பெரியார் பேசுகிறார் : இந்தி ஏன் வேண்டாம்? ஆங்கிலம் ஏன் வேண்டும்?

ஏப்ரல் 16-31,2022

தந்தை பெரியார்

மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்-பட்டு, மாகாண சுயாட்சி முறையும் ஏற்படுவது நிச்சயமாயிருக்கும்போது, இந்தியாவுக்குப் பொதுமொழி ஒன்று அவசியந்தான் என்பதே விவாதத்திற்குரிய விஷயம். தென்னிந்தியாவுக்கு வியாபாரத்திற்கும், வேறு வேலைகளுக்கும் வருகின்ற வடநாட்டார் எவ்வாறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களோ அதேபோல், வட நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய திராவிடர்களும், அங்கே வேலைக்குச் செல்லவேண்டியவர்களும் இந்தியைக் கற்றுக்கொண்டாலே போதும். இதைத் தவிர, உலகமொழியாகிய ஆங்கிலத்தை அறவே ஒழிப்பதென்பது முடியவே முடியாது. அப்படி ஒழித்தால், நாம் உலகிலேயே மிகப் பிற்போக்கான மனித சமுதாயமாகி விடுவோம் என்பது முக்காலும் உறுதி.

ஏனெனில், உலகில் சுமார் 26 கோடி மக்கள், அதாவது உலக மக்களில் எட்டில் ஒரு பங்குப்பேர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்; உலகிலுள்ள பத்திரிகை-களில் சரிபாதிக்கு மேற்பட்டவை ஆங்கிலத்தில் வெளிவருகின்றன; உலகிலுள்ள ரேடியோ நிலையங்களில் 5இல் 3 பங்குக்குமேல் ஆங்கிலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்-படுகின்றன. இதைத்தவிர, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பல இலட்சக்கணக்கான மக்கள் அறிவு, ஆராய்ச்சி, இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் விரைவில் முன்னேறுவதற்காக ஆங்கிலத்தைப் பயின்று வருகின்றனர்.

எனவே, ஆங்கிலத்தை அறவே புறக்கணிக்க முடியாதென்பது நிச்சயம். உலக மொழியாகிய ஆங்கிலத்துடன் இந்தியப் பொதுமொழி என்று கூறப்படும் இந்தியையும் கற்றுக்கொண்டு, அவர்கள் தாய்மொழியையும் கற்கவேண்டு-மென்றால், மொழிகளைத் தவிர்த்த, இதர கலை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது முடியக்கூடிய காரியமா? யோசித்துப் பாருங்கள்

– தந்தை பெரியார், விடுதலை, 20.9.1946

«««

இந்தியாவுக்கு பொது மொழி ஆங்கிலம்!

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டு-மானாலும், அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து, அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டு-மேயல்லாமல், வேறு மொழியைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.

ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக விஞ்ஞான மொழி; இந்திய அரசாங்க மொழி; அதுமாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனியமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும்.

– தந்தை பெரியார், குடிஅரசு, 20.1.1929

«««

ஆரிய கலாச்சாரத்தைப்

புகுத்தவே சமஸ்கிருதம்!

சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமைகொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை _- அத் தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் – ஈனப்பிறவி ஆக்கினர். அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சட்டம் செய்துகொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி அதன்மூலம் ஆரியர் கருத்துகளைப் புகுத்தி – அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்-கிறார்கள். ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துகளை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்-திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறிவந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில் கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக்-கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரி-களில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காகப் போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துகள்தாம் வளர்ச்சியடையுமேயொழிய, ஆபாச அறிவுதான் வளர்ச்சியடையுமேயொழிய. பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப் படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய் விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில்.  உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துகளை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு) – ‘விடுதலை’, 16.1.1950

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *