இலக்கியம் : நாடக வடிவில் இமையம் சிறுகதைகள்!

மே 1-15,2022

கி.தளபதிராஜ்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற இமையம் அவர்களின் ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய நான்கு சிறுகதைகளையும், ‘கதையல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கி கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை ‘மேடை’ அரங்கத்தில் அரங்கேற்றினார்.

திட்டமிட்டபடி இரவு சரியாக ஏழு மணிக்கு இரண்டாவது காட்சி தொடங்கியது.   மேடையில் மூன்று மோடாக்கள் (மூங்கில் ஸ்டூல்) மட்டும் போடப்பட்டிருந்தன. தொடக்கத்தில் இரண்டு பேர் தோன்றி அந்த நாடகக் காட்சி எந்தச் சூழலில் எங்கு நடைபெறுகிறது என்பதை ஓரிரு வரிகளில் விளக்கி பார்வையாளர்களின் கற்பனையை அந்த இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

அரங்கேறிய ஒவ்வொரு நாடகமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் பங்கேற்ற ஆண்டனி ஜானகி, மெலடி டோர்காஸ், பிரசன்னா ராம்குமார், கமல்தீப், ராகவேந்திரா, ஜென்னி பாரதி, ஜானகி சுரேஜ், ஸ்ம்ருதி பரமேஸ்வர் என அத்தனைபேரும் சிறப்பாக நடித்தனர்.

‘ஆஃபர்’, தனியார் பள்ளிகளின் வணிக மயம் பற்றியது. அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துடிப்பதை நகைச்சுவையோடு எடுத்துரைத்தது. இரண்டாவது கதை ‘மணலூரின் கதை’, தொலைக்காட்சிகள் தங்களுக்குள்ள வியாபார போட்டியில் உண்மைக்கு மாறான செய்திகளையும் புனைக்கதைகளையும் அள்ளி வீசும் போக்கை விளக்கிக் காட்சிப்படுத்தியது. மூன்றாவது கதை ‘வீடும் கதவும்’ பெண்ணுரிமையைப் பேசியது. கல்லூரி நண்பர்களான ஓர் ஆசிரியையும் பஞ்சாயத்துத் தலைவியும் பேசிக்கொள்வது போல் எடுக்கப்பட்டது. பெண்கள் பணிக்குச் சென்றாலும், தலைவர்களாகவே தேர்ந்தெடுக்கப் பட்டாலும் அவர்களை இயக்குவது ஆண்களாகவே இருக்கிறார்கள் என்பதை அழகாகச் சொன்னது. நான்காவது ‘நன்மாறன் கோட்டைக் கதை!’ எழுதியவரையே கலங்கடித்த நாடகம். தோழர் இமையம் அவ்வப்போது கண்களில் கசிந்த நீரை தன் கைக்குட்டையால் துடைத்தபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்குள் ஓட்டப்பந்தயம் நடத்தும் வழக்கம் உண்டு. ஊர்க்காரர்களின் மாடுகள் மட்டும்தான் அதில் கலந்து கொள்ள முடியும். அந்த ஊர் சேரியில் வசிக்கும் முத்துராமனும் ஒரு மாடு வளர்த்தான். தீனிக்கே வழியில்லாத நிலையில், வயிறு ஒட்டிக்கிடந்தது அது. முத்துராமனின் மாட்டைப் பார்த்த பஞ்சாயத்து தலைவரின் தம்பி எகத்தாளமாக முத்துராமனின் மாட்டையும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வைக்கச் சொல்லி வற்புறுத்துகிறான்.

அந்த மாடு வெற்றி பெறாது என்பது அவனுக்கும் தெரியும். முத்துராமன் எவ்வளவோ மறுத்தும் வலிய கலந்து கொள்ள வைக்கிறான். பந்தயத்திற்கு மாடுகள் தயார் நிலையில் இருக்க வேட்டு வைக்கப்படுகிறது. வேட்டு சத்தத்தில் மிரண்டுபோன முத்துராமனின் மாடு பயந்துபோய் எகிறி, துள்ளிக் குதித்து கூட்டத்திலிருந்து முந்திக்கொண்டு ஓடிப்போய் கோட்டைக் கடந்து விடுகிறது. கோட்டைக் கடந்ததால் முத்துராமனின் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாடு, காலனி மாடு என்று ஊராருக்குத் தெரிகிறது. ஊர்க்காரர்களால் நடத்தப்படும் பந்தயத்தில் காலனி மாடு எப்படிப் பங்கேற்கலாம் எனக் கேட்டு ஆளாளுக்கு ஆயுதங்களைத் தூக்குகின்றனர். கோபத்தில் மாடும், மாட்டுக்குச் சொந்தக்காரனான முத்துராமனும் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். அதற்கு மேலும் அந்த ஊரில் வாழ அஞ்சி அவனது மனைவி செல்வமணி தன் பிள்ளைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழை கேட்டு பள்ளிக்கூடத்தில் நிற்பதுதான் கதைக்களம்.

முத்துராமனின் மனைவி செல்வமணியாக நடித்த தெருக்கூத்துக் கலைஞர் ஜென்னி பாரதி பார்வையாளர்களை உறையவைத்துள்ளார். முத்துராமன் கொல்லப்பட்ட கொலைக் களத்தில் நாமும் இருந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அரங்கேற்றப்படுவதாக இருந்த நான்கு கதைகளுமே அதற்கு முன் நான் படிக்காதவை. கதைகளைப் படித்துவிட்டு நாடகம் பார்க்கச் செல்லலாமா என்று கூட சற்று யோசித்தேன். நாடகம் பார்ப்பதன் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும் எனக் கருதிப் படிக்கவில்லை. நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து ‘நன்மாறன் கோட்டைக் கதை’ படித்தேன். வரிக்கு வரி அந்தக் காட்சிகள் கண் முன்னே வரிசை கட்டி வந்தது.

‘நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம் சார்!’

‘திரும்பி வரமாட்டோம் சார்!’

“எனக்கும் என் புள்ளைக்கும் இந்த ஊரே வேண்டாம்னு போறோம் சார்!’

“இந்த ஊர்ல இருக்க பயமா இருக்கு சார்!’

“நாங்க உசுரோட இருக்கனும்னா டி.சி. தாங்க சார்!’

‘சுளுக்கியால் குத்திக் கொன்னுட்டாங்க சார்!’

‘மாடு முட்டிச் செத்துட்டான்னு ஊரே கூடி எழுதிக் கொடுத்தாங்க. கையெழுத்துப் போட்டுட்டேன் சார்!’

மனதை உலுக்கும் இமையத்தின் வரிகள் ஜென்னி பாரதியின் குரலில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *