சில முக்கிய வழக்குகளுக்குத் தீர்வு காண
முயற்சி செய்தால் நல்லது’’ என்ற
கருத்து சரியா?
– சண்முகசுந்தரம், கவரைப்பேட்டை.

ப: நல்ல நம்பிக்கை ஏற்பட்டு, நியாயத்தராசு ஒரு பக்கம் சாயாமல் இருக்கும் என்ற நம்பிக்கை தொடருவதே, அரசியல் சட்டத்தையும் ஜனநாயகமான மக்கள் ஆட்சியையும் காப்பாற்ற உதவக்கூடும்.