கண்ணீரிலும் கண்டறியலாம்!

2022 செப்டம்பர் 1-15-2022 மற்றவர்கள்

கண்ணீர் நம் உடலினுள்ளே இருக்கும் நோய்கள் குறித்துத் தெரிவிக்கின்றன என்கிறார் சீனாவிலுள்ள வென்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவப் பொறியாளர் ஃபெய் லியூ. கண்ணீர்த் துளிகளிலிருந்து கண் நோய்களைக் கண்டறியலாம். நீரிழிவு நோய்கள் குறித்த அறிகுறிகளைக்கூட காணலாம். உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றில் இருப்பதைப்போல கண்ணீரிலும் செல் குறித்த தகவல்கள் அடங்கிய மிகச் சிறிய பைகள் உள்ளன. இவற்றிலுள்ள தகவல்களை அறிய முடிந்தால் உடலினுள்ளே நடைபெறும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், உடலிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படும் மற்ற திரவங்களைப் போல் அல்லாமல் கண்ணீர் சில துளிகள் மட்டுமே சுரக்கின்றன. இவற்றிலிருந்து தகவல் பைகளைப் பிரிப்பதற்கு லியூ குழுவினர் புதிய முறையை வடிவமைத்தனர். அதை ஆய்வு செய்தபோது கண் வறட்சி நோய்களின் அறிகுறியை இந்தப் பைகள் காட்டுகின்றன என்று தெரிந்தது. மேலும் நீரிழிவு எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும் கண்காணிக்க உதவ முடியும்.
இப்போது அறிவியலாளர்கள் மற்ற நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றிற்கும் கண்ணீரில் தடயங்களைக் காண்பதற்கு முயற்சி செய்கின்றனர். கண்ணீர் என்ன தெரிவிக்கிறது என்பதை இது வரை நாம் சரியாக ஆய்வு செய்யவில்லை என்கிறார் இதன் இணை ஆய்வாளர் லுயூக்.