ஆசிரியர் பதில்கள்! : மில்லியன் டாலர் கேள்வி!

ஏப்ரல் 1-15,2022

கே:       மதச்சார்பற்ற நாட்டில், பள்ளிகளில் பகவத் கீதையைப் பாடமாக வைப்பது சட்டப்படி ஏற்புடையதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

– க.மாரியப்பன், தாம்பரம்

ப:           ‘மதச்சார்பின்மை’ அரசியல் சட்டத்தின் ஏட்டுச் சுரைக்காய்தான்; அதைக்கூட இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசின் சார்பில் குடியரசு நாளில் வெளியிட்ட முழுப் பக்க விளம்பரத்தில் எடுத்துவிட்டார்கள்!

               நடைமுறையில் இப்போது ‘ஹிந்து ராஷ்டிரத்தை’ கூச்சமின்றி நடத்துகிறார்கள்.

               இந்திய அரசியல் சட்டத்தை ஹிந்து ராஷ்டிர கரையான்கள் அரித்து பல பக்கங்களைக் காணாமல் அடித்து விட்டனவே!

               மக்களின் விழிப்புணர்வும், எதிர்க்-கட்சிகளின் ஒற்றுமையும் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.

கே:       “காஷ்மீர் பைல்ஸ்’’ திரைப்படம் மதவெறியைப் பரப்பக் கூடியதாய் இருக்கையில் அதைப் பிரதமர் ஆதரிப்பது அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது அல்லவா?

– மகிழ், சென்னை

ப:           மேலே சொன்ன பதிலே இதற்கும்!

கே:       இலங்கையிலிருந்து பஞ்சம், பட்டினியால் தமிழ்நாட்டை நாடும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன செய்ய வேண்டும்?

– தா.சீதாலட்சுமி, காஞ்சி

ப:           அவர்களைச் சிறை பிடித்தால்கூட அங்கே அவர்களுக்குப் பாதுகாப்பும் வேளாவேளைக்கு உணவும் கிடைக்குமே என்று அந்த ஏதிலிகளான எம் தொப்புள் கொடி உறவுகள் ஏங்கித் தவிக்காமல், அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் _ மனிதாபிமான அடிப்படையில் இனவுணர்வு உரிமையும் உறவும் உள்ளது என்றாலும்கூட!

கே:       இந்து சமய அறநிலையத் துறையை, திராவிட ஆட்சியினர் எப்படிக் கையாள வேண்டும் என்று நெறிமுறைகளை, கொள்கைக்குக் குந்தகம் இல்லாமல் தாய்க்கழகம் வகுத்துக் கொடுத்தால் என்ன?

– அ.தமிழரசன், வேலூர்

ப:           முதலில் அந்தத் துறையைக் காப்பாற்றி, நிலைக்க வைப்பதே அனைத்து திராவிட உணர்வாளர்கள் கருத்து. ஆரியம் அதனை ஒழித்து திராவிடர் ஆட்சிக்கு முந்தைய பார்ப்பனியக் கொள்கை ராஜ்யத்தை நிறுவிடச் செய்யும் முயற்சி-களைத் தோற்கடிக்க வேண்டும். தீயணைப்புப் போல இதுவே முன்னுரிமை!

கே:       குறிஞ்சான் குளம் ஜாதியப் பிரச்சனை 30 ஆண்டுகளுக்குப் பின் தூண்டப்-படுகிறதே! பார்ப்பன ஏடுகள் நெய் ஊற்றுகின்றனவே! தடுக்க தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

– வா.புருஷோத்தமன், வந்தவாசி

ப:           ஆணவக்கொலை, ஜாதி வெறுப்பு மோதல் தூண்டலைக் கடுமையாகத் தடுக்க, ஒழிக்க தனியே ஒரு சட்டமோ, ஆணையோ பிறப்பிக்க முன்வர வேண்டும்.

கே:       பள்ளி மாணவர்களிடையே எந்த மத அடையாளமும் கூடாது என்பதுதானே சரி? உடை மட்டும் ஒரே மாதிரி என்பது எப்படிச் சரியாகும்? இந்துக்கள் அடையாளம், சீக்கியர் அடையாளம் மட்டும் அனுமதிக்கப்படுவது சரியா? நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

– பா.தணிகைவேலன், அரக்கோணம்

ப:           மிலியன் டாலர் கேள்வி. பதில் அளிக்க வேண்டியவர்கள் காவியினரே! ஒரு குலத்துக்கொரு நீதி _ மனுநீதி ஆட்சிதானே காவிகள் ஆட்சி _ புரிகிறதா?   

கே:       பகத்சிங்கைத் தூக்கிப் பிடிக்கும் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் உண்மையாக இணைந்து நிற்பாரா? அல்லது எல்லாமும் அரசியல் வித்தைகளா?

– சதாசிவம், குறிஞ்சிப்பாடி

ப:           அன்னா ஹசாரே என்ற விளம்பரப் பதாகையைப் பிடித்து வேடமிட்டவர், இப்போது ‘பகத்சிங்’ பெருமையால் தன்னை வளர்க்கத் திட்டமிடும் பா.ஜ.க.வின் டிரோஜன் குதிரை இவர்! பலே கில்லாடி _ தந்திரமூர்த்தி போற்றி! போற்றி! ஒப்பனை சில காலம் கழித்து கலையும்! சமூகநீதியில் அவர் கொள்கை என்னவென்று முதலில் விளக்கட்டுமே!

கே8:     பிரபல ரவுடிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் பெரும்பாலும் பி.ஜே.பி.யில் இருக்கிறார்கள் அல்லது இணைகிறார்கள். ஏன்?

– குமரன், குன்றத்தூர்

ப:           ஒன்றிய அரசு பாதுகாப்பு _ பதவிகள் ‘பவிசுகள்’ _ கிடைக்கும் உடனடியாக என்பதால்!

கே:       மேகதாது அணை கட்டும் கருநாடக முயற்சியை சட்டப்படி தடுக்க தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

– சசிகுமார், செஞ்சி

ப:           மக்கள் போராட்டம், ஒன்றுபட்ட கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் எல்லா முனைகளிலும் கடுமையாக எதிர்ப்பு _ போராட்டங்களை நடத்திடுவது அவசியம் _ அவசரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *