நூல் மதிப்புரை: வாழ்வியல் குறள் வெண்பா

மார்ச் 16-31,2022

ஆசிரியர்: சுப.முருகானந்தம்

வெளியீடு: கீழடி வெளியீட்டகம்,

மனை எண்: எஸ்-2, இரண்டாம் தளம்,

சாயி அடுக்ககம், இராம் நகர் ஆறாவது தெரு,

வேளச்சேரி, சென்னை-42.

கைப்பேசி: +91 77022 85544

திருவள்ளுவரின் திருக்குறள் _ உலகமே ஒப்பக் கூடிய வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாகும். அத்தகைய குறள் வெண்பா மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’யில் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற வாழ்வியல் சிந்தனைகளை நுணுகி, அணுகி, ஆராய்ந்து, தெளிவுற்று, தேர்ந்து, அவற்றுக்குப் பொருத்தமான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை குறள் வெண்பா மூலம் அழகுறச் செதுக்கியுள்ளார், இந்த நூலாசிரியர் சுப.முருகானந்தம். அகர வரிசைப்படி தலைப்புகள் அமைக்கும் புதிய முறையைக் கையாண்டுள்ளார்.

இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல் புதுக்கவிதைகள், ‘ஹைக்கூ’ எனக் கண்டவை-பற்றிக் கண்டபடி வரம்பின்றி மரபின்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்போர்க்-கிடையே இப்படி ஓர் இலக்கணச் செறிவுடைய குறட்பாக்கள் யாத்து அளிப்பது என்பது மிகக் கடுமையான பணியாகும்.

ஒரு குறளும், அதற்கேற்ப ஆசிரியர், தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைக் கருத்தையும் நூற்றுக்கணக்கான குறட்பாக்களுடன் எடுத்தாண்டு சாலப் பொருத்தமாக அமைத்துள்ளார். அவற்றுள் சில:

வாழ்வியல் சிந்தனை:

“பிள்ளைகள் மழலைப் பருவத்தில் அர்த்தமற்ற பல கேள்விகளைப் பெற்றோர்-களிடம் கேட்டபோதெல்லாம் பொறுமையுடன் சமாதானமாகப் பதில் சொல்லியிருப்பார்கள். அதேபோல பெற்றோரின் முதுமைப் பருவத்தில், நரை, திரை வந்து வயதான காலத்தில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிள்ளைகள் மென்மையாகப் பதில் சொல்ல வேண்டும்’’ என்பதற்கு,

“ஆகாத கேள்விக்கும் ஆனபதில் தந்தார்முன்

வேகாத சொல்வது வீண்’’

என்னும் குறட்பா மூலம் ‘இளையோர் கடன்’ என்னும் பகுதியில் பிள்ளைகளுக்கு அறிவுரை-யாகவும்,

யாரை நண்பர்களாகக் கொள்ள வேண்டும் என்பதை,

“உண்மையை நாடும் உயர்குண நாயகர்தம்

நண்பராதல் நாளும் மகிழ்வு’’

என்னும் குறள் வடித்து,

“வாழ்க்கை இன்பத்தை நுகர வேண்டு-மானாலும், வாழ்க்கை சலிப்பு, சங்கடம் இவைகளை மட்டுமே சந்திக்கும் சமர்க்களமாக இல்லாது இருக்க வேண்டுமானாலும், ஏராளமான உண்மை நாடும் நாயகர்களான நண்பர்களைப் பெற வேண்டும்’’

-_ என்கிற ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனையில் இருந்து எடுத்து மெருகூட்டியுள்ளார்.

வாழ்வின் மகிழ்வே அறத்தொண்டால்தான் என்பதை,

“நாளும் அறத்தொண்டால் நாட்டிற்குப் பற்றுவை;

நீளும் வரவாம் மகிழ்வு’’

என்னும் குறட்பா யாத்து, ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனையான,

“ஒவ்வொரு நாளும் நாம் கணக்குப் பார்த்துச் செலவு செய்வதுபோல, பொதுப் பணிகள் _ அறப் பணிகள் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டு, செய்து முடித்தோமா என்ற வரவு _ செலவுக் கணக்கை மனிதகுலம் பார்த்து மகிழும் பழக்கத்தை ஒரு நெறியாகக் கொண்டால் அதைவிடச் சரியான வாழ்வுதான் வேறு ஏது?’’ என்கிற கருத்தமைய எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

புரட்சியாளர்களின் தன்மைபற்றிக் கூறுகையில்,

“புகழ்ச்சியைத் தள்ளிப் புரட்சியைக் காணும் அகத்தினைப் பெற்றால் அழகு’’

என்னும் குறட்பாவை,

“புரட்சியாளர்கள், புகழ்ச்சியாளர்களை அருகில் நெருங்கவே விடமாட்டார்கள்; சற்றுத் தள்ளியே வைப்பார்கள் (தந்தை பெரியாரும் அப்படித்தான்) உண்மை விமர்சனங்கள் காரணமாக நம்மை மேலும் பண்படுத்திக் கொண்டு, உயருவதற்கு அதுவே வாய்ப்பாக அமையும் என்பது உறுதி!’’ என்னும் வாழ்வியல் சிந்தனையின் கருத்துப் பொதிந்து யாத்துள்ளார்.

பெற்றோர் கடன் எது என்பதை,

“சொல்லறங் காப்பதில் சோர்வின்மை கொள்வதே

நல்லதோர் பெற்றோர்க் கழகு’’

என்னும் குறட்பாவுக்கேற்ப வாழ்வியல் சிந்தனையான,

“வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் வாக்குறுதி தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஏமாற்றம் அடையும்-படி எதையும் சொல்லி, செய்து-விடாதீர்கள். குழந்தை வளர்ப்புக் கலையில் பின்பற்ற வேண்டிய பால பாடங்களில் இது முக்கியம்’’ என்பதைத் தேர்ந்து அறிவுரை சொல்லும் விதத்தில் அமைத்துள்ளார்.

மூடநம்பிக்கையைச் சாடும் விதமாக,

“சோதிட மென்பதைச் சூதென ஞானிய(ர்)

ஓதிய துள்ளத்தில் வை’’

என்னும் குறட்பாவிற்கு,

“வானவியல் (Astronomy) என்பது அறிவியல்; ஜோதிடம் (Astrology) என்பது அறிவியல் அல்ல. உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஜோதிடம் என்பது புரட்டு என்பதைக் கூறியுள்ளனர். அதை நாம் மறந்துவிடலாமா?’’

என்ற வாழ்வியல் சிந்தனைக்குப் பொருத்தமாகக் தீட்டியுள்ளார்.

புத்தகங்கள் எப்படிப்பட்டவை என்பதை,

“புத்தகம் போலநம்மைப் புத்தாக்கம் செய்நண்பர்

எத்திக்கும் உண்டோ இயம்பு?

எனும் குறட்பாவிற்கேற்றவாறு ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனையிலிருந்து,

“புத்தகங்களைவிட நமக்குச் சிறந்த நண்பர்கள் _ நம்மை மகிழ்விக்கவும், நம் துயரங்களை நீக்கவும், நம்முடைய அறிவை விரிவு செய்து, அன்புப் பேழையில் அதனை வைத்துப் பயன்படுத்தவும், பண்படுத்தவும் உரிய நண்பன் வேறு யாரே உளர்?’’ எனும் கூற்றை பாங்குபெறச் செய்துள்ளார்.

இப்படியாக வாழ்க்கைக்குத் தேவையான பகுத்தறிவு, கல்வி, மருத்துவம், உடல்நலம், உள்ள நலம், மானுடத்திற்குத் தேவையானவை _ தேவையற்றவை மற்றும் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய கடமைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ள தமிழர் தலைவரின் “வாழ்வியல் சிந்தனைகள்’’ தொகுதிகளிலிருந்து இந்நூலாசிரியர் சுப.முருகானந்தம் அவர்கள் எடுத்தாண்டு, அவற்றுக்கேற்ப குறட்பாக்கள் யாத்து, பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் தந்தை பெரியார் கொள்கைவழி தமிழர் தலைவர்தம்  தொண்டறச் சிந்தனைக்கு வலிமை கூட்டியுள்ளார் என்பதை, இந்நூலை வாங்கிப் படித்துணரலாம்; பின்பு பண்படலாம்; பிறருக்குப் பயன்படலாம்!ஸீ

– பெரு. இளங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *