உணவே மருந்து : பழைய சோறு உணவல்ல… மருந்து!

ஏப்ரல் 16-31,2022

ஒரு காலத்தில் பழைய சோறு என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட உணவு என்கிற நிலை இருந்தது. ‘தினமும் காலையில அவங்க வீட்டுல பழைய சோறுதான்’ என வசதியற்றவர்களின் குடும்பத்தைப் பார்த்துச் சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அய்ந்து நட்சத்திர விடுதிகளில் சிறப்பு உணவாக அது மாறியுள்ளது. அது மட்டுமல்ல. அது சிறந்த மருந்தாகவும் இப்போது பயன்படுகிறது. 

ஒருவருக்கு திடீர் என்று மலம் போகும், அல்லது போகாமல் இருக்கும். வாந்தி வரும். அதுக்குப் பெயர் IBS. அதாவது, இர்ரிட்டபுள் பவல் சிண்டரோம்னு சொல்வாங்க. தமிழில் வயிற்றுப் பொருமல்னு சொல்லலாம். இந்த வியாதி இருக்கிறவங்க வீட்டை விட்டே வெளியே போகமாட்டாங்க. காரணம், திடீரென்று மலம் கழிக்க வேண்டி வருமே என்ற அச்சத்தால்.

அப்புறம், கிரான்ஸ்னு ஒரு நோய். இதுல வாயிலிருந்து ஆசனவாய் வரை புண்கள் வரும். அடுத்து, Ulcerative colitisனு ஒரு நோய் இருக்கு. இதனால் பெருங்குடல் உள்ளே புண் வரும். நிறைய ரத்தமும் வரும். சிலநேரம் குடல் அழுகி,  ஆபரேஷன் பண்ணவேண்டிய நிலைகூட ஏற்படும்.

ஆனால், பழைய காலத்தில் கிராமப் புறங்களில் இந்த நோய் அறவே கிடையாது. பெரும்பாலும் பழைய சோறு சாப்பிடுகின்றவர்களுக்கு இந்த நோய் வருவதில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.  ஜங்க் ஃபுட் சாப்பிடுகின்றவர்கள், கடையில்  பாக்கெட் உணவுகள் வாங்கிச் சாப்பிடுகின்றவர்கள், பாதுகாக்கப்பட்ட மற்றும் வண்ணங்கள் சேர்க்கப் பட்ட உணவுகள் சாப்பிடுகிறவர்கள், அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்து மாத்திரைகள் எடுக்கின்றவர்களுக்கு இந்த நோய் வருவதும் ஆய்வில் தெரிந்தது.

பழைய சோற்றில், குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. பழைய சோற்றில் உள்ள எந்தப் பொருள் நம் உடலில் நோய் வராமல் பாதுகாக்கிறது என்று ஆய்வு செய்தனர்.

ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் ஜெஸ்வந்த். “நான் கடந்த பத்து ஆண்டுகளா இங்க வர்ற நோயாளிகள் கிட்ட பழைய சோறு சாப்பிடச் சொல்லிட்டு இருக்கேன். சிலர் சாப்பிட்டுட்டு உடம்பு நல்லாயிருக்குனு சொல்வாங்க.

பெருங்குடல் புண் கிரான்ஸ் நோய்கள் உள்ளவங்களுக்கு மருந்து மாத்திரைகள்ல சரியாகலனா ஆபரேஷன் பண்ண வேண்டிவரும். அவங்ககிட்ட நீங்க பழைய சோறு சாப்பிட்டு முயற்சி பண்ணிப் பாருங்கனு சொல்வேன். அப்ப நல்ல பலன் கிடைச்சது. பலருக்கு ஆபரேஷன் பண்ணாமலே முன்னேற்றம் ஏற்பட்டது. அய்.பி.எஸ். நோய்க்கும் பழைய சோறு சாப்பிட்டுப் பார்த்து நூறு சதவிகித பலன் கிடைச்சது.

“எல்லா பழைய சோற்றிலும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கு. ஆனா, தவிட்டுச் சத்து இருக்கிற அரிசியில் தேவையான, தரமான நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உருவாகும். இந்தத் தவிட்டுச் சத்து கைக்குத்தல் அரிசி அல்லது ஒருமுறை பாலீஷ் பண்ணின அரிசியில் இருக்கும்.

நாங்க சம்பா சிவப்பு அரிசியிலும், கருப்பு கவுனி அரிசியிலும் பண்ணினோம். இது ரெண்டிலும் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை ஆய்வுல கண்டறிந்தோம். அதுக்காக இதையே சாப்பிட வேண்டியதில்லை.

நாங்க மக்கள்கிட்ட நீங்க வீட்டுல எந்த அரிசியில சமைக்கிறீங்களோ அந்தப் பழைய சோறே சாப்பிடுங்கனுதான் சொல்றோம். அதன் நீராகாரத்தை அருந்தினாலே போதும். உடலுக்கு நல்லது. தண்ணீரில் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும்.

சோற்றில் இரவு நீர் ஊற்றி வச்சிட்டாலே போதும். வெயில் காலத்துல 8 மணி நேரமும் குளிர் காலத்துல 12 மணி நேரமும் வச்சிக்கலாம். மண்சட்டி, மண்பானையில் ஊறவச்சால் ரொம்ப நல்லது. ஏன்னா, கொஞ்சம் காற்றோட்டம் இருக்கணும். அப்பதான், நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உருவாகும்’’ என்கிறார்.

இரவில் மிச்சமாகும் சோற்றில் நீர் ஊற்றி, அதில் சின்ன வெங்காயத்தை வெட்டிப் போட்டு காலையில் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *