தியாகம் : புரட்சியாளர் பகத்சிங்! (கி.பி. 1907-1931)

2022 செப்டம்பர் 16 -30 2022 மற்றவர்கள்

பகத்சிங் என்றால் விடுதலைக்குப் பாடுபட்டவர். தீவிரச் செயல்களில் ஈடுபட்டு, மரண தண்டனை பெற்றவர். இறுதியில் தூக்கில் இடப்பட்டவர் என்ற வகையில், என்ற வரையில்தான் அவரைப் பெரும்பாலோர் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், அவருடைய வரலாற்றில் அவை ஒரு சில பக்கங்கள். சிறு நிகழ்வுகள். உண்மையில் அவரின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும், வழிகாட்டல்களும், ஆதிக்க வர்க்கத்திற் கெதிரான அவருடைய போர்முறைகளும் இந்திய வரலாற்றில் எவரும் செய்யாதவை; வேறுபட்டவை; சரியானவை.
அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனித-நேயமற்ற முதலாளிகளுக்கு எதிராகத்தான் முக்கியமாகப் போரிட்டார். “ஈவு இரக்கமற்ற இந்தச் சுரண்டல், முதலாளிகளால், இந்திய அரசு எந்திரத்தால் நடத்தப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்று அவர் கூறி வந்தது அவருடைய இலக்கு என்ன என்பதைக் காட்டியது. இந்திய விடுதலைக்குப் பிறகும் அவரது போராட்டம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகத் தொடரும் என்று அவர் அறிவுறுத்தியிருப்பது இதை உறுதி செய்கிறது.

“கம்யூனிசத்தின் தந்தை எனப்படும் கார்ல்-மார்க்ஸ் உண்மையில் கம்யூனிசக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்றுகூட நான் சொல்வேன். அய்ரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது. அவர்-களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார். ஆனால், அவரது காலத்தின் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் முடுக்கிவிடுவதற்கு அவரும் ஒரு கருவியாக இருந்தார்…’’ என்று சொல்லக்கூடிய தெளிவும், துணிவும் 23 வயது இளைஞருக்கு இருந்தது என்றால், அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளராக, அறிவுநுட்பம் உடையவராக, உலக வரலாற்றைக் கூர்ந்து ஆய்ந்தவராக இருக்க முடியும் என்பதை எடைபோட முடியும்.

1931ஆம் ஆண்டு பிப்ரவரியில், சிறையிலிருந்து அவர் இளம் அரசியல் தொண்டர்களுக்கு எழுதியது, அவர் ஒரு முதிர்ந்த கம்யூனிஸ்ட் என்பதைக் காட்டியது. இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் முதன்மையானவரான, சிவவர்மா, “எங்கள் அனைவரிலும் பகத்சிங்கே மார்க்ஸியத்தை மிகச் சரியாக – விரைவாக உள்வாங்கியவர்’’ என்று ஒப்புக் கொண்டு பாராட்டினார். இந்தியாவில் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க முயன்றவர். காரணம், அப்போதிருந்த அரசியல் கட்சிகளில், எதுவும் அவருடைய நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

1931இல் ‘கனவுலகம்’ என்னும் கவிதை நூலுக்கு அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையில், “என்னுடைய அனைத்து முயற்சிகளுக்குப் பின்னருங்கூட, நாம் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான கொள்கைகளை உடைய எந்தவொரு புரட்சிகரக் கட்சியையும் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலருடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரகசியமாகச் செயல்பட்டது போலவே, பகத்சிங்கின் புரட்சிகர இயக்கமும் தலைமறைவாகச் செயல்பட்டது. தலைமறைவு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்திருந்தனர்.

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இந்திய நாட்டு மக்களைச் சுரண்டாமல் தடுக்க வேண்டும் என்றால், அவர்களைச் சுரண்ட அனுமதிக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களே இந்திய மக்களின் பிரதான எதிரிகள். அந்த முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைத் தட்டியெழுப்புவதே, பகத்சிங்கின் நோக்கம். இன்றுள்ள இளைஞர்கள் அப்பணியைச் செய்வதே பகத்சிங்கிற்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும். மற்றபடி அவர் படத்திற்கு மாலையிடுவதும், மரியாதை செலுத்துவதும், புகழ்ந்து பேசுவதும் செய்வதால் எந்தப் பயனும் ஏற்படாது.
பகத்சிங்கின் இந்த மறுபக்கத்தை மக்களுக்குக் காட்ட பலரும் தவறியுள்ளனர். எனவே, பகத்சிங்கின் உண்மையான இலக்கு, சிந்தனை அவரது போராட்ட முறை, அவரது பல்துறை, மற்றும் பல பிரச்சினைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள் என்ன என்பதனை ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மனிதநேயப் புரட்சியாளனும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஸீ