முகப்புக் கட்டுரை : ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பறிக்கவே ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையும் நுழைவுத் தேர்வும்!

ஏப்ரல் 1-15,2022

மஞ்சை வசந்தன்

 

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போட்டு, ஒடுக்கப்பட்டோர் கல்வியைப் பறிக்கும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது  என்று கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

திராவிடர் கழகம், தி.மு.கழகம் போன்ற சமூகநீதியில் அக்கறையுள்ள இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக ஒன்றிய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில், ஒன்பது பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.

‘உலகம் முழுவதுமே, பின்லாந்து போல கல்விச்சூழலை உருவாக்க வேண்டும்’ என்று கூறப்படுகிறது. அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேர்கிறார்கள். ஏழு வயதில்தான் முறையான கல்வி தொடங்குகிறது. ஆனால், நம் தேசியக் கல்விக் கொள்கை, மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக் கல்விக்குள் கொண்டு வருகிறது. இது பிஞ்சு உள்ளத்தையும் உடலையும் கேடுறச் செய்யும்.

கிராமப்புற ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதில் அங்கன்வாடிக்குப் போய் சத்துமாவு உருண்டையும் சத்துணவும் முட்டையும் சாப்பிட்டபடி பொழுதைப் போக்குகின்றன. ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பில் இந்த அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரவேண்டும் என்பதுதான் இந்த அங்கன்வாடிகளின் இலக்கே தவிர, கல்வி தருவது அல்ல! அதனால், பெயரளவில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அங்கன்வாடிப் பணியாளர்கள் யாரும் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.

ஒருபுறம் அங்கன்வாடியில் அடைக்கலம் புகும் ஏழைக் குழந்தைகள். இன்னொரு பக்கம் நகர்ப்புற பணக்காரக் குழந்தைகள், மூன்றரை வயதில் உயர்தரமான கான்வென்ட்டில் எல்.கே.ஜி படிக்கப் போகிறார்கள். அங்கன்வாடி குழந்தைகள் இவர்களுடன்தான் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் போட்டியிட வேண்டும்.

ஒன்றிய அமைச்சரவை 29.7.2020 புதிய கல்விக் கொள்கைக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை:

1.            புதிய கல்விக் கொள்கையானது ஆரம்ப நிலைக் கல்வி, தொடக்க நிலைக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என்று மாணவர்களை 4 முறையில் வகைப்-படுத்துகிறது.

2.            தற்போது 6 வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி என்று இருப்பது 3 வயது முதல் 18 வயது வரை என மாற்றப்படும்.

3.            பள்ளிக்குச் செல்லாத 2 கோடிக் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வழங்கப்-படும்.

4.            புதிய 5+3+3+4 பள்ளிப் பாடத் திட்டம் 12 ஆண்டுகள்

5.            பள்ளிப் படிப்பு மற்றும் 3 ஆண்டு அங்கன்வாடி, மழலையர் பள்ளிப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

6.            6ஆம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வி தொடங்கப்படும்.

7.            5ஆம் வகுப்பு வரையில் தாய்மொழி, பிராந்திய மொழியில் பயிற்றுவிக்கப்படும்.

8.            பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் மும்மொழித் திட்டம் வழங்கப்படுகிறது.

9.            3, 5, 8ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும், உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள்.

10.         ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், பகல் நேர உறைவிடப் பள்ளியாக, பால பவன்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

11.         தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

12.         டிஜிட்டல் கல்வி முறை விரிவுபடுத்தப்படும்.

13.         2030-ஆம் ஆண்டிற்குள் கற்பித்தலுக்கான குறைபட்ச பட்டத் தகுதி நான்கு ஆண்டு பி.எட். பட்டமாக இருக்கும்.

14.         எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படும்.

15.         பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

18.         கல்விக்கு ஜி.டி.பி.யில் 6 சதவிகிதம் நிதி கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடுபற்றியும், புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்-பட்டுள்ளது.

குருகுலப் பள்ளி முதல் சர்வதேசப் பள்ளி வரை இந்தியாவில் ஒன்பது விதமான பள்ளிகள் உள்ளன. கரும்பலகையும் ஆசிரியர்களும்கூட இல்லாத பள்ளிகள் ஒரு பக்கம்; ஸ்மார்ட் வகுப்பறைகளும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களும் கொண்ட பள்ளிகள் இன்னொரு பக்கம். இங்கு சம வாய்ப்பு எப்படி வரும்? அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைப்பது பெருமளவு நிதி தேவைப்படும் விஷயம். அதை செலவிடுவது மாநில அரசா, மத்திய அரசா? ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன. புதிய ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்?

மூன்றாம் வகுப்பு முதல் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கும். உயர்கல்வி சார்ந்த கொள்கைகளும் இப்படித்தான் உள்ளன. அய்ந்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை, அதற்குப் பிறகு இரண்டு முறை தேர்வு வைக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழிற்கல்வி கற்க வேண்டும்.

இது இடைநிற்றலை அதிகரிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி வரை படிப்பைத் தொடர இயலாமல் செய்யும்!

அந்தந்த மாநில அரசுக்கு என்று கல்விக்கொள்கை, திட்டங்கள் விலக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுவான ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டுவருவது. இதனால் மாநில கல்வி உரிமைகள் பறிபோகும்.

கல்வியை பன்னாட்டு அளவில் வணிகமய மாக்குவது; இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பெறுவது என்பது எட்டாக்கனியாகத் தான் போய் முடியும்.!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது. அதற்கென அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களைத் தான் அணுக வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படும். அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (NHERA-National Higher Education Regulatory Authority) அமைக்கப்படும். உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் ஒரே அமைப்பாக இது இருக்கும். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ) போன்ற அமைப்புகள் வெறுமனே தொழில்நுட்பத் தரத்தை வரையறுக்கும் அமைப்புகளாக மட்டுமே இருக்கும்.

கல்லூரிகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெறும் முறை ஒழிக்கப்படும். ஒவ்வொரு உயர்கல்வி நிலையமும் சுயேச்சையாகச் செயல்படும். வரும் 2032ஆம் ஆண்டுக்குள் கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகவோ, தனி பல்கலைக்கழகமாகவோ மாறிவிட வேண்டும். அல்லது ஏதாவது பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட வேண்டும்.

திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தராத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் மோடி. இப்போது ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் என்ற பெயரில், தேசிய கல்வி ஆணையம் அமைய உள்ளது. பிரதமர்தான் இதன் தலைவர். கல்லூரி அங்கீகாரம் தருவது முதல் கல்வி உதவித் தொகை தருவது வரை இந்தியாவில் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் எல்லா அமைப்புகளும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இந்த அமைப்புக்கு வழிகாட்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்படும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் இதில் இருப்பார்கள். எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப் படுவார்கள் என தேசிய கல்விக் கொள்கை எதையும் சொல்லவில்லை.

கல்வியில் சீர்திருத்தம் செய்ய, பரிந்துரை செய்ய கல்வியாளர்களை அமர்த்த வேண்டும். அதை விட்டு அண்டவெளி ஆய்வாளரை அமர்த்தினால் அதன் நோக்கம் என்ன? ஆர்.எஸ்.எஸ். நோக்கத்திற்கு ஏற்ப அறிக்கை தர ஆள் அமர்த்தப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் நோக்கப்படி, எதிர்பார்த்தபடி, இட்ட கட்டளைப்படி அறிக்கை அளிக்கப்பட்டு விட்டது.

முன்னமே ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி முடிவு எடுத்துவிட்டு, செயல் திட்டங்களை அமல்படுத்த கல்விக்குழு, அறிக்கை என்று நாடகம் நடத்துகிறார்கள்!

கல்வி முறையில் மாற்றம் என்பது தலைமுறை மாற்றம், கருத்து மாற்றம், கலாச்சார மாற்றம், வளர்ச்சி மாற்றம், அறிவு மாற்றம் என்று ஆயிரமாயிரம் மாற்றங்களுக்கு அடித்தளமானது.

எனவே, மாநில அரசுகளைக் கலந்துபேசி, மாநிலங்களுடைய ஒப்புதலுடனேதான் கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை கல்வியை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அடித்தட்டு மக்களின் கல்வியைப் பறிப்பதையும், அவர்களைப் புறக்கணிப்பதையும், அவர்- களுடைய கல்வி வாய்ப்பைத் தடை செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

கல்வியை கார்ப்பரேட் மயமாக்கி, உயர்ஜாதிக்கும், பணக்காரர்களுக்கும் உரியதாக்கி, அடித்தட்டு மக்களின் பிள்ளை-களை அடிமை வேலைக்குத் தள்ளும் வஞ்சகத் திட்டம் இது.

நுழைவுத் தேர்வு என்னும் பெயரில் அடித்தட்டு, கிராமப்புற மாணவர்களை கல்வி வேலை வாய்ப்புகளில் நுழைய விடாமல் செய்யவும்; இடஒதுக்கீட்டு உரிமையை ஒழித்து ஒடுக்கப்பட்பட்டோரை மேலெழாமல் செய்யவும்; சமஸ்கிருதத்தை கல்வி நிலையங்களில் நுழைத்து அதை ஆட்சி மொழியாக்கவும், மாநில மொழிகளை ஒழித்துக் ஒற்றை மொழியை நடப்பில் கொண்டுவரவும், பன்முகக் கலாச்சாரங்களை ஒழித்து ஒற்றை (ஆரிய) கலாச்சாரத்தைத் திணித்து அனைவரையும் ஏற்கச் செய்யவும்; மாநில உரிமைகளை அறவே பறித்து அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரவும் அடித்தளம் அமைத்துக் கட்டமைப்பதற்கான அப்பட்ட-மான சதித்திட்டமே இப்புதிய கல்விக் கொள்கை.

எனவே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ள மக்கள் மதம், மொழி கடந்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நின்று இந்த புதிய கல்வித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப் போராட வேண்டும்.

ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைமொழி, ஒற்றை ஆட்சி, ஒற்றை மதம் என்ற பாசிச வன்கொடுமையைத் தகர்த்து நொறுக்கி தனி மனித உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

இது தலைமுறை சார்ந்த வாழ்வா சாவா போராட்டம். எனவே, அதன் கட்டாயம் கருதி அனைவரும் உறுதியுடன் போராடி வெற்றி பெற வேண்டியது கட்டாயம்! வெற்றி பெறுவோம்!

அனைவருக்கும் உயர்தரக்கல்வி வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவுமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு நேரடியாகப் பங்களிக்கும் விதமாக இந்தியை மய்யமாகக் கொண்ட கல்வி முறையாக தேசியக் கல்விக்கொள்கை 2019 (வரைவு) தூக்கி நிறுத்தப்படுகிறது. ஆனால், அதன் உண்மையான நோக்கம் உயர்ஜாதி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும கல்வி கிடைக்க வழி செய்துவிட்டு, ஒடுக்கப்பட்ட மாணவர்களை குலத்தொழிலைச் செய்ய தள்ளிவிடும் தந்திரமேயாகும்!

தொழிற்கல்வி முறையா? குலக்கல்வி முறையா?

வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி: பல்வேறு தொழில்கள் 3, 4, 5 வகுப்புகளில் குழந்தைகளுக்கு தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை குறித்து அருகில் உள்ள பயிற்றுநர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆண்டு முழுவதும் மரவேலை, மின்துறை சார்ந்த வேலை, தோட்டக்கலை, மண்பாண்ட வேலைகள், விவசாயம் கற்றுக்கொடுப்பது, கல்வி உரிமைச்சட்டம், 18 வயது குழந்தைகள் கல்வி கற்பது. இந்தக் கொள்கை அதை ஒழித்து தொழிற்கல்வி என்கிற பெயரில் வர்ணாசிரமக் கல்வி முறையை மீண்டும் உருவாக்குகிறது.

தேர்வுமுறைகள்: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடைபெறும் பொதுத் தேர்வுடன் நிறுத்தாமல் 3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அரசுகளால் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும். கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ளபடி கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தாமல் தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு 8ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பை தொடரவிடாமல் செய்வதே இந்த தேசிய கல்விக் கொள்கையின் உள்நோக்கமாகும்.

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்து கருத்தறியாமல் ஒன்றிய அமைச்சரவை இக்கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது சரியல்ல.

இந்தப் புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம்தான் நுழைவுத் தேர்வு என்னும் சதித்திட்டம். மருத்துவ படிப்பில் துவங்கி, தற்போது பட்டப்படிப்புக்கும் பரந்து விரிந்து ஆக்டோபஸ் போல அடித்தட்டு மக்களை விழுங்கத் துடிக்கிறது.

அனைத்து உயர்கல்விக்கும் நுழைவுத் தேர்வு என்னும் ஆபத்து!

பல்கலைக்கழக நிதி நிலைக்குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்-படிப்புகளுக்கான சேர்க்கை 2022_-23ஆம்- கல்வியாண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி.) மூலம் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு போல, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு, புதிதாக ‘கியூட்’ (CUET) என்ற ‘பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு’ (The Common University Entrance Test – CUET)நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் இனிமேல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்-களைச் சந்தித்த ஜெகதீஷ் குமார், “2022_23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமைநடத்தும் ‘கியூட்’ தேர்வு மூலமே மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும், இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12ஆம் வகுப்பு ‘என்சிஇஆர்டி’ (National Council of Educational Research and Training – NCERT) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். ‘பிரிவு_1ஏ’, ‘பிரிவு_1பி’, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என ‘கியூட்’ நுழைவுத் தேர்வு இருக்கும்.

இத்தேர்வை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் ஏற்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி கண்டனம்

மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடும் வகையிலான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (என்.சி.இ.ஆர்.டி.) பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் படித்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்காது. இதனால், தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஏற்கனவே ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு போராடி வரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புக்கான சேர்க்கைக்கும் பொது நுழைவுத் தேர்வு அறிவித்திருப்பது மாணவர் நலனுக்கு முற்றிலும் விரோத-மானதாகும்.

ஏற்கெனவே, 2006ஆ-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருந்ததை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அந்தச் சட்டம் 15.03.2007 அன்று நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின்படி மேற்கண்ட தொழிற்கல்விப் பிரிவுகளில் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்-பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள். எனவே, தி.மு.க. அரசு, எப்போதும் நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தே வந்துள்ளது.

இந்த புதிய நடைமுறையால் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்-கழகங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது.

மேலும், ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற முறையில் நடத்த இருக்கிற இத்தேர்வு, பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகும். இதனால் பயன்பெறப்போவது தனியார் பயிற்சி மய்யங்கள்தான்.

மாணவர்கள், 1ஆ-ம் வகுப்பு முதல் 12ஆ-ம் வகுப்பு வரையிலான பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை எட்டிய பின்னரும், அப்பட்டப்படிப்புக்கான சேர்க்கைக்கு மீண்டும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் என்பது கேலிக்கூத்தான நடவடிக்கையாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்-பட்டியலில் கல்வி இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கல்விக் கொள்கைகளை வகுக்கும் போதும், அதனை நடைமுறைப்-படுத்தும் போதும், மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். ஆனால், மாநில அரசின் நிலை மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கை. எனவே, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிப்படையச் செய்யும் இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.’’

“மாநில கல்விக் கொள்கையை வகுத்திட இம்மாத இறுதிக்குள் அரசின் சார்பில் குழு அமைக்கப்படும்’’ என்றும், “ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய கல்விச் கொள்கையை கழக அரசு எந்நாளும் உறுதியோடு எதிர்க்கும்.’’

“தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை அளிக்காது. இதனால், தமிழ்நாடு மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஏழை நடுத்தர மாணவர்கள், சமூகரீதியில் பின்தங்கிய மாணவர்களின் நலனை அச்சுறுத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு போன்றே தவறான நடைமுறையாகும்’’ என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.

ஆசிரியர் அறிக்கை

புதிய கல்விக் கொள்கை மற்றும் நுழைவுத் தேர்வுகளைக் கண்டித்தும் எதிர்த்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.

“ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நிறை-வேற்றப் பட்டுள்ள ஒன்றிய அரசின் ‘‘புதிய கல்விக் கொள்கை’’ என்ற திட்டம் இப்போது திணிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை!

சமூக அநீதிக்கு சிவப்புக் கம்பளமா?

பெயர் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை’ – சரக்கோ பழைய குலதர்மம் _- சமூக அநீதிக்குக் சிவப்புக் கம்பளம் விரிக்கும் பிற்போக்குத் திட்டம்!

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் திணிப்புக் கல்விக் கொள்கை திட்டத்தை வகுத்தவர்களில் பிரபல – அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் ஓரிருவர்தான்.

முதலில், ஓர் ஓய்வு பெற்ற பார்ப்பன அதிகாரி சுப்ரமணியம் அய்.ஏ.எஸ்.

அடுத்து, அதை சரிப்படுத்த அணுசக்திக் குழுவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் – கஸ்தூரிரெங்கன், சிறீரங்கத்துப் பார்ப்பனர்.

1. இந்தக் கல்விக் கொள்கை முழுவதும் மத்திய மயமாக்குதல்(Centralisation)

2. வணிக மயம் (Commercialisation)

3. கார்ப்பரேட் கல்வியாக ஆக்குதல் (Corporatization)

இவைதான் அந்த திரிசூலங்கள்.

அடியிலிருந்து திட்டம் வகுத்தால், பங்களிப்பு இருந்தால், எத்திட்டமும் வெற்றியடையும்.

இதுவோ அதற்குப் பதிலாக முடி-யிலிருந்து கீழே உத்தரவு போடும் விசித்திரக் கல்வித் திட்டமாக உள்ளது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

AICTE, UGC போன்ற அமைப்புகளையே முதலில் ரத்து செய்து, எல்லாம் ஒன்றிய அரசுக்கே என்று முதலில் தொடங்கி, இப்போது இந்த இரு அமைப்புகளும் மாறி, மாறி நாளுக்கொரு ஆணை, வேளைக்கொரு சுற்ற றிக்கை வெளியிடுவதால், கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக, நாளும் மூச்சுத் திணறலில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஒரு கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டம் கூறும் விதி.

நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி  ஒத்திசைவுப் பட்டியலுக்குப் போனது!

ஆனால், அவ்வரசமைப்புச் சட்டத்தின்-படி நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, ஒத்திசைவுப் பட்டியலுக்கு (மாநில அரசும், ஒன்றிய அரசும் சட்டங்கள் செய்து-கொள்ளும் அதிகாரப் பட்டியல்) மாற்றப்பட்டதே தவறு என்று அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் குரல் ஓங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கல்வியை  முற்றாக யூனியன் பட்டியலுக்கே கொண்டு சென்றுவிட்டதாக -அரசமைப்புச் சட்ட விதிகளையே புறந்தள்ளி நடந்துகொண்டு, இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதை வகுத்து செயல்படுத்தத் துடியாய் துடிக்கின்றார்கள்!

அத்திட்டத்தில், சமூகநீதிபற்றியோ, பெண் கல்விக் குரிய முக்கியத்துவமோ தராமல், பழைய குலக்கல்வித் திட்டத்தை வேறு பெயரிட்டு, புண்ணுக்குப் புனுகு பூசுவதைப்-போல அழைக்கின்றதோடு, சமஸ்கிருதத் திணிப்புடன் பண்பாட்டு படையெடுப்பை பச்சையாக பகிரங்கப்படுத்தி நடத்திடத் துணிந்துவிட்டனர்!

ஏழை – எளிய மக்களின்  வயிற்றில் அடிக்கும் ‘நீட்’ தேர்வு

‘நீட்’ தேர்வு என்பதை மருத்துவக் கல்வி பட்டப் படிப்பு, மேற்பட்டப் படிப்பு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி எல்லாவற்றிலும் திணித்து, ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அறவே பறித்துவரும் நிலையில், இந்தக் கல்வித் திட்டத்தை மேலும் விரிவாக்கி, பட்டப் படிப்பு எதுவானாலும் இனி, நுழைவுத் தேர்வு இல்லாமல் உள்ளே நுழைய முடியாது என்ற பன்னாடை வடிக் கட்டல் முறைமூலம் உயர்ஜாதி _ உயர்வர்க்கத்-தினருக்கு மட்டும் இனி கல்வி ஏகபோக-மாகும் உத்தியை, சூழ்ச் சியை அமலாக்கத் துடித்து, அறிவித்தும் வருவது கடுங் கண்டனத்திற்குரியதல்லவா? இரண்டு பறிப்புகள் இது.

பல்கலைக் கழக மானியக் குழுவின்  புதிய அறிக்கை!

மத்திய பல்கலைக் கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு எழுதி, வெற்றி பெறாமல் எந்தப் படிப்பையும் படிக்கவே முடியாது என்று 21.3.2022 அன்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் அறிவிப்பு விடுத்துள்ளது எவ்வளவு கொடுமையானது!

பல்கலைக் கழகங்களில் இனிமேல் ‘ஆய்வுப் பட்டங்களுக்காகப் பதிவு செய்பவர்களை பல்கலைக் கழகமே அனுமதித்து, தேர்வு செய்யும். பல்கலைக் கழக சுயாட்சி (University Autonomy) முறை அழிக்கப்பட்டு, இனிமேல் ஒன்றிய அரசுதான் அதற்கான அனுமதியை வழங்கும் என்றால், இதன்படி அரசமைப்புச் சட்ட உரிமைப் பறிப்பு, பல்கலைக் கழகங்களின் உரிமைகள், மாநில அரசுகளின் உரிமையும் பட்டாங்கமாகப் பறிக்கப் படுகிறதல்லவா? மக்களாட்சியில் இப்படி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற இவர்கள் எடுத்த உறுதிமொழி காற்றில் பறக்கலாமா?

பார்ப்பனிய ஆதிக்க முதலைகளை  விரட்டுவோம்!

இதனை நம் மக்களிடையே தெளிவு-படுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகநல விரும்பிகள், மாநில அரசுகள் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுத்து, முறியடித்து, கல்வி நீரோடையில் புகுந்துள்ள இந்த பார்ப்பனிய முதலைகளை விரட்டாவிட்டால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்ட காலம்தான்!

எச்சரிக்கை! பெற்றோரே, கவனம்! கவனம்!!

என்று தமிழர் தலைவர் ஆசிரியர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்கள். எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையையும், நுழைவுத் தேர்வுகளையும் செயல்படுத்தாமல் தடுக்க சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும், அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *